முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராஜ்குமார் : கன்னடத்தின் இன்னிசை

 

அப்போதைய ஹூப்ளி வட கர்நாடகத்தின் தூங்கி வழியும் ஒரு சிறு நகரம். மளிகைக் கடைகளைவிட மதுக்கடைகள், மருந்துக் கடைகளைவிடத் திரையரங்குகள்! இடுங்கிய சந்துகள் வழியாகக் கனவில் நடப்பது போலத் திரியும் மக்கள். கந்தலான தோற்றத்துடன் ஒருவன் சுத்தமான பீம்பளாஸி அல்லது மால்கெளன்ஸ் ராகத்தின் சிக்கலான ஒரு பகுதியை அனாயாசமாகப் பாடியபடி பிச்சை எடுப்பது அங்கே அபூர்வமான காட்சி அல்ல! ஹூப்ளியும் அருகேயுள்ள தார்வாடும் தென்னிந்தியாவின் ஹிந்துஸ்தானி இசை மையங்களாக அறியப்படுபவை. பீம்சேன் ஜோஷி, குமார் கந்தர்வா, மல்லிகார்ஜுன் மன்சூர், கங்குபாய் ஹங்கல் போன்ற பல இசைமாமேதைகள் பிறந்த பகுதி.

ஒரு நாள் காலையில் உடைந்து சிதிலமான நகரப்பேருந்தில் நான் என்னுடைய அலுவலகம் இருந்த கித்தூர் சென்னம்மா சதுக்கத்துக்குப் போய்க்கொண்டிருந்தேன். ஒரு கிலோமீட்டர் முன்னரே போக்குவரத்து உறைந்து நின்றுவிட்டது. நின்றுவிட்ட வண்டிகளின் இடையிலூடாக மக்கள் கும்பல்கும்பலாக நடந்து கொண்டிருந்தார்கள். அப்போதே பத்தரைமணி தாண்டிவிட்டிருந்ததனால் கூட்டத்தை உந்தி விலக்கி நான் என்னுடைய அலுவலகத்தை அடைய முயன்றேன். நெருங்கும்தோறும் கூட்டத்தின் அடர்த்தி அதிகரித்தது. சென்னம்மா சிலை இருந்த சதுக்கத்தைச் சுற்றிக் கூட்டம் ஒரு பெரும் வட்டமாக மாறிவிட்டிருந்தது.

அதன் நடுவே கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமார் ஒரு மாட்டு வண்டியில் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்ததைக் கண்டேன். வெள்ளைவேட்டியும் குர்தாவும் அணிந்திருந்தார். சிவப்புக் கச்சையும், மஞ்சள் முண்டாசும் உண்டு. நாட்டுப்புறப் பாட்டு போன்ற ஒரு கன்னடப் பாடலுக்கு வாயசைத்துக் கொண்டு அங்கு நின்ற மக்களைப் பார்த்து ஒரு சிவப்பு மஞ்சள் கொடியை அசைத்துக் கொண்டு வலம் வந்தார். அந்தக் காட்சி மூன்று காமிராக்களால் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஒரு கணம் எனக்கு ராஜ்குமாரின் தோற்றமும், அந்த மாட்டு வண்டியும் அங்கே சூழ்ந்திருந்த நவீன அடுக்கு மாடிக் கட்டிடங்களின் கண்ணாடிச் சன்னல்களில் அத்தோற்றம் பிரதிபலித்த விதமும் நவீன இந்தியாவின் படிமம்போல் தோன்றியது. ‘ஹுட்டிதரே கன்னட நாடல்லி ஹுட்ட பேக்கு! மெட்டிதரே கன்னட மண்ணல்லி மெட்ட பேக்கு!’ பிறந்தால் கன்ன நாட்டில் பிறக்க வேண்டும். கால் பதித்தால் கன்னட மண்ணில் பதிய வேண்டும்!... அந்த மெட்டு கவர்ச்சிகரமாக இருந்தது. பாடிய குரலும் உணர்ச்சிகரமானதாக ஒலித்தது. ராஜ்குமார் அவரே பாடிய பாடல் அது. பிற்பாடு இப்பாடலும் இது இடம்பெற்ற ‘ஆகஸ்மிகா’ (தற்செயல்) என்ற படமும் கன்னடத்தில் மாபெரும் அலையை உருவாக்கின. இந்தப் பாடல் கிட்டத்தட்ட ஒரு கன்னட தேசிய கீதம் போலவே ஆயிற்று.

அசோக் குமார், தேவிகா ராணி காலம் முதல் பாடக - நடிகர்கள் விஷயத்தில் இந்தியாவிற்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. கெ.எல்.சைகால், கீதா தத், கிஷோர் குமார், தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் முதல் கமல் ஹாசன் வரை அந்தப் பட்டியல் பெரிது. ஆனால் இவர்கள் யாருமே ராஜ்குமார் அடைந்த உச்சங்களை அடையவில்லை. நவீன இந்தியத் திரையுலகின் மிக அதிகமாக வெற்றிபெற்ற பாடக - நடிகர் ராஜ்குமார். இரு தளங்களிலும் அவரால் சாதனைகளை நிகழ்த்த முடிந்தது.

பாடினாலொழிய மேடையில் நடிக்க முடியாது என்ற நிலை இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். உண்மையில் அவர் ஒரு நாடகப் பாடகராகத்தான் தன் கலை வாழ்க்கையை ஆரம்பித்தார். நாடகம் வழியாகவே நடிப்பையும் அவர் கற்றுக்கொண்டார். நடிகர்களுக்கு மரபான முறையில் பாடவும் தெளிவான உச்சரித்து வசனம் பேசவும், நடிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்ட கம்பெனி நாடக அமைப்புக்குள் இருந்து உருவாகி வந்தவர் அவர். அக்கால பாடல் மெட்டுகள் கர்நாடக ராகங்களைச் சார்ந்தவை, அவற்றைத் துல்லியமாகப் பாடாத நடிகர்கள் அங்கீகாரம் பெற இயலாது. ராஜ்குமார் கர்நாடக இசைப்பயிற்சி பெற இதுவும் காரணமாக அமைந்தது.

கன்னடரல்லாத ஒருவரால் ராஜ்குமார் என்ற நிகழ்வைப் சரிவரப் புரிந்து கொள்வது கஷ்டம். அமிதாப் பச்சனைப் போல அவர் ஏராளமான படங்களும் விளம்பரங்களும் மேடை நிகழ்ச்சிகளும் செய்திப் படங்களும் பின்னணிக் குரல்களும் செய்து நூற்றாண்டின் நட்சத்திரமாக ஆனவர் அல்ல. என்.டி.ராமராவ், எம்.ஜி.ஆர் போல அவர் திரைப் புகழை அரசியலுக்குக் கொண்டுச் சென்றவரும் அல்ல. பிரேம் நசீரைப்போல அவர் பலநூறு படங்களில் நடித்து கின்னஸ் சாதனையும் நிகழ்த்தவில்லை. கமல் ஹாசன், விஷ்ணுவர்த்தன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்றவர்களைப் போல பலமொழிப் படங்களில் நடிக்கவுமில்லை. அவருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. அவருக்கு சரளமாகப் பேசவே வராது.

நாற்பத்தைந்து வருடத் திரையுலக வாழ்க்கையில் 205 படங்களில் நடித்தார். பத்து ஃபிலம்பேர் விருதுகள், ஒன்பது மாநில அரசு விருதுகள், பத்ம விபூஷன் விருது, தாதா சாகேப் பால்கே விருது என அவர் அடைந்த அங்கீகாரங்கள் பல. ஆனால் அவரைக் கன்னடர்களுக்கு அண்ணாவரு என்ற அண்ணா அவர்கள் ஆக மாற்றிய விஷயங்கள் வேறு பல. அவரது கடைசிப் படமான ‘ஷப்தவேதி’யில் வரும் ‘ஜனரிந்தா நானு…’ என்ற பாடலில் அவர் சொன்னார், “நான் எளிய மக்களிடையே இருந்து புகழுக்கு வந்தவன். என்னை ஆதரித்த மக்களின் வெற்றியே என்னுடைய வெற்றி”.

ஒரு தீவிர ராஜ்குமார் ரசிகர் சொல்லுகிறார், “அவர் தன் படங்களின் தேர்விலும் தனி வாழ்விலும் பொது வாழ்விலும் கடைப்பிடித்த கண்ணியம், நேர்த்தி மற்றும் அழகு, வெற்றியையும் தோல்வியையும் அவர் எதிர்கொண்ட விதத்தில் இருந்த நிதானம், வாழ்க்கையை அவர் எதிர்கொண்ட விதத்தில் இருந்த நேர்த்தி ஆகியவையே அவருக்கு இருந்த நம்பமுடியாத ரசிகர் ஆதரவுக்குக் காரணம். நாணயமும் நாகரீகமும் மிகக்குறைவான திரைத்துறையில் அவர் பண்பே உருவானவராக இருந்தார். அவரது கட்டுப்பாட்டுணர்ச்சி, கற்றுக்கொள்வதற்கான திறன், தன் துறையில் அவருக்கு இருந்த சுய சமர்ப்பணம், முறையான கல்வியால் அடைய முடியாத நுட்பங்களை சென்றடையும் திறன் ஆகியவையே அவரை உச்சத்துக்குக் கொண்டு சென்றது”. ராஜ்குமாரின் கல்வி மூன்றாம் வகுப்பு மட்டுமே!

ராஜ்குமாரின் முதல் படம் 1956ல் ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த ‘பேடர கண்ணப்பா’. அவரது ‘ரணதீர கண்டீரவா’ என்ற படமே கன்னடத் திரையுலகின் உருவாக்கத்தின் முதல் படியாக அமைந்தது என்று சொல்லப்படுவதுண்டு. பொதுவாகச் சமூகத் தீமைகளுக்கு எதிரான செய்தி அடங்கிய கருக்களையே அவர் தெரிவு செய்தார். ஒருசில ஆரம்பகாலப் படங்களைத் தவிர்த்தால் அவர் படங்களில் புகை பிடித்ததோ மது அருந்தியதோ இல்லை. அவரது உச்சகட்ட மக்கள் ஆதரவு காரணமாக அரசியலில் புகுவதற்குத் தொடர்ந்து அழைப்புகளும் கட்டாயங்களும் இருந்தபோதிலும்கூட அவர் அரசியலை அணுகவேயில்லை. சினிமாவைத் தவிர்த்தால் இசை, நாடகம், கலாச்சார ஈடுபாடுகள், அறக் கொடைகள் என்று தன் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டார்.

‘மகிஷாசுர மர்தனி’, ‘ஓஹிலேஸ்வரா’ போன்ற சில படங்களில் ஓரிரு பாடல்கள் அவரே பாடியிருந்தார் என்றாலும் தனது திரைவாழ்வின் தொடக்கத்தில் ராஜ்குமாருக்குப் பிறர்தான் பாடும் குரல் கொடுத்தார்கள். இது ராஜ்குமாரின் தனிப்பட்ட குணாதிசயத்துக்கு உதாரணமாகும். அவர் பெரும் புகழ்பெற்ற நட்சத்திரமாக மாறிய பிறகும், அவரால் சிறப்பாகப் பாடமுடியுமென அவர் அறிந்திருந்தபோதிலும்கூட அவர் தயாரிப்பாளர்களிடமோ இயக்குநர்களிடமோ அவரே பாட வேண்டுமென்று கோரவேயில்லை. தனக்காகப் பாடியவர்களை மனம் நோகச்செய்யவும் அவர் விரும்பவில்லை. அவரது முதல் படமான ‘பேடர கண்ணப்பா’வில் சி.எஸ்.ஜெயராமன் அவருக்காகப் பாடினார். பிறகு பலர் பாடியுள்ளார்கள். தொடக்க காலகட்டத்தில் கண்டசாலா அவருடையய அங்கீகாரம் பெற்ற பின்னணிக்குரலாக ஒலித்தார். பின்னர் பி.பி. ஸ்ரீனிவாஸ் ராஜ்குமாரின் குலராக பலகாலம் விளங்கினார். ‘நீ மூடித மல்லிகெ ஹூவின மாலெ’, ‘நீ பந்து நிந்தாக’ போல கன்னடத் திரையிசையின் பல புகழ்பெற்ற அழகிய பாடல்களை ராஜ்குமாருக்காக பி பி எஸ் பாடியுள்ளார்.

நடிக்க வந்து இருபது வருடங்கள் கழித்து 1974ல் ‘சம்பத்திகே சவால்’ என்ற படத்தில் ராஜ்குமார் பாடிய ‘யாரே கூகாடலி’ என்ற பாடல் பெரும்புகழ் பெற்றது. அதன் மூலமே அவர் கன்னடத் திரையுலகின் முக்கியமான பாடகரானார். அவர் சூப்பர் ஸ்டாராக மாறிய பின்னர் இசையமைப்பாளார் ஜி.கெ.வெங்கடேஷ் வற்புறுத்தி அவரை ‘யாரே கூகாடலி’ பாடலைப் பாடவைத்தார். அப்போது பி.பி. ஸ்ரீனிவாஸ் ஊரில் இல்லாத காரணத்தால் ராஜ்குமார் பாட ஒப்புக்கொண்டார். ஆனால் அத்துடன் பி.பி. ஸ்ரீனிவாஸ் கன்னட இசையுலகில் தனக்கிருந்த இடத்தை இழந்தார்! ராஜ்குமார் இரட்டை வேடம் அல்லது மூன்று வேடம் போடும் படங்களில் மட்டுமே அவருக்கு பின்னர் பாட வாய்ப்பு வந்தது.

ராஜ்குமாரின் குரல் இனிமையானது. நுட்பமான உச்சரிப்பும் உணர்ச்சிகரமான ஆழமும் கொண்டது. இலக்கணச் சுத்தமான மரபிசை முதல் நவீன காதல் பாடல்கள் வரை எதை வேண்டுமானாலும் ராஜ்குமார் திறமையாகப் பாடினார். தன் குரலில் காதல், உணர்ச்சிகரம், பக்தி, டிஸ்கோ, நாட்டுப்புறப்பாடல் எல்லாவற்றுக்கும் உரிய மனநிலைகளை மாறிமாறிக் கொண்டுவந்தார். அவரது நாடகப் பின்புலம் இதற்குப் பெரிதும் உதவியது. கன்னட மொழி, கன்னடப் பண்பாடு குறித்து அவருடைய பாடல்கள் அனைத்துமே பெரும் புகழ்பெற்றவை. காளிதாசனின் வடமொழி சுலோகங்கள் மந்திரங்கள் முதலியவற்றைத் தெளிவான சமஸ்கிருத உச்சரிப்புடன் பாடியிருக்கிறார். கஸல் பாணியில் அமைந்த ‘சதா கண்ணல்லி’, ‘கெளதிபாரது’, ‘யாவ கவியூ’ முதலியவையும் அவரது புகழ்பெற்ற பாடல்கள்.

ஹொஸ பெளக்கு படத்தில் அமைந்த நெகிழச் செய்யும் பாடலான ‘கண்ணீர தாரே இதேகே’, ஜகஜித்சிங் பாடிய லலித் ராகத்தில் அமைந்த கஜல் ஒன்றின் தழுவல். ஆனால் ராஜ்குமார் அதில் அவருக்குரிய ஆழத்தைக் கொண்டுவந்தார். அதற்கு இசையமைத்த எம்.ரங்கராவ், ராஜ்குமார் அதைப் பாடிக் கேட்ட போது கண்ணீர் விட்டபடி ஓடிப் போய் அவரைத் தழுவிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. பிரேமத காணிகெ படத்தில் இடம்பெற்ற ‘இது யாரு பரெத கதெயோ’ போன்ற பல என்றும் அழியாத இன்னிசை மெட்டுகளை ராஜ்குமார் பாடியுள்ளார்.

சி. உதயசங்கர், ராஜ்குமாரின் பெரும்பாலான படங்களுக்குக் கதையும், பாடல்களும் எழுதினார். ராஜ்குமாரின் பாடல்களின் வெற்றிக்கு அவருடைய எளிய அழகிய வரிகளும் முக்கியமான காரணம். ஜி.கெ. வெங்கடேஷ் ராஜ்குமாரின் சிறந்த பாடல்களை இசையமைத்தார். ஜி.கெ. வெங்கடேஷின் பெரும்பாலான பாடல்களில் ஒட்டு மொத்த ஒழுங்கும் நடுவே ஓடும் இசைவரிகளும் அவற்றுக்கு அபூர்வமான ஓர் அழகை அளிக்கின்றன. உதாரணமாக ராஜ்குமார் நடித்த ‘அதே கண்ணு’ என்ற படத்தில் உள்ள ‘அதே கண்ணு’ என்ற பாடலின் நடுவே ஓடும் இசை. சி.உதயசங்கரின் தம்பியும் என் நண்பருமான சி.தத்தாராஜ் இயக்கிய படம் அது. அவர் ராஜ்குமாரின் நான்கு படங்களை இயக்கியுள்ளார். அப்போது ஜி.கெ. வெங்கடேஷின் உதவியாளராக இருந்த இளையராஜா இப்பாடலுக்கு அமைத்த பின்னணி இசை மிக அபூர்வமான ஒன்று. அச்சமும் பதற்றமும் உருவாக்குவது. வெங்கடேஷின் சில முக்கியமான பாடல்களின் பின்னிசை நுட்பங்களுக்கு இளையராஜாவின் பங்களிப்பும் காரணமாகும்.

இளையராஜா ராஜ்குமாரின் ‘நீ நன்ன கெல்லலாரே’ என்ற படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தில் உள்ள ‘அனுராக ஏனாய்த்து’, ‘ஜீவ ஹூவாகிதே’ ஆகிய பாடல்கள் அவற்றின் மரபை மீறிய மெட்டுக்காகவும் அபூர்வமான இடையிசைக்காகவும் புகழ் பெற்றவை.

ராஜ்குமாருக்குச் சிறந்த மெட்டுகளை அளித்த இன்னொரு இசையமைப்பாளர் உபேந்திர குமார். அவருடைய மிகப்பெரிய வெற்றிகள் ‘பிரேமத காணிகெ’ மற்றும் ‘சங்கர் குரு’. சிறந்த பாடகருக்கான தேசிய விருதை ராஜ்குமாருக்குப் பெற்றுத் தந்த ‘ஜீவன சைத்ரா’ உபேந்திர குமாரின் இசையமைப்பில் வெளிவந்த படம். டி.ஜி.லிங்கப்பா, ராஜன் நாகேந்திரா போன்றவர்களும் ராஜ்குமாரின் பிரியமான இசையமைப்பாளர்கள். ராஜ்குமாரின் கடைசிப் படமான ‘சப்தவேதி’ இளம் தலைமுறை இசையமைப்பாளரான ஹம்சவேகாவால் இசையமைக்கப்பட்டது.

ராஜ்குமாரின் ‘சானதி அப்பண்ணா’ கன்னடத் திரையின் ஒரு சாதனைப் படைப்பாகும். மறைந்த உஸ்தாத் பிஸ்மில்லா கான் அதில் ஷெஹனாய் வாசித்திருந்தார். ஷெஹனாய்தான் கன்னடத்தில் சனாதி என்று சொல்லப்படுகிறது. 1977 ஆகஸ்டில் வெளிவந்த இப்படம் ஒரு கிராமத்து ஷெஹனாய் வித்வானின் வாழ்க்கையைப் பற்றியது. ஜி.கே. வெங்கடேஷ்தான் அதற்கும் இசையமைத்தார். பிஸ்மில்லா கான் திரை இசையில் ஆர்வமே இல்லாதவர். ராஜ்குமார் அவரே விண்ணப்பித்துக் கொண்டதன் பேரில்தான் அவர் வாசிக்க வந்தார். ராஜ்குமார் ஏற்கனவே உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாசிக்கா விட்டால் அப்படத்தில் நடிப்பதில்லை என்று சொல்லியிருந்தார். இதைத் தவிர பிஸ்மில்லாகான் பங்களித்த ஒரே படம் இந்தியில் வெளிவந்த ‘கூஞ்ச் உடீ ஷெஹனாய்’.

காசியிலிருந்து உஸ்தாத் சென்னைக்குப் பறந்துவந்து பிரசாத் ஸ்டுடியோவில் ‘சனாதி அப்பண்ணா’வின் இசைப்பதிவில் கலந்து கொண்டார். ஒன்பது நாட்கள் சென்னையில் தங்கி அப்படத்தின் ஷெஹனாய் இசையை வாசித்தார். இன்றுவரை அப்படத்தில் எஸ்.ஜானகி பாடி பெஹாக் ராகத்தில் அமைந்த ‘கரெதரு கேளதெ’ என்ற பாடல் கன்னடத் திரையிசை ரசிகர்களை மயக்கி வருகிறது. அப்பாடலின் இனிமையான இடையிசையீடுகளை உஸ்தாத் வாசித்தார். படம் முழுக்க அவரே பல இசைப்பகுதிகளையும் வாசித்தளித்தார்.

ராஜ்குமார் ஒன்பது நாளும் பிரசாத் ஸ்டுடியோவுக்கு வந்து பாடல்பதிவைப் பார்த்தார். உஸ்தாதின் இசையைக் கேட்பதுடன் அவருடைய உடல் மொழியையும் முக பாவனைகளையும் பார்ப்பதும் அவரது நோக்கமாக இருந்தது. அது அக்கதாபாத்திரத்தை நம்பும்படியாக நடிக்க அவருக்கு உதவும் என எண்ணினார்.

அப்படம் நூறு நாட்கள் ஓடியது. உஸ்தாத் காசியிலிருந்து வந்து பெங்களூரில் நடந்த நூறாவதுநாள் விழாக் கொண்டாட்டங்களில் பங்கு கொண்டார். “நான் இந்தப் படத்தில் சும்மா நடிக்கத்தான் செய்தேன். அதன் ஆத்மா உஸ்தாத் பிஸ்மில்லா கான் அளித்தது. அவர் அக்கதாபாத்திரத்திற்கு உயிரை உருவாக்கி அளித்தார்” என்று ராஜ்குமார் சொன்னார். பதிலுக்கு ராஜ்குமாரின் பணிவையும் இசை ஈடுபாட்டையும் உஸ்தாத் புகழ்ந்து சொன்னார்.

ராஜ்குமார் பல மேலையிசைப் பாடல்களையும் பாடியுள்ளார். முற்றிலும் ஆங்கிலத்தில அமைந்த, ‘இஃப் யூ கம் டுடே’(ஆபரேஷன் டயமண்ட் ராக்கெட்) பாடலைத் தெளிவான உச்சரிப்புடன் பாடியுள்ளார். ‘ஹாவின ஹெதெ’ படத்தில் வரும் “மை நேம் இஸ் ராஜ்”, சங்கர் குரு படத்தில் வரும் “லவ் மீ ஆர் ஹேட் மீ” போல ஆங்கில வரிகள் கொண்ட பல பாடல்கள் உண்டு. ‘மாணிக்யவீணாம்’, ‘ஆராதிஸுவே’, ‘யாரு திலியரு’ போன்ற பல மரபிசைப் பாடல்களும் அவராலதான் பாடப்பட்டுள்ளன. ‘ஜீவன சைத்ரா’ படத்தில் வந்த ‘நாதமயா ஈ லோகவெல்லா’ அவருக்குச் சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றுத்தந்தது. தோடி ராகத்தில் தொடங்கிப் பல ராகங்கள் வழியாக ராகமாலிகையாக நீள்வது அப்பாடல். ஆனால் அதில் ராஜ்குமார் கைதேர்ந்த மரபிசைப் பாடகரைப்போல ராகங்களிலிருந்து ராகங்களுக்குத் தாவிச் சென்றிருந்தார்.

‘பெள திங்களாகி பா’ (ஹுலிய ஹாலின மேவு), ‘ராகா அனுராகா’ (சனாதி அப்பண்ணா), ‘செலுவெய நோட்ட’ (சங்கர் குரு), ‘எந்தா செளந்தரிய கண்டே’ (ரவிச்சந்திரா), ‘நா நின்னெ மரெயெலாரெ’ (நா நின்னே மரெயெலாரெ), ‘ஹாலு ஜேனு ஒந்தான்த’ (ஹாலு ஜேனு), ‘ஆடிசி நோடு பீளிசி நோடு’ (கச்தூரி நிவாஸ) போன்றவையெல்லாம் பெரும் புகழ்பெற்ற ராஜ்குமார் பாடல்களே.

கமல்ஹாசன் ஒருமுறை ராஜ்குமாருக்கு அவரது தொழிலே தெய்வம் என்று சொல்லியிருந்தாலும்கூட அடிப்படையில் ராஜ்குமார் தீவிரமான மத நம்பிக்கையாளர், ஆன்மீகம் பேசுவதில் ஆர்வம் மிக்கவர். பல்வேறு கடவுள்களைப் பற்றிய இசைத்தொகுப்புகளை அவர் வெளியிட்டிருக்கிறார். நான் இசைமேலாளராக வேலைபார்த்து வந்த இசை நிருவனத்திற்காக ஒரு ஐயப்பப் பக்திப்பாடல் தொகுப்பை அவர் பாடினார். அதன்வழியாக ராஜ்குமாருடன் இணைந்து வேலைசெய்யும் ஒரு வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

தன் வாழ்க்கையின் கடைசி நாட்களில் ராஜ்குமார் பல பிற நடிகர்களுக்கு குரல் கொடுத்துப் பாடினார். பல முக்கியமான பின்னணிப் பாடல்களை அவர் பாடினார். குறிப்பாக ‘முத்தின மாவா’ என்ற படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்தபோது ராஜ்குமார் பாலசுப்ரமணியத்திற்குப் பின்னணி பாடினார்!

தன் பாடல்கள் மூலம் ஈட்டியவற்றில் பெரும்பகுதிப் பணத்தை ராஜ்குமார் அறக்கொடைகளுக்கே செலவிட்டார். விதவைகளுக்காகவும் அனாதைக் குழந்தைகளுக்காகவும் ஒரு ஆசிரமத்தை உருவாக்கி நடத்தினார். கர்நாடகம் முழுக்க பயணம் செய்து கார்கில் போருக்கான நிதி திரட்டி அனுப்பினார். ஆனால் ஒருபோதும் அவர் தன் தானங்களைப் பற்றிப் பேசியதில்லை. செய்தி வெளியிடுவதிலிருந்து இதழாளர்களைக் கடுமையாக விலக்கியிருந்தார். கண்தான முகாம்களுக்காகவும் ரத்ததான முகாம்களுக்காகவும் பெரும் தொகைகள் வழங்கியது மட்டுமல்லாமல் அவரே பல முகாம்களை நடத்தியுமிருக்கிறார். தன் கண்களையும் அவர் தானமாகக் கொடுத்தார்.

2000 ஜூலை 30ல் தன் எழுபத்தி ஒன்றாம் வயதில் ராஜ்குமார் வனக்கொள்ளையன் வீரப்பனால் கடத்தப்பட்டார். 108 நாட்கள் கடுமையான காட்டுவாழ்க்கைக்கு ஆளாக்கப்பட்டபின் நவம்பர் 1ம் தேதி மீட்கப்பட்டார். அவர் கட்டத்தப்பட்டதும் மீட்கப்பட்டதும் இன்றுவரை மர்மங்களாகவே எஞ்சுகின்றன. கர்நாடக அரசு இடைத்தரகர்கள் மூலம் வீரப்பனுக்கு முப்பது கோடி ரூபாய் பிணைப்பணம் கொடுத்துதான் அவரை மீட்டதாக முதலில் சொல்லப்பட்டது. பின்னர் அது நூறு கோடி ரூபாய் என்றாக மாறியது.

உண்மை எதுவாக இருந்தாலும் கன்னட இசையுலகம் ராஜ்குமாரின் இனிய நினைவை என்றும் அரிதான செல்வமாகவே எண்ணிப் பேணும். அவரது குரல் ஆயிரம் கோடிகளைவிட பெறுமானமுள்ளதாக என்றுமே அங்கு நிலைத்திருக்கும். 2006 ஏப்ரில் 12 அன்று ராஜ்குமார் இறந்தபோது முழுக் கர்ணாடக மானிலமும் வன்முறையின் இருட்டில் ஆழ்ந்து போனது. ஆனால் அப்போதும் ராஜ்குமாரின் இறக்காத கண்கள் ஒரு பார்வையற்றவரின் வாழ்வில் ஒளியாக நிரம்பியிருந்தது.

2007