முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியத் திரையிசையின் திருப்புமுனை : சலில் சௌதுரி


ஒரு மலையோரக் கேரளக் கிராமத்தில் பிறந்து, எந்தக் குடும்பப் பின்னணியும் இல்லாமல் வாழ்க்கையை எதிர்கொள்ள நேரிட்டவன் நான். தனிமையும் தாழ்வுணர்ச்சியும் தனிமையும் மனிதர்களைப் பற்றிய அவநம்பிக்கையும் என்னை வதைத்த காலம் உண்டு. எனக்குத் தன்னம்பிக்கையையும் தூண்டுதலையும் அளித்தவை சலில் சௌதரி இசையமைத்த மலையாளப் பாடல்கள் என்றால் அதை ஒருவர் சாதாரணமாக நம்ப முடியாததுதான். ஆனால் அது உண்மை. சலில்தாவின் இசை கேரளப் பண்பாட்டின் படைப்பு அல்ல, அது கண்டிப்பாகக் கேரள மண்ணுக்கு அன்னியமான இசை. நான் கேட்டு வளர்ந்த, என் காதுக்கும் மனதுக்கும் பழகிய, கேரள இசைக்கு முற்றிலும் மாறான ஒன்று. அதுதான் என்னைப் பொறுத்தவரை அதன் முதல் கவர்ச்சி. வானுயர்ந்த மலைகள் எல்லையிட்ட அந்த குக்கிராமங்களுக்கு வெளியே ஒரு பெரும் உலகம் விரிந்திருப்பதை அது என் ஆத்மாவுக்கு காட்டியது. அவ்வுலகில் பூக்களும் நீரோடைகளும் இருந்தன! இனிய மனிதர்கள் மட்டுமே இருந்தனர்! மனிதர்களின் அகம் இவ்வுலகெங்கும் ஒன்றுதான் என்றும், இசை மூலம் அங்கே நுழைய வாசல் இருக்கிறது என்றும் அவ்விசை எனக்குச் சொன்னது. இதெல்லாம் இப்போது நான் எண்ணிக் கொள்வனவாக இருக்கலாம். ஆனால் அன்று சலில்தாவின் இசை எனக்குள் கனவுகளையும் உத்வேகத்தையும் நிரப்பும் ஒரு தரிசனமாக இருந்தது என்பது மட்டும் உறுதி.

தமிழ்நாட்டினர் சலில் சௌதிரியின் இசையை செம்மீன் மலையாளப் படத்தின் பாடல்களின் வரியாகத்தான் உடனடியாக அடையாளம் கண்டுகொள்வார்கள். ‘கடலினக்கரெ போணோரே’, ‘மானச மைனே வரூ’ போன்ற பாடல்கள் அரை நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டையும் வசீகரித்தவை. இன்றும் கேரளத்தைப் போலவே தமிழ்நாட்டுக் கடற்கரையிலும் பல சமயம் அப்பாடல்களின் இசையை மீனவர்களின் பாரம்பரிய இசையாக அறியப்படுகிறது. கடற்கரை சார்ந்த திரைப் படங்களுக்கு போடப்பட்ட இசைகளில் எல்லாம் அவற்றின் சாயல் உள்ளது. ஆனால் அவற்றை அமைத்த சலில்தா ஒரு வங்காளி. அவருடைய பெரும்பாலான மெட்டுக்கள் பற்பல இந்திய மொழிப் பாடல்களுக்கு மீண்டும் மீண்டும் போடப்பட்டவை. வங்கத்து மழலைப்பாடல் மலையாள இரவு விடுதிப் பாடலாகும். இந்தியில் அது சோகப் பாடலாகலாம். ஆம், தனித்துவமான இசை அனைத்துக் கலாச்சாரங்களையும் கடந்து மேலே சென்று ஒரு பொது வெளியில் ஒளிவிடும் என்று நிரூபித்தவர் சலில்தா.

இன்றைய இந்தியத் திரையிசையின் அனைத்து பாணிகளிலும் ஆழமாக ஊடுருவிய தனித்துவம் மிக்க இசைமரபுக்குச் சொந்தக்காரர் சலில்தா. மொழியின் எல்லைகளைக் கடந்து, நிலவியல் தனித்தன்மைகளை கடந்து, இந்தியத்த துணைக் கண்டத்தின் பல்வேறு உணர்ச்சிகரங்களின் தருணங்களை தனது இசையில் பதிவு செய்தது அவரது பாணி. லதா மங்கேஷ்கர் முதல் ராஜ் கபூர் வரை திரையுலகின் முதல்வர்கள் அவரை ‘எக்காலத்திற்கும் உரிய திரையிசை மேதை’ என்று புகழ்ந்தனர். இசையமைப்பாளர்களான சங்கர் ஜெய்கிஷன் முதல் ஏ ஆர் ரஹ்மான் வரையிலானவர்கள் அம்மேதையின் இசையில் உணர்ச்சிகளுடன் கருவியிசையை இணைக்கும் முறையைக் கண்டு பிரமித்துப் பாராட்டினர். ஆகவேதான் சலில்தா வங்க இசையில் தாகூருக்குப் பின்பு உருவான மிகப் பெரிய இசை அலையை உருவாக்கியவர் என்று கருதப்படுகிறார்.

சலில்தா இசையமைக்கத் தொடங்கியது 1940களின் கடைசியில். வங்கம், இந்தி, மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, ஒரியா, அஸாமிய மொழி என ஏறத்தாழ எல்லா முக்கிய இந்திய மொழிகளிலும் சலில்தா இசையமைத்துள்ளார். அவர் அடிப்படையில் ஒரு கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், அத்துடன் வங்கத்தின் முக்கியமான அரசியல் செயல்வீரரும்கூட. மார்க்ஸியராக இருந்த சலில்தா அரசியல் போராட்டத்தில் பலமுறை சிறைவாசமும் அனுபவித்திருக்கிறார்.

வங்கத்தில் இருபத்தி நான்கு பர்கானா மாவட்டத்தில் இன்று சுபாஷ் கிராம் என்றழைக்கப்படும் சிங்க்ரி போதா எனும் ஊரில் 1925 நவம்பர் 19 அன்று பிறந்தார் சலில்தா. தன் இளமைப் பருவத்தை அஸாமிய தேயிலைத் தோட்டங்களில் கழித்தார். அஸாமிய தேயிலைத் தோட்ட ஊழியர்களின் பாடல்களும் அஸாமிய நாடோடிப் பாடல்களும் அவரை மிகவும் பாதித்துள்ளன. இசையார்வம் மிகுந்தவராகயிருந்த அவரது தந்தை, பாஹ், பீத்தோவன், மொஸார்ட் போன்றவர்களின் இசைத் தட்டுக்களை சேகரித்து வைத்திருந்தார். மேலை செவ்வியல் இசையில் சலில்தாவின் ஈடுபாடு மிக இளம் வயதிலேயே உருவான ஒன்றாகும். அந்த தாக்கமே கருவியிசைகளின் சாத்தியக்கூறுகளைப் பற்றியும் இசையில் ஒத்திசைவின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவருக்குக் கற்பித்தது. சலில்தாவின் சாதாரண சினிமாப் பாடல்கள் கூட அவற்றின் ஒத்திசைவு மிக்க அமைப்புக்காகக் கவனிக்கத்தக்கவை. இந்துஸ்தானி இசையைத் தன் தந்தையிடமிருந்தும் அண்ணனிடமிருந்தும் பெற்றார். சிறு வயதிலேயே சலில்தா ஒரு நாடோடி. அந்த அலைச்சல் வங்கப் பழங்குடி இசையை அவருக்குப் பழக்கப்படுத்தியது. மேலை இசையையும் நாட்டுப்புற இசையையும் சரியான விகிதத்தில் கலப்பதன் மூலமே சலில்தாவின் இசை அதன் அழகுகளை அடைகிறது எனக் காணலாம்.

பட்டப் படிப்புக்காக கல்கத்தா வந்த சலில்தா அன்றைய அரசியல் அலையால் ஈர்க்கப்பட்டு மார்க்ஸியரானார். 1946ல் அவர் பாரதிய ஜன நாட்டிய சங்கம் (IPTA) என்ற இடதுசாரி அமைப்புக்காகப் பாடல்களை எழுதி இசையமைக்க ஆரம்பித்தார். அக்காலத்திய சுதந்திர தாகத்தையும் உழைக்கும் மக்களின் எழுச்சியையும் தனது பாட்டில் பதிவு செய்தார். வங்கக் கலாச்சாரத்தில் அழியா இடம்பெற்ற பாடல்கள் அவை. ‘பிஜார்பொதி தொமார் பிஜார்’, ‘ரன்னர்’, ‘அபக் ப்ரொதிபி’ முதலியவை சலில்தாவின் வார்த்தைகளிலேயே ‘நம்பிக்கையின், விழிப்புணர்வின் பாடல்களாக’ அமைந்தவை. தனது 20 வயதில் அவர் ஹேமந்த் குமார் பாடிய ‘காயேர் பொது’ என்ற பாடலை இசையமைத்து வங்க இசையில் ஒரு புதிய அலையை உருவாக்கினார். ‘பால்கீர் கான்’ என்ற அவரது புதுவகைப் பாடல் வங்க இசையில் அடுத்த கட்டத்தை உருவாக்கியது.

இசையைக் கோர்ப்பதில் சலில்தா செய்த சோதனைகளை அன்று வரை இந்திய இசையில் எவருமே செய்ததில்லை. பல்வேறு பாடகர்களைப் பலவிதமான மெட்டுக்களில் பாடச் செய்து அவற்றை இசையொருமையுடன் கோர்த்து பாடல்களை அமைக்கும் அவரது முறை அவரது மேதமையின் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். அவரே இசையமைத்து, அவரே பாடல்களை எழுதி, அவரே பின்னணி இசையொழுங்கை அமைத்து, அனைத்து நுட்பங்களுடன் பதிவு செய்வார். அவர் ஒரு மிகச் சிறந்த இசை நடத்துநர். இன்று வரை இந்தியத் திரையிசையில் அவரளவுக்கு தன் இசை மீது முழுமையான கட்டுப்பாடு கொண்ட ஒரு இசையமைப்பாளர் உருவானதில்லை.

நூற்றுக்கணக்கான வங்க இசைப் பாடல்களை அமைத்த சலில்தா பல வங்கத் திரைப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அவரது முதல் படம் பரிபொர்த்தன் (மாற்றம்) 1949ல் வந்தது. 1994ல் வந்த மகா பாரதி அவரது கடைசி வங்கத் திரைப்படம். அவருடைய வங்கப் பாடல்கள் அனைத்துக்கும் பெரும்பாலும் அவரே பாடல் வரிகளையும் எழுதினார். சலில் சௌதுரி எழுதிய சிறுகதையான ‘ரிக்ஷாவாலா’வை இந்தியில் தோ பீகா ஜமீன் என்ற பேரில் பிமல் ராய் 1954ல் சினிமாவாக இயக்கியபோது அதற்கு இசையமைத்து இந்தியில் நுழைந்தார் சலில்தா. அப்படம் 1954ல் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்புப் பரிசு பெற்றது. அப்படத்தின் அழியாப் புகழ்பெற்ற பாடல்களான ‘தர்த்தி கஹே புகார் கே’, ‘ஹரியாலா சாவன்’, ஆஜாரீ ஆ’ போன்றவை இந்தியாவெங்கும் விரிவாகக் கவனிக்கப்பட்டன.

அதன்பின் சலில்தா இந்தித் திரையிசையை மாயம் போல் ஆக்ரமித்துக் கொண்டார். பிராஜ் பஹு, நௌகரி, அமானத், டாங்கே வாலி, ஆவாஸ், பரிவார், ஜாக்தே ரஹோ, அபராதி கௌன், ஏக் காவ் கி கஹானி, லால் பத்தி, முசாஃபிர் முதலிய அக்காலத்துப் படங்கள் அவரது பாடல்களுக்காக புகழ்பெற்றவை. 1958ல் மதுமதி படத்தில் வந்த 12 பாடல்களும் இந்தி இசையுலகை அதிரச் செய்தபோது சலில்தாவின் அலை உச்சத்தை அடைந்தது. ‘ஆ ஜா ரே பர்தேசி’ என்ற பாடல் இந்திய இசையின் மிக மிக முக்கியமான காதல் காவியப் பாடல் எனலாம். ‘சுஹானா சஃபர்’, ‘தில் தடப் தடப் கெ’ முதலியவை இன்றும் மீள மீளக் கேட்கப்படுகின்றன. பரக், உஸ்னே கஹா தா, சாயா, மாயா, காபூலிவாலா, ஆனந்த், மேரே அப்னே, ரஜ்னிகந்தா, சோட்டி சி பாத், ஜீவன் ஜோதி, மிருகயா, ஆனந்த் மஹால் ஆகியவை தொடர்ந்து வந்த அவரது இசை வெற்றிப் படங்கள். 1994ல் சுவாமி விவேகானந்தா படத்துக்கு இசையமைத்தபடி சலில்தா தன் இந்திப் பட வரிசையை முழுமை செய்தார்.

இருபது வருடங்கள் வங்கத்தில் கோலோச்சிய பின்பு 1965ல் சலில்தா தென் எல்லையில், கேரள மண்ணுக்கு வந்தார். முதல் படம் செம்மீன். இன்றும் மலையாள இசையைப் பல வெளி மாநிலத்தவர் செம்மீனின் இசை மூலமே அடையாளம் காண்கிறார்கள்! ஏழு ராத்ரிகள், ஸ்வப்னம், நீலப் பொன்மான், நெல்லு, ராகம், ராசலீலா, ப்ரதீக்ஷா, அபராதி, துலாவர்ஷம் தொடங்கி கடப்புறம் வரை 23 படங்களிலாக அவர் 106 பாடல்களை உருவாக்கினார். மற்றும் மூன்று மலையாளப் படங்களுக்கு பின்னணி இசை மட்டும் அமைத்தார். அரவிந்தன் இயக்கிய வாஸ்துஹாரா என்ற மலையாள படத்தில் இரு வங்க மொழிப் பாடல்களை சலில்தா இசையமைத்திருக்கிறார்.

சலில்தா இசையமைத்த சில மலையாளப் படங்கள் வரவேயில்லை. பல படங்கள் மிகப்பெரிய தோல்விகள். ஆனாலும் அவரது இசை ஒளி மங்கவில்லை. பல படங்கள் இன்று அவரது பாடல்களாலேயே அறியப்படுகின்றன. சலில்தாவின் புதிய வகை இசைக்கு ஏற்ப பாடலமைக்க மலையாளப் பாடலாசிரியர்கள் திணறினர். பலசமயம் அபத்தமான வரிகளை எழுதினர். அவை மேலும் அபத்தமாகப் படமாக்கப்பட்டன. ஆனாலும் அப்பாடல்கள் மலையாள மனதுக்கு அன்னியமாகவில்லை. அவற்றின் இசையே அவ்வுணர்ச்சிகளை எளிய மலையாள மனதுக்குக்கூட அளித்தன. ஒரு பாடலில் வரிகளும் பின்னணி இசையும் கூடி முயங்கி முழுமை செய்துகொள்ளும் இசைச் சித்திரம் சலில்தாவால்தான் மலையாளிக்கு அறிமுகமாகியது.

சலில்தா பெரும்பாலான இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர். அவரது இசையில் ஏராளமான கருவிகள் எந்தவிதமான பிழற்வுமின்றி கூடி இசைவதன் பலம் நாம் கேட்கலாம். ‘தபலா முதல் சரோத் வரை, பியானோ முதல் பிக்காலோ வரை அனைத்தும் சரளமாக வாசிக்கத் தெரிந்த அபூர்வ மேதை’ என்று சலில்தாவைப் பற்றி ராஜ்கபூர் சொன்னார். விசித்திரமான உலக இசை வாத்தியங்களைக்கூட இந்திய இசைக்கேற்ப பதப்படுத்தி இந்திய உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வழிகாட்டியவர் அவர். ஓபோ (Oboe), ஃப்ரெஞ்ச் ஹார்ன், மாண்டலின், சாக்ஸஃபோன் போனற்வற்றை தனது இசையில் அவர் பயன்படுத்தியுள்ள முறை அபூர்வமானது. குறிப்பாக பார்க்க கிளாரினெட் போல் இருக்கும் இரட்டை ரீட் வாத்தியமான ஓபோ மேல் சலில்தாவுக்கிருந்த காதல் ஆச்சரியமான ஒன்று. ஏராளமான பாடல்களில் அதை பயன்படுத்தியுள்ளார்.

சலித்தாவின் இசை தொடர்ந்த தேடல் கொண்டது. வித்தியாசம் மூலம் தன்னை நிலைநிறுத்துவது. மேலை இசை, இந்துஸ்தானி இசை மற்றும் வங்க நாட்டுப்புற இசை ஆகியவற்றை ஊடுபாவாக கலந்து நுட்பமாக உருவாக்கப்பட்டவை அவருடைய பாடல்கள். பாடலின் திரைப்படத் தேவை, வணிக ரீதியான நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றுக்கு உட்பட்டும் அதேசமயம் தன் தனித்தன்மையை இழக்காமலும் படைப்பூக்கத்துடன் உருவாக்கப்பட்டவை அவருடைய பாடல்கள். கலப்பிசை அல்லது ஃப்யூஷன் இசையின் முக்கியமான முன்னோடி சலில்தா. பாகேஸ்ரீ, கலாவதி, ஹமீர் கல்யாணி போன்ற எண்ணற்ற இந்திய ராகங்களுக்கு பின்னணி இசையாக மேலைநாட்டு இசையை அவர் அமைத்திருப்பதைக் கேட்கலாம். அதே சமயம் அவர் மேலைநாட்டுப் பின்னணி இசையமைப்பு முறையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றவும் இல்லை. ஆதலால் சலில்தாவின் இசையை எந்த ஒரு வகைமைக்குள்ளும் அடக்க இயலாது. ‘இசை எப்போதும் தன்னைக் கலைத்துக்கொண்டு, மீள மீளப் புதுப்பித்துக் கொண்டு காலத்தின் தேவைக்கேற்ப புது வடிவங்களைக் கொண்டு வளர வேண்டும். இல்லையென்றால் அது உறைந்துபோய் விடும். ஆனால் முன்னகரும் வேகத்தில் நான் என் மரபை விட்டுவிடலாகாது என்பதே என் எண்ணமாகும்” தனது இசையின் அடிப்படையை பற்றிச் சலில்தா சொன்னது இது.

சலில்தாவின் இசை ஒருபோதும் ஊகிக்கக்கூடிய வடிவம் கொண்டது அல்ல. இனிய அதிர்ச்சிகளை அளித்துக்கொண்டேயிருப்பது அது. முதலில் கேட்கும்போதே மனதைக் கவர்வது. எளிமையானதாகப் படுவது. ஆனால் வாய்விட்டுப் பாட முயலும்போதுதான் அதில் உள்ள இசைப்பின்னல்கள் எத்தனை சிக்கலானவை என்பது புரியும். அழியாத கோலங்கள் படத்தின் ‘பூவண்ணம் போல நெஞ்சம்’ பாடலின் சில வரிகளை பாடிப் பாருங்கள். சிக்கலான இசை உருப்படிகளை எளிய வடிவுக்குள் அடுக்கி, ஓட்டம் தடைபெறாமல் பாடல்களை அமைப்பது அவரது பாணி. பிரபலமான ‘கடலினக்கரெ போணோரே’ பாடலில் மட்டும் எத்தனை விதமெட்டுகள் ஒளிந்துள்ளன என்பதை கூர்ந்து கவனித்துப் பாருங்கள். அவருடைய பாடல்களை அவற்றின் முழுப் பின்னணி இசையுடன் அல்லாமல் கற்பனை செய்ய முடியாது.

இணைமெட்டை (Obligato) திறமையாகப் பயன்படுத்துவது சலில்தாவின் இசையின் முக்கியமான உத்தி. மைய மெட்டுக்கு எதிரான அந்த மெட்டு பல திசைகளில் பிரிந்து வளர்ந்து பாடலை ஒரு பின்னலாக மாற்றிவிடும். மேலை மரபிசையில் ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்படும் இக்கூறு இங்கே பாடலை வளரச் செய்யும் கூறாகக் கையாளப்படுகிறது. அவருடைய இணை மெட்டுகள் ஓபோ, மாண்டலின் போன்ற வாத்தியங்கள் வழியாகவும் கூட்டுக்குரல்களோ அல்லது தனிக்குரல்களோ வழியாகவும் மைய மெட்டின் குறுக்காக ஊடுருவிச் செல்லும்போது நாம் இசையின் மாயத்தை அறிகிறோம்.

மெட்டுதான் பாடல் என்று உறுதியாக நம்பினார் சலில்தா. கேட்பவர் முதலில் கவனிப்பது மெட்டைத்தான். அதனால் மெட்டுதான் பாடலின் அடிப்படை என்றார் அவர். அவரே ஒரு சிறந்த பாடலாசிரியராக இருந்தும் ஒரு சரியான மெட்டைக் கண்டடைந்து விட்டால் அதற்குரிய வரிகளை எழுதுவது பெரிய வேலை இல்லை என்றே அவர் எண்ணினார். தன் மெட்டுக்கள் மீது அவருக்கு இருந்த அபாரமான பிடிப்பும் பயிற்சியும் காரணமாக வங்கத்தில் ஒரு துள்ளல் நடனத்துக்குப் போட்ட அதே மெட்டையே மலையாளத்தில் ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் போட அவரால் முடிந்தது. அவரது மலையாளப் பாடல்களில் மலையாள மணம் இல்லை. இந்திப் பாடல்களில் இந்தியின் வாசனையும் இல்லை. அவை அவருடைய சொந்தக் கனவுகள். அழியாத உணர்ச்சிகளினால் ஆனவை. அவ்வுணர்ச்சிகள் மானுடப் பொதுவானவை. அவ்வுணர்ச்சிகளின் மொழி இசை. அதற்கு வேறு மொழி தேவையில்லை. வங்க மொழியில் ஆழ வேரூன்றிய ஒரு கவிஞர் சலில்தா என்பதை நாம் இங்கு நினைக்க வேண்டும். அவருடைய கவிதைகள் இன்றும் அழியாத முக்கியத்துவத்துடன் உள்ளன. பல பல்கலைகளில் பலமுறை பாடமாக்கப்பட்டுள்ளன அவை. ஆனால் இசை என்பது மொழி கடந்தது என்றே அவர் எண்ணினார்.

மரபுவாதிகளின் எதிர்ப்பை எப்போதும் சலில்தா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் வங்க இசையை மேலைமயமாக்குகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டபோது ஹார்மோனியமே மேலைநாட்டு இசைக் கருவி தானே என்று சலில்தா பதிலளித்தார். குரல் என்பது ஒரு பாடலின் சிறு பகுதியே என்றார் சலில்தா. முன்னகர வாய்ப்பு அளிக்காத திறனாய்வும் விமர்சனமும் உதாசீனம் செய்யப்பட வேண்டியவை என்றார் அவர்.

சலில்தா மலையாளத்தில் இசையமைக்க ஆரம்பித்தபோது அங்கிருந்த பாடலாசிரியர்கள் மெட்டுக்குப் பாடல் எழுதிப் பழக்கமில்லாதவர்கள். மரபான யாப்பின் சொல்லாட்சிகளைக் கையாண்டவர்கள். சலில்தாவின் மெட்டுக்களுக்குப் பொருத்த அவர்கள் வரிகளை ஒடித்து மடக்கி, மொழியை இம்சை செய்தனர். ஆனால் சலில்தா அதில் தெளிவாக இருந்தார். கவிதை என்பது கட்டுப்படுத்தப்பட்ட மொழியே என்பது அவரது எண்ணம். யாப்புக்குக் கட்டுப்படலாமென்றால் ஏன் மெட்டுக்குக் கட்டுப்படலாகாது? தேவை சற்று இசையார்வம் மட்டுமே! தன் இறுதிக் காலத்தில் தம்புரான் என்ற படத்துக்கு இசையமைத்துவிட்டு முதன்முறையாக மலையாளத்தில் தன் மெட்டும் அதற்கு எழுதப்பட்ட வரிகளும் சரியானபடி இணைந்து வந்திருக்கிறது என்று சலில்தா சொன்னார். காரணம் அதற்குள் மெட்டுக்கு எழுத கவிஞர்கள் பழகி விட்டிருந்தனர்.

மொழியே அறியாத மன்னாடே, லதா மங்கேஷ்கர் போன்றவர்களை மலையாளத்துக் கொண்டுவந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார் சலில்தா. அதே சலில்தாதான் ஜேசுதாஸை வங்க மொழியிலும் பாடச் செய்தவர். மன்னாடே பாடிப் புகழ்பெற்ற மலையாளப் பாடலான ‘மானச மைனே வரூ’வின் வங்க வடிவத்தை ஜேசுதாஸ் பாடினார்! சலில்தாவின் போக்குக்குச் சிறந்த உதாரணம் இது.

1958ல் சலில்தா எழுதிய கட்டுரை இந்தியத் திரையிசையில் எதிர்காலம் எனும் கட்டுரையில் இந்தியத் திரை இசை, மெட்டுக்கள் சார்ந்து, பின்னணி இசைக்கு அதிக இடமளித்தபடி முன்னகரும் என்று சொல்லியிருந்தார். அவர் போட்ட பாதையில் ஆர்.டி.பர்மன் போன்றவர்கள் முன்னகர்ந்தார்கள். மலையாள இசையில் சலில்தாவின் உதவியாளர்களான கெ.ஜெ.ஜாய், ஷ்யாம் போன்றவர்களும் இவ்வண்ணமே முன்னகர்ந்தனர்.

நவீன தமிழ்த் திரைப்பட இசைக்குமே உண்மையான முன்னோடி சலில்தாதான் என்றால் அது மிகையல்ல. அவர் குறைவாகவே தமிழில் இசையமைத்திருக்கிறார். ஆனால் நவீன தமிழ் திரையிசையின் இரு பெரும் சக்திகளான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவருமே சலில்தாவின் வழிவந்தவர்கள்தான். இளையராஜா சலில்தாவின் குழுவில் கித்தாரும் காம்போ ஆர்கனும் வாசித்தவர். அவரிடம் சலில்தாவின் செல்வாக்கு நேரடியானது. அவருடைய கணிசமான பாடல்கள் சலில்தாவின் பாணியை அப்படியே பின்பற்றுபவை. நாட்டாரிசையை மேலையிசையுடன் பிணைத்தல், பின்னணி இசையைப் பாடலுடன் பிரிக்க முடியாதபடி பின்னி விரித்தல் போன்றவை அவர் சலில்தாவிடமிருந்து கற்றுக் கொண்டவை என்றே சொல்வேன். தான் சலில்தாவின் ஒரு பெரும் ரசிகன் என்பதை இளையராஜா எப்போதுமே சொல்வதுண்டு. இளையராஜாவின் விரிவான பின்னணி இசை அமைப்புமுறைகள் (chord progressions, choral background arrangements) மற்றும் இணை மெட்டை (Obligato) திறம்படப் பயன்படுத்துதல் ஆகியவை சலில் சௌதுரியின் பாணியிலிருந்து எடுக்கப்பட்டவை. ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் சலில்தாவின் தென்னிந்தியக் குழுவில் இசை உதவியாளராக பணியாற்றியவர். அதேபாணியில் பல படங்களுக்கு இசையமைத்தவர். ரஹ்மானின் பல அடுக்குகளிலான பின்னணி இசை நகர்வுகளில் சலில்தாவின் பாணியை நாம் காணலாம்.

சலில்தா 1971ல் உயிர் என்ற தமிழ் படத்துக்கு பின்னணி இசையமைத்தார். செம்மீன் இயக்குனரான ராமு காரியட் தன் கரும்பு என்ற தமிழ்ப் படத்துக்கு இசையமைக்க 1972ல் சலில்தாவை அழைத்தார். அப்படம் பின்பு கைவிடப்பட்டது. ஆனால் அதில் உள்ள ‘திங்கள் மாலை வெண்குடையான்’, ‘கண்ணே கண்மணியே’ போன்ற பாடல்கள் எழுபதுகளில் இலங்கை வானொலியில் மிகப் பிரபலமாக இருந்தன. 1978ல் கமலஹாசன் நடித்த மலையாளப்படம் மதனோத்சவம் தமிழில் பருவ மழை என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது சலில்தாவின் ‘மாடப் புறாவே வா’, ‘தேன்மலர் கன்னிகள்’, ‘காலமகள் மேடை நாடகம்’, ‘அங்கே செங்கதிர்’ போன்ற அரிய மெட்டுகள் பிரபலமடைந்தன.

பாலுமகேந்திரா கன்னடத்தில் கோகிலா படத்தை 1977ல் இயக்கியபோது அதற்கு சலில்தா இசையமைத்தார். அவர் அழியாத கோலங்களை (1979) தமிழில் இயக்கியபோது சலில்தா அதற்கும் இசையமைத்தார். அதில் உள்ள ‘பூ வண்ணம் போல நெஞ்சம்’, ‘நான் எண்ணும் பொழுது’ போன்ற பாடல்கள் அழியாப் புகழ்பெற்றவை. 1980ல் சலில்தா இயைமைத்த தூரத்து இடி முழக்கம் அவரது கடைசித் தமிழ்ப் படம். அதில் உள்ள 5 பாடல்களும் புகழ்பெற்றவை. ‘மணி விளக்கால் அம்மா’, ‘செவ்வல்லிப்பூவே’, ‘வலையேந்திச் செல்வோம்’ ஆகியவற்றுடன் அதில் வரும் ஆங்கிலப் பாடலான 'There is rainbow in the distant sky' யும் முக்கியமானது. ஆங்கில வரிகளை சலில்தாவே எழுதினார். ஆனால் இப்படத்தில் வரும் ‘உள்ளமெல்லாம் தள்ளாடுதே’ என்ற பாடல்தான் அனைவருக்கும் தெரிந்தது. சிவாஜி, எம்.ஜி.ஆர் யுகத்தின் தேவைகளை மென்மையும் நுட்பமும் கொண்ட சலில்தாவின் இசையால் நிறைவேற்ற முடியவில்லை என்றே நினைகிறேன். சலில்தாவின் நேரடிப் பங்களிப்பு தமிழில் குறைவே.

ஆனால் இந்திய திரையிசையில் ஒரு இசையமைப்பாளராக சலில்தாவின் பங்களிப்பு மிக மிக ஆழமான ஒன்றாகும். இந்திய திரையிசையானது ஆலாபனையை மையமாகக் கொண்டது. நம் காதுகள் அப்படி இசை கேட்பதற்கு பழகிப் போனவை. அது பல நூற்றாண்டுகளாக நம்மில் ஊறிய விஷயம். சலில்தா மேலையிசையில் இசையொழுங்கை (Orchestration) நம் திரையிசையில் நிறுவினார். இன்று நாம் இளையராஜாவையோ ஆர்.டி.பர்மனையோ  ஏ.ஆர்.ரஹ்மானையோ கேட்கும்போது சாதாரணமாகவே பின்னணி இசையையும் பின்னணி ஓசைகளையும் எல்லாம் இணைத்து நம் மனதில் ஒட்டு மொத்தமாக அவ்விசைக் கோலத்தை உருவாக்கிக் கொள்கிறோம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் சலில்தா. அது மேலையிசையில் உள்ள சிறப்பம்சத்தை நம் இசையுடன் வெற்றிகரமாகப் பிணைத்ததன் மூலம் உருவானது. பின்னர் வந்த நமது திரையிசை என்பது இப்படிப்பட்ட கலப்பிசைதான். ஒரு தேசத்தின் இசை ரசனையை மாற்றியமைப்பது என்றால் அது சாதாரண விஷயமல்ல. தணியாத புதுமை நாட்டமும் பல்வேறுபட்ட இசை மரபுகளில் அறிவும் பயிற்சியும் கொண்ட சலில்தா போன்ற மேதைகளினால் மட்டுமே அது நிகழ முடியும்.

1995 செப்டம்பர் ஐந்தாம் தேதி சலில்தா தனது எழுபதாவது வயதில் சலில்தா மரணமடைந்தார். உலகமெங்கும் உள்ள லட்சக்கணக்கான இசை விரும்பிகளைப் பொறுத்தவரை, அன்புடனும் உணர்ச்சி உத்வேகத்துடனும் அவர் படைத்த எத்தனையோ பாடல்கள் வழியாகவே அவர் அறியப்படுகிறார். அவர்களில் ஒருவனான என்னிடமும் தன் அழியா இசை வழியாகவே அவர் இன்றும் உரையாடுகிறார்.

2004