முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாப் மார்லி : கறுப்பின விடுதலைப் பாடகன்

பிரசாத் யுவநேசன் மலேசியத் தமிழ் இளைஞன். வருடங்களுக்கு முன்பு நான் அவனைச் சந்தித்தபோது சென்னையில் தங்கி சினிமாப் படத்தொகுப்பு கற்றுக் கொண்டிருந்தான். அவனுக்கு நீளமான கரிய தலைமுடிச் சுருள்கள், கிட்டத்தட்ட சடைத்திரிகள் மாதிரி. எப்போதும் மணிக்கட்டில் பச்சை மஞ்சள் சிவப்புப் பட்டைகளையும் விரல் பட்டைகளையும் கட்டியிருப்பான்.  கஞ்சா இலைகளின் படமோ, 'Could You Be Loved?', 'In Bob I Trust' போன்ற வரிகளோ அவன் சட்டைகளில் விரிந்திருக்கும். சட்டையில் சடைமுடி சிங்கப் பிடரி போல பறக்கும் பாப் மார்லியின் பெரிய படங்கள். முகத்தின் மீது சரிந்த சடைக்கற்றைகளுடன் கஞ்சா இழுக்கும் பாப் மார்லி... தியான பாவத்துடன் கித்தாரின் மீது விரல் வைத்து அமர்ந்திருக்கும் பாப் மார்லி... பிரசாத்தை ஒரு பாப் மார்லி ரசிகன் என்று சொல்வது சரியல்ல... அவன் பாப் மார்லி என்ற கடவுளின் பக்தன். என்னிடம் அவன் சொல்வதுண்டு, “சார், எனக்கு அவன் இருக்கான் சார், பாப் மார்லி. எல்லாம் அவன் பாத்துக்குவான். அவன் காப்பாத்துவான்...”

பிரசாத்தின் கண்கள் ஒளிவிடும். ‘‘தினமும் அவன் பாட்டைக் கேளுங்க... அவன்கிட்ட பிரார்த்தனை பண்ணுங்க... அவன் நம்மை ஒரு நாளும் கைவிட மாட்டான்.’’ பிரசாத் உணர்ச்சிகரமான குரலில் சொல்வதுண்டு. அவன் தினமும் பாப் மார்லியின் படத்தை வணங்கி அவருடைய பாடல்களை பக்திப் பாடல்கள் போல் அதிகாலையிலேயே போட்டுக் கேட்பான். அவன் கொலாலம்பூரின் பாப் மார்லி பக்தர் குழு ஒன்றின் தீவிர உறுப்பினன். மலேசியாவில் உள்ள லட்சக்கணக்கான பாப் மார்லி பக்தர்களின் ஒருவன். பச்சை மஞ்சள் சிவப்பு பாப் மார்லியினரின் நிறங்கள்... கஞ்சாப் புகை தூபம்...

பாப் மார்லி தன்னளவில் ஒரு கலாச்சாரம், ஒரு மதம். அவர் பக்தர்கள் தொலைக்காட்சியில் அவரைப் பற்றி உணர்ச்சிகரமாகப் புலம்புகிறார்கள். மெக்ஸிகோ சிட்டியின் கோன்ஸோ என்கிற இளைஞன் சொல்கிறான். “நான் பாப்பை வழிபடுகிறேன். அவர் பாட்டைக் கேட்டுக்கொண்டே கஞ்சா பிடிக்கிறேன். அது ஓர் அறபுதம். உலகம் முழுதுக்குமான சுதந்திரமே அவரது அறைகூவல். பாப்பைப் போல் உலகம் முழுக்க அத்தனைப் பேரும் தினமும் கஞ்சா இழுக்க வேண்டும். அது நம் ஆத்மாவுக்கு ரொம்ப நல்லது.”

நியூசிலாந்தின் ஃபேபியன் முல்லர் அறிவிக்கிறார். “இக்காலத்தின் நெஞ்சங்களிலும் பாப் மார்லி நிலைத்து வாழ்கிறார். ஒலியிலும் இசையிலும் அவர் இவ்வுலகத்துக்கு அளித்தவற்றுகு நிகராக எவரும் எதையும் முன்வைத்துவிட இயலாது. வலியுணறும் நெஞ்சங்களில் அவர் என்றும் இருப்பார். அவர் ரசிகர்களுக்கும் குடும்பங்களுக்கும் அவருடைய ஆசிகள் என்றுமிருக்கும்.”

உலகமெங்கும் உள்ள பாப் மார்லி ரசிகர்களைப் பொறுத்தவரை ரெகே (Reggae) தான் இசை. வெய்லர்ஸ் (Wailers) மட்டுமே இசைக்குழு. பாப் மார்லி இசையின் கடவுள். மூன்றாமுலகில் இருந்து எழுந்து வந்த முதல் சர்வதேச இசை உச்ச நட்சத்திரம் பாப் மார்லிதான். ரெகே அவர் செதுக்கி எடுத்த இசைப் பாணி. இன்று அது ராக் இசை போல உலகம் முழுக்க பரவியுள்ள முக்கியமான ஓர் இசை முறை. அதை உலகளாவ பரப்பியவர் பாப் மார்லி. அவரே பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர். ரெகே உலகம் முழுக்க உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை கீதம். அவர்களின் துயரின், தனிமையின் கனவின் துடிப்பு அது. அது உலகத்துக்கு அப்பாற்பட்ட ஆன்மீக இசை அல்ல. இங்கேயே அறத்தையும் சமத்துவத்தையும் கோரும் முழக்கம் அது. இந்த உலகியல்தான் ரெகேயின் உள்ளே உறைந்துள்ளது.

ரெகே அடிப்படையில் ஜமைக்கா நாட்டு இசை. ஜமைக்காவின் நாட்டுப்புற இசைகளான ஸ்கா (Ska), ராக்ஸ்டெடி (Rocksteady), டப் (Dub), டான்ஸ் ஹால் (Dancehall), ராகா (Ragga) ஆகியவற்றின் நுட்பமான கூறுகள் கலந்த ஒரு இசை வழி அது. பிற இசைமுறைகளான கலிப்ஸோ (Calypso), ரிதம் அண்ட் ப்ளூஸ் (R&B) ஆகியவற்றின் கூறுகளும் இதில் உள்ளிழுக்கப்பட்டுள்ளன. ரெகே முக்கியமாக தெளிவான துல்லியமான ஒரு தாளக் கட்டுமுறையால் கட்டமைக்கப்பட்டது. ரிதம் கித்தாரால் இசைக்கப்படும் சீரான பின்னணித் தாளம் (Back Beat) இதில் இருக்கும். இது ‘ஸ்காங்க்’ (Skank) எனப்படுகிறது. இதுதான் ரெகேயின் முக்கிய அடையாளம். இந்த ஸ்காங்க் ரெகேயை கிளர்ச்சியூட்டும் துள்ளல் இசையாக ஆக்குகிறது. பேஸ் கித்தாரில் ஒலிக்கும் தீர்க்கமான தாளக்கட்டு ரெகேக்கு அழுத்தத்தை அளிக்கிறது. துல்லியமான இந்த தாள அமைப்பே ரெகேயின் தனித்தன்மையாகும்.

பிற இசைகள் பல நம்மைத் தணித்து உணரச் செய்கையில் ரெகே நம்மைப் பெரும் கூட்டத்தில் ஒருவராக ஆக்குகிறது. அதன் தாளம் நம் நரம்புகளைத் தூண்டி நம்மை மெய்மறந்து ஆடச் செய்கிறது. ரெகே என்பது ஒரு ஸ்பானிஷ் மொழிச் சொல் என்றும் அதற்கு ‘அரசனின் இசை’ என்ற பொருளுண்டு என்றும் பாப் மார்லி சொல்லியிருக்கிறார். ‘சின்னச் சின்ன ஆசை’, ‘முஸ்தஃபா முஸ்தஃபா’, ‘அகிலா அகிலா’, ‘அவள் வருவாளா..’ என்று நவீனத் தமிழ்த் திரை இசையிலும் ரெகே ஏராளமான வடிவங்களை எடுத்துள்ளது.

பாப் மார்லியின் வரிகளும் பாடல்களும் காலமெல்லாம் மானுட குலம் நீதிக்காகவும் அமைதிக்காவும் நடத்திவரும் அத்தனை போராட்டங்களையும் தொட்டுச் செல்பவை. மண்ணில் மானுடர் அனைவரும் உலகளாவிய சகோதரத்துவத்துடன் இணைந்து வாழ்வதற்காகக் குரல் கொடுப்பவை. அவர் உறுதியான மத நம்பிக்கைகளும் தெளிவான அரசியலும் உடையவர். அவற்றுக்கு அடிப்படையாக அமைந்தது அவரது வாழ்க்கை. வறுமையும் சீரழிவும் நிறைந்த சூழலில் பிறந்த பாப் தன் இசை மூலமே இருபதாம் நூற்றாண்டின மாபெரும் இசை ஆளுமைகளில் ஒருவராக உருவானவர். பாப் பிறந்தது கரீபியன் கடலின் ஜமைக்காத் தீவில் நைன் மைல்ஸ் என்னும் அழகிய மலைக் கிராமத்தில். ஆனால் அவர் வளர்ந்ததெல்லாம் ஜமைக்காவில் கிங்ஸ்டன் நகரில் டிரெஞ்ச் டவுன் என்னும் அழுக்குச் சேரியில். பாப் ரஸ்தஃபாரி என்ற மதத்திலும் அதன் கடவுளான ஜாவிலும் (Jah)* ஆழமான நம்பிக்கை கொண்டவர். அவருடைய வசீகர வரிகளும், ஈர்த்திழுக்கும் இசையும் உருவாக்கின பாதிப்பினால் நியூசிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேயிலா, ஜிம்பாப்வே முதலிய எத்தனையோ தொலைதூர நாடுகளில் ஏராளமானவர்கள் ரஸ்தஃபாரி மதத்தைத் தழுவிக் கொண்டார்கள்.

1945 பிப்ரவரி 6ல் நார்வெல் சிங்லேர் மார்லிக்கும் செடெல்லா புக்கருக்கும் மகனாக பாப் மார்லி பிறந்தார். இயற்பெயர் ராபர்ட் நெஸ்டா மார்லி. அப்பா ஐம்பது வயதைத் தாண்டிய வெள்ளையர். மலைகளுக்குப் பொழுதுபோக்க வந்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி. அம்மா ஜமைக்காவைச் சேர்ந்த கறுப்பின பதின்பருவப் பெண். பாப் பிறந்ததுமே நார்வெல் மார்லி மனைவியை நிரந்தரமாக் கைவிட்டுச் சென்றார். பாப் ஐந்து வயதாக இருக்கும்போது செடெல்லா புக்கர் பிழைப்புக்காகக் குழந்தையுடன் கிங்ஸ்டன் நகரச் சேரிக்கு இடம்பெயர்ந்தார். குற்றங்களுக்குப் பெயர் பெற்ற அச்சேரியில் வளர்ந்த பாப் மார்லி பதினான்கு வயதில் படிப்பை விட்டுவிட்டு ஒரு மின் பற்றுவைப்பாளராகப் பயிற்சி பெற்றார். பலவிதமான வேலைகளைச் செய்து சிலகாலம் அலைந்தபின் இசையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 1962ல் தன் பதினாறு வயதிலேயே பாப் இரு பாடல்களைப் பதிவு செய்து வெளியிட்டார். அவை வெற்றிபெறவில்லை. ஆனால் தொடர்ந்து இசையில் கவனம் செலுத்திய பாப் 1965ல் ‘வெய்லர்ஸ்’ என்ற இசைக் குழுவை உருவாக்கினார். பன்னி லிவிங்ஸ்டன், பீட்டர் டாஷ் ஆகியோர் அதில் இடம்பெற்றிருந்தனர். இம்மூவரும் வெளியிட்ட Simmer Down, Rule Them Rudie மற்றும் It Hurts To Be Alone ஆகிய பாடல்கள் ஜமைக்காவில் ஒரளவுக்குப் புகழ் பெற்றன.

1966ல் நீண்ட காலமாகத் தன் தோழியாக இருந்த ரீத்தாவை பாப் மணம் புரிந்தார். மணமான மறுநாளே ரீத்தாவைப் பிரிந்து அமெரிக்கப் பயணமானார். அமெரிக்காவில் அப்பொழுது வசித்துவந்த தன் அமமாவுடன் சில காலம் தங்கி, பணம் சேர்த்து தன்னுடைய இசைத்தட்டுகளை வெளியிடுதே அவரது நோக்கம். அங்கே சிலகாலம் உணவு விடுதிகளில் துப்புரவாளர் போன்ற பலவித பணிகளைச் செய்து பணமீட்டி மீண்டும் ஜமைக்கா திரும்பினார். மனைவியுடன் இணைந்து கிங்ஸ்டனில் ஓர் இசைத்ததட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். பீட்டர் டாஷ் மற்றும் பன்னி லிவிங்ஸ்டனுடன் மீண்டும் இணைந்து உள்ளூர் நிறுவனமான பெவர்லி வழியாகச் சில இசைத்தட்டுக்களை வெளியிட்டார். விரைவிலேயே வெய்ல் அன் சோல் (Wail'N Soul) என்ற இசை வெளியீட்டகத்தைத் தொடங்கினார்.  Mellow Mood போன்ற வெற்றிகள் இருந்தும் இது ஒரு பொருளாதாரத் தோல்வியாகவே எஞ்சியது.

பாப் அமெரிக்காவில் இருந்த காலத்தில் ஜமைக்காவுக்கு விஜயம் செய்த எத்தியோப்பிய மன்னர் ஹெய்லி செலாஸியால் உந்துதல் பெற்று ரீத்தா மார்லி கிறித்தவத்தைத் துறந்து ரஸ்தஃபாரி மதத்தில் சேர்ந்திருந்தார். பாபும் ரஸ்தஃபாரி மதத்தில் தீவிரமான ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். அவரது இசையிலும் வரிகளிலும் அந்தப் பாதிப்பு ஓங்கியது. 1969ல் வெய்லர்ஸ் குழுவுடன் பாப் ரஸ்தஃபாரி மதத்தைத் தழுவிக் கொண்டார். ரஸ்தஃபாரி மதத்தின் நிறுவனர் எத்தியோப்பிய மன்னராக இருந்த ஹெய்லி செலாஸி. அவர் இறைவனின் திரு அவதாரமாகவே எண்ணப்பட்டார். அடிமை வம்சாவளியினரான ஜமைக்கா கறுப்பர்களுக்கு எத்தியோப்பியா அவர்களின் பிறப்பிடமான ஆப்ரிக்காவின் மறு பெயராகவே ஒலித்தது. இதன் முதல் காரணம் 1794ல் அமெரிக்க பாப்டிஸ்ட் பாதிரியாரான ஜார்ஜ் லெய்லி ஜமைக்காவில் எத்தியோப்பிய பாப்டிஸ்ட் சபையை நிறுவி அவர்களை ஈர்த்ததுதான். ராஸ் தஃபாரி மகோனென் (Ras Tafari Makonnmen) என்பவர் 1930ல் ஹெய்லி செலாஸி என்ற பேரில் எத்தியோப்பியாவின் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார். அடிமை வாழ்வில், வறுமையின் இருளில் உழன்ற ஜமைக்கா கறுப்பர்களுக்கு அவர்களின் தலைவரான கிரேவெ சொன்ன தீர்க்க தரிசனம் பலித்ததாகவே அப்போது பட்டது.

இந்த மார்க்கஸ் கிரேவெ 1887ல் பாப் மார்லி பிறந்த அதே ஊரில் பிறந்தவர். ஒருங்கிணைந்த நீக்ரோ முன்னேற்ற சங்கம் (United Negro Improvement Association) என்ற அமைப்பை அவர் உருவாக்கியிருந்தார். "எத்தியோப்பியா நம்முடைய மூதாதையர் நாடு. நீக்ரோக்களாகிய நாம் எத்தியோப்பியாவின் கடவுளைத்தான் நம்புகிறோம். அந்தக் கடவுள் அழிவற்றவர்” என்று அவர் அறைகூவியிருந்தார். கிரேவெயைப் பின்பற்றுவதால் கிரேவெயர்கள் என்று அறியப்பட்ட இந்த ஜமைக்க கறுப்பர்களுக்கு ஹெய்லி செலாஸியின் பதவி ஏற்பு விழா பற்றிய செய்தித்தாள் வர்ணனைகளும் செய்தித் திரைப்படங்களும் உத்வேகமூட்டின. ஹெய்லி செலாஸி என்றால் ‘புனித மூவரின் வல்லமைகள் கொண்டவர்’ என்று பொருள். அவர் புனித சாலமோன் மன்னரின் நேரடி உதிர வழியாக எத்தியோப்பியர்களால் கருதப்பட்டார். ஆகவே ஜமைக்க கறுப்பர்கள் அவரை ஒடுக்கப்பட்ட கறுப்பினம் நெடுங்காலமாகவே தேடி வந்த மீட்பராக எண்ணினர்.

ஆப்ரிக்காவில் செலாஸி நவீன காலத்தைய மாபெரும் பேரரசராகவும் ஆப்ரிக்க மரபின் வல்லமையின் குறியீடாகவும் பார்க்கப்பட்டார். அமெரிக்க கறுப்பர் சேரிகளில், அவரது பட்டமேற்பு விழாக் கோலாகலங்களைக் காணத் திரைப்படச் சாலைகளில் கறுப்பர்கள் மொய்த்தனர். கரீபிய தீவுக்கண்டமெங்கும் அவரது பட்டமேற்பு ஒரு புதுயுகப் பிறவியாகவே கருதப்பட்டது. ரஸ்தஃபாரி மதத்தவர்களைப் பொறுத்தவரை செலாஸியே ஆபிரகாம், ஈசாக் ஆகியோரின் கடவுள்! அவர் பெயரைச் சொல்வதுகூடத் தவறு! ரஸ்தஃபாரியர்கள் தங்கள் மதம்; யூத மதம், கிறித்தவம், இஸ்லாம் ஆகியவற்றின் முக்கியக் கூறுகளையெல்லாம் கலந்து உருவாக்கப்பட்ட மிக உயர்வான மதம் என்று எண்ணினர். ரஸ்தஃபாரியர்கள் கிறித்தவத்தின் ‘பாபிலோனிய மேட்டிமைவாத’த்தை நிராகரித்தனர். ரோமாவின் கத்தோலிக்க சபை குறிப்பாக பாபிலோனியத் தன்மை கொண்டதாக் கருதப்பட்டது. காரணமிருக்கிறது! ரோமாவை உள்ளடக்கிய இத்தாலியல்லவா எத்தியோப்பியாவைத் தாக்கி அடிமைப்படுத்தியது!

மதங்கள் அவை உருவான நிலத்தைப் பிரதிபலிப்பவை. கஞ்சா தானாகவே ஏராளமாக விளையும் நாடுகள் எத்தியோப்பியாவும் ஜமைக்காவும். ஆகவே ரஸ்தஃபாரியில் கஞ்சா ஒரு புனிதப் பொருளாகவும் அதைப் புகைப்பது ஓர் தியான அனுபவமாகவும் கருதப்பட்டது. ரஸ்தஃபாரி கஞ்சாவை ‘ஞானச்செடி’ (Wisdom Weed) ஆகப் பிரபலப்படுத்தியது. மூலிகை (Herb) என்று அதை பாப் முதலியோர் குறிப்பிட்டனர். கஞ்சாச் செடி சாலமோன் மன்னரின் புதைகுழி மீது முளைத்தது என்று ஐதீக நம்பிக்கை உண்டு. பைபிளில் உள்ள “பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி அவர் மிருகங்களுக்குப் புல்லையும் மனுஷருக்கு உபயோகமான பயிர் வகைகளையும் முளைப்பிக்கிறார்” (சங்கீதம் 104-14) போன்ற வரிகள் மேற்கோளாகக் காட்டப்பட்டு கஞ்சாவின் புனிதத்தன்மை நிறுவப்பட்டது.

ரஸ்தஃபாரி மதம் பலவிதமான நெறிமுறைகள் கொண்டது. ரஸ்தஃபாரி தலைவர்கள் தங்கள் விசுவாசிகளிடம் மது அருந்துவதையும் புகையிலை பயன்படுத்துவதையும் முற்றிலும் தவிர்க்கும்படிச் சொன்னார்கள். பன்றி, ஓடுள்ள மீன்கள், எலும்பில்லா மீன்கள், நத்தைகள், பிளவுண்ட குளம்பு இல்லாது விலங்குகள் போன்ற பலவற்றை ரஸ்தஃபாரி விலக்கியது. ரஸ்தஃபாரியர்கள் முடி வெட்டுவதும் சீவுவதும் தடை செய்யப்பட்டது. பைபிளில் உள்ள “அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப் போடாமலும், தங்கள் தேகத்தை கீறிக் கொள்ளாமலும் இருப்பார்களாக” (லேவியராகமம் 23:5) என்ற வரி உதாரணமாகக் காட்டப்பட்டது. ரஸ்தஃபாரியர்கள் தங்கள் சுருண்டு செறிந்த தலைமயிரைத் திரிதிரியான சடைகளாக மாற்றிக் கொண்டார்கள். பாப் மார்லியின் உலக நடசத்திர அந்தஸ்து மூலம் இது உலகப் புகழ்பெற்ற சிகையலங்காரமாக மாறியது. இன்று சிகையலங்கார நிபுணர்கள் ரசாயனங்கள் மூலம் இத்தகைய சடைத்திரிகளை உருவாக்குகிறார்கள்.

ஜா மட்டுமே அறிந்த அந்த புனித கணத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு மர்மப் பாதை வழியாக உண்மையான ரஸ்தஃபாரியகள் எல்லாம் எத்தியோப்பியா சென்று சேர்ந்துவிடுவார்கள் என்று ரஸ்தஃபாரியர்கள் நம்பினார்கள். எத்தியோப்பியாவை மண்ணின் சொர்க்கம் என்று எண்ணிய ரஸ்தஃபாரியர்கள் ஜமைக்காவின் நீராவி நிறைந்த வெப்ப மண்டலச் சூழலை நரகம் என்று குறிப்பிட்டார்கள். ரஸ்தஃபாரி மதம் ஜமைக்காவில் மிக வேகமாகப் பரவியது. எந்நிலையிலும் கிறித்தவம் தங்களை அடிமைகளாகவே நோக்கிக் கண்டதை உணர்ந்து அலுப்புற்றிருந்த அம்மக்களுக்கு புதிய மதம் தன்னம்பிக்கையையும் நிமிர்வையும் நியாயத்தையும் வாக்குறுதியளித்தது.

ரஸ்தஃபாரியர்கள் அந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளுக்காகக் காத்திருந்தால் மட்டும் போதும்! அன்று ‘கடையன் முதல்வன் ஆவான். முதல்வன் கடையனாவான்!. தீவிரவாத ரஸ்தஃபாரியர்களிடம் கடுமையான வெள்ளை, பழுப்பு இன வெறுப்பு இருந்தது. ஆனால் பாப் மார்லி அதை ஏற்கவில்லை. அவர் அனைத்து மானுடரும் மனம் திரும்பி ஜாவை ஏற்று, ரஸ்தஃபாரிய மதத்தில் இணைய வேண்டுமென்று எண்ணினார்.

1969ல் ஜமைக்காவின் முன்னணி இசை வெளியீட்டாளரான லீ ஸ்க்ராச் பெர்ரியுடன் (Lee 'Scratch' Perry) இணைந்து பாப் மார்லி டஃப் காங் (Tuff Gong) என்ற சொந்த இசை வெளியீட்டகத்தைத் தொடங்கினார். அடுத்த ஆண்டு அவரது முதல் முழுமையான இசைத்தொகை Soul Rebel வெளியானது. மிகவும் படைப்பூக்கம் கொண்டதும் அதே சமயம் மிகக் கடுமையானதுமாக இருந்தது பாபுக்கு அக்காலகட்டம். ஆனால் 1971ல் அவருக்கு புதிய திறப்பாக பல அரிய வாய்ப்புக்கள் கிட்டியது.

பிரிட்டிஷ் நிறுவனமான ஐலாந்து ரிகார்ட்ஸ் அவருக்குப் புதிய இசைத்தொகை தயாரிப்பதற்காக 8000 பவுண்டுகள் அளித்தது வெய்லர்ஸ் குழுவை இங்கிலாந்தின் மிகச் சிறந்த இசைப் பதிவகங்களுக்கு கொண்டு சென்றது. 1973-ல் ஐலாந்து ரிகார்ட்ஸ் நிறுவனம் வெய்லர்ஸ் குழுவின் Catch a Fire என்ற இசைத்தட்டை வெளியிட்டு விரிவாக விளம்பரம் செய்தது. ஒரு விரிவான இங்கிலாந்து சுற்றுப் பயணம், லண்டனின் மாபெரும் அரங்குகளில் சில முக்கிய நிகழ்ச்சிகள்… உடனடியாக வெய்லர்ஸ் குழு ராக் இசை விமர்சகர்களின் கவனத்தைப் பெற்றது. அவர்களுக்கு பி பி சி வானொலியிலும் தொலைக்காட்சியிலும் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவிலும் வெய்லர்ஸ் குழு வெற்றிகரமான இசை நிகழ்ச்சிகளை நடத்தியது. நியூயார்கில் அன்றைய ராக் நட்சத்திரம் ப்ரூஸ் ஸ்பிரிங்க்ஸ்டீன் வழங்கிய அறிமுகத்துடன் வெய்லர்ஸ் குழுவின் நிகழ்ச்சி நடந்தது. ஐலாந்து ரிகார்ட்ஸ் நிறுவனம் அதே வருடம் அவர்களுடைய அடுத்த இசைத் தட்டையும் Burnin' என்ற பெயரில் வெளியிட்டது.

வெற்றி ஒரு தொடர்கதையாயிற்று. குழுவின் பெயர் பாப் மார்லி அண்ட் வெய்லர்ஸ் என்று மாற்றப்பட்டது. அடுத்த இசைத் தொகையான Natty Dreadல்தான் அவர்களுடைய ஆகச் சிறந்த வெற்றிப் பாடலான No Woman No Cry இடம்பெற்றது. எல்லாப் புகழையும் பாப் ஒருவரே பெறுவதாக எண்ணி டாஷ், லிவிங்ஸ்டன் இருவரும் குழுவை விட்டு வெளியேறினர். அதன் பின் பாப் குழுவில் தன் மனைவி உள்ளிட்ட பாடகிகளையும் தன் தாளக்கட்டு பயிற்றுனரையும் சேர்த்தார். 1975 ஜூலையில் புது வெய்லர்ஸ் குழு லண்டன் லைசியம் அரங்கில் இரு மகத்தான இசை நிகழ்ச்சிகளை நடத்தியது. அவற்றின் பதிவு 'Live' என்ற பேரில் பிற்பாடு வெளியாகி காலத்தில் நிரந்தரம் பெற்றது. நாம் இன்று கேட்கும் 'No Woman No Cry' பாடலின் உணர்ச்சிகரமான மேடைப் பதிவு அப்போது எடுக்கப்பட்டதே. லாஸ் ஆஞ்சலிஸ் நகரில் அவர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி ‘ராக் அன் ரோல்’ இசையை மாற்றியமைத்த இசை நிகழ்வுகளில் ஒன்றாக வர்ணிக்கப்பட்டது.

1976 காலகட்டத்தில் பாப் ஒரு பெரிய அலையாக அமெரிக்காவை ஆட்கொண்டார். ரோலிங் ஸ்டோன்ஸ் இதழ் வெய்லர்ஸ் குழுவை இவ்வருடத்திய இசைக்குழு என்று புகழ்ந்தது. அவர்களின் புது இசைத்தொகை Rastaman Vibrations விற்பனையின் உச்சங்களைத் தொட்டது. அக்கால அமெரிக்காவில் எழுந்த யுத்த எதிர்ப்பு, சமூகக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான கோபம் ஆகியவற்றின் தார்மீகக் குரலாக ஒலித்தார் பாப் மார்லி. உலகப் புகழ் வாய்ந்த பல பாடகர்களும் இசைக் குழுக்களும் பாப் மார்லியின் பாடல்களை எடுத்து தம்முடைய பாணிகளில் நிகழ்த்த ஆரம்பித்தனர். எரிக் க்லாப்டெனால் எடுத்து நிகழ்த்தப்பட்ட 'I Shot the Sheriff' அமெரிக்க இசைத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. ஸ்டீவி வண்டர் நிகழ்த்திய பாப் மார்லியின் 'Jammin' பாடல் உலகமெங்கும் புகழ்பெற்றது. போனி எம் குழு 'No Woman No Cry' பாடலுக்கு வழங்கிய டிஸ்கோ வடிவம் இங்கு இந்தியாவில்கூட பெரும்புகழ் பெற்றது.

ஐமைக்கா திரும்புகையில் பாப் மார்லி அங்கு ஒரு தேசிய நாயகனுக்குரிய புகழைப் பெற்றிருந்தார். அவரது மக்கள் செல்வாக்கு சிலரால் அஞ்சப்பட்டது. 1976 டிசம்பர் மூன்றாம் தேதி அவரைக் கொல்ல முயற்சி நடந்தது. ஐமைக்க பொதுத் தேர்தல் நேரத்தில் பாப் மார்லியின் கிங்ஸ்டன் வீட்டுக்குள் நுழைந்த கொலையாளிகள் அங்கிருந்த பாப், ரீத்தா மற்றும் சில நண்பர்களைச் சுட்டனர்.  பாப் காயமடைந்தார். ஆனால் அனைவருமே உயிர் தப்பினர். இச்சம்பவத்துக்கு அரசியல் பின்னணி உண்டு. டிசம்பர் 5ஆம் தேதி பாப் ஒரு இசைநிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருந்தார். தேர்தலில் தனக்கு எதிராக அது வேலை செய்யும் என்று எண்ணிய எதிர்க்கட்சிதலைவர் எட்வர்ட் சேகாவால் அந்தக் கொலையாளிகள் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சிலர் அது சேகாவை ஆதாரித்த அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளால் உருவாக்கப்பட்ட சதி என்றும் எண்ணுகிறார்கள். இரு குண்டுக்காயங்கள் பட்டிருந்தாலும்கூட பாப் திட்டமிட்டபடி ‘ஸ்மைல் ஐமைக்கா!’ என்ற அந்த நிகழ்ச்சியை நடத்தினார். காயங்கள் காரணமாக அவரால் கித்தாரை வாசிக்க இயலவில்லை. தலையில் கட்டுகளுடன் ரீத்தா மார்லி பாடினார். நிகழ்ச்சி முடிநத்தும் பாப் இங்கிலாந்துக்குக் கிளம்பினார்.

லண்டனில் அடுத்த இசைத் தொகையான Exodousக்காக வேலை செய்து கொண்டிருந்தபோது கஞ்சா வைத்திருந்ததற்காக பிரிட்டிஷ் போலீஸாரால் பாப் கைது செய்யப்பட்டு அபாராதம் வசூலிக்கப்பட்டார். அவர் அம்மாதிரி சட்டங்களை எப்போதுமே பொருட்படுத்தியவரல்ல. "கஞ்சா ஆன்மீகமானது" என்று அவர் அடிக்கடி சொல்வதுண்டு. எக்ஸோடஸ்தான் பாப் மார்லியை உலகப் புகழ் நோக்கிக் கொண்டுசென்றது.

ஓயாத இசைப் பயணங்கள் நடுவே 1977 செப்டம்பரில் பாப் மார்லியின் கால் விரலில் ஒரு புற்றுநோய் வளர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டது. கால்பந்து ஆட்டத்தில் பட்ட காயம் அது எனப் பத்திரிகைகளுக்குச் சொல்லப்பட்டது. கால்பந்து பாப் மார்லிக்கு இசைக்கு அடுத்த பித்தாக இருந்தது. கால் விரலை எடுக்க வேண்டுமென்று டாக்டர்கள் சொன்னார்கள். ரஸ்தஃபாரி நம்பிக்கை அதை அனுமதிப்பதில்லை என்பதனால் பாப் அதற்கு சம்மதிக்கவில்லை.

1978ல் பாப் ‘காயா’ (கஞ்சா) என்ற புகழ்பெற்ற இசைத் தொகையை வெளியிட்டது. பாப் மார்லியின் பாடல்களில் உள்ள எதிர்ப்பு, கோபம், மானுட சமத்துவத்துக்கான அறை கூவல் ஆகியவற்றுக்குப் பதிலாக, இந்த இசைத்தொகை காதலையும் கஞ்சாவையும் புகழ்வதாக அமைந்தது. இதிலுள்ள 'Is this Love?' போன்றவை அற்புதப் பாடல்களாக இன்றும் திகழ்கின்றன. ஏப்ரல் 1978ல் பாப் மார்லி கிங்ஸ்டனின் நேஷனல் ஏரினா அரங்கில் ‘அன்பு அமைதி இசை நிகழ்ச்சி’ நடத்தியது. ஜமைக்காவில் ஓயாது போரிட்டுவந்த இரு அரசியல் குழுக்களுக்கு இடையேயான சமாதான முயற்சியாக இந்த நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. அரசியல் எதிரிகளான மைக்கேல் மான்லே மற்றும் எட்வர்ட் சேகா இருவரிடனும் பாப் மார்லி மேடையில் கைகோர்த்துக் காட்சியளித்தார். ஐ.நா.சபையிலிருந்து மூன்றாமுலக அமைதிப் பரிசை இதன் பொருட்டு அவர் பிற்பாடு பெற்றார். தன் பாடல்களில் மீண்டும் மீண்டும் பாப் மார்லி அமைதியையும் ஒற்றுமையையும்தான் வலியுறுத்தினார். பிளவையும் வெறுப்பையும் தொடர்ந்து நிராகரித்தார்.

அதே வருடம் பாப் ரஸ்தஃபாரியின் புனித மண்ணான எத்தியோப்பியாவுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார். Babylon by Bus என்ற இசைத்தொகை வெளியாயிற்று. Uprising போன்ற புகழ்பெற்ற இசைத்தொகைகள் இக்காலத்தில் வெளியாயின. 1980ல் பாப் மீண்டும் ஆப்ரிக்கா சென்றார். ஜிம்பாப்வே நாடு, அந்நாட்டின் சுதந்திர தினச் சடங்கில் பங்கெடுக்க அவரை அழைத்திருந்தது. இது மூன்றாமுலகில் அன்று பாப் மார்லிக்கு இருந்த முக்கியத்துவத்தின் அடையாளமாகும். தனது மேடைகளின் பின்னணியில் எத்தியோப்பியக் கொடி, ஹெய்லி செலாஸியின் படம், மார்க்கஸ் கிரேவெயின் படம் மற்றும் கறுப்பின விடுதலைப் போராளிகளின் படங்கள் ஆகியவற்றுடன் இசைப்பது வழக்கமாயிற்று. பாப் மார்லி கறுப்பின விடுதலையின் பாடகனாக, கறுப்பின ஆன்மாவின் குறியீடாக மாறிய காலம் இது.

1980ல் பாப் மோசமாக நோயுற்றார். நியூயார்க்கில் இசைநிகழ்ச்சி நாட்களில் ஓட்டப்பயிற்சி செய்யும்போது அவர் மயங்கி விழுந்தார். காலில் இருந்து மேலேறிய புற்றுநோய் அவரது உடலை முழுக்கக் கவ்வ ஆரம்பித்தது. செப்டம்பரில் டாக்டர்கள் புற்றுநோய் மூளையை அடைந்துவிட்டதாகவும் அதிகம் போனால் ஒரு மாதம்தான் பாப் மார்லி உயிர்வாழ வாய்ப்புள்ளததாகவும் சொன்னார்கள். ஆனாலும் பாப் தொடர்ந்து தன் இசைப் பயணத்தை நடத்த விரும்பினார். கடும் வலியுடன் பிட்ஸ்பர்க்கில் மிக வெற்றிகரமான ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். பிற நிகழ்ச்சிகள் வேறு வழியில்லாமல் ரத்து செய்யப்பட்டன.

இக்காலக்கட்டத்தில் பாப் மயாமிக்கு சென்று எத்தியோப்பிய மரபுவாத சபை எனும் கிறித்தவ சபையில் ஞானஸ்நானம் பெற்றார். தனது புதிய மதத்தை கிறித்தவ ரஸ்தஃபாரி மதம் என்று விளக்கினார். தன் பெயர் பெர்ஹென் செலாஸி என்று மாற்றிக்கொண்டார்! இப்படிச் செய்வதன்மூலம் இறைவன் தன் உயிரை காத்துக்கொள்வார் என்று அவருக்கு போதனைகள் அளிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது பயனளிக்கவில்லை. உயிரைக் காப்பாற்றும் கடைசி முயற்சியாக பாப் தன் மனைவியுடன் ஜெர்மனியில் உள்ள விவாதத்துக்கு இடமான ஒரு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்துக்கு சென்றார். எதுவுமே பயனளிக்கவில்லை. எட்டு மாதம் அவர் உயிருக்குப் போராடினார். இக்காலத்தில் ஜமைக்காவின் உயர்ந்த விருதான Order of Merit அவருக்கு அளிக்கப்பட்டது.

1981 மே மாதம் 11ஆம் நாள் பாப் மார்லி அமேரிக்காவின் மயாமியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் தன் 36ஆவது வயதில் இறந்தார். மே 23ஆம் தேதி ஜமைக்காவில் அவரது நல்லடக்கம் கடைப்பிடிக்கப்பட்டபோது லட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் திரண்டு வந்திருந்தார்கள். பாபின் உடல் அவரது பிறந்த ஊரிலேயே அடக்கப்பட்டது.

உலக நட்சத்திரமாக மாறிய பின்னரும் பாப் மார்லி தன் வேர்களில் இருந்து பிரியவில்லை. குற்றம் மலிந்த கிங்ஸ்டன் நகரத் தெருக்களில் பாப் தன் மெர்சிடிஸ் பென்ஸ் அல்லதுது பிஎம் டபிள்யூ கார்களில் மூடியை மேலேற்றி சுதந்திரமாக உலவுவார். எவரும் அவருக்குத் தீங்கிழைத்ததில்லை. ஏழைகளுக்கு தடையிலாது உதவிய மனிதர் அவர். அவர் இறந்தபோது கிட்டத்தட்ட நாலாயிரம் ஜமைக்கக் குடும்பங்கள் அவரை நம்பி இருந்தன.

இன்றும் அவருடைய இசையும் வரிகளும் கோடிக்கணக்கானவர்களை உத்வேகமூட்டுகின்றன. கைவிடப்பட்டு தனித்து நிற்பவனைத் தழுவி ஆற்றும் தென்றல் போல அந்தப் பாடல்கள் ஒலிக்கின்றன. பாப் மார்லியின் பெருங்கருணை கொண்ட குரல் உலகமெங்கும கண்ணீர் மல்கும் கோடானுகோடி பெண்களை நோக்கிக் இன்றும் கொப்பளித்தெழுந்தபடியேதான் உள்ளது.

பெண்ணே நீ அழக்கூடாது…

உனது துயர்களையெல்லாம்

துடைத்தெறியும் எதிர்காலம் அதோ வருகிறது

பெண்ணே நீ அழக்கூடாது…

No Woman No Cry...!

 

2006