முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்தான் மலையாளிகள் கற்க வேண்டிய மொழி

எழுதியவைர்

மலையாள எழுத்தாளர் 

சிஹாபுதீன் பொய்த்தும்கடவு

தமிழாக்கம் 

ஷாஜி சென் 

மலையாளம் மற்றும் ஆங்கிலத்திற்கு அடுத்து கேரளப் பள்ளிகளில் முதன்மையான பயிற்று மொழியாக தமிழ்தான் இருக்க வேண்டும். கேரளாவின் கடந்தகாலக் கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் துணை உணர்வு என்பது தமிழ் மொழிதான். நமது மொழியியல் அடையாளங்கள் மற்ற எந்த மொழியையும் விட தமிழில்தான் உள்ளது. வட இந்தியாவிலிருந்து வெடித்த ஆரியமாக்கலை அற்புதமாக எதிர்த்து நின்ற மொழி தமிழ் மட்டும்தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மலையாளம், தமிழ், கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் தமிழ் மட்டும் தன்னிச்சையாகவே சமஸ்கிருதக் கூறுகளை ஒதுக்கி வைத்திருப்பதைக் காணலாம். தமிழின் தொன்மையும் அம்மொழியில் தொன்றுதொட்டே உருவாகியிருக்கும் ஒப்பிலா இலக்கியங்களும் அம்மண்ணின் இரு முக்கிய அடையாளங்களாகவும் அரசியல் உந்து சக்தியாகவும் இன்றும் இருக்கின்றன. சொற்களின் செல்வத்திலும் அவற்றின் இசைத் தன்மையிலும் உலகில் உள்ள பல பிரபல மொழிகளை விட தமிழ் முன்னணியிலேயே  உள்ளது. எந்தவொரு புதிய ஆங்கிலச் சொல்லுக்கும் இணையான வார்த்தைகள் தமிழில் உடனடியாக உருவாவதை நாம் காணலாம்.

பெரும்பாலான தொழில்நுட்பச் சாதனங்கள் மேற்கத்திய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு வருகின்றன என்பது நமக்குத் தெரியும். எதையுமே புதிதாகக் கண்டுபிடிக்காமல் பழங்காலப் பெருமையின் வீண்பேச்சுக்களில் ஈடுபட்டு, வெளிநாட்டுத் தொழில் நுட்பங்களை வெட்கமே இல்லாமல் வாங்கிப் பயன்படுத்துபவர்கள் நாம். அந்த சாதனத்தின் பெயரில்கூட நமக்கு எந்த உரிமையும் இல்லை! ஆனால் அச்சாதனங்களுக்கு தமக்கென்று ஒரு பெயரையாவது வைக்க முயலும் மொழி தமிழ். Refrigeratorக்கு எளிதாக குளிர்சாதனப் பெட்டி என்று பெயர் வைக்கிறார்கள். Air Conditionerக்கு குளிரூட்டி. கேட்டாலே ஊட்டிபோல் குளிர்கிறது அல்லவா? Mobile Phoneக்கு அலைபேசி. Computerக்கு கணினி, Calculatorக்கு கணிப்பான்.

பல பதிற்றாண்டுகளுக்கு முன்பே பேருந்து என்று Busஐ தமிழாக்கினார்கள். Photoவுக்கு தமிழில் மிகவும் கவித்துவமான சொல்: நிழற் படம். மற்றொரு அழகான சொல் நிழற் குடை. தூய மலையாளத்தில் அதை நாம் Waiting Shed என்கின்றோம். சொல்லப்போனால் தமிழின் வானிலை (climate) க்கு இன்றுவரைக்கும் உறுதியான ஒரு மலையாள வார்த்தை இல்லை. எனது சொந்த ஊரான கண்ணூரில் சீதோஷ்ண நிலைக்கு அழகான நாட்டு மலையாள வார்த்தை ஒன்று உள்ளது. ஆச்ச். வானம் இருண்டு மழை பொழிய ஆரம்பிக்கும்போது "ஐயோ, ஆச்ச் மாறிவிட்டதே" என்று பழைய தலைமுறையினர் இன்றும் சொல்வார்கள். இதைமாதிரி அருமையான எத்தனையோ வட்டார இசைச் சொற்களை மலையாளி இழந்திருக்கிறான். ஒரு நாளிதழாவது அவற்றைப் பயன்படுத்தியிருந்தால் அச்சொற்கள் பிழைத்திருக்கும்.

எந்தவொரு மொழியிலும் புதிய வார்த்தைகளை வெளிப்புறமாக வலிந்து உருவாக்க முடியாது. நமது சில மொழியியலாளர்கள் ஆங்கிலத்திற்கு மாற்றான வார்த்தைகளைக் கொண்டு வர வலிந்து முயற்சித்ததெல்லாம் எதிர்மறை விளைவுகளே உருவாக்கின. காரணம் அத்தகைய வார்த்தைகளுக்கு இசைத் தன்மையோ கலாச்சார ஆழமோ பயன்படுத்துவதில் லாகவமோ இல்லை. Switchக்கு ‘மின்சாரப் போக்கு வருகை மட்டுப்படுத்துதல் இயந்திரம்’ என்று பெயர் வைத்தால் எப்படி இருக்கும்? ரயில் நிலையத்திற்கு ‘அக்னி சகட ஆகமன பிரத்தியாகமன கேந்திரம்’ என்று ஒருமுறை சொல்வதற்குள் ரயில் எங்கோ சென்றுவிடும். ஆனால் இந்த விஷயத்தில் தமிழ் ஒரு முன்மாதிரி. நேற்று வந்த ஆங்கில வார்த்தை இன்று எளிமைத் தமிழாக மாறியிருக்கும். வாட்ஸ்அப்புக்கு கூட தமிழில் சொல் இருக்கிறது: பகிரி.

Sexual intercourse பற்றி சொல்ல மலையாளத்தில் இன்றளவும் அழகான ஒரு வார்த்தை இல்லை. ஆனால் தமிழைப் பாருங்கள்: உடலுறவு. என்ன ஒரு அழகான, இசைமாயமான வார்த்தை. இதற்கு இன்னொரு வார்த்தை கலவி. உடலுறவிலுள்ள காதலின் அம்சத்தையும் வெளிப்படுத்தும் அழகான வார்த்தை. கலவி என்றால் இரண்டாக இருப்பவற்றை ஒன்றாக கலப்பது என்றுதான் வேர்ச்சொல் அடிப்படை என நினைக்கிறேன். காதல் காமம் சார்ந்த வேறு எந்த வார்த்தைக்கு இவ்வளவு அர்த்தமும் ஜனநாயகத் தன்மையும் இருக்கிறது? ஆனால் இதே அர்த்தத்தில் மலையாளத்தில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான சொற்கள் கொச்சையானவை. சுயமரியாதை அற்றவை.

தமிழ் மொழிக்கு மட்டும் இது எப்படிச் சாத்தியமாகிறது? காரணம் தமிழ் மொழி இசைமயமானது, எளிமையானது மற்றும் பல நூற்றாண்டுகளின் இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டது. தமது மொழியின் மீதான பெருமையும் பாசமும் தமிழர்களின் உள்ளத்தில் உள்ளது. ஒரு திரைப் படத்தின் பெயர் தமிழன். வணிகப் படத்திற்கு பெயர் வைப்பதில் கூட சுயமரியாதையின் ஆற்றல் பாய்கிறது. இது ஒரு சமூக - அரசியல் உணர்வாகவே இருக்கிறது.

1578ஆம் ஆண்டில் போர்த்துகீசிய கிறிஸ்தவ மிஷனரிகளால் பிரார்த்தனை புத்தகம் ஒன்று பழைய தமிழ் எழுத்துக்களில் அச்சிடப்பட்டது. அதன் பெயர் ‘தம்பிரான் வணக்கம்’. இந்தப் புத்தகம்தான் ஓர் இந்திய மொழியின் தனித்துவமான எழுத்தில் இந்தியாவில் அச்சிடப்பட்ட முதல் இந்திய மொழி நூல். இபபுத்தகம் கேரளத்தில் தான் அச்சிடப்பட்டது எனலாம். வேணாடு அல்லது கொல்லம் எனும் ஊரில்.

ஒரு சமூகத்தின் வரலாற்று உணர்வு என்பது அதன் மொழியிலேயே உள்ளது. வடக்கிலிருந்து ஆரியமயமாக்கல், தென்மேற்குக் கடற்கரையிலிருந்து வணிக - மிஷனரி இணைப்பு மற்றும் மேற்கத்திய சக்திகளின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றிலிருந்து குறைந்த பட்சம் நமது தாய்மொழியின் ஒரு பகுதியையாவது பிரித்தெடுத்திருக்க வேண்டும். அன்று தொடங்கிய மொழியால் திணிக்கப்படும் நேரடி மற்றும் மறைமுக காலனித்துவம் இன்றும் தொடர்கிறதே!

தமிழ் அறவே தெரியாத மலையாளிகளுக்கும் பெரிய சிறமமில்லாமல் கருத்துப்பரிமாற்றம் சாத்தியப்படும் ஒரே மொழி தமிழ் மட்டுமே என்பதை நாம் கவனிக்க வேண்டும். இதன் காரணம் நம் மொழிக்கும் தமிழுக்கும் இருக்கும் தொப்புள்கொடி உறவு. 5700 வரிகள் கொண்ட தமிழின் உன்னதக் காப்பியம் சிலப்பதிகாரத்தை எழுதியவர் கேரளக்காரர். பெயர் இளங்கோவடிகள். எட்டுத்தொகையில் உள்ள சில கவிதைகளும் இன்றைய கேரளப் பகுதிகளில் அன்று வாழ்ந்திருந்த கவிஞர்களால் எழுதப்பட்டதாகவே கருதப்படுகிறது.

மொழியியல் அடிப்படைவாதம் அல்ல இந்தப் பதிவின் நோக்கம். உலகின் எந்த மொழியுமே  மற்றொரு மொழிக்கு எதிரானது இல்லை என்பது புனிதமான உண்மை. உலகில் பேசப்படும் மிகச் சிறிய மொழி கூட பராமரிக்கப்பட வேண்டும் என்றுதான் நம்புகிறேன். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காகவும் அரசியல் ஆதாயங்களுக்காகவும் ஒரு மொழியைத் திணிப்பது கொடுமையானது. அடக்கி ஒடுக்கும் கொடியவர்கள்தாம் மொழி ஒடுக்குமுறையின் பின்னாலும் இருக்கிறார்கள்.

வேரை இழந்த மரங்கள் விரைவில் உயிரையும் இழந்துவிடும். வாழ்வாதாரத்திற்காக நாம் கற்கும் ஆங்கிலத்துடன் தமிழ் மொழியையும் உடனடியாக நாம் கற்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால் மரத்தின் இலைகளை வெயில் பசுமையாக்குவதுபோல் மண்ணுக்குள் மேலும் மேலும் ஆழமாக ஊடுருவிச் செல்லும் வேர்கள் அதன் தண்டுகளையும் கிளைகளையும் பலப்படுத்துகின்றன. மலையாளிகளின் தாய்மொழி மலையாளம் என்றாலும் மலையாளத்தின் தாய்மொழி தமிழ்தான். அதைக் கற்றுக்கொள்வது நமக்குப் பெருமை மட்டுமல்ல அதில் நமது எதிர்ப்பு தற்காப்பு அரசியலும் இருக்கிறது.

shaajichennai@gmail.com

நன்றி : உயிர்மை