முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பி பி ஸ்ரீநிவாஸ் (1930 – 2013) : குரல் அழிவதில்லை

 

நிகழ்ச்சி நாள். காலையிலிருந்து பலமுறை அழைத்தும் அவர் அழைப்பை எடுக்கவேயில்லை. மதியத்திற்கு மேல் ஒரு முறை எடுத்து நான் மிகவும் சோர்வாகயிருக்கிறேன். என்னால் நிகழ்ச்சிக்கு வர முடியாது” என்று சொல்லி அழைப்பை துண்டித்தார் பி பி ஸ்ரீநிவாஸ். பலமுறை அவரை நான் சந்தித்திருக்கிறேன். விரிவாகப் பேசியிருக்கிறேன். என்னையும் என் எழுத்தையும் ஓரளவிற்கு அவருக்குத் தெரியும். இருந்தும் எதற்காக இப்படி செய்கிறார்? என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.

“நீ உன் நிகழ்ச்சிக்கு அழைத்ததை மறந்துபோய் இன்னொரு நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புக் கொண்டேன் என்று எம் எஸ் விஸ்வநாதன் குண்டை தூக்கிப் போட்டது அதற்கு முன்தினம் தான்! பி பி எஸ்ஸும் வரவில்லை என்றால் என்ன செய்வேன்? யோசிப்பதே கஷ்டமாகயிருந்தது. எப்படியும் பிடித்த பிடியாக எம் எஸ் வியை அழைத்து வருவதற்கு ஒரு திட்டத்தைப் போட்டு நண்பர் அன்புவை காருடன் பிற்பகலிலேயே எம் எஸ் வியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன்.

பி பி எஸ் விஷயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் நான் மீண்டும் மீண்டும் அவரை அழைத்துகொண்டேயிருந்தேன். ஒருமுறை அழைப்பை எடுத்த அவர் “ஷாஜீ, உனக்கு சொன்னால் புரியாதா? நமது உட்லேன்ட்ஸ் ஹோட்டல் இன்னைக்குதான் இழுத்து மூடினார்கள். நீதிமன்ற உத்தரவு! அது என்னோட வீடு. வாழ்வில் பாதிநாள் நான் வாழ்ந்த இடம். உன்னைப்போல் எத்தனையோ ரசிகர்களை, நண்பர்களை நான் சந்தித்த இடம் அது! அங்கே அமர்ந்துதானே என்னோட முக்கியமான இலக்கியங்களை எல்லாம் நான் எழுதினேன். இனிமேல் ஒருபோதும் அது திறக்காது. எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்குது” என்றார். கடைசியில் என்னுடைய மன்றாடல்களுக்கு செவி மடுத்து மனதே இல்லாமல் சாயங்காலம் நியூ உட்லேன்ட்ஸ் ஹோட்டலுக்கு வந்து பார். முடிந்தால் வருகிறேன் என்றார்.

அன்று மாலையில் நிகழ்ச்சிக்கு பி பி எஸை கூட்டி வருவதற்காக நண்பர் கே பி வினோத் அதே சாலையின் இன்னொரு பகுதியில் உள்ள நியூ உட்லேன்ட்ஸ் ஹோட்டலுக்கு சென்றார். நிகழ்ச்சி தொடங்க நேரம் நெருங்கி விட்டிருந்தது. எம் எஸ் வியை ஒரு வழியாக அழைத்து வருவதில் அன்பு வெற்றி கண்டார். ஒரளவிற்கு கூட்டமும் சேர்ந்திருந்தது. ஆனால் பி பி எஸ் வந்து சேரவில்லை.

சீக்கிரம் ஆரம்பிங்கப்பா. இத முடிச்சுட்டு ஒடனே நான் அடுத்த நிகழ்ச்சிக்கு போணும்” என்று எம் எஸ் வி என்னை நிர்பந்திக்க ஆரம்பித்தார். பதற்றத்துடன் நான் வினோத்தை அழைத்தேன். ஆனால் நெடுநேரம் அவர் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தார். கடைசியில் இணைப்பு கிடைத்தபோது, “பி பி எஸ் உங்களுக்காக எதோ வாழ்த்து மடல் எழுதுகிறாராம். எழுத ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு. இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார்” என்றார் வினோத். நிகழ்ச்சி ஆரம்பிக்க நேரமாச்சு சார் என்று சொன்னதற்கு நிகழ்ச்சி எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம். ஆனால் வாழ்த்துக் கவிதை இப்போதுதான் எழுத முடியும் என்று சொன்னார் பி பி எஸ்.

2008ல் நடந்த எனது ‘சொல்லில் அடங்காத இசை புத்தகத்தின் அறிமுக விழா நாளில்தான் இவையனைத்துமே நடந்தது. உட்லேன்ட்ஸ் உணவகம் என்றைக்குமாக மூடப்பட்டது அன்றைக்கு தான். அதில் மிகுந்த வருத்தத்தோடு இருந்த பி பி எஸ்ஸை பல வகைகளில் நிகழ்ச்சி மகிழ வைத்தது. பி பி எஸும் எம் எஸ் வியும் பல நாட்கள் கழித்து சந்தித்தது அந்த மேடையில் தான். இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டேயிருந்தார்கள்.

தனது வாழ்நாளில் பல காரணங்களினால் மறக்க முடியாத நாள் அது என்று பி பி எஸ் மேடையில் சொன்னார். தனது இசைப்பயணத்தைப் பற்றி விரிவாகப் பேசினார். உடல் நலமில்லை என்று சொல்லி நிகழ்ச்சி முடியும் முன் புறப்பட எழுந்த பி பி எஸ்ஸை ஒரு நிமிடம் அமர வேண்டினார் மேடையிலிருந்த இளம் தலைமுறைப் பாடகர் கார்த்திக். சார். நான் உங்களின் அதி தீவிர ரசிகன் என்று சொல்லி திடீரென்று அவர் பி பி எஸ்ஸின் காலங்களில் அவள் வசந்தம்பாடலை பாட ஆரம்பித்தார். பி பி எஸ்ஸின் முகம் மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது.

பி பி எஸ்ஸை பற்றி போன காலங்களின் இசை வசந்தம் என்கின்ற தலைப்பில் விரிவான ஒரு கட்டுரையை நான் முன்பு எழுதினேன். எனது இணைய தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்த அந்த ஒரே கட்டுரை தான் பி பி எஸைப் பற்றி இருக்கும் விரிவான ஒரே பதிவு. இது நான் மகிழ்ச்சியாக சொல்லவில்லை. தமிழ், கன்னட, மலையாளம், தெலுங்கு வெகுஜென இசையின் தவிர்க்க முடியாத ஆளுமையான பி பி எஸ்ஸைப் பற்றி இந்த மொழிகளின் வெகுஜெனக் கலை சார்ந்த இதழ்களால், ஊடகங்களால் சொல்லும்படியாக எதுவுமே பதிவு செய்ய முடியவில்லை என்பது எவ்வளவு துர்பாக்கியமானது!

நாங்கு தென்னிந்திய மொழிகளிலும் முன்னணிப் பாடகராக இருந்த பி பி எஸ்ஸுக்கு தனது வாழ்நாளில் சொல்லும்படியான எந்தவொரு விருதுமே கிடைக்கவில்லை. பட்டங்களும் பதவிகளும் அவரைத் தேடி வரவில்லை. நாம் அவரை பெரிதாகக் கொண்டாடவுமில்லை. கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் அவர் இறந்தபோது இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ் நிருபர்கள் அருவருப்பான முறையில் சமகாலப் பாடகரான ஸ்ரீநிவாஸ்தான் இறந்துபோனார் என்று எழுதினார்கள்! நமது கொடூரமான மறதிகளைக்கடந்து சென்று விட்டார் பி பி ஸ்ரீநிவாஸ். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பி பி ஸ்ரீநிவாஸ் பாடியது இந்த மலையாளப் பாடல்.

பயணக்காரா போகுக போகுக

வாழ்க்கைப் பயணக்காரா..

உணர்வுகள் மட்டும் உனக்கு வழிகாட்டும்

உன் எண்ணங்கள் மட்டுமே உன்னுடன் நடக்கும்

பலர் வரலாம்

கொஞ்சநேரம் உன்னுடன் நடக்கலாம்

பின்னர் உன்னை புறக்கணித்து கடந்து போகலாம்

உனது உணர்வுகள் மட்டும் உனக்கு வழிகாட்டும்

உன் எண்ணங்கள் மட்டுமே உன்னுடன் நடக்கும்

பயணக்காரா போகுக போகுக

வாழ்க்கைப் பயணக்காரா*....


* இப்பாடலின் இசை ஏ ஆர் ரஹ்மானின் தந்தை ஆர் கே சேகர். எழுதியது வயலார். படம் – ஆயிஷா (1964) 


2013