முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போனி எம் எனும் நிழற் பாட்டுக் குழு

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் என் மனைவி என்னிடம் ஒரு விளம்பர இசைத்துணுக்கு பற்றிச் சொன்னாள். ஹிந்தி சினிமாவின் பழைய கனவுக்கன்னி ஹேமமாலினி நடித்த அந்த நகைக்கடை விளம்பரத்தைத் தொலைக்காட்சியில் கேட்கும் போதெல்லாம் அப்போது இரண்டுவயது தாண்டாத எங்களது மகள் கீதி சலிலா தன் சின்னஞ்சிறு கைகளை விரித்துத் தலையை ஆட்டி மகிழ்ச்சியால் எம்பிக்குதிப்பாளாம்! அவளுக்கு அந்த இசைமீது அப்படி ஒரு மோகம்! நான் அந்த இசைத்துணுக்கு எது என்று பார்த்தேன். 1977ல் வந்த போனி எம்மின் பிரபலமான பாடல் ‘இன்னும் சோகமாகவே இருக்கிறேன்’ (Still I am sad) அப்படியே தூக்கி வைத்திருந்தார்கள்!

‘ரா ரா ரஸ்புடின்’, ‘ரிவர்ஸ் ஆஃப் பாபிலோன்’, ‘ஒன் வே டிக்கெட்’, ‘டாடி கூல்’, ‘சன்னி சன்னி’, ‘மா பேகர்’, பெல்ஃபாஸ்ட், ‘பஹாமா மாமா’ போன்றவை நாமனைவரும் கேட்டிருக்கக்கூடிய போனி எம் பாடல்கள். எழுபதுகளில் டிஸ்கோ அலையில் அவை இந்தியாவெங்கும் பெரும் போதையாக இருந்தன. இன்றும் அவை பலரால் ஏக்கத்துடன் நினைவுகூரப்படுகின்றன. ஒலிநாடாக்கருவி வந்த புதிதில், வளைகுடாவாசிகள் மண்டிய கேரளத்தில் பல வீடுகளில் ஒரு ஒலிநாடாக்கருவி இருக்கும் என்பதையும் அதனருகே இருக்கும் ஒலிநாடாக்களில் ஒரு போனி எம் ஆவது இருக்கும் என்பதையும் நினைவுகூர்கிறேன். ‘இங்கிலீஷ் மியூசிக்’ என்று சொல்லி டோனி எம் பாடல்களைப் பெருமையாக உரக்க ஒலிக்கவிடுவார்கள். அவற்றிலுள்ள பாடல்வரிகளோ அவற்றின் இசையின் சிறப்போ அவர்களுக்கு தெரியாதென்றாலும் முனகச்செய்யும் எளிமையான மெட்டுகளும் திடமான டிரம் தாளமும், இன்னிசை மிக்க ஒத்திசைவும் அனைத்துக்கும் மேலாக அன்று இந்தியப் பாடல்களில் எதிர்பார்க்க முடியாத மிகச்சிறந்த இருவழி ஒலி (Stereophonic) ஒலிப்பதிவுக்காகவும் அவர்களைக் கவர்ந்தன.

கோபி என்ற ஆளை நினைவிருக்கிறது. சிவப்பு நிறமான தனது பெரிய ஒலிநாடாக்கருவியை நாலுபேர் கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் எடுத்துப் போவார். அங்கே தன் ‘டெக்’கை மீண்டும் மீண்டும் இயக்கித் தன்னிடம் உள்ள போனி எம் பாடல்களைப் போட்டுக் காட்டுவார். அவரைப் பொறுத்தவரை போனி எம் என்பது ‘ஒரு வகையான இசை!’, “போனி எம் இருக்கு, டிஸ்கோவும் இருக்கு, எது வேணும்?” என்றுதான் கேட்பார். அவர் போகும் சில இடங்களில் ‘டெக்’கைப் பின் தொடர்ந்து நானும் செல்வேன். போனி எம் பாடல்கள் எனக்கு மிகக் கவர்ச்சியாக இருந்தன. அவற்றை மீண்டும் மீண்டும் போடச் சொல்லிக் கேட்பேன். சீக்கிரத்திலேயே கோபி என்னை, அவர் அண்ணா ‘கெல்ஃப்’ நாட்டில் இருந்து கொண்டுவந்த விலைமதிப்பில்லா ‘டெக்’கையும் ஒலிநாடாக்களையும் தொட்டுப் பார்க்கவோ கொடுக்கவோ செய்யாத, தீங்கற்ற இசை ரசிகன் என்று நம்பிக்கொண்டார்.

ஒருமுறை என் மாமாவின் திருமணத்தின்போது கோபி என்னிடம், தொடக்கூடாது, அவர் திரும்பி வரும்வரை கைநீட்டுபவர்களிடமிருந்து பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும் போன்ற சில நிபந்தனைகளை விதித்து, பெற்ற பிள்ளையை விட்டுச்செல்வதுபோல ‘டெக்கை’ ஒப்படைத்துவிட்டு கல்யாண வீடுகளில் எங்கள் பக்கம் தவிர்க்க முடியாத மதுவிருந்துக்குச் சென்றார். கருவி தொடர்ந்து போனி எம் பாடல்களைக் கொட்டிக் கொண்டே இருந்தது. பெயின்டர் மேன், நோ வுமன் நோ கிரை, பிரவுன் கேர்ல் இன் த ரிங், ஹூரே ஹூரே… போட்ஸ் ஆன் த ரிவர், எல் லூடே, மலைக்கா, பிளான்டேஷன் பாய் போன்ற பாடல்கள் எனக்களித்த பரவசத்தைச் சொற்களால் விவரிப்பது கடினம். ஒலிப் பெட்டியை நெருங்கி அமர்ந்து பாட்டுகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

நாடாவின் ஒரு பக்கம் பாடி முடிந்தது. எனக்கிருந்த ஆர்வத்தில் கோபி திரும்பி வரும்வரை காத்திருக்க மனமில்லை. நானே மெல்ல அதைத் திருப்பிப் போட்டுப் பார்த்தேன். வெற்றிகரமாகப் போட்டுவிட்டேன்! தொழில்நுட்ப நிபுணனின் பெருமிதத்துடன் ‘மேரிஸ் பாய் சைல்ட், ஃபெலிசிடேட், ரிபன்ஸ் ஆஃப் ப்ளூ, ஃபீவர், டேக் த ஹீட் ஆஃப் மீ, லவ் ஃபார் சேல், ஓஷன்ஸ் ஆஃப் ஃபாண்டஸி’ என மதிமயங்கிக் கேட்டுக்கொண்டிருக்கும்போது கோபி போதையுடன் திரும்பிவந்தார். பார்த்ததுமே நான் நாடாவைத் திருப்பிப் போட்டதைத் தெரிந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த என்னுடைய குரூரமான ஒரு மாமாவிடம் போய்க் கோபத்துடன் புகார் கொடுத்தார். மாமா கத்த ஆரம்பித்தார். மூன்று வேளை சோற்றுக்கு வக்கில்லாத ஒருவன் எப்படி அந்த விலை மதிப்புமிக்க பொருளைத் தொடலாம்? ஏதாவது ஒன்று ஆகியிருந்தால் யார் பணம் கொடுப்பார்கள்? கோபத்தில் கொதித்த மாமா மருமகனை இம்மாதிரி அதிகப்பிரசங்கித்தனங்களில் இருந்து மீட்டு நல்வழிப்படுத்த, வழக்கமான முறையைக் கையாண்டார். என்னை அந்தக் கல்யாணப்பந்தலில் என் அம்மா உட்பட அத்தனைபேர் முன்னாலும் போட்டு அடித்துத்துவைத்தார். இன்னும் அந்த மனக்காயங்கள் மிஞ்சியுள்ளன. ஆனால் இசையும் ஒலிக்கருவிகளும் உருவாக்கிய ‘கற்பனைப் பெருங்கடலை’ (ஓஷன்ஸ் ஆஃப் ஃபாண்டஸி) விட்டு நான் இன்னும் வெளிவரவில்லை!

போனி எம் மீது முதிரா வயதில் ஏற்பட்ட மோகத்தில் இருந்து நான் வெளியே வர நீண்டநாள் ஆகியது. மேலும் மேலும் தரமான மேலையிசைக்கு நான் பழக்கப்பபோது அவர்களின் மைய மெட்டுகள் குறைவான படைப்பூக்கம் கொண்டவை என்றும், பெருவாரியான மக்கள் ரசிக்கும்படி அமைய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே கொண்டவை என்றும் புரிந்து கொண்டேன். சில சமயம் அவை தட்டையான கிறிஸ்தவ கூட்டுக் குரல் பக்திப் பாடல்களைப் போல உள்ளன. சிலசமயம் அவை மழலையர் பள்ளிப் பாடல்களைப் போல! சொல்லப்போனால் அவர்களது ‘பிரவுன் கேர்ல் இன் த ரிங்’ ஒரு ஜமைக்க மழைலயர் பாடலேதான். ஆனால் கவர்ந்திழுக்கும் பின்னணி இசைச் சேர்ப்பு, ஒலிப்பதிவு நுட்பங்கள் போன்றவை போனி எம் பாடல்களை முற்றிலும் மனதை விட்டு நீங்காதவையாக ஆக்குகின்றன.

போனி எம்மின் வாத்திய இசை மற்றும் தயாரிப்புத் தொழில் நுட்பங்கள் அந்தக் காலகட்டத்தில் பிரமிக்க வைத்தவை. பெரும்பாலான பாடல்கள் திடமான டிரம் ஒலியாலும் இறுக்கமான அடிநாதத்தாலும் (Base patterns) தாளப் படுத்தப்பட்டவை. அது பாடல்களுக்கு மிக நவீனமான ஒரு ஒலிநேர்த்தியை வழங்கியது. முதன்மைப் பாடகி லிஸ் மிச்செல் (Liz Mitchell)லின் மத்திய ஸ்தாயி கொண்ட குரல் அந்தத் தாளத்துடன் இணைந்து நம்மை ஆட்கொள்கிறது. பாடல் முழுக்க நுண்மையான வயலின் குழு இசையொழுக்கு ஊடுருவிய போனி எம் பாடல்களை நாம் விரும்பும் இன்னிசைத் தன்மைகொண்டவையாக ஆக்குகின்றன. அக்காலத்திற்கு மிகப் புதுமையாக இருந்த மின்னணு ஒலிகளும் மின்னிசைக் கருவிகளின் இசைத் தீற்றல்களும் ஒத்திசைந்து வருகின்றன. பின்னணிக் குரல்கள் சரியாக இணைந்து கொள்கின்றன. கணீரென்ற அடித்தளக் கித்தாரின் (Base guitar) ஒலி திடமாகக் கேட்டாலும் ஓங்கி ஒலிப்பதில்லை. டிரம் வாசிப்பில் உள்ள துல்லியமானது பிற்காலத்தில் மின்னிசை டிரம்களால் அமைக்கப்பட்ட  ஓசைக்கு நிகராக உள்ளது. இவற்றின் ஒட்டுமொத்த விளைவாக உருவாகும் பின்னணி இசையமைப்பின் துல்லியமும் மிகச்சிறந்த ஒலிப்பதிவின் தெளிவும் ஆழமும் போனி எம் இசைக்கு ஒரு கனவுத்தன்மையை அளித்தது.

மிகப் புகழ்பெற்ற சர்வதேச டிஸ்கோ இசைக்குழுவாகிய போனி எம், டிஸ்கோ கலாச்சாரத்தின் ஒலியையும் மோஸ்தரையும் உலகமெங்கும் கொண்டு சென்றது. எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் ஒலிப்பதிவிலும் இசை கேட்டும் முறையிலும் நிகழ்ந்த மின்னணுப்புரட்சி டிஸ்கோ இசையை ஒரு சர்வதேசப் பித்தாக மாறுவதற்கு முக்கியமான காரணமாகும். பழைய இசைத் தட்டுகள் இல்லாமலாகி அதிநவீன ஒலிநாடாக் கருவிகளும் இருவழிஒலி (Stereophonic) முறையும் வந்து. இசை நாடாக்கள் மலிவான விலையில் கிடைக்கத் தொடங்கியபோது இசை கேட்பது புதிய ஒரு தளத்தையடைந்தது. அந்த அலையை போனி எம் பயன்படுத்திக் கொண்டது.

போனி எம் 20 கோடி அதிகாரப்பூர்வ இசைத்தட்டுகளை விற்றிருக்கிறார்கள். எப்படியும் 40 கோடித் திருட்டு இசைநாடாக்கள் விற்றிருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. அதுவும் மின்னணு யுகத்தின் விளைவே. எழுபதுகளில் இந்தியாவில் புழங்கிய போனி எம் இசைத்தொகைகளில் பெரும்பாலானவை திருட்டுப் பிரதிகள்தான்! ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, அரேபியா கண்டங்களில் ஒரேசமயம் புகழ்பெற்ற சர்வதேச இசைக்குழுவும் போனி எம்தான். இந்தியா, பாகிஸ்தான், ஈரான் ஏன் சோவியத் ரஷ்யாவிலும்கூட அவர்கள் பிரபலமாக இருந்தார்கள். இந்தியாவில் அதிகமாக அறியப்படும் மேலை இசைக் குழு போனி எம் ஆகவே இருந்தது! வியட்நாமிலும் அவர்கள்தான் மிகஅதிகமாக விற்கப்பட்ட ஆங்கில இசைக்குழு!

இசை விமரிசகர்கள் ஒருபோதும் போனி எம்மைப் பொருட்படுத்தியதில்லை என்பது உண்மை என்றாலும் மிக எதிர்மறையாக எவரும் ஏதும் சொன்னதுமில்லை. ஆனால் இந்தியாவில் பின்னர் போனி எம்மைதக் திட்டும் ஒரு போலி வழக்கம் உருவானது. உதாரணமாக ‘நான் டிஸ்கோ இசையை வெறுக்கின்றேன். போனி எம்மின் ‘ரிவர்ஸ் ஆஃப் பாபிலோன்’ போன்ற பாடல்களை என்னால் கேட்கவே முடியவில்லை’ என்று ஹிந்தியின் புது இசையமைப்பாளர்களில் ஒருவரான பிரீதம் சொல்லிருக்கிறார். ஆனால் அவரேதான் 1984ல் போனி எம் வெளியிட்ட ‘10000 ஒளிவருடங்கள்’ (10000 Light Years) என்ற தொகுப்பில் உள்ள ‘சம்வேர் இன் த வேர்ல்ட்’ என்ற பாடலை அப்படியே ஹிந்திப் படமான அன்கஹீ (2006)யின் தலைப்பு இசையாகப் பயன்படுத்தியவர்!

இவ்வாறு போனி எம் பாடல்கள் நம் திரையிசையில் தொடர்ந்து நகலெடுக்கப் பட்டுள்ளன. காரணம் எழுபது எண்பதுகளில் நம் திரையிசையையும் திரை நடனத்தையும் டிஸ்கோ நிரப்பியிருந்தது. இந்தியில் ரிஷி கபூர், மிதுன் சக்ரவரத்தி முதல் கோவிந்தா வரையும் தமிழில் கமலஹாசன் முதல் ஆனந்தபாபு வரையும் டிஸ்கோ பாடி ஆடுபவர்களாகத் திரையில் தோன்றினர். லக்ஷ்மிகாந்த் பியாரேலால் 1981ல் நஸீப் படத்தில் அமைத்த ‘ஸிந்தகீ இம்திஹான் லேத்தீ ஹெ’ என்ற பாடல் Still I am Sad தான். ‘பிரவுன் கேர்ல் இன் த ரிங்’ பாடல் ‘தேரே நாம் கி ஹம் திவானே’ என்ற வடிவில் அவர்களால் ‘ஜுதாய்’ என்ற படத்தில் பிரதி செய்யப்பட்டது. போனி எம் அவர்களுடைய ‘ஓஷன்ஸ் ஆஃப் ஃபாண்டஸி’ (1979) தொகுப்பில் சேர்த்திருந்த ‘பஹாமா மாமா’ என்ற பாடல் இந்திய திரையிசையின் நகல் சக்ரவர்த்தியான அனு மல்லிக்கினால் ‘ஜவானி திவானி’ என்ற பாடலாக ஆக்கப்பட்டு சமத்கார் படத்தில் பயன்படுத்தப்பட்டது. 

நதீம் ஷ்ராவன் தாமினி படத்துக்காக போனி எம்மின் ‘மலாய்க்கா’ பாடலை ‘கவாஹ் ஹே’ என்ற பாடலாக மாற்றினார்கள். அதற்கு முன்னரே பப்பி லாஹிரி அதே பாடலை ரூனா லைலா பாடி 1983ல் வந்த தனிப்பாடல் தொகையான ‘சூப்பரூனா’வில் ‘புகாரோ’ என்ற பாடலாக மாற்றியிருந்தார். போனி எம்மின் ‘ஒன் வே டிக்கெட்’ அவரால் ‘ஹரி ஓம் ஹரி’ என்ற பாடலாக பியாரா துஷ்மன் படத்தில் சேர்க்கப்பட்டது. தமிழில் நமக்கு நன்றாக அறிமுகமாகியுள்ள இளையராஜாவின் ‘டார்லிங்! டார்லிங்!’ (படம்: பிரியா) தொடக்கமெட்டு போனி எம்மின் ‘சன்னி சன்னி’ பாடலின் நேர் பிரதிதான். போனி எம்மின் ‘கலிம்பா த லூனா’ போன்ற பாடல்களில் பின்னணி இசையை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மெட்டுகளில் பலமுறைக் கேட்டிருக்கிறேன்!

1976ல், மூன்று உயரமான, கவர்ச்சியான கறுப்பினப் பெண்களும் விசித்திரமான தோற்றம்கொண்ட ஒல்லியான ஒரு கறுப்பு இளைஞனும் அகலமான கால்கள் கொண்ட சாட்டின் கால்சட்டைகளும் ஆர்ப்பாட்டமான நிறம் கொண்ட மேல் சட்டைகளும் கனமாக மின்னும் ஒப்பனையும் காட்டுத்தனமான தலையலங்காரமும் கொண்டு, விசித்திரமான நடன அசைவுகள் மூலம் உலகின் கவனத்தைக் கவர்ந்தனர். அந்த கருப்பனின் தலைமுடிதான் மிக விசித்திரமானது. மேல்நாட்டில் அவர்கள் தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்தார்கள். இங்கே தொலைக்காட்சி பரவாத காரணத்தால் சுவரொட்டிகள், இசை நாடாக்களின் அட்டைப்படங்கள் மூலம் மக்களிடைய அறிமுகமானார்கள். அந்தக் கருப்பன் அழுத்தமான குரல் கொண்டவன். அப்பெண்களும் சிறந்த பாடகிகள். முதல் பாடகி காமக் கவர்ச்சிகொண்ட, ரகசியம்போல ஒலிக்கும் குரல் கொண்டவள். அவர்களின் பாடல்கள் புகழ்பெறும்தோறும் அவர்கள் உலகம் முழுக்கப் பயணம் செய்து மாபெரும் அரங்குகளில் நடனமாடிப் பாடினர். தொலைக்காட்சிகளில் அவை ஒளிபரப்பாயின. பல லட்சம் மக்களைக் கவர்ந்தன. பெரும்பாலானவர்களின் நினைவில் இன்றும் அவர்களின் அந்தத் தோற்றம் நிலைத்து நிற்கின்றது!

உலகமெங்கும் வெற்றி கிடைத்தாலும் அமெரிக்காவில் அவர்களின் புகழ் பரவவில்லை. நம்மில் பலர் போனி எம் என்பது அமெரிக்க கருப்பர்களின் குழு என்று எண்ணியிருந்தோம். ஆனால் அவர்களுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பேயில்லை! ‘ரிவர்ஸ் ஆஃப் பாபிலோன்’ ஒரு முறை அமெரிக்க விற்பனைப் பட்டியலில் அறுபதில் முப்பதாவது இடத்தைப் பெற்றது. அதன் பின் அங்கு அவர்கள் அப்படியே மறக்கப்பட்டுப் போனார்கள். ஆனால் ஐரோப்பாச் சந்தையில் 1978ல் மட்டும் கோடிக்கணக்கான பிரதிகள் விற்றுச் சாதனை படைத்தனர். ‘பிரவுன் கேர்ல் இன் த ரிங்’, ‘ரிவர்ஸ் ஆஃப் பாபிலோன்’ போன்ற பாடல்கள் தொடர்ந்து நாற்பது வாரம் பிரிட்டனில் முதலிடத்திலேயே இருந்தன. பிரிட்டனில் மிக அதிகமாக விற்ற ஒற்றைப்பாடல் இசைத்தட்டுகளில் அவை இரண்டாமிடம் பெறுகின்றன. நெதர்லாண்ட்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் அவை தொடர்ந்து முதலிடத்திலேயே இருந்தன.

ஃப்ராங்க் ஃபாரியன் (Frank Farian) ஒரு நடுத்தர வெற்றியடைந்த ஜெர்மனிய இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர். கனத்த ஆழக் குரல் கொண்டவர். இசையுலகுக்கு வருவதற்கு முன் சமையல்காரராக இருந்தார்! அவரால் தன்னுடைய கனத்த ஆண்குரலிலும் இனிமையாகக் கிரீச்சிடும் பெண் பொய்க்குரலிலும் மாறி மாறி இணைப்பாடல்களைப் பாட முடியும்! 1974ல் ஜெர்மனியில் ஓஃபன்பாக் நகரில் இருந்து ‘பேபி டூ யு வான்னா பம்ப்?’ (‘Baby Do You Wanna Bump’) என்ற தனிப்பாடலை அவர் வெளியிட்டார். அதிலுள்ள எல்லாக் குரல்களும் அவருடையதே, மூன்று வெவ்வேறு பெண்குரல்கள் உள்பட! அந்தப் பாடல் போனி எம் என்ற குழுவின் பேரில் வெளியிடப்பட்டது. போனி எனும் பெயரை அவர் ஆஸ்திரேலிய துப்பறியும் தொலைக்காட்சித் தொடர் ஒன்றிலிருந்து எடுத்துக் கொண்டார். அதில் துப்பறிபவரின் பெயர் ‘போனி மாரோனி.’

டிஸ்கோ இசை, நடனத்துக்கான வேகமான தாளம், ராப் இசை ஆகியவற்றின் கலவையான அப்பாடல் உடனடியாக ஜெர்மனியில் வெற்றி பெற்று டிஸ்கோ அரங்குகளில் பரவலாக ஒலிக்க ஆரம்பித்தது. இக்காலகட்டம் தொலைக்காட்சி முக்கியமான கேளிக்கை ஊடகமாகப் புகழ்பெறத் தொடங்கியிருந்த காலமாகும். தொலைக்காட்சி நிறுவனங்கள் போனி எம்மின் நேரடி நிகழ்ச்சியை விரும்பின. பாடகர்கள் பாடி, ஆடுவது அக்காலகட்டத்தில் மக்களாலும் பெரிதும் விரும்பப்பட்டது.

ஆனால் ஃப்ராங்க் ஃபாரியன் மேடைக்குச் செல்வதை விரும்பவில்லை. முதல் காரணம் அவர் மேடைக்கூச்சம் கொண்ட ஒருவர். மேலும் அவர் கறுப்பின இசையை உருவாக்க விரும்பின ஒரு வெள்ளையர்! அத்துடன் அப்போது அவருக்கு சொந்தமாக இசைக்குழுவும் இல்லை. ஆகவே அவர் ஒரு கலைத்தரகரிடம் மூன்று கறுப்பினப் பெண்களையும், ஒரு கறுப்பின இளைஞனையும் கண்டுபிடிக்கும்படிச் சொன்னார். இவ்வாறாக போனி எம் குழு பிறந்தது. மேய்ஸி விலியம்ஸ் (Maizie Williams) ஷைலா போனிக் (Shaila Bonnick) நதாலி (Nathalie) மற்றும் மைக் (Mike) ஆகியோர் அதில் பங்குபெற்றனர். இந்த ‘போலிக்குழு’ மேடையிலும் தொலைக்காட்சிகளிலும் ஏற்கனவே ஃப்ராங்க் ஃபாரியன் பாடிப் பதிவு செய்திருந்த பாடல்களுக்கு வாயசைத்துப்பாடி ஆடியது. பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் இவர்களே உண்மையான இசைக்குழுவாகத் தோன்றினர்!

போனி எம் குழு உடனடியாக ஜெர்மனியில் பிரபலமடைந்தது. தொழில் வளர்ந்தபோது மேலும் கவர்ச்சியான ‘பாடகர்’கள் தேவைப்பட்டார்கள். ஆகவே மார்ஸியா பாரெட் (Marcia Barrett) போபி ஃபாரெல் (Bobby Farrell) ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பழைய ‘பாடகர்’களில் மேய்ஸி வில்லியம்ஸ் மட்டுமே எஞ்சினார். கிளோடியா பாரி (Claudia Barry) என்ற புகழ்பெற்ற தனிக் குரல்ப் பாடகி பிற்பாடு சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் ஃப்ராங்க் ஃபாரியனின் ‘பெண்’ குரலுக்கு வாயசைக்க மறுத்து வெளியேறிவிட்டார். முக்கியமான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு இருநாட்களுக்கு முன்னர் இது நடந்தது. ஆகவே அவசர அவசரமாகத்தேடி லிஸ் மிச்சல் என்ற பாடகியைக் கண்டடைந்தனர். ஃப்ராங்க் ஃபாரியன் ஒரு இரண்டு நாள் ஒப்பேற்றலுக்காகத்தான் அவளைச் சேர்த்துக் கொண்டார் என்றாலும் உண்மையிலே சிறப்பாகப் பாடி போனி எம் குழுவில் ‘சொந்தமாகப் பாடிய’ ஒரே பாடகியாக அவர் நீடித்தார்!

ஃபாராங்க் ஃபாரியன் தேர்ந்தெடுத்த அனைவருமே ஜமைக்காவில் இருந்து ஜெர்மனி, ஹாலந்து நாடுகளுக்கு குடியேறிய கறுப்பினத்தவர்கள். அவ்வப்போது சில்லறை கூட்டுக்குரல் பாடல்களைப் பாடியும் ஆடியும் வாழ்ந்து வந்தவர்கள். போபி ஃபாரெல், மேய்ஸி விலியம்ஸ் இருவரும் பாடகர்களே அல்ல. ஆனால் ஃப்ராங்க் ஃபாரியனின் கனத்த ஆண்மையான குரலுக்கு வாயசைத்ததன் மூலம் போபி ஃபாரல், போனி எம் குழுவின் முக்கியமான காமக்கவர்ச்சியாகவும் ஆண்மையின் அடையாளமாகவும் ஆனார்! ஃப்ராங்க் ஃபாரியன் அவரை போனி எம்மில் இணைந்த ஒரு நடன இசைத் தொகுப்பாளர் (DJ) என்று அறிமுகம் செய்தார். ஆனால் உண்மையில் அவர் ஓனி எம்மில் ‘பாட’ வருவதற்கு முன்னால் சுத்தப்படுத்தும் பையனாகவும் ஆண் விபச்சாரியாகவும் (‘gay for pay’) இருந்தார் என்பதைச் பின்னர் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் அவரே சொன்னார்!

2003ல் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ஃப்ராங்க் ஃபாரியன் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டார். போபி அவரது விசித்திரமான தோற்றம் மற்றும் புதுமையான நடன முறை ஆகியவற்றுக்காகவே தெரிவுசெய்யப்பட்டதாக் குறிப்பிட்டார். மேய்ஸி விலியம்ஸ் பாடிப் பிழைக்க முடியாத ஒரு நடனப்பெண். மேடையில் பாடகியாக ‘நடித்து’ நடனமிட்டார். மார்சியா பேரெட் ஒரு நடுத்தரப் பாடகி. போனி எம்மின் பல பாடல்களுக்குக் கூட்டுக்குரலில் சேர்ந்து பாடியிருக்கிறார். பின்னர் அவர் சற்று தேர்ச்சி பெற்று ‘பெல் ஃபாஸ்ட்’ போன்ற பாடல்களின் மையக்குரலாகவும் ஒலித்தார்.

1976ல் ஃப்ராங்க் ஃபாரியன் முதல் போனி எம் இசைத் தொகையை ‘டேக் த ஹீட் ஆஃப் மீ’ என்ற தலைப்பில் தானும் லிஸ் மிச்செலும் சேர்ந்து பெரும்பாலான பாடல்களைப் பாடிப் பதிவு செய்தார். பிற குரல்கள் வேறு சிறந்த தொழில்முறைப் பாடகர்களால் பதிவு செய்யப்பட்டன. அதில் ‘கிலா ஆண்ட் எரப்ஷன்’ (‘Gilla and Eruption’) என்ற ஜெர்மானிய இருநபர் இசைக்குழுவும் அடக்கம். இரண்டாவது இசைத் தொகை ‘டாடி கூல்’ ஆரம்பத்தில் வெற்றிப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும் பின்னர் ஜெர்மனியில் ஒவ்வொரு டிஸ்கோ அரங்கிலும் ஒலிக்கும் ஒன்றாக ஆயிற்று.

இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பா நாடுகளிலும் வெளியான உடன் ‘டாடி கூல்’ பிரிட்டனில் ஆறாம் இடத்துக்கு வந்தது. அதன்பின் வெளியான ‘சன்னி’ ஜெர்மனியில் முதலிடத்திலும் இங்கிலாந்தில் மூன்றாம் இடத்திலும் இருந்தது. ‘லவ் ஃபார் ஸேல்’ இசைத்தொகையின் அட்டையில் பாடகிகள் முக்கால் நிர்வாணமாக தோற்றமளிக்க, போபி உள்ளாடை மட்டும் அணிந்து தோன்றினார். ஃப்ராங்க் ஃபாரியனின் அந்த வணிக உத்தியும் பலன் தந்தது. தொடர்ந்து பத்தாண்டுகள் மோனி எம்மின் இசைத்தொகைகள் வெற்றி மேல் வெற்றி பெற்றன.

போனி எம்மின் தனி ஒலிநேர்த்தி ‘போனி எம் ஒலி’ (the Boney M Sound) என்றே அறியப்பட்டது. பலதட ஒலிப்பதிவு முறை அறிமுகமான காலம் அது. போனி எம் அந்த நவீன தொழில்நுட்பத்தின் மிகச்சிறந்த தரத்தை அடைந்து அதன் எல்லா வாய்ப்புகளையும் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டது. பல தட ஒலிப்பதிவு முறையின் உதவியால்தான் ஃப்ராங்க் ஃபாரியன் ஒருவரே ஒரு முழு இசைக்குழு பாடுவதுபோலப் பாட முடிந்தது. உலகமெங்கும் இருவழிஒலி இசைக்கருவிகள் பரவியபோது அந்தத் தொழில்நுட்பத்தின் இசையாக போனி எம் கேட்கப்பட்டது. பிரியா படம் மூலம் இளையராஜா தமிழுக்கு இரட்டையொலி தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்தபோது போனி எம் பாதிப்புள்ள பாடல்களை அமைத்தார்!

போனி எம் பல கறுப்பின விடுதலைப் பாடல்களையும் பாடி வெளியிட்டனர். ‘நோ மோர் செயின் கேங்’ போன்ற பாடல்கள் வரவேற்பு பெற்றன. பாப் மார்லியின் ‘நோ வுமன் நோ க்ரை’ பாடலை போனி எம் பாடி டிஸ்கோ வடிவத்தில் வெளியிட்டதும் பலத்த வரவேற்பு பெற்றது. ஆசிய நாடுகளில் பலர் அதை போனி எம் பாடலாகவே அறிந்துள்ளனர். ஃப்ராங்க் ஃபாரியன் போனி எம் இசையை ‘கறுப்பிசையின் ஆழமும் வெள்ளைத் தொழில் திறனும் கன கச்சிதமாகக் கலந்த இசை’ என்று வரையறை செய்து சொன்னர். அமெரிக்காவின் இனவெறி காரணமாகவே போனி எம் அங்கே பிரபலமாகவில்லை என்று அவர் சொன்னார். போனி எம் அன்றைய சோவியத் ரஷ்யாவில் பாடிய ஒரே மேலை பாப் இசைக்குழுவாகும். ஆனால் அவர்களின் புகழ்பெற்ற பாடலான ‘ரா ரா ரஸ்புடீன்’ அங்கே பாட அனுமதிக்கப்படவில்லை. அது ரஷ்ய ஜார் சக்ரவர்த்தியை ஆட்டிப்படைத்த போலிச்சாமியார் ரஸ்புடீன் பற்றியது என்பதுடன் அப்பாடலின் கடைசியில் ‘அட ரஷ்யர்களா!’ (‘Oh those Russians’) என்று ஒரு வரியும் வரும்!

1982ல் போபி ஃபாரெல், ஃப்ராங்க் ஃபாரியனுடன் சண்டைப் போட்டு பிரிந்து சென்றார். அவருக்குப் பதிலாக ரெஜீ சீபோ (Reggie Tsiboe) பாடவைக்கப்பட்டார். அவர் உண்மையிலேயே நல்ல பாடகர். அவர்தான் ‘கலிம்பா த லூனா’ போன்ற பாடல்களைச் சிறப்பாகப் பாடினார். ஆனால் ஃப்ராங்க் ஃபாரியன் போபி ஃபாரெல் இருவருமே பிரிவின் மூலம் நஷ்டம் அடைந்தார்கள். ஏனெனில் போபி ஃபாரெல் போனி எம் குழுவின் முகமாகவே உலகமெங்கும் அறியப்பட்டிருந்தார். ஃப்ராங்க் ஃபாரியனின் குரலை போபி ஃபாரெல்லின் குரலாகவே உலகம் அறிந்திருந்தது! 1984ல் போபி ஃபாரெல் ஒரு நீதிமன்ற உத்தரவைப்பெற்று போனி எம் குழுவில் மீண்டும் இணைந்தார். ஆக இரு ஆண் ‘பாடகர்களுடன்’ போனி எம் குழு மீண்டும் நடைமுறைக்கு வந்தது.

அதற்குப் பிறகு வந்த ‘பத்தாயிரம் ஒளிவருடங்கள்’தான் அவர்களின் ஆகச்சிறந்த இசைத்தொகை என நான் நினைக்கிறேன். ‘போபி ஃபாரெலுடன் போனி எம் மற்றும் ஸ்கூல் ரிபல்ஸ் குழு’ என்ற அறிவிப்புடன் ‘ஹாப்பி சாங்’ என்ற தனிப்பாடல் வெளியிட்டனர். அதில் முதன் முறையாக போபி ஃபாரெல் பாடவும் முயன்றார்! விளைவு பரிதாபகரமாக இருந்தது. நீதிமன்ற ஆணை போபி ஃபாரெலுக்குச் சாதகமாக இருந்தமையால் தொடர்ந்து ‘பேபி ஃபாரெல்லுடன் இணைந்து போனி எம்’ என்ற தலைப்புடன் இசைத் தொகுதிகளை வெளியிட நேர்ந்தது. ஆனால் மிகப்பிரபலமான போனி எம் முத்திரை அந்தத் தொகுதிகளில் இருக்கவில்லை. 1981 முதல் 1988 வரையிலான வருடங்களில் எடுத்துச் சொல்லும்படி வந்த தொகுதி ‘பத்துவருடத்துச் சிறந்த பாடல்கள்’ மட்டுமே. 1986ன் இறுதியில் போனி எம் முற்றிலுமாக உடைந்தது.

1987ல் அதுவரை பாதுகாத்துவந்த அந்த போனி எம் ரகசியம் வெளியாயிற்று. போனி எம் என்ற பிம்பம் காற்றுப்போன ஊதுபையாகக் சுருங்கித் தரையில் விழுந்தது. ஆனால் இந்தியாவில் போனி எம் குழுவின் தீவிர ரசிகர்களில் எத்தனை சதவீதம் பேர், தங்கள் அபிமான மேலையிசைக்குழு ஒரு போலி என்றும் அதன் முன்னிலைப் பாடகர்கள் பாடகர்களே அல்ல என்றும், இன்று மேடைநிகழ்ச்சிகளில் தொடர்ந்து நிகழும் ‘உதடசைப்பு’ முறைக்கு அவர்களே முன்னோடிகள் என்றும் அறிவார்கள்? போனி எம் உத்தி இதுதான். மேடைக்குப் பின்னால் உயர்நத் ஒலித்தரம்கொண்ட இசை நாடாவை ஓடவிட்டு, அதற்கேற்ப வாயசைத்தும் வாத்தியங்களை இயக்குவதாக நடித்தும் ஆடுதல். பின்னர் மேடைநிகழ்ச்சிகளில் மின்னணு இசைக்கருவியிலேயே பாடல்களைப் பதிவு செய்து வைத்து அதற்கு உதடசைப்பார்கள். ரசிகர்கள் கொந்தளிப்புடன் எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்.!

உற்சாகமான பாடல்களான ‘சன்னி’, ‘ஹூரே ஹூரே’ போன்றவற்றைத தந்த போனி எம்மின் பின்னால் பதற்றங்களும் ஏமாற்றங்களும் சதிகளும் துயரங்களும்தான் இருந்தன. ஒவ்வொருவரும் தாங்கள் கவனிக்கப்படுவதற்கும் தங்கள் பங்களிப்புக்கான உயர்ந்த ஊதியத்திற்கும் ஏங்கினர். 1987ல் போனி எம் குழு உடைந்தபோது ஒவ்வொருவரும் பிறரைக் குற்றம்சாட்டி மனத் துயரைக்காட்டினர். ஒவ்வொருவருக்கும் குழுத் தலைவர் ஃப்ராங்க் ஃபாரியனுக்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் இருந்தன. ஆனால் அவர்களுக்கு போனி எம் இசையில் உள்ள பங்கு என்ன என்பது கேள்விக் குறிதான். போனி எம் குழுவும் அதன் பாடல்களும் முற்றிலும் ஃப்ராங்க் ஃபாரியனின் படைப்புகள் என்றே சொல்லவேண்டும்.

‘மியூனிச் மெஷீன்’ என்ற ஜெர்மனியின் மிகச்சிறந்த இசைக்கலைஞர்களின் குழு பின்னணி இசைச்சேர்ப்புக்கு உதவியது. போனி எம்மின் பெரும்பாலான ஆல்பங்களின் இசையமைப்பு முறையை இசை நடத்துவதில் மேதையாக ஸ்டீஃபன் கிலிங்க்ஹாமர் (Stefan Klinkhammer) அமைத்தார். இசையமைப்பு செய்த பிறர் மைக்கல் கெர்டூ (Michael cretu), ஹாரி பெயர்ல் (Harry Baierl), மாட்ஸ் பியூண்ட் (Mats Biund), ஜான் டான்சென் (Johan Daansen) போன்றவர்கள். கீத் ஃபோர்ஸெ (Keith Forsey), குர்ட் கிரெஸ் (Curt Cress), டோட் கேண்டி (Todd Candy) போன்ற திறன்மிக்க டிரம் கலைஞர்கள் போனி எம்முக்காக வாசித்தனர். ஜி. கீபர் (G Gebauer), காரி அன்வின் (Gary Unwin), டெய்ட்டர் பீட்ட ரெய்ட் (Dieter Peereit), டேவ் கிங் (Dave King) போன்றவர்கள் அடிக்கிதார் கலைஞர்களாகவும் மாட்ஸ் பியுண்ட் (Mats Biund), ஜான் டான்சென் (Johan Daansen) நிக் வுட்லேண்ட் (Nick Woodland) போன்றவர்கள் கித்தார் கலைஞர்களாகவும் போனி எம்மின் இசைக்கு உதவினார்கள். போனி எம்மின் பெரும்பாலான நரம்புக் கருவி (Strings Section) இசைச் சேர்ப்பு லண்டன் ஃபில்ஹார்மானிக் இசைக் குழுவால் செய்யப்பட்டது.

போனி எம் தொடர்பாக ஏராளமான நீதிமன்ற வழக்குகள் நடைபெற்றன. 1990ல் நீதிமன்றம் போனி எம் குழுவின் எல்லா உறுப்பினருக்கும் போனி எம் பெயர் சொந்தம் என்று தீர்ப்பளித்த பின்னர் அதில் பாடிய பாடகர்களும் ‘பாடாத’ பாடகர்களும் போனி எம் இசைக்குழுவைத் தொடங்கி நடத்தினார். போனி எம் என்ற பெயரில் இயங்கினர். அதில் ஃப்ராங்க் ஃபாரியன் ஆதரவோடு லிஸ் மிச்செல் நடத்திய குழுவும் அடக்கம்.

1990ல் ஃப்ராங்க் ஃபாரியன் கிட்டத்தட்ட ‘ஆவி எழுத்து’க்கு நிகரான இன்னொரு இசை ஊழலில் சிக்கிக்கொண்டார். அது ‘மில்லி வானில்லி’ (Milli Vanilli) மோசடி என்று அழைக்கப்படுகிறது. மில்லி வானில்லி என்ற பேரில் ஒரு இசைக்குழுவை உருவாக்கிய ஃப்ராங்க் ஃபாரியன், சிறந்த ஜெர்மானிய இசைக்கலைஞர்களையும் பாடகர்களையும் தன்னுடன் இணைத்து இசைத் தொகைகளை உருவாக்கினார். இரு கறுப்பின நடனக்காரர்களை அதில் பாடகர்களாக நடிக்க வைத்தார். 1990ல் அவர்கள் சிறந்த புதுப்பாடகர் குழுவுக்கான கிராமி விருது பெற்றனர்! அதில் நடித்த ஃபாப் மோர்வான் (Fab Morvan), ராப் பிலாடஸ் (Rob Pilatus) என்ற அவ்விரு இளைஞர்களும் ஃப்ராங்க் ஃபாரியனை மேலும் மேலும் பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்தார்கள் என்று சொல்லப்படுகிறது. பொறுமை இழந்த ஃப்ராங்க் ஃபாரியன் மில்லி வானில்லி போலி இசைக்குழு என அறிவித்தார். கிராமி விருது திரும்பப் பெறப்பட்டது!

இசைக்கலைஞர்கள் நடனக் கலைஞர்களாகவும் நடிகர்களாகவும் அழகிய தோற்றம் கொண்டவர்களாகவும் இருந்தாகவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவர் அனேகமாக ஒரு கலையிலேயே தனிச் சிறப்பைப் பெற முடியும். அப்படித் தனிச்சிறப்பு பெற்ற பலர் கூடி ஒன்றைச் செய்யும்போது அது சிறப்பானதாக அமைய முடியும். ஆனால் மேடை, தொலைக்காட்சி ரசிகர்களுக்கு ஆடுபவனே பாடவும் வேண்டும் என்று தோன்றியது. அது இன்றும் நீடிக்கிறது! ஃப்ராங்க் ஃபாரியன் நம்பிய கோட்பாடும் இதுதான். அதுக்கு உரித்தான தந்திரங்களை அவர் மேற்கொண்டார். இந்திய திரையிசையில் நாம் காண்பதும் இதுதானே? கமல்ஹாசனுக்குப் பதில் எஸ்.பி.பாலசுப்ரணியம் ஆடினால் நன்றாகவா இருக்கும்?

தொடர்ந்து ஃப்ராங்க் ஃபாரியன் இயக்கிய நோ மெர்ஸி (No Mercy), லா பூஷெ (La Bouche), லே கிளிக் (Le Click) போன்ற குழுக்களும் ரசிகர் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றன. ‘டாடி கூல்’ என்ற பெயரில் அவர் ஒரு இசைநாடகம் தயாரித்து நடத்தினார். கதை போனி எம், மில்லி வானில்லி, நோ மெர்சி போன்றவற்றில் வந்த அவரின் புகழ்பெற்ற பாடல்களால் ஆனது. எல்லா போனி எம் இசைத் தொகைகளுமே ஃப்ராங்க் ஃபாரியனின் இசை நிறுவனமான ஃபாரியா (Faria)வின் உரிமையில் உள்ளன. பின்னர் போனி எம் இசைத்தொகைகள் பி.எம்.ஜி (BMG) நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. பின்னணியில் இருந்து ஃப்ராங்க் ஃபாரியன் மாபெரும் பணத்தை ஒவ்வொருநாளும் உரிமைத் தொகையாகப் பெற்றுக்கொண்டார். அவர் உலகின் மாபெரும் செல்வந்தர்களில் ஒருவராக இருந்தார். ஜெர்மனியில் அதிகமும் வசித்த அவருக்கு உலகமெங்கும் மாளிகைகள் இருந்தன. பொதுவாகப் பார்த்தால் ஃபாரியன் செய்தது ஒரு மோசடி என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அவர் அபாரமான திறமைகொண்ட இசைக்கலைஞர் மற்றும் இசைச்சந்தை நிபுணர் என்பதில் ஐயமில்லை. போனி எம் ஐ உருவாக்கிய படைப்பாளி என்ற முறையில் அவர் மறுக்க முடியாதவரே.

லிஸ் மிச்செல் ஒரு பழமையான பெந்தேகொஸ்தே பாதிரியாரின் மகள். ‘லவ் ஃபார் சேல்’ இசைத்தொகையின் அட்டை வடிவமைக்கப்பட்டபோது திகிலில் உறைந்து போய்விட்டதாகச் சொன்னார். “அவர்கள் எங்களை முழு நிர்வாணமாக கனத்த தங்கச்சங்கிலிகள் மட்டும் அணியவைத்து நிறுத்தி மேலே போபி ஃபேரெல் நிற்பதுபோல் புகைப்படம் எடுத்தார்கள். அந்தப் படம் எடுக்கப்பட்ட நாளில் நான் அழுதேன்!” 60 வயதைத் தாண்டிய பின்னரும் ‘டாடி கூல்’ இசைத் தொகையின் மறுதொகுப்பை வெளியிட்டார். ‘லிஸ் மிச்செல் பாடும் போனி எம்’ என்ற பெயரில் இசைநிகழ்ச்சிகள் நடத்தி வநதார்.

அறுபது வயது தாண்டிய மார்ஸியா பாரெட் அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் வாழ்ந்தார். புற்று நோயால் அவதிப்படும்போதும் ‘மார்சியா பாரெட்டின் போனி எம்’ என்ற பேரில் இசைநிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தியாவில் கோவா திரைப்பட விழாவில் அவர் வந்து பாடினார். மேய்ஸீ வில்லியம்சும் ‘மேய்ஸீ வில்லியம்ஸின் போனி எம்’ என்ற பேரில் இசைநிகழ்ச்சிகள் நடத்தினார். 2015ல் கேரளாவில் வந்து ’பாடினார்’. அவர் பாட முடியாதவர் ஆதலால் பழைய பாடல்களுக்கு வாயசைத்தார்!

போனி எம்மில் கவர்ச்சி ஆணழகனான போபி ஃபாரெல் மட்டும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டார். தன்னுடைய புகழ்பெற்ற தலைமயிர் உட்பட அனைத்தையுமே இழந்து ஆம்ஸ்டர்டாமில் இடுங்கிய சந்து ஒன்றில் குடும்பத்துடன் வசித்துவந்தார். அரசின் நலிந்தோர் உதவியைப் பெற்று வாழ்ந்தர். ஒவ்வொரு இசைத்தொகை விற்பனையிலும் 70000 பவுண்டு ஊதியம் பெற்றதுடன் ஒவ்வொரு மேடை நிகழ்ச்சிக்கும் 1000 பவுண்டு ஊதியமும் வாங்கியவர். ஆனால் “எனக்குப் போதிய அளவுக்கு ஊதியம் தரப்படவில்லை. கணக்கு பார்த்தால் எனக்கு 2 கோடி பவுண்டு தரப்பட்டிருக்க வேண்டும். எனக்குக் கிடைத்ததெல்லாம் பகுதி பகுதியாகக் கொடுக்கப்பட்டது. அதெல்லாம் அவ்வப்போது செலவாகிப்போயிற்று” என்கிறார். 1981ல் போனி எம் ஐ விட்டபோதே போபி ஃபாரெல்லின் பிரச்சினைகள் தொடங்கிவிட்டன. அவரால் பணத்தை வைத்திருக்கவோ ஏதேனும் உருப்படியாகச் செய்யவோ முடியவில்லை. தனியார் விமானத்தில் உலகமெங்கும் பறந்த, உலகப் புகழ்பெற்ற பாப் நட்சத்திரம் என்ற நிலையில் இருந்து ஹாலந்துச் சேரியில் அரசுதவி பெற்று வாழும் அனாதை என்ற நிலைக்கு அவர் வீழ்ந்துபோனார்.

“நாம் மேலிருந்து கீழே விழும்போது என்ன நடக்கிறதென்றே புரிவதில்லை. 1986 கிறிஸ்துமஸ் அன்று மின்கட்டணம் கட்டாததனால் என் வீட்டில் வெளிச்சமே இருக்கவில்லை என்று விலபித்த போபி ஃபாரெல்லின் வாழ்க்கையில் பின்னர் விளக்கே எரியவில்லை. 2010 இசம்பரில் ரஷ்யாவின் தரக்குறைவான தங்கும்விடுதியொன்றில் அவர் இறந்து கிடந்தார். 

எழுபதுகளின் போனி எம் பைத்தியங்களுக்கு இதையெல்லாம் தெரியவரும்போது அழுகைதான் வரும். முதன் முதலாக போனி எம் மோசடியை அறிந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. யாருடைய உதடுகளில் இருந்து நான் போனி எம் பாடல்களைக் கேட்பதாக எண்ணியிருந்தேனோ அவர்கள் போலிகளே என்று அறிந்தபோது ஏற்பட்ட ஏமாற்றமும், இழப்புணர்வும் தீவிரமானது. என் பதின்வயது ஏக்கம் ஒன்று முற்றிலும் உடைந்து போனது! பாடல் என்பது பார்ப்பதற்கானதல்ல, கேட்பதற்கானது மட்டுமே என்ற உண்மையை யோசிக்கும்போது அப்பாடல்களாக போனி எம் நீடிக்கத்தான் செய்கிறது. இருந்தும் நான் ‘இன்னும் சோகமாகவே இருக்கிறேன்’! Still I am Sad….

2007