முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மலைகளின் காதல் பாடகன் : ஜான் டென்வர்


நாம் இயற்கையிலுள்ள ஒவ்வொன்றுடனும் இணக்கமாக வாழ வேண்டும்.

இவ்வுலகின் பட்டினியைப் போக்குவதற்காக முழுமையாக உழைக்கவேண்டும்.

அப்போதுதான் உலகம் அமைதி அடையும். எனது இசையையும் வாழ்வையும்

அந்த உலக அமைதிக்காக அர்ப்பணிக்கிறேன்.                                    

- ஜான் டென்வர்

1980களின் ஒரு முற்பகல் நேரம். எனது நண்பனின் மளிகைக்கடையில் அமர்ந்திருந்தேன். திடீரென ஒட்டுமொத்தக் கட்டடமும் குலுங்கியது. பலகையடுக்குகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தடதடவென கீழே விழுந்து சிதறின. என்ன நடக்கிறது என்பதை அறியாமலே வெளியே குதித்துவந்து சாலையில் பார்த்தபோது பல்வேறு கட்டடங்களிலிருந்தும் மக்கள் பதற்றத்துடன் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அதிர்வுமிக்க பூகம்பம் நிகழ்ந்திருக்கிறது. அனைவரும் அந்த அதிர்வை உணர்ந்து பீதியில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். ஒருவரும் இறக்கவில்லை. ஆனால், ஏராளமான கட்டடங்கள் விரிசல் விட்டிருந்தது. மதிப்புமிக்க பொருட்கள் சேதமடைந்திருந்தன. மெலிதான பூமியதிர்வுகள் எங்கள் மாவட்டத்தில் வழக்கமாக நிகழ்வதுதான் என்றாலும் பூகம்பத்தின் அதிர்வை நான்வலிமையாக உணர்ந்த முதல் அனுபவம் அதுவே.

அக்காலகட்டத்தில்தான் நான் ஜானைச் சந்தித்தேன். ஜான் டென்வர் அல்ல! பெருவந்தானம் ஜான். பேச்சைக் கேட்பவர்கள் என யாருமில்லாத ஒரு தெருமுனைக் கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தார். ஒன்றிரண்டு பேர் சாலையோரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். மெலிந்து குள்ளமான அவர் ஒலிபெருக்கியின் முன் நின்றவாறு உரையாற்றிக் கொண்டிருந்தார். ஏறத்தாழ 25 வயது இருக்கும். அவரது உரை கேட்பதற்கு சுவாரசியமில்லாமல் இருந்தது. ஆனால் எங்கள் பகுதிகளில் தொடர்ந்து நிகழும் பூகம்பத்தைப் பற்றித்தான் அவர் பேசிக்கொண்டிருந்தார் என்பதை உணர்ந்ததும் ஆர்வமுடன் நான் அவரது பேச்சை கவனித்தேன். அவர் ஓர் சுற்றுச்சூழலியல் போராளி.

எங்கள் மாவட்டத்தில் ஆசியாவின் மிகப்பெரிய வளைவு அணைக்கட்டான இடுக்கி அணை, சர்ச்சைக்குரிய முல்லைப்பெரியார் உட்பட பத்துக்கு மேல் அணைக்கட்டுகளும் அதனோடு இணைந்த நீர்த்தேக்கங்களும் இருக்கின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பலவீனமான பூமியடுக்குகளில் மிகப்பெரிய பரப்பில் விரவியிருக்கும் இத்தகைய நீர்த்தேக்கங்களின் மிகை அழுத்தத்தின் காரணமாகவே, அணைக்கட்டுகள் அமைந்திருக்கும் மலையடிவாரங்களிலும் அதைச்சுற்றியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுகின்றன என்றெல்லாம் விளக்கிக் கொண்டிருந்தார் அவர். மஹாராஷ்டிராவின் கொய்னாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தையும் அதற்கு காரணியாக இருந்து கடைசியில் அதன் பலியாகவும் அமைந்த கொய்னா நீர்த்தேக்கத்தை உதாரணமாகச் சொல்லி விளக்கிக் கொண்டிருந்தார்.

மும்பைக்கு இருநூறு கி.மீ தெற்கே கொய்னா நீர்த்தேக்கத்தில் 1963-ல் அணை கட்டப்பட்டது. நான்கு வருடங்களுக்குப்பிறகு, டிசம்பர் 11, 1967 அன்று அதிகாலை 4:20 மணியளவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் அணையைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தது. ரிக்டர் அளவுகோலில் 7.0 புள்ளிகள் பதிவான நில அதிர்வுகளினால் அந்த அணை உடைந்து விழுந்ததில் ஏற்பட்ட வெள்ளம் சுமார் இருநூறு உயிர்களைப் பலி கொண்டது.  மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் எல்லாவற்றையும் இழந்தனர்.

மீதமிருக்கும் காடுகளையும் நதிகளையும் பாதுகாக்கவேண்டியதின் அவசியத்தைப் பற்றியும் விளக்கிச் சென்றது அவரது உரை. அதிர்ச்சியும் விழிப்புணர்வும் ஒருசேர அடைந்தேன். கூட்டம் முடிந்தபின் ஜானைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். எங்கள் பகுதியைப் படர்ந்திருக்கும் ஆபத்தின் சாத்தியங்களை விளக்கினார். அக்கணமே அவரது கருத்துக்களை ஏற்றுக்கொண்டவனாகவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவேண்டும் என்ற பிரக்ஞை கொண்டவனாகவும் ஆனேன். மீதமிருக்கும் நதிகளிலும் அணைகளைக் கட்ட திட்டமிட்டுக்கொண்டிருந்தது கேரள அரசு. உடனே ஏதாவது செய்தாக வேண்டும் என எண்ணினேன். அதன் பின்னர் ஜானுடைய குழுவில் இணைந்து சில மாதங்கள் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து விழிப்புணர்வுக் கூட்டங்கள் நிகழ்த்தி, அணைகள் கட்டுவதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினோம்.

உலகின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பாக ஜானிடம் ஏராளமான புத்தங்கள் இருந்தன. அவைகளிலிருந்தே ஜான் டென்வரைப்பற்றி முதன்முதலாக நான் வாசித்தறிந்தேன். சூழலியல் பிரச்சினைகளைப்பற்றிப் பேசிய, தீவிரமாக செயல்பட்ட முதல் சர்வதேச இசையுலக ஆளுமை அவர். உலக பட்டினி ஒழிப்புத்திட்டம் போன்ற பல மனிதாபிமான செயல்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவின் இசைநட்சத்திரம் என்ற அடையாளத்தைத் தவிர அவருடைய இசைப் பங்களிப்புகளைப் பற்றி அந்தப் புத்தகங்களில் ஒன்றும் குறிப்பிட்டிருக்கவில்லை. அவரது இசையை உடனே கேட்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது என்றாலும் அதற்கு அப்போது ஒரு வழியும் இருக்கவில்லை.

பல வருடங்கள் கடந்தோடியபின், ஹைதராபாத்தில் வாழ்ந்த நாட்களில்தான் ஜான் டென்வருடைய ஒலிநாடாக்களைக் கேட்கும் சந்தர்ப்பம் எனக்கு அமைந்தது. அதன் ஒவ்வொரு கணங்களையும் உள்வாங்கிக் கொண்டிருந்தபோது ஏதோ நீண்ட காலங்களாக அவ்விசையை அறிந்திருப்பதைப்போல் உணர்ந்தேன். அவர் எவ்வளவு முக்கியமான பாடகர் மற்றும் இசைக்கலைஞர் என்பதை அக்காலங்களிலேயே அறிந்து கொண்டேன். அவருடைய கித்தார் ஒலிதான் இதுவரை நான் கேட்ட பாப் இசைகளிலேயே மிகச்சிறந்த அக்கூஸ்டிக் கித்தார் ஒலி. டிஸ்கோவும் துள்ளலிசை நுகர்வில் ஊறித்திளைக்கும் ரசிகர்களும் கோலோச்சிக் கொண்டிருந்த எழுபதுகளின் தலைமுறையில் வாழ்ந்தவர். ஆனால் ஒருபோதும் நடனத்திற்கெனவே இசைக்கப்படும் வேகமான இசையை அவர் உருவாக்க முயலவில்லை. இதன் காரணமாகவே மெதுவாகப் பாடும் அழுவாச்சிப் பாடகர் என்று கேலிக்குள்ளானார். ஆனால், அனைத்து நடன இசைப்போக்குகளையும் கடந்து நிலைத்துநிற்கிறது ஜான் டென்வரின் இசை.

அவருடைய இசை மனதை நிறைக்கும் மெல்லிசையாக இருப்பினும், நாற்பதுகளின் ஃப்ரான்க் சினாட்ரா போல, ஐம்பதுகளின் எல்விஸ் ப்ரெஸ்லி போல, அறுபதுகளின் ஜான் லென்னனின் பீட்டில்ஸ் போல எழுபதுகளின் நாயகனாகத் திகழ்ந்தவர் ஜான் டென்வர். எல்விஸ், மைக்கேல் ஜாக்ஸன் மற்றும் ஃப்ரான்க் சினாட்ராவுக்குப் பிறகு உலக அளவில் அதிகமாக விற்பனையான இசைத் தொகுப்புகள் அவருடையதே. 2010 வரை அவரது பிரபல பாடல்கள் கொண்ட இசை தொகுப்பில் 12 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டன. நிகழ்காலத்தின் ஆட்டுவிக்கும் போக்குகளைத் தொடராமல் தன்னுடைய மெல்லிசைப் பாடல்களை வைத்துக் கொண்டே இத்தகைய அனைத்து உச்சங்களையும் தொட்டார், ஜான் டென்வர்.

பொதுவாக அமெரிக்க நாட்டுப்புறப் பாடகர் என்று பிரித்தறியப்பட்டாலும் அவருடைய இசையை ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள் அடைத்துவிட முடியாது. மின்னிசைக் கருவிகள் இல்லாத தனித்துவமான ஒலியுடன் மேற்கத்திய மற்றும் நாட்டுப்புறத்தன்மையின் பாதிப்போடு ராக் இசையின் சில தெறிப்புகளையும் கலந்து வடிவமெடுத்ததுதான் அவரது இசை. தீவிரமான மெல்லிசையில் ஆத்மபூர்வமான பாடும்முறையும் இசையமைப்பும் கொண்டியங்கியவர். அவரது இசையில் காதலின் தீவிரமான வெளிப்பாடுகள் இருப்பினும் அது சமூக விழிப்புணர்வை உணர்ச்சிபூர்வமான அடித்தளத்துடன் பிரதிபலித்தது.

இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நடிகர், சூழலியல் போராளி, மனிதாபிமானப் போராளி என்ற மிகவும் அபூர்வமான கலவை கொண்ட ஆளுமைகள் நிறைந்தவராக இருந்தார். அவரது பாடல்கள் மனதிற்கு உவகையளிப்பதாகவும் மிகுந்த நேசத்தோடு நெய்யப்பட்டதாகவும் இருக்கும். பெரும்பாலான பாடல்கள் அவரது இயற்கையின் மீதான காதலையும் இயற்கையோடு இணைந்த தூய்மையான வாழ்வையும் வெளிப்படையாகப் பேசுபவை. இயற்கையின் கொடைச் செல்வங்களையும் அழகுகளையும் புகழ்பவை.

‘நான் மாடுமேய்ப்பவனாகவே இருந்துவிடுகிறேன்’ என்ற பாடலைப் பார்ப்போம். நகரத்திற்குச் சென்றுவிடலாம் என காதலி வற்புறுத்தும்போது நான் எனது மலைக்கிராமத்திலேயே இருந்துவிடுகிறேன் என்று காதலியிடம் விடைபெறும் ஒருவனைப் பற்றிய பாடல் இது.

நான் மாடுமேய்ப்பவனாகவே இருந்துவிடுகிறேன்

மலையின் அடிவாரங்களில் வாழ்ந்துவிடுகிறேன்

கான்க்ரீட்டின், இரும்பின் பள்ளத்தாக்குகளில் தொலைவதை விட

மழையோடும் சூரியனோடும் புன்னகைத்துக் கொள்கிறேன்

எனது சூரிய அஸ்தமனத்தை

விண்மீன் வயல்களோடு புதைத்துக் கொள்கிறேன்...

நெடிதுயர்ந்த மலைப்பாறைகள் (Rocky Mountain Highs), எனது தோள்களில் ஒளிர்விடும் சூரியன் (Sunshine On My Shoulders), நாட்டுப்புறச் சாலைகளே என்னை கூட்டிச்செல்லுங்கள் (Take Me Home Country Roads), நன்றி கடவுளே நான் ஒரு நாட்டுப்புறத்தான் (Thank God I'm a Country Boy), வனங்கள் போன்ற மொண்டானா ஆகாசம் (Wild Montana Skies), வீட்டுக்குத்திரும்புதல் (Back Home Again), இயற்கையன்னையின் மகன் (Mother Nature's Son) போன்ற மிகப்பெரிய வெற்றிப் பாடல்கள் எல்லாம் இயற்கையின்மீதான அவரது அடங்காத காதலையே பாடுகின்றன. ‘ஆனியின் பாடல்’ என்ற மிகவும் பிரபலமான அவரது காதல் பாடலில்கூட...

காட்டினுள் நிரம்பும் இரவைப் போல்

மலைகளின் பரவும் வசந்தத்தைப்போல்

மழைபொழியும் மலைப் பாதையில் நடையைப்போல்

பாலைவனத்தின் புயலைப்போல்

அமைதியில் உறங்கும் நீலக்கடலைப் போல்

எனதுணர்வுகளை நீயே நிறைத்தாய்

வந்தென்னை மீண்டும் நிரப்பு...

ஜான் டச்சென்ட்ராஃப் என்ற அவரது இயற்பெயரின் பொருள் ‘ஓர் ஜெர்மானியக் கிராமம்’ என்பதுதான். அவரது தந்தை ஜெர்மானிய வழித்தோன்றல்களைச் சேர்ந்தவரென்பதால் இப்பெயர் வைக்கப்பட்டது. நியூமெக்சிகோ மாநிலத்தின் ரோஸ்வெல் என்ற நகரத்தில் 1943-ல் பிறந்த ஜான் டென்வரின் தந்தை விமானப்படையில் விமானஓட்டியாக இருந்தார். அடிக்கடியான வேலைமாற்றத்தின் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும், ஜப்பானிலும் கூட சிறிது காலம் அவர் வசிக்க நேர்ந்தார். நிரந்தரமாக ஓரிடத்தில் வாழாததால் தொடர்ந்த நண்பர்கள் யாருமில்லாமல் தனிமையில் வளர்ந்தார் ஜான்.

குழந்தைகளிடம் அன்பு காட்டாத தனது தந்தையோடு அடிக்கடி சண்டை வந்தது. அவரது தாயின் வீட்டிலேயே மிகவும் மகிழ்ச்சியானவராக இருந்தார். நாட்டுப்புற இசையை அங்குதான் கேட்டார். அவரது தாய்வழிப்பாட்டி ஜானின் இசையார்வத்தை ஒழுங்குபடுத்தியதோடு 40 வருட பழமையான தனது கிப்ஸன் கித்தாரை பேரனுக்கு வழங்கினார். அப்போது ஜானுக்கு 11 வயது.  ஜானின் தந்தை இசையை அறவே வெறுத்தார். இசை போன்ற பொழுதுபோக்கில் காலத்தை வீணடிக்காமல் வயலில் வேலைசெய்து சொந்தமாக ஜான் சம்பாதிக்கவேண்டும் என்று வற்புறுத்தினார். வீட்டில் சச்சரவுகள் அதிகமாக தனது பதினாறாவது வயதில் டெக்ஸாஸில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த வீட்டை விட்டு தந்தையின் காரை எடுத்துக் கொண்டு கலிஃபோர்னியாவுக்கு ஓடிப்போனார் ஜான். அங்குள்ள அவரது குடும்ப நண்பர்கள் சிலர் இசையில் வளர உதவுவார்கள் என எண்ணியிருந்தார். அவர் காரில் சென்று சேர்வதற்கு முன்பாகவே விமானம் மூலம் கலிஃபோர்னியாவுக்கு பறந்து சென்ற தந்தை ஜானின் கழுத்தைப் பிடித்து இழுத்துவந்து மீண்டும் பள்ளியில் சேர்த்தார்.

சிலவருடம் கழித்து, 1964-ல் கட்டடக்கலைப் படிப்பைப் பாதியில் விட்டு மீண்டும் கலிஃபோர்னியாவுக்குச் சென்றார். நாட்டுப்புற, ராக் இசைப்போக்குகள் கலிபோர்னியாவில் வேகமாக வளர்ந்து வந்த காலம் அது. உச்சரிப்பதற்கு கடினமாக இருந்த டச்சென்ட்ராஃப் என்ற பெயரை விடுத்து, அவர் விரும்பும் மலைகளின் மாநிலமான கொலராடோவின் தலைநகரான டென்வர் என்பதைத் தன் பெயரில் இணைத்துக் கொண்டார். இப்பெயர் மலைகள் சூழ்ந்த அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளின் மீதான அவரது ஈர்ப்பைக் குறிப்பதாகவும் இருந்தது. இரவு விடுதிகளிலும் சிறிய இசைக்குழுக்களிலும் இணைந்து இசையமைத்துப் பாடினார்.

இரண்டு வருடப் போராட்டங்களுக்குப் பிறகு, வாஷிங்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற மூவர் இசைக்குழு Chad Mitchel Trioவில் பாடுவதற்கான குரல் சோதனைத் தேர்வில் பங்குபெறும் வாய்ப்புக் கிட்டியது. அக்காலத்தில் அந்தக் குழுவினர் கல்லூரி வளாகங்களிலும் இசைநிகழ்ச்சி நடக்கும் உணவகங்களிலும் பிரசித்தி பெற்றவர்களாக இருந்தார்கள். கலந்து கொண்ட 250 போட்டியாளர்களிலிருந்து ஜான் டென்வர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இசைக்குழுவைத் தோற்றுவித்த சாட் மிச்செல் என்பவர் விலகிச் செல்ல டென்வர் பாடகராகவும் கிதார் மற்றும் பாஞ்சோ வாசிப்பவராகவும் அக்குழுவில் இணைந்தார். அவர்களோடு இரண்டு ஆண்டுகள் இணைந்திருந்து தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு மேடைப்பாணிகளையும் கற்றுக்கொண்டார்.

அக்காலகட்டத்தில்தான் ‘ஒரு ஜெட்விமானத்தில் விடைபெறுகிறேன்’ (Leaving on a Jet Plane) என்ற தனது முக்கியமான முதல்பாடலை எழுதி இசையமைத்திருந்தார். குழுப்பாடராகக் கிடைத்த சொற்பப் பணத்தைச் சேர்த்து தனது முதலாவது இசைத்தொகுப்பைப் பதிவு செய்தார். 250 பிரதிகள் எடுத்து தனக்குத் தெரிந்த எல்லா முகவரிகளுக்கும் அஞ்சல் செய்தார். இசை விரும்பிகளாக அவர் அறிந்து வைத்திருந்தவர்களிடம் நேரில் வழங்கினார்.  நியூயார்க்கைச் சேர்ந்த மற்றொரு புகழ்பெற்ற மூவர் நட்டுப்புற இசைக்குழுவான பீட்டர், பால் மற்றும் மேரி அத்தொகுப்பைக் கேட்டு Leaving on a Jet Plane பாடலை வெகுவாக விரும்பினர். அப்பாடலை அவர்கள் பதிவுசெய்து வெளியிட்டபோது அது புகழ்பெற்ற பில்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலாவது இடத்தைப் பெற்றது. வியட்நாம் போர் நடந்துவந்த அக்காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்கள் விடைபெறும் பாடலாக பலர் அதைக் கண்டடைந்தார்கள். ஆனால் ஜான் டென்வருக்கு அப்போதும் வெற்றி ஒரு தொலைதூரக் கனவாகத்தான் இருந்தது.

ஒரு கல்லூரியில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது ஆனி மார்ட்டெல் என்ற அழகான மாணவியைச் சந்தித்து காதல் வயப்பட்டார். அடுத்த ஆண்டில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவரது புகழ்பெற்ற காதற்பாடலான ‘ஆன்னியின் பாடல்’ (Annie's Song) மூலம் தனது காதல் மனைவியை இறவாதவராக நிலைக்கச் செய்தார். Chad Mitchel Trioவிலிருந்து வெளியேறி தனியராக இசைப்பயணத்தைத் தொடங்கினார். பல சிரமங்களுக்குப்பிறகு எல்விஸ் பிரஸ்லியின் பாடல்களை வெளியிட்ட RCA ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து பதிவு ஒப்பந்தம் பெற்றார். Rhymes and Reasons என்ற பெயரில் தனது முதல் தொகுப்பை வெளியிட்டார். அதுவரை அவர் எழுதி இயற்றியிருந்த அனைத்துப் பாடல்களுடன் ‘ஒரு ஜெட்விமானத்தில் விடைபெறுகிறேன்’ பாடலின் அசலான வடிவமும் அடங்கிய தொகுப்பு அது.

புகழடைந்த இசைக்கலைஞர்களின் தொகுப்புகளைப் போல மேடைநிகழ்ச்சிகள் மூலமாகவோ விளம்பரங்கள் வாயிலாகவோ அத்தொகுப்பை அந்த இசை நிறுவனம் கொண்டுசெல்லவில்லை. தனது முதல் தொகுப்பின் வணிகத் தோல்வி அவரது இசைப்பயணத்தைச் சிதறடித்துவிடும் என டென்வர் அறிந்திருந்தார். தனது பாடல்களை கச்சேரிகள் மூலமாக மக்களிடம் பிரபலப்படுத்தும் நோக்கோடு அமெரிக்காவின் மத்தியமேற்குப் பகுதி முழுவதற்கும் தனியாக ஓர் இசைப்பயணத்தை ஆரம்பித்தார். வழியில் சிறிய ஊர்களிலும் நகரங்களிலும் தங்கி அங்குள்ள இசைச் சங்கங்கள் அமைப்புகள் மற்றும் விடுதிகளில் இலவசமாக இசைநிகழ்ச்சி நிகழ்த்துவதாகக் கோரிக்கை வைத்தார். தான் ஒரு முன்னாள் Chad Mitchel Trio குழுப் பாடகர் என்றும் ‘ஒரு ஜெட்விமானத்தில் விடைபெறுகிறேன்’ பாடலை இயற்றி இசையமைத்தவன் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது பலர் அவரை அங்கீகரித்து இசை நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொண்டார்கள். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தனது கித்தாரை இசைத்துப் பாடினார். பகலில் வெளியில் சென்று தனது மாலைநிகழ்ச்சிக்கான அறிவிப்பை சுவர்களில் ஒட்டி வைத்தார். நிகழ்ச்சி இடைவேளையிலும், முடிந்தபின்னரும் தனது இசைத்தொகுப்பை விற்க முயற்சி செய்தார்.

கையில் கித்தாருடன் உள்ளூர் வானொலி நிலையங்களுக்குச் சென்று தன்னை நேர்காணல் செய்து ஒலிபரப்ப வைத்தார். சிலசமயங்களில் ஒன்றிரண்டு பாடல்களை வானொலியில் நேரலையாகப் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. சிலமாதங்களாகத் தொடர்ந்த இவ்வாறான முயற்சிகளினால் போதுமான அளவு தொகுப்பு விற்பனையானது. இதன்மூலம் திருப்தியடைந்த RCA வுடனான தனது ஒப்பந்தத்தை நீடிக்கச் செய்தார். ரசிகர்கள் பெருக ஆரம்பித்தனர். செல்வநிலை மாறியது. பொருளாதார வசதிகள் பெருகியதும் தனது கனவை நனவாக்கும் விதமாக மலைகள் சூழ்ந்த கொலராடோவில் தனது கனவு நகரமான ஆஸ்பெனில் ஒரு வீடுவாங்கிக் குடியேறினார்.

1971ல் ‘நாட்டுப்புறச் சாலைகளே என்னைக் கூட்டிச்செல்லுங்கள்’ என்ற பாடல் எல்லா சாதனைப்பட்டியல்களிலும் முதலிடத்தைப் பிடித்தது. பின்னர், ஒருபோதும் அவர் புகழிலும் செல்வத்திலும் கீழிறங்கிச் செல்லவில்லை. ஒன்றின்பின் ஒன்றாக எல்லாப் பாடல்களும் புகழின் அதியுச்சத்தை அடைந்தது. பலநாடுகளுக்கு இசைப்பயணங்கள், சர்வதேசப் புகழ் என எல்லாம் அவரை பலவருடங்களுக்குப் பின்தொடர்ந்தது. கொலராடோ மாநிலத்தின் ஆஸ்தான இசைக்கவிஞராக அவர் அறிவிக்கப்பட்டார். பாப் மற்றும் நாட்டுப்புற இசைரசிகர்களிடம் சமமாகப் புகழடைந்தார். ஆனால், அவருடைய இசை தூய்மையான நாட்டுப்புறப் பாணியில் அமைந்ததல்ல என நாட்டுப்புற இசை மரபுவாதிகள் குறை கூறினார்கள்.

பாப் இசை விமர்சகர்கள் டென்வரை ஒருபோதும் தங்களின் விருப்பமானவராக ஏற்றுக்கொண்டதில்லை. அவரது பாடல்கள் அதீதமான இனிமையும் அதிகமான உணர்ச்சிவசப்படுதலும் கொண்டிருப்பதாகக் கூறினர். அவர் புகழின் உச்சியில் இருந்தபோது அவருடைய தோற்றமும் மேடையில் தோன்றும் விதமும் கோரைமுடியும் பெரிய பாட்டிகள் போன்ற வட்டவடிவ மூக்குக்கண்ணாடியும் பழைய பாணியாக இருந்தது. அத்தகைய விமர்சனங்களுக்கு அமைதியாகவே அவர் பதிலளித்தார். “என்னுடைய சில பாடல்கள் வாழ்வின் சிறுசிறு விஷயங்களைப் பற்றியதாக இருக்கலாம், ஆனால் அச்சிறு விஷயங்களே எனக்கு முக்கியமானவை. நிச்சயமாக உலகில் உள்ள பலருக்கும் ஏதோ ஒருவகையில் என் பாடல்கள் முக்கியமானதாக இருக்கலாம்” என்றார். அவர் மிக எளிமையான இசையே வழங்கினார் என்று ஏராளமானோர் எழுதினர். ஆனால், அவை நம்பிக்கை ஊட்டும் பாடல்களாக இருந்தன. மின்னிசை சாதனங்கள் இல்லாத இசை ஒலியை முன்னணிக்குக் கொணர்ந்தார். நாட்டுப்புற, பாப் மற்றும் நாடோடி இசைகளை புதிய வழிமுறைகளில் அணுகினார், இணைத்தார். அதுவே அவரை உலகளவில் உச்சத்துக்குக் கொண்டுசென்றது.

தனது சிறந்த பாடல்கள் பலவற்றிற்கும் தூண்டுதலாக இருந்த இயற்கையையும் அதன் வனாந்தரத்தன்மையையும் பாதுகாப்பதற்கான பணிகளைத் தொடங்கினார். இலாப நோக்கற்ற வின்ட்ஸ்டார் அறக்கட்டளை மற்றும் உலக பட்டினி ஒழிப்புத்திட்டத்தை தொடங்கினார். உள்நாட்டு மற்றும் உலகளாவிய பட்டினி ஒழிப்புத்திட்ட ஆணையத்தின் சிறப்பு உறுப்பினராக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரால் நியமிக்கப்பட்டார். நேரடியான அரசியல் கருத்துக்களை தனது பாடல்களில் வெளிப்படுத்தாமல் தவிர்த்து வந்த போதிலும், 1980, 90-களில் அரசியல் விழிப்புணர்வுக்காக தனது ஆற்றல்களை அர்ப்பணித்தார். பசுமைப் பாதுகாப்பு, வனஉயிர்ப் பாதுகாப்பு ஆகியவற்றோடு பட்டினிக்கு எதிரான நடவடிக்கைகளிலும், ஐ.நா.வின் குழந்தைகள் நிதி மற்றும் குழந்தைகள் நலவாழ்வு மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் செயலூக்கமுள்ள பங்களிப்பைத் தந்தார். அணு ஆயுதப் பரவல்களுக்கு எதிரான அமைதி இயக்கங்களை ஆதரித்தார்.

ஜான் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர். குடியரசுக் கட்சியின் ஜனாதிபதிகளான ரிச்சர்ட் நிக்ஸன், ரொனால்ட் ரீகன் இருவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும் இருகட்சிகளின் தலைவர்களுடனும் இணைந்து ஊக்கத்துடன் செயல்பட்டார். 1987-ம் ஆண்டு ரீகனிடமிருந்து World Without Hunger எனும் விருதைப் பெற்றார். தொடர்ந்து 1993-ல் இசை வழியான மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஆல்பர்ட் ஸ்வீட்சர் மியூசிக் விருதைப் பெற்றார் (ஆல்பர்ட் ஸ்வீட்சர் புகழ்பெற்ற மனிதாபிமானியும், செவ்வியல் இசை நெறிகையாளரும் ஆவார்). இவ்விருது செவ்வியல் இசைக்கலைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகும். செவ்வியல் இசை சாராத ஜான் டென்வர் இவ்விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சோவியத் யூனியனில் சுற்றுப்பயணம் செய்த முதல் அமெரிக்கப் பாடகர் இவரே. “நாம் ஆயுதங்களை எதற்காகச் செய்கிறோம்?” என்ற பாடலை இச்சுற்றுப் பயணத்துக்காகவே உருவாக்கினார். செர்னோபில் அணு உலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஒரு இசைநிகழ்ச்சியும் அங்கு நடத்தினார். 1992-ல் கம்யூனிஸ்ட் நாடான சீனாவுக்கும் பயணம் செய்தார்.

அவர் புகழுச்சியில் இருந்தபோது சொந்த வாழ்வு மகிழ்ச்சி குறைவானதாகவே இருந்தது. மருத்துவரீதியாக ஒரு குழந்தையை உருவாக்கவியலாத உடற்கூறுடன் இருந்தார். ஆகவே ஒரு ஆண் குழந்தையை முதலாவதாகவும், ஒரு பெண்குழந்தையை இரண்டாவதாகவும் இருவேறு இனங்களில் இருந்து தத்தெடுத்துக் கொண்டார். குழந்தைகளின் வரவிற்குப் பின் பிரகாசமடைந்த குடும்ப வாழ்வு சீக்கிரமே சிதைவுறத் தொடங்கியது. தொடர்ந்த சுற்றுப்பயணங்களும், சிறுவயதிலிருந்தே தொடர்ந்த தனிமையுணர்வும் அதீதமான மதுப் பழக்கத்திற்கும் போதைப்பழக்கத்திற்கும் பிற பெண்களுடனான பாலியல் சாகசங்களுக்கும் அவரைக் கொண்டு சேர்த்தது.

இசைநிகழ்ச்சிக்கான எல்லாப் பயணங்களிலும் அவருடைய மனைவியும் உடனிருக்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறார். ஆனால் ஆனிக்கு பயணங்கள் என்றாலே வெறுப்பு. வீடே கதியான தனது உலகத்தில் நண்பர்களுடன் விருந்துபசாரமாகக் கழிப்பதைத்தான் அவர் விரும்பினார். இருவருக்குமிடையில் வேற்றுமைகள் மிகுந்து தனித்தனியே வாழத்தொடங்கிய நாட்களில், கொல்லைப்புறத்தில் இருந்த பழமையான சில மரங்களை ஆனி வெட்டிவிட்டதை ஜான் அறிந்தார். மரங்களை நேசிப்பவரான ஜான், அவ்வீட்டைக்கட்டும்போது சிறு கீறல்கூட மரங்களில் படாதவாறு கவனமாக இருந்தவர். ஆனியை அழைத்து ஏன் அப்படிச்செய்தாய்? என்று வினவினார். வீட்டிற்கான சிறந்த மரச்சாமான்கள் செய்ய வேண்டும் என்பதற்காகவும் மேலும் அம்மரங்கள் வீட்டின் பிரமாண்டமான அழகை மறைத்துக்கொண்டிருப்பதாகவும் மிகச்சாதாரணமாகப் பதிலுரைத்தார் ஆனி.

பதிலைக்கேட்டு வெகுண்டெழுந்தார். உடனே வீட்டுக்கு விரைந்து ஆனியிடம் “இதைச்செய்யும் முன் என்னிடமும் கேட்டிருக்க வேண்டும், ஏனெனில் இவ்வீடு என்னுடையதுமாகும்” என்று சொன்னார். ஆனியினது அலட்சிய மனோபாவமும் பதிலும் ஜானை மேலும் கோபமுறச்செய்ய அவளது கழுத்தைப் பிடித்து நெறித்து சிறிது நேரம் உலுக்கி அறையின் மூலையில் தள்ளினார். மின்ரம்பத்தை எடுத்து வெட்டப்பட்ட மரத்திலிருந்து செய்யப்பட்ட அனைத்து உபயோகப் பொருட்களையும் தாறுமாறான துண்டுகளாக அறுத்துப்போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். அந்நிகழ்வைப்பற்றி “நான் அவ்வளவு கொடூரமான வன்முறையைச் செய்யும் வலிமை கொண்டிருந்தேன் என்று அப்போதுதான் உணர்ந்தேன்” என்று பின்னர் எழுதியிருக்கிறார்.

அதீதமான நேர்மையுடன் இருந்தார். மனைவியிடமோ, பத்திரிகைகளிடமோ எதையும் எப்போதும் மறைப்பவராக இருந்ததில்லை. ஒரு ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருமுறை அவரது போதைப்பழக்கத்தைப் பற்றிக் கேட்டபோது அதில் தான் மூழ்கியிருப்பதாகக் கூறினார். தன்னால் ஒரு குழந்தையை உருவாக்கவியலாத மருத்துவ உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். “நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க இயலாதவன் எனச் சொல்கிறபோது எல்லோரும் முதலில் அதிர்ச்சியடைகின்றனர்" என்றார் ஒருமுறை. அவருடைய Take Me Home  என்ற சுயசரிதை நான் வாசித்த மிகநேர்மையான புத்தகங்களில் ஒன்றாகும். தனது தனிமையைப் போக்கவும் அடக்கவியலா காம இச்சையைப் போக்கிக் கொள்ளவும் ரசிகைகள், விலைமாதர் உட்பட பல பெண்களை எவ்வாறெல்லாம் வேட்டையாடினார் என்பதுவரை அதில் விவரித்திருக்கிறார்!

ஆனி மணவிலக்கு கோரினார். மேலும் திருமதி ஜான் டென்வராக வாழ்வைத் தொடர அவர் விரும்பவில்லை. முன்பும் பலமுறை இருவரும் தற்காலிகமாகப் பிரிந்து வாழ்ந்திருக்கின்றனர். அதுபோன்றதொரு பிரிவின் போது எழுதிய ‘ஆனியின் பாடல்’ வரிகளில்.....

உன்னை நேசிக்கிறேன்

உனது சிரிப்பில் மூழ்கிறேன்

உனது கரங்களின் அணைப்பில் மரிக்கிறேன்

உனதருகே அடங்குகிறேன்

உன்னோடு இருக்கிறேன் எப்போதும்

வா வந்தென்னை மீண்டும் நேசிக்கத் தொடங்கு..

என்று எழுதிய ஜான் எல்லா மீறல்களையும் தாண்டி தனது மனைவியை அதிகம் நேசித்தார். ஆகவே முழுதான மணவிலக்குக்கு அவர் சம்மதிக்கவே இல்லை. அந்தப் பிரிவின்போது அவர் உயரமான விடுதியொன்றின் பால்கனியிலிருந்து தனது கித்தாருடன் குதித்துத் தற்கொலை செய்து கொள்ள எண்ணினார், ஆயினும் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு வாழ்வைத்தொடர முடிவு செய்தார்.

பின்னர், இருபது வயதான வளர்ந்து வரும் ஆஸ்திரேலியப் பாடகியும் நடிகையுமான கஸாண்ட்ரா டிலானியை இரண்டாவதாக மணந்தார். ஜெஸ்ஸி பெல் என்ற பெண்குழந்தை பிறந்தது. இருவரும் பழக ஆரம்பிக்கும்போது கஸாண்ட்ரா இன்னொருவருடனும் பழகிக் கொண்டிருந்தார். அவளை சட்டப்படி திருமணம் செய்துகொள்ள டென்வர் விரும்பவில்லை. ஆனால் கஸாண்ட்ரா வற்புறுத்தினார். அவருடைய இசை, நடிப்புத் தொழிலை டென்வர் மூலமாக நிறைவேற்றிக்கொள்ள நினைத்தார். டென்வருடைய சுயசரிதையில் “என்னை எல்லா வழிகளிலும் கஸாண்ட்ரா முட்டாளாக்கினாள்” என்று எழுதியிருக்கிறார். ஆயினும், ஆச்சரியமான வகையில் அக்குழந்தை தன்னுயிரிலிருந்தே பூத்தது என்று நம்பினார். மருத்துவ, விஞ்ஞானச் சாத்தியங்கள் கைவிட்டிருந்த போதும், இருவரும் செய்து கொண்ட ரெய்கி சிகிச்சை ஆச்சரியமாக தன்னைக் குணப்படுத்திவிட்டதாக அவர் நம்பினார்!

இம்முறை இரண்டு ஆண்டுகளிலேயே மணவிலக்கில் முடிந்தது அவரது திருமணம். தோல்வியில் முடிந்துபோன வழக்கில் நான்கு மில்லியன் டாலர் வரை செலவழித்து குழந்தைகளைத் தன்னோடு வைத்துக்கொள்ள சட்டப்பூர்வமாகப் போராடினார். குழந்தைகள் தாயுடன் இருக்கவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூன்று குழந்தைகளையும் ஜான் மிகவும் நேசித்தார். அவரால் முடிந்த எல்லாவற்றையும் அவர்களுக்காக வழங்கினார். வாய்க்கும் போதெல்லாம் அவர்களோடு நேரத்தைச் செலவிட்டார்.

ஜான் டென்வர் உணர்வு பூர்வமானவராகவும் அக்கறையுள்ளவராகவும் கழிவிரக்கம் கொண்டவராகவும் இருந்தார். அவரடைந்த அனைத்து வெற்றிக் களிப்புகளுக்கு மத்தியிலும் தன்னளவில் மிகவும் தனியராகவே உணர்ந்தார். அவரது உள்ளிருந்த மனிதரின் இயல்பான சுயத்தை யாருமே புரிந்துகொள்ளவில்லை. கட்டுக்கடங்காத உணர்ச்சிகள் சுழன்றடிக்கும் தீவிரமான மனிதராக இருந்தார். தனது வாழ்வில் மலையளவு உயரத்தையும் சமுத்திர ஆழத்தின் தாழ்வையும் தான் பெற்றிருந்ததாக பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “எனக்கு மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம், எனது வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்ற எண்ணம் எனக்குள் எழுந்துகொண்டேயிருக்கும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜான் எப்போதுமே பறந்து செல்வதை விரும்பியவர். உள்மனதில் அவரின் தந்தையைப்போலவே விமானியாக வரவேண்டும் என்று விரும்பினார். பரந்துவிரிந்த பசும்பரப்பின் மேலாக எல்லைகளற்ற வானவெளியில் பறந்து செல்வது மனதை சாந்தப்படுத்துவதாக இருக்கிறது எனக் கருதினார். ஆகவேதான் ‘பறந்து செல்’ என்ற பாடலில் இப்படி எழுதினார்...

எனது நாட்கள் மேகமூட்டமாக நகர்ந்துவிட்டன

எனது கனவுகள் வறண்டு போய்விட்டன

எனது இரவுகள் நிழல்போல் மறைந்துவிட்டன

எனவே நான் பறந்து செல்ல ஆயத்தமாகிறேன்

பறந்து செல், பறந்து செல், பறந்து செல்....

அவரது முக்கிய பொழுதுபோக்காக பறந்து செல்லுதல் ஆனபோது ஆறுதலடைந்ததாக உணர்ந்தார். அவருடைய தந்தை வந்து விமானத்தை இயக்கவும் ஓட்டவும் ஜானுக்குப் பயிற்சியளித்தார். பல வருடங்களுக்குப் பிறகு தந்தையோடு இணைந்திருந்த அனுபவம் இருவரின் தொலைந்து போயிருந்த உறவையும் மீட்டுத்தருவதாக அமைந்தது. விரைவில் மிகுந்த பயிற்சி பெற்ற விமானியாக மாறினார். தொலைதூரப் பயணங்களுக்கும் தனியாக விமானம் ஓட்டிச் சென்றார். இரண்டிருக்கைகள் கொண்ட விமானம் ஒன்றை சொந்தமாக வாங்கினார்.

1997 அக்டோபர் 12 ஆம் தேதி தனது நண்பர்களுடன் கோல்ஃப் விளையாடிவிட்டு, கலிஃபோர்னியாவின் மொண்டோரே பே (Monterey Bay) எனும் இடத்தில் சமுத்திரத்தின் மேலாக ஒரு மணிநேரப் பயணத்திற்குப் பறந்து சென்றார். அன்றைய பிற்பகல் நேரத்தில் அந்த சிறுவிமானம் சமுத்திரத்தினுள் சீறிப் பாய்வதைப் பார்த்ததாக சிலர் சொன்னார்கள். தூங்கும் நீலக்கடலின் ஆழத்தினுள் கணநேரத்தில் மூழ்கிப்போனார், வானுயர்ந்த மலைகளின் அன்புப் பாடகன். விமானத்தில் என்றைக்குமாக விடை பெற்றுச்சென்று தனது பாடலாகவே மாறினார் ஜான் டென்வர்.

எனது பயணப்பொதிகள் கட்டி வைத்து

நான் புறப்பட ஆயத்தமாயிருக்கிறேன்

விடை சொல்வதற்காக

தூக்கத்திலிருந்து உன்னை விழித்தெழச்செய்வதை தவிர்க்கிறேன்

விடியல் அதிகாலையைக் கிழித்து வெளியேறுகிறது

எப்போதும் போலவே கொடுந்தனியனாக உணர்கிறேன்

முத்தமிட்டு எனக்காகப் புன்னகை செய்

எனக்காகக் காத்திருப்பேன் எனச்சொல்

எப்போதும் விட்டு விடாதபடி என்னைப் பிடித்துக் கொள்

ஏனெனில் நான் ஒரு ஜெட் விமானத்தில் புறப்படுகிறேன்

எப்போது திரும்புவேன் என்று எனக்குத் தெரியாது.....

2010