முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ச ரி க ம தெரியாத இசை மாமேதை : கே ஜே ஜாய்

முறையான இசைப் பயிற்சி இல்லாதவர், ஸ்வர ஸ்தானங்கள் அறியாதவர், ராகங்களை  அடையாளங்காணத் தெரியாதவர், இசைக் குறிப்புகளை எழுதவோ படிக்கவோ தெரியாதவர், பாடும் திறன் அறவே இல்லாதவர் என்று அடுக்கிக்கொண்டே போகுமளவில் ‘இசையறிவு’ இல்லாமலிருந்தவர் கே ஜே ஜாய். ஆனால் எனது வாழ்நாளில் நான் நேரடியாகச் சந்தித்துப் பழகிய இசையமைப்பாளர்களில், இசைக் கலைஞர்களில் மனித சாத்தியமற்றது என்றே சொல்லக்கூடிய இசைத்திறன் படைத்திருந்தவர் அவர் ஒருவரே.

அக்கார்டியன், மின்னிசை கீபோர்ட், ஹார்மோனியம் ஆகிய கருவிகளை இசைக்கும் ஒரு முன்னணிக் கருவியிசைக் கலைஞராக 1965 முதல் தென்னிந்தியத் திரையிசையில் கோலோச்சிய கே ஜே ஜாய் 1975ல் ஓர் இசையமைப்பாளராக மலையாளத் திரையிசையில் நுழைந்தார். தொடர்ந்துவந்த பத்தாண்டுகளில் மலையாளத் திரையிசையின் முகத்தையே மாற்றியமைத்தார். இசை கே ஜே ஜாய் என்றால் அப்பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்குமளவில் பிரபலமாகும் என்பது உறுதியாக இருந்தது அக்காலத்தில்.

எங்களது விவசாய மலைக் கிராமங்களில் இஞ்சி, கப்பை, நெல் போன்றவற்றைப் பயிரிட்டு வேலை செய்யும் பெண்களும் ஆண்களும் வேலையின் அலுப்பையும் அயர்ச்சியையும் மறக்க கே ஜே ஜாயின் பாடல்களைப் பாடுவதை சிறுவனாக நான் கேட்டிருக்கிறேன். அவற்றைக் கேட்டும் அதோடு அடிக்கடி வானொலியில் வந்துகொண்டிருந்த அவரது பாடல்களைக் கூர்ந்து கவனித்தும் பதின்பருவம் வரும்முன்னே ஒரு கே ஜே ஜாய் ரசிகனாக நான் மாறிவிட்டிருந்தேன். குறிப்பாக அவற்றில் இடம்பெறும் கருவியிசைப் பகுதிகளுக்கு வேறு எங்கேயுமில்லாத ஒரு கவர்ச்சி இருந்தது. அக்கார்டியன் கருவியிசையை அவ்வளவு துல்லியமாக வேறு யார் பாடலிலும் அதுவரைக் கேட்டதில்லை.

'நீங்கள் இதுவரைக் கேட்காத சுரங்களும் இதுவரைப் பாடாத பாடல்களுமாக இதோ நான் வருகிறேன்' என்ற வரி அவரது முதல் பாடலில் இருந்தது. பிற்பாடு வந்த ஒவ்வொரு பாடலும் அதை நிரூபித்தது. அவரது 'சந்தனச்சோல' படத்தின் பாடல்கள் கேரளம் முழுவதும் ஓர் அலையாக மாறிய காலம். மிகவும் உயரமான ஒரு காட்டு மாமரத்தின் மேல்கிளைகளில் நானும் நண்பர்களும் வலிந்தேறினோம். அங்கே கட்டிவைத்த ஒலிபெருக்கிகளாக எங்களை எண்ணிக்கொண்டு அப்படத்தின் பாடல்களை ஊரில் அனைவரும் கேட்க வேண்டுமென்று உரத்த குரலில் பாடினோம். ‘இசை கே ஜே ஜாய்’ என்ற அறிவிப்புடன் அவரது பாடல்கள் வானொலியில் வருவதற்காகக் காத்திருந்தோம். கோவில், தேவாலயத் திருவிழாக்கள் மற்றும் அரசியல் கட்சிக் கூட்டங்களை ஒட்டி ஊரில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் ஜாயின் பாடல்களைப் பாடும் பாடகர்கள் பலத்த கைத்தட்டலைப் பெற்றனர்.

எங்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை, மதியம், மாலை வேளைகளில் சிறிதுநேரம் ஹிந்தி மற்றும் மலையாளத் திரைப்படப் பாடல்களை ஒலிபெருக்கியில் ஒலிக்கவிடும் வழக்கம் இருந்தது. அந்த மலையாளப் பாடல்களில் பல ஜாயின் பாடல்களாகவே இருந்தன. அப்போது என் வீட்டில் இருந்த பல்வேறு பிரச்சினைகளால் அடிக்கடி சோகத்திலிருந்த  என்னை நெற்றியில் தழுவி ஆறுதல்படுத்தின அப்பாடல்கள். இசை வழியாக மட்டுமே மனிதன் சென்றடையக் கூடிய கனவு நிலங்களுக்கு எங்களைக் கைப்பிடித்துக் கொண்டுபோனது கே ஜே ஜாயின் பாடல்கள்.

பாட்டில் வரும் கருவியிசைப் பகுதிகளையும் சேர்த்துப் பாடாமல் ஜாயின் பல பாடல்களை முனக முடியவில்லை. பாடலின் கருவியிசைப் பகுதிகளைக் கூர்ந்து கேட்க எனக்குக் கற்றுத் தந்தவை சலில் சௌதுரிக்கு அடுத்து கே ஜே ஜாயின் பாடல்கள்தாம். அக்கார்டியன், வயலின் குழு, புல்லாங்குழல், மின்னிசைக் கருவிகள், டிரம்ஸ் போன்றவற்றை வேறு யாரும் பயன்படுத்தாத பாணியில்தான் ஜாய் பயன்படுத்தினார். அந்தப் பயன்படுத்துதல்கள் வழியாகத்தான் அக்காலத்து இளைஞர்களின் துள்ளலும் துடிப்புமாக அவரது பாடல்கள் மாறின. படங்கள் படுதோல்வி அடைந்தாலும் பாடல்கள் வெற்றிகளாகவே இருந்தன.

மெல்லிசை மெட்டுகள், உணர்வுப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், குடி போதைப் பாடல்கள், வட இந்தியப் பாணிக் கவ்வாலிகள், மேற்கத்திய ஜாஸ், பாப், ராக் பாணியிலான இரவு நடனப் பாடல்கள், காபரேப் பாடல்கள் என ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட பாடல்கள் வழியாக மலையாளத்தில் ஒரு புத்தம்புதிய இசை வசந்தத்தை மலர வைத்தவர் கே ஜே ஜாய். தனது காலகட்டத்திற்கும் வெகுதொலைவு முன்பே பயணித்தவர். உதாரணமாக 1980ல் ஜாய் இசையமைத்துப் பெரிதாக அறியப்படாமல்போன 'மதுமலர் தாலம்' எனும் பாடலை 17 ஆண்டுகளுக்குப் பிறகு எடுத்து இசையமைப்பாளர் ரவீந்திரன் உருவாக்கிய 'ஹரிமுரளீரவம்' பாடல் வரலாற்று வெற்றிபெற்று இன்றளவும் புகழ்பெற்றிருக்கிறது.

மிகத் திறமைவாய்ந்த வாத்தியக் கலைஞராக இருந்த ஜாய் எந்தவொரு குறிப்பிட்ட இசைப் பாணியையும் பின்பற்றவில்லை. ஆனால் அனைத்து வகை இசைகளின் சிறப்பம்சங்களையும் எடுத்து தனது இசையை உருவாக்கினார். எம்.எஸ்.விஸ்வநாதன், சலில் சௌதுரி, மதன் மோகன், ஆர்.டி.பர்மன், லக்ஷ்மிகாந்த் பியாரேலால், கல்யாண்ஜி ஆனந்த்ஜி, பாபுராஜ், தேவராஜன், கே.வி.மகாதேவன், நௌஷாத், பப்பி லஹிரி போன்றோருடனெல்லாம் இணைந்து எத்தனையோ பாடல்களிலும் பின்னணி இசையிலும் அக்கார்டியன், சிந்தசைசர், மின்னிசைக் கீபோர்ட் வாசித்த ஜாய், இவர்கள் அனைவரது இசைகளின் கூறுகளையம் உள்வாங்கி அவற்றைத் தனது இசையில் சாதுரியமாகப் பயன்படுத்தினார்.

மலையாளத் திரைப்பட இசையின் பழைய முறைகளை முற்றிலுமாக நிராகரித்த ஜாயின் பாடல்கள் ஹிந்தி, தமிழ், ஆங்கிலப் பாடல்களைப் போலவே ஒலித்தன. இசைக்கருவிகளின் சாத்தியக்கூறுகளைப் பற்றி ஆழ்ந்த புரிதல் கொண்டிருந்த ஜாய் அவற்றை வித்தியாசமாகப் பயன்படுத்தினார். ஹிந்துஸ்தானி, கஸல், கவ்வாலி, வெஸ்டர்ன் கிளாசிக்கல், ஜாஸ், கூட்டுக்குரல் இசை மற்றும் கர்நாடக இசையை இணைத்து அதுவரை யாரும் முயலாத சில உத்திகளைக் கையாண்டார். அவற்றின் வழியாகத்தான் மலையாளத் திரையிசையின் முகத்தை மாற்றியமைக்க அவரால் முடிந்தது.

28 வெவ்வேறு பாடலாசிரியர்களுடன் சேர்ந்து பாடல்களை உருவாக்கிய கே ஜே ஜாய் தான் இந்தியாவிலேயே மிக அதிகமான பாடலாசிரியர்களுடன் பணியாற்றிய திரைப்பட  இசையமைப்பாளர். பிரபல பெண் கவிஞர் கமலாதாஸ் கூட கே ஜே ஜாய்க்காக ஓர் ஆங்கிலப் பாடலை எழுதினார். ஒரு பதிற்றாண்டுக்கும் மேலே மலையாளத்தில் தொடர்ந்த கே ஜே ஜாயின் பாட்டுக் காலம் 1985-86 காலத்தில் முடிவுக்கு வந்தது. ஏறத்தாழ இந்த காலகட்டத்தில்தான் ‘ஜாயின் பாடல்கள் இல்லாத இந்த ஊரில் இனிமேல் எதற்கு வாழணும்?’ என்பதுபோல் நானும் கேரளத்தை விட்டு வெளியேறினேன் என்பது சுவாரசியமான தற்செயல்.  

இந்தியாவிலும் வெளிநாட்டிலுமிருக்கும் பல்வேறு மொழிகளில் பாடல்களைக் கேட்டு, உலகம் முழுவதிலுமிருந்து வரும் வாத்திய இசைகளைக் கேட்டு, இசைக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி, இசைக் கலைஞர்களுடனேயே வாழ்ந்த பின்னரும் கே ஜே ஜாய் இசையமைத்த பாடல்கள் என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருந்தன. என்னைப் போன்ற எண்ணற்றவர்களின் வாழ்க்கையைத் தொட்டுச் சென்ற பாடல்களை உருவாக்கிய மாபெரும் கலைஞனை நேரில் சந்திப்பேன் என்றும் அவருடன் பழகுவேன் என்றும் ஒருபோதும் நான் நினைக்கவில்லை. ஆனால் காலம் அவ்வாறு சிலவற்றை எனக்காகக் கருதி வைத்திருந்தது. 

1993ல் ஓர் இசை நிறுவனத்தின் ஊழியனாக சென்னைக்கு வந்தேன். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு வங்கி வழியாகத்தான் எனக்கு சம்பளம் வந்து கொண்டிருந்தது. ஒருநாள் நான் வங்கிக்குச் செல்லும்போது நியான் பச்சை நிற பென்ஸ் கார் ஒன்று அங்கு வந்து நின்றது. அப்படியொரு காரை அதற்குமுன்பு நான் பார்த்திருக்கவில்லை. அந்த காரிலிருந்து ஆறடிக்கும் மேல் உயரமான, அழகான ஒருவர் இறங்கினார். ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். சாம்பல் நிற பேன்ட், கருப்பு நிற கோடுகளுள்ள வெள்ளை சட்டை. அந்த வங்கியின் உயர் அதிகாரியாக இருக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் இது சினிமா பத்திரிகைகளில் பார்த்து எனக்குத் தெரிந்த முகம்! ஐயோ! இது இசையமைப்பாளர் கே ஜே ஜாய் அல்லவா?

நான் தடுமாறிப்போனேன். அவரது பல பாடல்கள் டபடவென என் மனதில் பொங்கி வந்தன. ஒருகணம் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் வங்கிக்குள்ளே நுழையும்போது நான் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். அன்று ஏன் அப்படி செய்தேன் என்று இன்றும் எனக்குத் தெரியவில்லை. “மனித மனம் எனும் புதிரை எந்த அறிவியல் நூலும் சரிவரப் பார்த்ததில்லை" என்று கே ஜே ஜாயின் பாடலில் இருக்கிறதே!

அந்த வங்கியின் ஒரு முக்கிய வாடிக்கையாளராகயிருந்த ஜாயை பிறகும் அங்கு  பார்த்தேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விலையுயர்ந்த கார்களில்தான் வருவார். அவர்முன் செல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரு சினிமா நட்சத்திரத்தைப்போல் அழகனாக இருந்தாலும் எப்பொழுதுமே கடுமையான முகத்தோற்றம் வைத்திருந்தார். ஒருமுறைகூட அவரை நெருங்கி "நீங்கள் கே ஜே ஜாய் தானே? நான் உங்கள் தீவிர ரசிகன்" என்று சொல்ல எனக்குத் துணிச்சல் வரவில்லை. விவரிக்க முடியாத ஏதோ தாழ்வுணர்ச்சி அல்லது பயம் என்னைத் தடுத்தது. பயமும் மரியாதையும் கலந்த ஓர் உணர்ச்சியாகவும் இருந்திருக்கலாம்.

ஸ்டெர்லிங் அவென்யூவில் உள்ள அவரது பெரிய வீட்டின்முன் செல்லும்போதெல்லாம் அவர் அங்கு இருக்கிறாரா என்று எட்டிப் பார்ப்பேன். அவருடன் பணியாற்றிய இசைக்  கலைஞர்களையும் தொழில்நுட்பம் சார்ந்தவர்களையும் எங்கு பார்த்தாலும் அவர்களிடம் கே ஜே ஜாய் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ள முயற்சித்தேன். அவரைப் பற்றியான நிறையத் தகவல்கள் திரட்டினேன். அந்த இசையைப் போலவே அதிசயமானது கே ஜே ஜாயின் வாழ்க்கையும் கலையும் கடந்துவந்த வழிகளுமே.

குஞ்ஞாப்பு ஜோசப் ஜாய் ஜூன் 14, 1946 அன்று கேரளாவின் திருச்சூரில் பிறந்தார். அவரது தந்தை ஜோசப் பல பேருந்துகளை வைத்திருந்தவர். ஆனால் அந்தத் தொழில் தோல்வியடைந்தபோது அக்குடும்பம் வாழ வழிதேடி சென்னைக்கு குடிபெயர்ந்தது. ஜாய்க்கு அப்போது ஆறு வயது. பள்ளிப் படிப்பில் பின்தங்கியிருந்தாலும் ஆங்கிலமும் தமிழும் சரளமாகப் பேசக்கூடியவராக இருந்தார். சிறுவயதிலிருந்தே இசைக்கருவிகளில் நாட்டம் கொண்ட ஜாயை வயலின் கற்க அனுப்பினார்கள். சில நாட்களிலேயே அதை விட்டுவிட்டவர் அக்கார்டியன் கருவியின்மேல் மோகம் கொள்ள ஆரம்பித்தார். ஆனால் அவரால் அதை முறைப்படிக் கற்கவோ சொந்தமாக அக்கருவியை வாங்கவோ முடியவில்லை. தெரிந்த ஒருவரிடம் இரவல் வாங்கிய அரதப் பழைய அக்கார்டியனை வாசித்துத் தானாகவே பழகினார். பதினைந்து வயதிலேயே அதை நன்றாக வாசிக்கப் பழகிக்கொண்டார். சிரமப்பட்டுக் கொண்டிருந்த தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகப் பதினாறு வயதில் மேடைக் கச்சேரிகளில் வாசிக்கத் தொடங்கினார்.

தன்னால் தூக்க முடியாத அளவு பெரிய அக்கார்டியானை நெஞ்சில் தாங்கிக் கொண்டு மேடையில் அசத்தலாக வாசிக்கும் குட்டிப்பையனைத் தமிழின் தலைசிறந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கவனித்ததன் வழியாகத்தான் ஜாய் சினிமாவில் வாசிக்க வந்தார். அப்போது தென்னிந்திய சினிமாவில் நான்கு மொழிகளுக்குமாக மங்களமூர்த்தி என்ற ஓர் அக்கார்டியன் கலைஞர் மட்டுமே இருந்தார். அவர் கிடைக்காதபோது அவருக்கு மாற்றாக வரத் தொடங்கிய ஜாய் விரைவில் ஒரு முன்னணி அக்கார்டியன் கலைஞரானார்.

"நான் யாரிடமும் இசையைக் கற்றுக்கொண்டதில்லை, ஆனால் நான் சந்தித்த மிகப் பெரிய இசையமைப்பாளரும் உயர்ந்த மனிதருமான எம்.எஸ்.விஸ்வநாதன் எனக்கு எல்லாவற்றையும் சொல்லித்தந்தார். அவரது மகனைப்போல் என்னைக் கைப்பிடித்து நடத்தினார். நான் இசையில் ஏதாவது செய்திருந்தால் அது அவருடைய ஆசி மட்டுமே" என்று ஜாய் பிற்பாடு கூறினார். எம்.எஸ்.விஸ்வநாதனோ "இசையில் ஆழ்ந்த புரிதல் கொண்டவன் ஜாய். அவன் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது" என்று சொன்னார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டுமின்றி ஹிந்தியிலும் வாசித்தார் ஜாய். அங்கு அக்கார்டியானை அதிகமாகப் பயன்படுத்திய சங்கர் ஜெய்கிஷன் இரட்டையர் தவறாமல் ஜாயை வாசிக்க வைத்தனர். அக்கார்டியனைப் போலவே ஹார்மோனியத்தையும் மின்னணு விசைப்பலகைக் கருவிகளையும் எளிதாக வாசிப்பவராக இருந்தார் ஜாய். எலக்ட்ரானிக் ஆர்கன், காம்போ ஆர்கன், சின்தசைசர் போன்றவை இந்தியாவில்  பிரபலமாவதற்கு முன்னரே ஜாய் வாசிக்க ஆரம்பித்தார். அவர் கீபோர்ட் அல்லது அக்கார்டியன் வாசிக்காத இசையமைப்பாளர்கள் இந்தியாவிலேயே குறைவு. நூற்றுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களுக்காக வாசித்தார்.

சலில் சௌதுரி ஜாய்க்கு ஓய்வு இருப்பதை உறுதிசெய்த பிறகே இசைப் பதிவுக்காக மும்பையிலிருந்து சென்னை கிளம்புவாராம். பாபுராஜின் பல பாடல்களில் ஜாயின் அக்கார்டியனையும் கீபோர்டையும் கேட்கலாம். அவர் ஸ்டுடியோவுக்கு வந்ததும் முதலில் கேட்பது ஜாய் வந்தாரா என்றுதானாம். ஜாய் இல்லாததால் சில பாடல் பதிவுகளை அவர் தள்ளிப்போட்டதாகவும் கதை உண்டு. ஜாயிடம் "உன் பாடல்களுக்கு ஒரு தனி வசீகரம் உண்டு. என் குழந்தைகளுக்குக் கூட உன் பாடல்களே போதும் என்றாகிவிட்டது" என்று சொன்னாராம் பாபுராஜ். ஜாய்க்கு மிகவும் நெருக்கமாக இருந்த தேவராஜன் மாஸ்டர், ''மலையாளத்தின் குறுகிய வட்டாரத்தில் மட்டும் அறியப்பட வேண்டிய இசையமைப்பாளர் அல்ல ஜாய். இன்னும் கொஞ்சம் ஒழுக்கமும் முயற்சியும் இருந்தால் ஹிந்தியில் சென்று அங்கு ஷங்கர் ஜெய்கிஷனை விடப் பெயர் எடுத்திருக்கக் கூடியவன் அவன்" என்று சொன்னார்.

ஒரு திரைப்பட இசையமைப்பாளராகப் பிரபலமான பின்னரும் கே ஜே ஜாய் மற்ற இசையமைப்பாளர்களுக்காக இசைக் கருவிகளை வாசித்தார், உதவியாளராகப் பணியாற்றினார். கே.வி.மகாதேவனின் இசையில் கர்நாடகச் செவ்வியல் இசையை மையமாகக் கொண்ட சங்கராபரணம் திரைப்படத்தின் பின்னணி இசையை அமைத்தது செவ்வியல் இசையைத் துளியளவும் பயிலாத கே ஜே ஜாய் தான்! சலில் சௌதுரி தனது கடைசிப் படங்களான தம்புரான் (மலையாளம்), சுவாமி விவேகானந்தா (ஹிந்தி) வரையிலும் கே ஜே ஜாயின் கருவி இசையைப் பயன்படுத்தினார்.

கால் நூற்றாண்டுக்கும் மேல் தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி இசைக்கலைஞனாகவும் பத்து வருடங்கள் மலையாள சினிமாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளராகவும் இருந்த கே ஜே ஜாய்தான் அப்போது சென்னையின் மிகவும் செல்வந்தராக இருந்த இசைக் கலைஞர். பென்ஸ் கார்களில் ஒரு மகாராஜா போல்தான் அவர் ஒலிப்பதிவுகளுக்கு வருவார். பிரபல இசையமைப்பாளர்களும் மற்ற இசைக்  கலைஞர்களும் ஜாய்க்காகக் காத்திருப்பார்கள். ஏனென்றால் ஜாய்க்கு பதிலாக வேறு இசைக் கலைஞர்கள் யாருமே இருக்கவில்லை.

நேரமின்மை காரணமாக ரெக்கார்டிங்கிற்குத் தாமதமாக வந்தாலும், வந்ததும் எந்தவொரு இசைத் துணுக்கையும் அது எவ்வளவு கடினமாகவும் நீளமாகவும் இருந்தாலும் விரைவில் வாசித்து முடிப்பார். அடுத்தடுத்து உள்ள மூன்று ஸ்டுடியோக்களில் ஒரே நேரத்தில் மூன்று திரைப்படங்களுக்கு வாசிக்க ஒப்புக்கொண்டு, இசைக்கருவிகளைப் பொருத்தி வைத்த பிறகு, மற்ற இசைக்கலைஞர்கள் பாடலைப் பயிற்சி செய்யும் நேரத்தில் மூன்று இடங்களுக்கும் மாறி மாறிச் சென்று வாசிப்பார். எல்லாமே நினைவிலிருந்துதான். காரணம் முன் சொன்னதே! கே ஜே ஜாய்க்கு இசைக் குறிப்புகள் எழுதத் தெரியாது, படிக்கத் தெரியாது.

மற்ற இசையமைப்பாளர்களிடம் வாசிக்கும்போது, ​​அவர்கள் பாடும் அல்லது ஏதேனும் கருவியில் வாசிக்கும் இசைப் பகுதிகள் ஒரு புகைப்படம்போல் ஜாயின் மனதில் பதிந்துவிடும். பின்னர் அதை மறக்கப் பல நாட்கள் ஆகும். சொந்தமாக இசையமைக்கும்போது அவ்விசையை ஹார்மோனியம், கீபோர்ட் அல்லது அக்கார்டியனில் வாசித்துக் காட்டுவார். உதவியாளர்கள் அவற்றைக் குறிப்புகளாக எழுதுவார்கள். பாடகர்களுக்கான பகுதிகளையும் வாத்திய இசைப் பகுதிகளையும் தனித்தனியாக வாசித்துக் காட்டுவார்.

மிக்க கடினமான ‘மதுமலர் தாலம்' பாடலின் ஒவ்வொரு பொடிப் பகுதியையும் கீபோர்டில் வாசித்து யேசுதாஸுக்குக் கற்றுக் கொடுத்த கதையை அவர் சொல்லியிருக்கிறார். தபேலா மற்றும் டிரம் போன்ற தாள வாத்தியங்களின் தாளக்கட்டையும் அவரே வாசித்துக் காட்டுவார் அல்லது ஜதியாக வாயால் சொல்லிக்கொடுப்பார். தனது எல்லாப் பாடல்களையும் இதே முறையில்தான் அவர் அமைத்தார். இவ்வாறாக அறிவியல் ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் இசையைக் கற்றுக்கொள்ளாதவர்கள் இசைக் கலைஞர்களாகவோ இசையமைப்பாளர்களாகவோ வர முடியாது என்ற எண்ணத்தைத் தவிடுபொடியாக்கியவர் கே ஜே ஜாய்.

வாத்தியக் கலைஞர்கள் மற்றும் குழுப் பாடகர்களை ஜாய் மிகுந்த ஆர்வத்துடனும் கருணையுடனும்தான் நடத்தினார் என்று பல வாத்தியக் கலைஞர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். பாடலில் பத்து வயலின் போதும் என்றாலும் வாய்ப்பு குறைந்த இன்னும் பத்துப் பேருக்குச் சேர்த்து வாய்ப்பளிப்பார். வேலையின்றித் தவிக்கும் குழுப் பாடகர்களுக்கு அதிகபட்ச வாய்ப்பு கொடுப்பார். வாய்ப்பு கேட்டு வரும் திறமைசாலிகளுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்பதிலும் அவர் கவனமாக இருந்தார். புதிய பாடலாசிரியர்களைத் தயக்கமின்றி ஊக்குவித்தார். உணவுக்காகப் போராடிக்கொண்டிருந்த பல பாடலாசிரியர்கள் உயிர் பிழைத்ததில் கே ஜே ஜாய்க்குப் பெரும் பங்குண்டு. வேலைப்பளுவினால் தன்னால் பங்கேற்க முடியாத இசைப் பதிவுகளுக்கு பதின்பருவம் தாண்டாத ஏ ஆர் ரஹ்மானை அவர் பரிந்துரைத்த நிகழ்வுகளும் இருக்கின்றன. ஜாயின் பல ஆரம்பகாலப் பாடல்களுக்கு கிட்டார் வாசித்தவர் இளையாராஜா தான் என்பதையும் இங்கு  குறிப்பிட்டாகவேண்டும்.  

விமான விபத்தில் இறந்துபோன மலையாள சூப்பர் ஸ்டார் ஜெயனும் கே ஜே ஜாயும் நெருங்கிய நண்பர்கள். ஜெயன் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி மெட்ராஸில் அலைந்த காலத்திலிருந்தே அவர்கள் நெருக்கம். ஜெயனை முதலில் பல இயக்குநர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் ஜாய் தான். ஜெயனைப் போல் ஸ்டைலாக உடை அணிவதை விரும்பிய அழகனான ஜாய்க்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் 'எனக்கு நடிக்கும் திறமையும் இல்லை, தைரியமும் இல்லை' என்று மறுத்துவிட்டார். 'லிசா' படத்தில் வரும் ஒரு பாடலில் அக்கார்டியன் வாசிப்பவராக வந்தார். 'பப்பு' படத்தின் ஒரு பாடலில் இசை நடத்துநராக வந்தார். இவையே ஜாயின் திரைத் தோற்றங்கள்.

தமிழில் ‘கொம்புத்தேன்’, ‘யாருக்கு யார் காவல்’, ‘வெளிச்சம் விளக்கைத் தேடுகிறது’, ‘அந்தரங்கம் ஊமையானது’ போன்ற படங்களுக்கும் தெலுங்கில் ‘இத்தரு கில்லடீலு’, கன்னடத்தில் ‘தேவர மனெ’ போன்ற படங்களுக்கும் இசையமைத்தார் என்றாலும்  மலையாளத்திற்கு வெளியே ஓர் இசையமைப்பாளராக ஜொலிக்க அவரால் முடியவில்லை. அக்காலத்தின் திரைப்பாடல் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்திழுத்தாலும் கே ஜே ஜாயின் பாடல்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் பெருமளவில் கடக்கவில்லை என்பதும் உண்மை. ஒவ்வொரு பாடலிலும் தனது முத்திரையைப் பதித்த ஜாயின் பெயர் மலையாளத்தின் ஆகச் சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இன்றும் இடம் பெறவில்லை. இதன் காரணங்கள் என்னென்ன?

எல்லா மொழிகளிலும் சேர்த்து 80 படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்றாலும் அவற்றில் பெரும்பாலானவை மிகச் சிறிய படங்கள். அவரது பத்துக்கும் கீழான படங்கள் மட்டுமே வணிக வெற்றி பெற்றன. அதிகம் படங்களும் தோல்வி அடைந்து கவனிக்கப்படாமல் போயின. பல படங்கள் வெளிவரவில்லை. ஜாயின் இசைத் தனித்துவத்தை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அவற்றின் பாடல்கள் முக்கியமானவை. மற்றொன்று இத்தகைய பல சிறு படங்களின் கேசட்டுகள் அந்தக் காலத்தில் வெளிவரவேயில்லை. 1980களின் நடுப்பகுதியில், டேப் ரெக்கார்டர்களும் கேசட்களும் எங்கும் பரவிய காலம் வந்தபோது ​​ஜாய்க்குப் பட வாய்ப்புகளும் இருக்கவில்லை. திரைத்துறையில் வாய்ப்புகள் குறைந்தபோது, ​​வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட தொழில்நுட்பத்தையும் கருவிகளையும் வைத்து ஜாய் ஸ்டுடியோ என்ற ஒலிப்பதிவுக் கூடத்தைத் தொடங்கினார்.

2000களின் தொடக்கத்தில் ஒருநாள் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. தமிழ் சுவைக்கும் மலையாளம். "நீங்க ஷாஜி தானே? நான் உங்களைச் சந்திக்க இயலுமா? என் பெயர் கே ஜே ஜாய். எழுபது மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன்”. தனது பிரபலமான சில பாடல்களின் தலைப்புகளை எடுத்துச் சொல்லி அவற்றை எனக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினார் கே ஜே ஜாய்! நான் அதிர்ச்சியடைந்தேன். ஒரு காலத்தின் எனது ஆதர்ச திரையிசை அமைப்பாளர் கே ஜே ஜாய் இதோ என்னை அழைக்கிறார்! அவரது பாடல்களை எனக்கு ‘அறிமுக’ப்படுத்துகிறார்! அவருடைய எந்தப் பாடல்தான் எனக்குத் தெரியவில்லை?

சிறிது நேரம் குழம்பினாலும் கடைசியில் "இப்படியெல்லாம் சொல்லி என்னை சங்கடப்படுத்தாதே ஜாய் அண்ணா... நான் உங்கள் தீவிர ரசிகன். உங்களது எல்லாப் பாட்டும் எனக்குத் தெரியும்" என்றேன். "ஆமாவா? ரொம்ப சந்தோஷம். நான் சமீபத்தில் அமெரிக்கா போனபோது ஷாஜியின் நண்பர் குரியனைப் பார்த்தேன். அவர்தான் உங்களது எண்ணைக் கொடுத்தார். கிளப் ஜாய் என்று ஒன்றை நான் ஆரம்பிக்கப் போகிறேன். அதைப் பற்றிப் பேசத்தான் கூப்பிட்டேன். நாளைக்கு என் அலுவலகத்துக்கு வர முடியுமா? "வரேன் ஜாய் அண்ணா. ஜாய் ஸ்டுடியோ தானே ஆபீஸ்?". "இல்லை, நான் ஸ்டுடியோவை நிறுத்தினேன். அங்கே இப்போது ஒரு வங்கிதான். அதன் பின்னால்தான் கிளப் தொடங்கப் போகிறேன். நாளை மதியம் அங்கே வந்திடு."

ரங்கராஜபுரத்தில் இருந்த அந்த ஒற்றை அறை அலுவலகத்தில் ஆடம்பரம் ஏதும் இல்லை. அவருடைய இசைக் காலங்களைப்பற்றி அவரிடம் சொல்லவும் அவரிடமிருந்து அறியவும் முயற்சித்தேன். ஆனால் அதில் அவர் ஆர்வமே காட்டவில்லை. தான் தொடங்கவிருக்கும் பிரபலங்களுக்கான கிளப்பில் நான் சேர வேண்டும். அதன் உறுப்பினர் ஆக ஐம்பதாயிரம் ரூபாய் கட்டணம். அமெரிக்க குரியனின் நண்பன் என்பதால் நான் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். ரசீதுப் புத்தகத்தைத் திறந்து என் பெயரை எழுத ஆரம்பித்தார். நான் சோகமாகி விட்டேன். கே ஜே ஜாய் அவருடைய இசையைப் பற்றிப் பேசுவதைக் கேட்க ஓடி வந்த என்னிடம் பணப் பரிமாற்றங்களைப் பற்றி மட்டுமே அவர் பேசுகிறார். நான் ஒரு பிரபலமோ பணக்காரனோ அல்லவே! ஏதோ தவறான புரிதலில் என்னை அழைத்திருக்கிறார். “என்னிடம் இப்போது பணமில்லை. பணத்துடன் விரைவில் வருகிறேன்” என்று பேச்சை மாற்றினேன்.

1965 முதல் 1995 வரையிலான முப்பது வருட இந்தியத் திரைப்பட இசை குறித்து அவரிடம் கேட்டறிய எனக்கு எவ்வளவோ இருக்கிறது. "ஜாயண்ணே, நான் சிலது கேட்கட்டுமா? உங்களது இசையைப் பற்றி எப்போதாவது எழுத விரும்புகிறேன்". "வேண்டாம். நான் இப்போது திரைப்படங்களை வெறுக்கிறேன். இன்னொன்று உனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் நானா? அதுவும் இல்லை!". "அப்படி அல்ல. உங்கள் பாடல்கள் மீது எனக்கு தனிப் பிரியம் உண்டு. சலில் சௌதுரி, எம் எஸ் வி, ஆர்.டி.பர்மன், பாபுராஜ், மதன் மோகன், ஷ்யாம்... எல்லோரையும் எனக்குப் பிடிக்கும்". "அப்போது சலில் சௌதுரியைத்தான் உனக்கு மிகவும் பிடிக்கும். இல்ல? உனக்கு ரசனை இருக்கிறது. சரி நான் இசையமைத்த எந்தப் படம் உனக்கு ரொம்பப் பிடிக்கும்"? "உங்களது நான்கைந்து படங்களைத்தாம் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் பாடல்கள் அனைத்தும் எனக்குத் தெரியும். உங்களது ஒவ்வொரு பாடலும் ஒரு நிகழ்வு அல்லவா! சரி.. உங்களுக்கு இசையைக் கற்றுக் கொடுத்தது யார்?"

வயலின் எப்படி பிடிப்பது, விரலை எங்கு வைப்பது என்பதைத் தவிர இசையை நான் யாரிடமிருந்தும் கற்றுக்கொண்டதில்லை. நானே சுயமாகப் பயிற்சி செய்தேன். இசை என்பது யாரும் யாருக்கும் கற்றுத் தரக்கூடியது அல்ல. யாராவது இசையைக் கஷ்டப்பட்டுக் கற்றுக்கொண்டால் அவர்கள் இசை ஆசிரியர்கள் ஆகலாமே ஒழிய இசைக் கலைஞனாகவோ இசையமைப்பாளராகவோ வர முடியாது....". கே ஜே ஜாயை முதன்முதலில் நேரடியாகப் பார்த்த அந்நாளில் கிடைத்த கலாச்சார அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் பின்னர் சிலகாலம் அவரை அழைக்க முயலவில்லை

காலம் மீண்டும் கடந்தோடியது. 2008ல் இந்து நாளிதழுக்கு அவர் அளித்த ஒரு பேட்டிக்கு ‘தென்னிந்தியத் திரைப்பட இசைக்கு கீபோர்டை அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர்' என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. தலைப்பே தவறு! Novacord, Claviolin மற்றும் Univox போன்ற மின்னணு விசைப்பலகைக் கருவிகள் 1960களின் முற்பகுதியிலிருந்தே இங்கு பயன்படுத்தப்படுகின்றன. ஜாய் அண்ணா 60களின் இறுதியில்தான் அவற்றை வாசிக்கத் தொடங்கினார். அது எப்படி கே ஜே ஜாயின் மகிமை ஆகும்? அந்த பேட்டியில் மேலும் பல தவறான தகவல்கள் இருந்தன. 60 மலையாளப் படங்களுக்குத்தான் அவர் இசையமைத்தார், ஒரு ஹிந்திப் படத்திற்குப் பாடல்களை ‘எழுதினார்’ என்றெல்லாம் அதில் எழுதியிருந்தனர். 'ஓர் இசையமைப்பாளராக மாறுவதற்குச் சிறப்புத் திறன்கள் எதுவும் தேவையில்லை' போன்ற பதில்களும் அப்பேட்டியில் இருந்தன!

கே ஜே ஜாயின் இசைப் பெருமையையும் அவரைப் பற்றிய சரியான விவரங்களையும் கொண்ட ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று பல வருடங்களாக இவரிடம் பேட்டி கேட்டு வருகிறேன். இப்படியே விட்டுவிட முடியாது. நான் ஜாய் அண்ணாவை அழைத்தேன். வருடங்கள் கடந்ததன் இடைவெளி எதுவும் இல்லாமல், பழைய அதே நெருக்கத்துடன் பேசினார். இந்து நேர்காணலில் உள்ள பிரச்னைகளைக் குறிப்பிட்டு இப்போதாவது எனக்கு ஒரு பேட்டி கொடுக்க முடியுமா என்று கேட்டேன். உடனே "அடுத்த சனிக்கிழமை நீ வா” என்று சொன்னார். ஆனால் அன்று மதியமே மீண்டும் என்னை அழைத்தார். "அடுத்த சனிக்கிழமை நான் ஜப்பான் போயிடுவேன். நீ இன்றைக்கே வா. நான் இப்போது எங்கே தங்கியிருக்கிறேன் தெரியுமா? சாந்தோமில் எம்.எஸ்.விஸ்வநாதன் வீட்டில் இருந்து கொஞ்சம் தள்ளி இடதுபுறம் இருக்கும் மிகப்பெரிய கேட். இரண்டு ஏக்கர் கடற்கரைப் பிராபர்ட்டி. எல்லாவற்றையும் நீ வந்து பார்." "அது கல்பனா ஹவுஸ் இல்லையா? ஷூட்டிங்குக்கு கொடுக்கும் வீடு?". "ஆம். அதுதான் என் வீடு. ஐந்து மணிக்கு வா. நான் காத்திருக்கிறேன்."

நேர்காணலைப் பதிவுசெய்ய நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு குரல் ரெக்கார்டரைக் கடன் வாங்கினேன். மேலும் அவருக்கு வழங்குவதற்காக எனது தொகுப்பிலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட கே ஜே ஜாய் பாடல்களை சி டிகளில் நகலெடுத்தேன். இதற்கிடையில் பலமுறை என்னை அழைத்து நான் வருவதை உறுதி செய்தார்! கல்பனா ஹவுஸின் முன்புறம் செல்லும்போது ​​அதன் முகவாயிலில் ஜாய் அண்ணா நின்றுகொண்டிருந்தார். கேட்டைத் திறந்து காரை எங்கு நிறுத்தவேண்டும் என்று அவரே காட்டினார். முதுமை ஆரம்பிப்பதன் அறிகுறிகள் முகத்திலும் உடம்பிலும் தென்பட்டாலும் அழகனாகவே இருந்தார்.

கல்பனா ஹவுஸில் சில சினிமாக்காரர்களைப் பார்க்க முன்னாடி போயிருக்கிறேன். அதன் கடற்கரைக்குத் திறக்கும் பகுதியில்தான் ஜாய் அண்ணா வசிக்கிறார். பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் பாசியும் காளான்களும் படர்ந்து அந்தக் கட்டடம் அலங்கோலமாகக் காணப்பட்டது. முற்றத்தில் ஆங்காங்கே நான்கைந்து கார்கள் நிற்கின்றன. அவற்றில் ஜாய் அண்ணாவின் பழைய பென்ஸுகளும் இருந்தன. ஆனால் அவை சக்கரங்கள் இல்லாமல் கட்டைமேல்தான் வைக்கப்பட்டிருந்தன. ஓடும் சிறிய கார் ஒன்று சற்று தள்ளி நிறுத்தப்பட்டிருந்தது. "உள்ளே பயங்கர சூடு. நாம் இங்கே வெளியே உட்காரலாம். நல்ல கடற்காற்று கிடைக்கும்" என்று சொன்னார்.

குறுந்தகடுகளைக் கொடுத்தபோது புரட்டிப் பார்த்து "இதில் எத்தனை பாட்டிருக்கு?" என்று கேட்டார். இருநூறு என்று சொன்னதும் “இன்னும் நூறு பாட்டு இருக்கு. அதையும் நீ கொண்டுவரணும்” என்றார். எனக்குத் தெரிந்து மலையாளத்தில் இனி நாற்பது பாட்டுதான் இருக்கிறது. அது எங்கேயும் கிடைக்கவில்லை” என்றேன். அவர் என்னிடம் "நீ உள்ளே போய் பாரு. அங்கே என் போட்டோக்கள் இருக்கின்றன" என்றார். உள்ளே நான் தலை காட்டியபோது அங்கே சிதிலமாகத் தொடங்கிய பெரிய உணவு மேஜையைச் சுற்றி நான்கு பெண்கள் அமர்ந்து எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் வேகமாகப் பின்வாங்கி மீண்டும் ஜாய் அண்ணா பக்கம் சென்றேன். "அது ஒன்றுமில்லை. என் மனைவி மற்றும் உறவினர்கள். அவர்கள் உடனே கிளம்புவார்கள். பிறகு நீ போய் பாரு. அதன்பின் நாம் வெளியே எங்காவது போகலாம். நேர்காணல் இன்றைக்கு வேண்டாம்....". பெரும் ஏமாற்றமாகிப் போனது எனக்கு.

உள்ளே இருந்த பெண்கள் வெளியே வந்தனர். அவர்கள் என்னைக் கடுமையாகப் பார்த்துவிட்டு எதுவுமே பேசாமல் சிறிய காரில் வெளியே கிளம்பினார்கள். ஜாய் அண்ணா என்னிடம், "நாம்  ஆந்திரா கிளப்புக்கு போகலாம். இன்றைக்கு உனக்கு என் செலவு. நீ உள்ளே போய் போட்டோக்களைப் பாரு" என்று வலுக்கட்டாயமாக என்னை உள்ளே அனுப்பினார். சுவர்களில் ஜாய் அண்ணாவின் இளமைப் பருவத்தின் படங்கள். சலில் சௌதுரி, ஆர் டி பர்மன், நௌஷாத், லக்ஷ்மிகாந்த் பியாரேலால், ஷங்கர் ஜெய்கிஷன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோருடன் அவர் சிரித்து நிற்கிறார். அப்படங்கள் தூசி படிந்து மங்கலாகக் காணப்பட்டன. வலதுபுறம் உள்ள அறைக்கு எட்டிப் பார்க்கும்போது அதன் தரையில் ஒரு உணவகத்தின் சமையலறையில் இருப்பது போல் வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் குவிந்து கிடந்தன. வெளியே ஜாய் அண்ணா எதுவுமே நடக்காதது போல் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்.

"நீ பெரிய சலில் சௌதுரி ரசிகன் இல்லையா? நானும் சலில்தாவும் சேர்ந்து நிற்கும் போட்டோவைப் பார்த்தியா? எங்கள் உறவு என்னவென்று உனக்குத் தெரியுமா?". அவர் என்னிடம் கேட்கிறார். “ரெக்கார்டிங்குகள் முடிந்து நீங்கள் இருவரும் சலில்தாவின் அறைக்குச் சென்று விடிகாலை வரைக்கும் குடித்த கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றேன். "அதெல்லாம் உண்மை தான். அதுதான் எங்கள் நட்பு. ஒரு நாள் காலையில் சலில்தா என்னை அழைத்து “ஜாய், நீ அடுத்த ஃப்ளைட் பிடித்து கொல்கத்தா வந்திடு” என்று சொன்னார். எனக்கு இங்கே தலைக்குமேல் வேலை. ஆனால் எல்லாவற்றையும் தள்ளி வைத்து அடுத்த விமானத்தில் கல்கத்தா சென்று இறங்கினேன். விமானம் வந்து நிற்கும் இடத்திலேயே நிற்கிறார் சலில்தா! ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்தார். பக்கத்தில் அவரது 1966 மாடல் ப்யூக் ஸ்கைலார்க் கன்வெர்ட்டிபிள் கார். அதில் ஏறி சிறப்புப் பாதுகாப்பு வாயில் வழியாக நாங்கள் வெளியேறினோம். ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் இம்மூவருக்கு மட்டுமே வழங்கப்படும் சலுகை அது. அதுதான் பெங்காலில் சலில்தாவுக்கு இருந்த இடம், மரியாதை.

ஆந்திரா கிளப்புக்குக் கார் ஓட்டும்போது மீண்டும் நான் இந்து பேட்டியைப் பற்றிக் கேட்டேன். தென்னிந்திய இசைக்கு மின்னணுக் கீபோர்டை அறிமுகப்படுத்திய கதை? "Yamaha-YC40 என்பது 1969ல் வெளியான ஒரு காம்போ ஆர்கன். அது அதுவரை கண்டிராத பல அம்சங்களையும் ஒலிகளையும் கொண்டிருந்த மின்னணுக் கருவி. சென்னையில் கச்சேரிக்கு வந்த சங்கர் ஜெய்கிஷன் கையில் அதைப் பார்த்தேன். வாசித்து பார்த்தபோது மிகவும் அருமை. உடனே அவர்கள் கேட்ட விலைக்கு அதை வாங்கினேன். அப்படியாக நான்தான் இங்கு காம்போ ஆர்கனை அறிமுகப்படுத்தினேன். பின்னர் சிலகாலம் அதன் ஒலி இடம்பெறாத திரைப்படங்கள் தென்னிந்தியாவில் வரவே இல்லை.

ஓர் இசையமைப்பாளர் ஆனபோது ​​எனக்குப் புகழ் கிடைத்தது உண்மை. முன்பு கேட்ட பாடல்களை மனதில் எடிட் செய்து வேறொன்றாக வெளிக்காட்டக்கூடிய யாருமே இசை அமைக்கலாம். ஆனால் ஒரு நல்ல கருவியிசைக் கலைஞனாக வருவதற்கு மிகுந்த திறமை வேண்டும். நான் சுமார் 6000 பாடல்களில் வாசித்தேன். எம் எஸ் விக்கு மட்டும் 400 படங்களுக்கு மேல். கே.வி.மகாதேவனுக்கும் நூற்றுக்கணக்கான படங்கள். பல மொழிகளில் ஒரு நாளுக்கு 12 பாடல்களுக்கு வரை வாசித்தேன். சில ஹிந்திப் படங்களுக்குப் பின்னணி இசையும் அமைத்தேன்”

"இசை முறையாகக் கற்காமல், ராக தாளங்கள் தெரியாமல், இசைக் குறிப்பெழுதவும் படிக்கவும் தெரியாமல் இவ்வளவெல்லாம் செய்ய முடியுமா?" "எனக்கு இன்றுவரை மியூசிக் நோட்ஸ் எழுதவோ படிக்கவோ தெரியாது. நான் இசையை ஒருபோதும் நோட்ஸாகப் புரிந்து கொள்ளவில்லை. நாதங்கள் பயணிக்கும் விதமும் பாதையும் எனக்குள்ளே ஓர் அனுபவமாகத் தெளிந்து ஓடும். ஒரு முறை என் இதயத்தில் அவை பதிந்தால் பின்னர் பலகாலம் அவற்றை என்னால் மறக்க முடியாது. முதன்முதலில் ஒரு படத்துக்கு வாசிக்கச் சென்றபோது எம்.எஸ்.வி சார் அப்பாடலில் நான் அக்கார்டியன் வாசிக்கவேண்டிய பகுதிகளின் குறிப்பை என்னிடம் எழுதித் தந்தார். அது என்னவென்றே எனக்குப் புரியவில்லை. ஆனால் அதை அவர் வாயால் பாடியதை ஒரே முறை கேட்ட நான் பாடல் பதிவின்போது மிகச் சரியாகவே வாசித்தேன். எனக்கு ஒருபோதும் இசைக் குறிப்புகள் தேவைப்படவில்லை. எல்லாம் என் இதயத்தில் இருக்கும்”.

“ராகங்களை அடையாளம் காண என்னால் முடியாது. ஆனால் எனது பல பாடல்கள் சுத்தமான பஹாடி, பிஹாக், கௌரிமனோகரி, மோகனம், ஹம்சத்வனி, ஆபேரி, தோடி போன்ற ராகங்களில் அமைந்ததாக கர்நாடக இசை வல்லுனர்கள் சொல்கிறார்கள். அது எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் மெட்டுகள் பயணிக்கும் பாதை எனக்கு ஒருபோதும் தவறாது. என்னைப் பொறுத்த வரையில் நான் உருவாக்கிய எல்லாப் பாடல்களுக்குமே ஒரே ராகம் தான். ஜாய் ராகம்! ஜாய் என்றால் மகிழ்ச்சி. மகிழ்ச்சியின் ராகம் எதுவோ அதுவே என் இசை.  

அன்று சாயங்காலம் ஆந்திரா கிளப்பின் மொட்டைமாடியில் உள்ள மதுபான விடுதியில் அமர்ந்து மிகக் குறுகிய நேரத்தில் பன்னிரெண்டு லார்ஜ் பிராந்தியை ஜாய் அண்ணா குடிப்பதைக் கண்டேன். ஒவ்வொரு லார்ஜுக்குப் பிறகும் அவர் மேலும் மௌனமாகவும் சோகமாகவும் மாறினார். பின்னர் எதுவுமே பேசாமல் திடீரென்று எழுந்து தள்ளாடியவண்ணம் வெளியேறினார். பணத்தைக் கட்டியபின் நான் ஓடிக் கீழே வந்தபோது, ​​தலை குனிந்தபடி காரில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தார். அவர் வீட்டிற்குக் கார் சென்றுகொண்டிருக்கும்போது தன்னிடம் இருந்த சொகுசுக் கார்களை பற்றி ஏதேதோ புலம்பினார். பிறகு கடந்த காலங்களில் தொலைந்துபோனவரைப்போல் கண்மூடி அமர்ந்தார். ஒன்றிரண்டு முறை "ஒருகாலத்தில் எத்தனையோ பேருக்கு பெருவிருந்துகளை அளித்தவன் நான். அது எதுவும் உனக்குத் தெரியாது. என்னைப் பற்றி எதுவும் உனக்குத் தெரியாது" என்று சொன்னார். வீட்டில் அவரை இறக்கி விடும்போது "உன் கார் ஓட்டுதல் சரியில்லை. கவனக்குறைவாக வாகனம் ஓட்டாதே. வீட்டுக்குப் பாதுகாப்பாக ஓட்டு" என்று சொல்லிக் கதவைச் சாத்தினார்.

தனது தனி வாழ்க்கையைப் பற்றியான கேள்விகளை எப்போதுமே தவிர்த்தவர் ஜாய் அண்ணா. அவர் வாழ்க்கையில் என்னதான் நடந்திருக்கும் என்பதை அறியும் ஆவல் என்னை உந்தியது. தேவராஜன் மாஸ்டருடன் நெருக்கமாக இருந்த ஜாய் அண்ணா, மாஸ்டர் ஏற்பாடு செய்த ஒரு மலையாளிப் பெண்ணை முதலில் திருமணம் செய்துகொண்டார். அத்திருமணம் நீடிக்கவில்லை. ஆனால் அதில் ஓர் ஆண்குழந்தை பிறந்திருந்தது. மீண்டும் அவர் திருமணம் செய்து கொண்டார். இம்முறை காதல் திருமணம். அறுபது எழுபதுகளில் சென்னையின் விருப்பமான சினிமாப் படப்பிடிப்பு இடம் கல்பனா ஹவுஸ் மாளிகையின் உரிமையாளர் கல்பனாவின் மகள் ரஞ்சனியை. இருவரும் இணைய முடிவு செய்தபோது ​​இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சாதி வேறு, மதம் வேறு, தாய் மொழி வேறு. இறுதியில் பதிவு திருமணம். அந்தத் திருமணத்தில் அவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன். 

ஜாய் அண்ணாவுக்கு பொருளாதார ஒழுக்கம் இருக்கவே இல்லை எனக் கூறப்படுகிறது. இசையிலும் வாழ்க்கையிலும் எதையும் குறைத்துச் செய்ய அவரால் முடியவில்லை. திரையுலகில் வாய்ப்புகள் இல்லாமல்போன காலத்தில் வேறு தொழில்களுக்கு இறங்கி அனைத்திலும் தோல்வியடைந்தார். மேற்சொன்ன கிளப் அவற்றில் ஒன்று. நிதிச்   சிக்கல்களால் ஸ்டுடியோவையும் மற்ற இடங்களையும் விற்க நேர்ந்தது. சொத்துகள் அனைத்தையும் இழந்தார். மனைவியின் சொத்தாக இருந்த கல்பனா மாளிகையின் உரிமை தொடர்பான பல நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்த நேரத்தில்தான் அந்த வீட்டில் அவரை சந்தித்தேன்.

2009ல் ஒரு நாள் மூளையில் ரத்தம் உறைந்ததால் ஜாய் அண்ணா சரிந்து விழுந்தார். பின்னர் ஒருபோதும் அவர் மீண்டெழவில்லை. அவரை நேரில் சென்று பார்க்க முயற்சித்தேன், ஆனால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் பார்க்க முடியாது என்று அங்குள்ளவர்கள் கேட்டிலிருந்தே என்னைத் திருப்பி அனுப்பினார்கள். அவரது அலைபேசியும் நின்றுபோயிருந்தது. வீடு சார்ந்த வழக்குகளில் நீதிமன்றம் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியதால் இப்போது பிரச்னையில்லை, அவர் சிகிச்சையும் கவனிப்பும் பெறுகிறார் என்று பின்னர் அறிய நேர்ந்தது.

ஜாய் அண்ணா உடல்நலம் பெற்றபின் மீண்டும் ஒருமுறை அவரை ஆந்திரா கிளப் அழைத்துச் சென்று உபசரிக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள் அவரது இடது காலில் ரத்த ஓட்டம் நின்றுபோனதால் அந்த காலைத் துண்டிக்க வேண்டியதாயிற்று. விரைவில் வலது காலும் முற்றிலுமாக வலுவிழந்தது. நிற்கவோ நடக்கவோ முடியாமல் ஜாய் அண்ணா படுத்திருக்கிறார்! அந்த வீட்டில் உள்ளவர்களின் எதிர்ப்பைப் புறக்கணித்து நான் அவரைச் சென்று பார்த்தேன்.

ஜாய் அண்ணா வேறு யாரோவாக மாறிவிட்டிருந்தார். மிகவும் மெலிந்து, தாடி நரைத்த முகத்தில் பற்கள் மட்டுமே பெரிதாகத் தென்பட்டன. கண் பார்வை மங்கிப்போனது. மனிதர்களைக் குரலால்தான் அடையாளம் காண்கிறார். என் குரலைக் கேட்டதும், “ஷாஜி தானே?” என்று கேட்டார். நினைவுகளுக்கு மட்டும் எந்த மங்கலும் இல்லை. "உன்னைப் பார்த்தது எனக்கு பெரும் மகிழ்ச்சி. நீ என் இதயத்தில் வாழ்கிறாய். எனக்கு ஒரு முத்தம் கொடு" என்று அவர் சொன்னதைக் கேட்டு நான் அழுதேன்.

பேசுகிறார் என்றாலும் அவ்வப்போது பேச்சு தெளிவற்றதாகி விடும். உணவு, கழிவு, தூக்கம் என அனைத்துமே படுத்த படுக்கையில்தான். முழு நேரமும் மேற்கூரையைப் பார்த்தவண்ணம் படுத்துக் கிடக்கிறார். வலது கை விரல்கள் மட்டும் நன்றாக அசைகின்றன. அவரது ஒவ்வொரு பாடலைப் பற்றிச் சொல்லும்போதும் அந்த விரல்கள் காற்றில் கண்ணுக்கு தெரியாத அக்கார்டியன் கட்டைகளில் ஓடுகின்றன. கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிகிறது. அதைப் பார்த்துக்கொண்டு நிற்க என்னால் முடியவில்லை.

பின்னர் அவரைப் பார்க்கச் சென்ற சிலரிடம், "என்னிடம் ஃபோன் இல்லை, ஏதாவது இருந்தால் ஷாஜியைக் கூப்பிடுங்கள்!" என்று அவர் சொன்னதாகத் தெரிய வந்தது. மீண்டும் மூன்று முறை அவரைச் சென்று சந்தித்தேன். ஆனால் அந்தச சந்திப்புகள் எளிதாக இருக்கவில்லை. நான் செல்லும்போது குடும்பத்தினர் சொல்வதைக் கேட்க அவர் மறுப்பாராம்! உணவு, மருந்து எடுக்க மறுத்து இசையை மட்டுமே பேசிக்கொண்டிருப்பார். அதனால் என்னைப் போன்ற ஜாய் ரசிகர்கள் வருவதில் அவர்களுக்கு ஆர்வமில்லை. தெருக்களில் இருந்து மீட்கப்பட்ட நிறைய நாய்களை அவ்வீட்டில் வளர்க்கிறார்கள். அவற்றின் உறுமலும் குரைப்பும் கடிக்கப் பொங்கும் குதிப்பும் யாரையும் பயமுறுத்தக் கூடியது. ஒரு நாய் ஒருமுறை என்னைக் கடிக்கவே செய்தது.

அக்கார்டியனில் அவர் வாசித்த திரைப்படப் பாடல் கருவியிசைத் தொகுப்பு ‘மேஜிக்கல் ஃபிங்கர்ஸ்’ இன்னொரு முறை கேட்க வேண்டும், மீண்டும் ஒருமுறை என்னுடன் ஆந்திரா கிளப்புக்கு சென்று பீர் குடித்தவண்ணம் பாடல்களைப் பேசவேண்டும், ஒருகாலத்தில் தனது உயிர் நண்பனாக இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை ஒருமுறை பார்க்கவேண்டும், நாட்டு நேந்திரம் பழம் வேகவைத்ததைச் சாப்பிட வேண்டும்... இவைதான் ஜாய் அண்ணா என்னிடம் சொன்ன ஆசைகள். நேந்திரம் பழத்தைச் சமைத்து அனுப்பினேன். எஸ்.பி.பியிடம் விவரம் சொல்லி அவரை ஜாய் அண்ணாவிடம் அனுப்பி வைத்தேன்.

அவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்து என்னை அழைத்து ஜாய்க்கும் எனக்குமான நட்பு 1968ல் தொடங்கியது. இருபதாண்டுகாலம் நெருங்கிய நண்பர்கள் நாங்கள். அவனது நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. நீங்கள் எனக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்றால் இதை நான் அறியாமலேயே போயிருப்பேன். என்னை என் நண்பனிடம் அனுப்பிவைக்க உங்களால் முடிந்ததே. உங்களைப்போன்ற ரசிகர்கள் மட்டும்தான் ஒரு கலைஞனின் கடைசி சம்பாத்தியம். ஜாய் உயிரோடு இருக்கும் வரையில் அவனை மகிழ்வாக வைப்பதற்குத் தேவையான அனைத்தையும் நாம் செய்வோம்..." என்று சொன்ன எஸ் பி பி இன்று இவ்வுலகில் இல்லை.

'கனவுகளுக்கு அர்த்தங்கள் இருந்தால் சொர்க்கமெல்லாம் நமதேஎன்று பாடிய, ஒருபோதும் மறக்க முடியாத எத்தனையோ பாடல்களைத் தந்த கே ஜே ஜாய் கடந்த பத்தாண்டுகாலமாக மாதங்களும் ஆண்டுகளும் கடந்துபோவதறியாமல் தனது தனிமைப் படுக்கையில் கிடக்கிறார். 'மேலே வானத்திலே மேயும் மேகங்களை’ பார்ப்பதற்காக என்பதுபோல் பனித்த கண்களுடன் அவர் ஆகாயம் பார்த்து இப்போதும் படுத்திருக்கிறார். தனது இதயத்தின் ஆழத்திலிருந்து அவர் உருவாக்கிய பாடல்கள் வருங்காலத் தலைமுறைகளையும் சென்றடையும் என்று நான் ஆழமாக நம்புகிறேன். வாழ்க்கை நம்மோடு என்னென்ன செய்தாலும் முழு இதயத்தோடு நாம் செய்யும் ஒவ்வொன்றும் முடிவில்லாத காலத்தில் அழியா இசையாக ஒலித்துக்கொண்டேயிருக்கும்.


shaajichennai@gmail.com