முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குரு தத் எனும் துயர்காவியத் தலைவன்


உயிருடனிருக்கும் மனிதர்களை உள்ளங்கால் கீழில் மிதித்து நசுக்கி, இறந்துபோனவர்களை வழிபடும் உங்கள் நாகரீகத்தை, கலாச்சாரத்தை நான் வெறுக்கிறேன், கண்டிக்கிறேன்”. என்று சொன்னவர் குரு தத். ஆனால் தனது வாழ்நாளிலும் தான் இறந்த பிறகும் அந்தக் கலாச்சாரத்தையே சந்திக்க நேர்ந்தவர் அவர்.

தனது முப்பத்தொன்பதாவது வயதில் அவர் இறந்து போனபின் கிட்டத்தட்ட இரண்டு பதிற்றாண்டுகள் குரு தத் பற்றிய பெரிய உரையாடல்களோ ஆய்வுகளோ விவாதங்களோ எதுவுமே இங்கே நிகழவில்லை. ஆனால் 1980ளிலிருந்து இந்தியாவிலும் உலகம் முழுவதும் ஒரு கதைக் காவிய நாயகனாகவே மாறிவிட்டார் குரு தத். எட்டு படங்களைத்தான் இயக்கினார் என்றாலும் இன்று உலக சினிமாவிலேயே மதிக்கப்படும் ஓர் இயக்குநர் அவர். பத்துக்கும் மேலான மொழிகளில் அவரைப் பற்றி குறைந்தது நானூறு புத்தகங்களாவது வெளிவந்திருக்கும் என நினைக்கிறேன். இருபதுக்கும் மேலான குரு தத் ஆவணப் படங்களை பார்த்திருக்கிறேன். அவற்றுக்குள் பதிவு செய்யப்படாத எதையுமே புதிதாக நாம் குரு தத் பற்றி இங்கே எழுதிவிட முடியாது. இருந்தும் அவரைப்பற்றி மீண்டும் உரையாடுகிறோம். காரணம் குரு தத்துக்கு நிகரான இன்னொரு திரைக் கலைஞன் இந்திய மண்ணில் இன்றுவரைக்கும் பிறக்கவில்லை என்பதே.

ரித்விக் கட்டக், குரு தத் இருவரையும் நினைக்கும்போதெல்லாம் எனக்குள் ஏர்ப்படும் எண்ணம் ஒன்று உண்டு. கட்டக் இறக்கும்போது அவருக்கு 50 வயது கூட ஆகவில்லை. ஆனால் 75-80 வயதிருக்கும் ஒரு முதியவர் போலவே காட்சியளித்தார். குரு தத்துக்கோ வெறும் 39. ஆனால் பெரும்பாலான புகைப்படங்களில் அவருமே 60 வயது கடந்த ஒருவரைப்போலவே தோன்றினார். மிகக்குறைந்த வயதிலேயே ஒரு முழு ஆயுளின் அறிவையும் ஆற்றலையும் படைப்பூக்கத்தையும் வெளிப்படுத்தி தமது காலத்துக்கும் வெகுதூரம் முன்பே பயணித்தவர்கள். அந்த அனுபவ முதிர்சி தான் அவர்களுது தோற்றத்திலும் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

வேர்கள்         

மிகக்குறைவான மக்கள்தொகை கொண்ட ஓர் இனக்குழு சித்திராபூர் சுவாரசுவத பிராமணர்கள். வெளிர் தோல் வண்ணத்திற்கும் அழகான தோற்றத்திற்கும் பெயர் பெற்றவர்கள். இன்றைய கர்நாடகத்தின் கொங்கணக் கடற்கரைப் பகுதிகளை பூர்விகமாகக்கொண்டு, கொங்கணி மொழி பேசும் இவர்களது மொத்த எண்ணிக்கை இன்றளவும் 25000க்கு கீழேதான். மீன், முட்டை போன்றவற்றை உண்டு பலவகைத் தொழில்களை செய்து சிதறி வாழ்ந்துவந்த இவர்களை பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சில மத குருமார்கள் இனமாற்றம் செய்து பிராம்மணர்களாக மாற்றினர். அதன் பிறகு பூண்டு வெங்காயம் கூட சாப்பிடாத சுத்த சைவர்களாக மாறி விட்டனர் என்றாலும் பரம்பரை பிராம்மணர்கள் இன்றளவும் சுவாரசுவத பிராம்மணர்களை குல மகிமை குறைந்தவர்களாகத்தான் எண்ணி வருகிறார்கள்.

சித்திராபூர் சுவாரசுவதர்களில் பலர் தமது மூதாதையர்கள் வாழ்ந்த ஊர்களின் பெயரினைக் குடும்பப் பெயராக வைப்பது வழக்கம். இதனாலேயே 300க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் இவர்களிடையே இருக்கின்றன. உடுப்பி அருகேயுள்ள பழமைவாய்ந்த ஒரு கிராமத்தின் பெயரான ‘படுக்கோனே’ என்பதை தமது பட்டப்பெயராக் கொண்டு பெங்களூர் நகரத்தில் வாழ்ந்துவந்த இத்தகைய ஒரு குடும்பத்தில் 1925ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி வசந்த் குமார் சிவசங்கர் படுக்கோனே எனும் இயற் பெயரோடு பிறந்தவர் குரு தத். அம்மாவின் பெயர் வசந்தி. வசந்தியின் குமாரன் வசந்த் குமார். அப்பா சிவசங்கர் படுக்கோனே. மிகச்சிறிய வயதில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி அக்குழந்தை இறந்துபோகுமளவுக்கு படுகாயமடைந்தான்.

உயரத்திலிருந்து வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரண்டு வாரங்கள் கடும் காய்ச்சலோடு மயக்கமாகிக் கிடந்தான். மத குருமார்கள் மேல் அதீத நம்பிக்கைகொண்டிருந்த அவரது தாய் தந்தையினர் குழந்தையைக் குணப்படுத்த ஒரு குருவை நாடியதாகவும், பூஜை புனஸ்காரங்களால் அந்தக் குரு பாலனைக் குணப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. துரதிர்ஷ்டத்தை நீக்குவதற்காக வசந்த் குமார் எனும் பெயரை மாற்றிப் போடவேண்டும் என்றும் குரு ஆணையிட்டாராம். அவ்வாறாகத்தான் ‘குருவினால் கிடைத்தவன்’ என்று கன்னட மொழியில் பொருள் வரும் குரு தத்தன் என்ற பெயரை அவருக்குச் சூட்டினார்களாம். ‘குரு வாரம்’ அல்லது வியாழக்கிழமையில் பிறந்தவர் என்பதையும் தமது இனமே குரு பரம்பரையால் உருவாக்கப்பட்டது என்பதையும் கூடக் கருத்தில் கொண்டுதான் குரு எனும் பெயரை வைத்தார்களாம்.

தாய் மொழி கொங்கணியாக இருந்தாலும் அம்மொழிக்கு எழுத்துருவோ இலக்கியங்களோ இல்லாததால் கன்னடம் தான் அக்குடும்பத்தின் விருப்ப மொழியாக இருந்தது. குரு தத்தின் அம்மா வசந்தி கன்னட மொழி ஆசிரியையாகவும் இருந்தவர். குரு தத்தனுமே ஆரம்பக் கல்வியைக் கன்னட வழியில் தான் பெற்றார். ஆனால் அவரது கர்நாடக வாழ்க்கை அதிகநாள் நீடிக்கவில்லை. அடிக்கடி வேலைகளை இழந்த அவரது அப்பா குடும்பத்துடன் மங்களூர், மெட்ராஸ், அகமதாபாத், பம்பாய் உள்ளிட்ட பலயிடங்களுக்கு இடம் பெயர்ந்து கிட்டத்தட்ட ஒரு நாடோடி வாழக்கையைத்தான் வாழ்ந்தார். பம்பாயில் மாட்டுங்கா எனும் இடத்திலுள்ள இடுங்கலான ஓர் ஒற்றயறை வீட்டின் ஏழ்மையில் ஆறுபேர் கொண்ட அக்குடும்பம் பல ஆண்டுகள் தங்கியது. 1930களின் மத்தியில் கல்கத்தாவில் பர்மா ஷெல் கம்பெனியில் அப்பாவுக்கு வேலை கிடைத்து அக்குடும்பம் அங்கே இடம் பெயர்ந்தது.

நாட்டியக்காரன்

பள்ளிப் படிப்பில் நாட்டமில்லாதவராக இருந்தாலும் வங்க மொழியையும் அதன் ஆழ்ந்த கலையிலக்கியப் பண்பாட்டையும் நேசித்தார் குரு தத்தன். வங்காள மொழியை சிறப்பாகக் கற்றுக்கொண்ட அவர் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் தேற்சி பெற்றார். அவர்கள் வாழ்ந்து வந்த பவானிபூர் பகுதியில் அடிக்கடி நிகழும் ‘ஜாத்ரா’ எனும் திறந்தவெளி நாடகங்களை பார்ப்பதுதான் அவருக்கு பெரும் உவகையாக இருந்தது. நாட்டுப்புறப் பாடல்கள், நடனம், அபினயம், கீர்த்தனைகள் போன்றவற்றின் வழியாக புராணக் கதைகள், வரலாற்று நிகழ்வுகள், தற்கால வாழ்க்கை என அனைத்தையும் உள்ளடக்கிய அந்தக் கலை வடிவம்தான் குரு தத்தனை ஒரு கலைஞனாக மாற்றியது என்றே சொல்லலாம். ஜாத்ராவின் வண்ணமயமான ஆடை மினுமினுப்புகளும், மந்திரா, டோலக் போன்ற தாளக்கருவிகளின் துடிப்பும் அவரது மனதில் நீங்கா பிம்பங்களாக மாறின. வங்காளத்தின் தனித்துவக் கலைகளான பாஞ்சாலி, ஜுர்முர், சௌ நாச்ச், கம்பீரா போன்றவை அவருக்கு மிகவும் நெருக்கமானவையாக மாறிவிட்டன. முழுக்க முழுக்க தன்னை ஒரு பெங்காலியாகவே உணர ஆரம்பித்த தத்தன் தனது பெயரை பெங்காலிப் பெயரான ‘தத்’ என்று மாற்றியமைத்தார். இன்றுவரைக்கும் குரு தத்தை ஒரு பெங்காலி என்றுதான் பலர் நம்பி வைத்திருக்கிறார்கள்.

நடனக்கலைகளில் ஆர்வம் தலைக்கேறிய குரு தத் தான் குழு நடனக்காரற்களில் ஒருவனாக வந்தால் கூட போதுமானது என்று முடிவெடுத்து நடனமாடவும் நடனக்கலை பயிலவும் ஆரம்பித்தார். பள்ளிப்படிப்பை முடித்த குரு தத்துக்கு மேற்கொண்டு படிக்க விருப்பமே இல்லை. ஒருவேளை இருந்தாலும் அதற்கான பொருளாதாரமில்லை. நடனப்பயிற்சியை மேற்கொண்டவாறு எங்காவது ஒரு வேலை கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தார். அவரது தாயின் உறவினரான பி பி பெனகல் பிற்காலத்தில் புகழ்பெற்ற இயக்குநராக மாறிய ஷ்யாம் பெனகலின் மாமா. அவர் சினிமா விளம்பரப் பலகைகளின் வடிவமைப்பாளராகவும் ஓவியராகவும் இருந்தார். அவரது ஓர் ஓவியத்தின் பாதிப்பினால் உருவானதுதான் குரு தத்தின் முதல் மேடை அரங்கேற்றம். ஒரு மனிதனின் உடலில் மலைப் பாம்பு ஒன்று சுழன்று கிடப்பதைப் போன்றது அந்த ஓவியம்.

அது தனக்கு அளித்த உத்வேகத்தால் அதை ஒரு நடனமாகவே உருவாக்கினார். கல்கத்தாவின் சாரஸ்வ பிராமண சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழாவில் அதை நடத்தினார். பலத்த கைதட்டல்களைப் பெற்றதோடு அந்த நடனத்தால் ஈர்க்கப்பட்ட ஒருவரிடமிருந்து 5 ரூபாய் பரிசையும் வென்றார். குரு தத்தின் கலைக்குக் கிடைத்த முதல் ஊதியம். பி பி பெனகலின் மகனான சுதர்சன் பெனகலுடன் சேர்ந்து கல்கத்தாவின் அலிப்பூர் விலங்குப் பூங்காவில் விலங்குகள் மற்றும் தாவரங்களை புகைப்படம் எடுத்து சிலகாலம் திரிந்தார். படப்பிடிப்பின் அடிப்படைகளை அங்கிருந்துதான் குரு தத் புரிந்திருக்க வேண்டும். விரைவில் தொலைபேசி இயக்குபவராக அவருக்கு வேலை கிடைத்தது. தனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத அந்த வேலையை அவர் வெறுத்தார்.

அக்காலத்தில் ஒருநாள் நடனமேதை உதய் சங்கரின் குழு நடத்திய நாட்டிய நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க நேர்ந்த குரு தத் பிரமித்துப் போய் உதய் சங்கரைப் போன்ற ஒரு நடனக்காரராக வரவேண்டும் என்று ஆசைபட்டார். சித்தார் இசைமேதை ரவி சங்கரின் அண்ணனும் உலகப் புகழ்பெற்ற இந்திய செவ்வியல் நடன மேதையுமான உதய் சங்கர் அக்காலத்தில் உத்தரபிரதேச மானிலத்தின் இமையமலைத் தாழ்வாரத்தில் உள்ள அல்மோராவில் இந்தியக் கலாச்சார மையம் எனும் நடனப் பள்ளியை நடத்தி வந்தார். அங்கே சேர்ந்து படிக்கத் தனக்கு ஆசையிருப்பதாகவும் ஆனால் அதற்கான பொருளாதார வசதிகள் தனக்கில்லை என்றும் உதய் சங்கருக்கு கடிதம் எழுதினார் குரு தத்.

தனக்குமே இளவயதில் முறையான நடனப்பயிற்சி கிடைக்கவில்லை என்பதனாலோ என்னவோ உதய் சங்கர் அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அவர் அளித்த படிப்புதவித் தொகையோடு தனது 17ஆவது வயதில் அங்கே ஒரு நடன மாணவனாக நுழைந்தார் குரு தத். இரண்டு ஆண்டுகாலம் முறையாக நடனமும் நடிப்பும் இசையும் பயின்றார். 1944ல் இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக உதய் சங்கர் தனது பள்ளியை இழுத்து மூடியபோதுதான் குரு தத் அங்கேயிருந்து வெளியேறினார். ஆனால் அது அப்படியில்லை, அல்மோரா பள்ளியின் முக்கிய நடிகை குரு தத் மேல் காதல் வயப்பட்டு அவர்களது கள்ளத் தொடர்பு அம்பலமானதால் குரு தத் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் என்று குரு தத்தின் தம்பி தேவி தத் ஃபிலிம் ஃபேர் இதழுக்களித்த ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். இளவயதிலிருந்தே எங்கு போனாலும் குரு தத்துக்கு பெண்கள் தொல்லை அதிகமாக இருந்ததாகவும் அவருக்காக எதையும் செய்யப் பெண்கள் தயாராக இருந்ததாகவும் அப்பேட்டியில் அவர் சொல்லியிருக்கிறார்.

பூனா அழகியும் தேவ் ஆனந்தும்

அல்மோராவிலிருந்து குரு தத் பம்பாய் சென்றார். அப்போது அவரது குடும்பம் மீண்டும் பம்பாய்க்கு இடம் பெயர்ந்திருந்தது. மாமா பி பி பெனகலின் பரிந்துரையால் பூனாவின் புகழ்பெற்ற பிரபாத் ஸ்டுடியோவில் அவருக்கு துணை இயக்குனரின் வேலை கிடைத்தது. இந்திய சினிமாவின் பிதாமகர்களில் ஒருவராகக் கருதப்படும் வி சாந்தாராம் சில நண்பர்களுடன் சேர்ந்து 1929ல் நிருவிய பிரபாத் ஸ்டுடியோவில் தான் 1934ல் வெளியான தமிழ் படம் சீதா கல்யாணம் படமாக்கப்பட்து. பின்னர் தேவ் ஆனந்த் போன்ற பெரும் நடசத்திரங்களை அறிமுகம் செய்ததும் அந்த பிரபாத் ஸ்டுடியோ தான். ஆனால் 1944ல் சாந்தாராமின் வெளியேற்றத்தோடு சரிவைச் சந்தித்த பிரபாத் ஸ்டுடியோ 1952ல் முற்றிலுமாக மூடப்பட்டது. அது இருந்த இடத்தில் தான் புகழ்பெற்ற பூனா திரைப்படக் கல்லூரி இன்றளவும் இயங்கி வருகிறது.

1944ல் குரு தத் அங்கே சேர்ந்தார். நடன இயக்கம் தான் அவரது முக்கியப் பொறுப்பாக இருந்தது. ஒரு நடனக்காரரும் நடன இயக்குநரும் ஆகவேண்டும் எங்கின்ற குரு தத்தின் கனவு அங்கே நனவாகி விட்டது. அதோடு, உலகம் முழுவதுமிருந்து வரும் விதவிதமான திரைப்படங்களை, குறிப்பாகக் குற்றங்களை மையமாகக்கொண்ட பல ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்த்து அவதானிக்கும் வாய்ப்பும் அவருக்கு அங்கே கிடைத்தது. அங்கேயும் பெண்கள் தொல்லை குரு தத்தை விடட்தில்லை. குரு தத்தின் தம்பி தேவி தத்தின் கூற்றுபடி ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த வித்யா எனும் உதவி நடனப் பெண் குரு தத்தின் மேல் வெறிபிடித்த காதல் கொண்டிருந்தார்.

ஓடிப்போய் திருமணம் செய்யலாமே என்று வித்யா சொன்னதும் பம்பாயிலுள்ள தமது வீட்டிற்கே அவளை அழைத்து வந்தாராம் குரு தத். அப்பெண்ணின் வருங்காலக் கணவர் காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக மிரட்டி பிரச்சினை கிளப்பியபோதுதான் குரு தத் அவளை விட்டுவிட்டாராம். பிரபாத்தில் அவர் ராமசாஸ்திரி (மராத்தி), சாந்த் (ஹிந்தி), லக்காராணி (ஹிந்தி, மராத்தி), ஹம் ஏக் ஹே (ஹிந்தி) போன்ற படங்களில் பணியாற்றினார். ஹம் ஏக் ஹே (1946) தான் பிற்பாடு இந்தியாவின் பெரும்புகழ் உச்சநட்சத்திரமாக வலம்வந்த தேவ் ஆனந்த் நடித்த முதல் திரைப்படம்.

தேவ் ஆனந்தின் மிக நெருக்கமான நண்பராக குரு தத் மாறிவிட்டிருந்தார். வருங்காலத்தில் ஒரு குழுவாக இயங்கி மிகப்பெரிய படங்களை உருவாக்கப் போவதாக இருவரும் ஒன்றாகக் கனவு கண்டனர். தான் ஒரு நடிகனாக வெற்றி பெறும் பட்சத்தில் தான் தயாரிக்கும் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பினை குரு தத்திற்குத் தருவேன் என்று தேவ் ஆனந்த் வாக்குறுதி அளித்தார். மாறாக தனக்கு இயக்குநராகும் வாய்ப்புக் கிடைத்தால் முதல் படத்தை தேவ் ஆனந்தை வைத்தே இயக்குவேன் என்று குரு தத்தும் மறுவாக்களித்தார். இருவரும் இந்தியா சுதந்திரத்தை நெருங்கிய காலகட்டத்தில் பிரபாத்திலிருந்து வெளியேறி பம்பாயில் இயங்கத்தொடங்கினார்கள். தேவ் ஆனந்திற்கு நடிப்பு வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. பெங்காலியான அமியா சக்ரவர்த்தி எனும் இயக்குநரிடம் துணை இயக்குநராகச் சேர்ந்தார் குரு தத்.

கீதா பாலி கீதா ராய்

மகா நடிகர் என்று அறியப்பட்ட திலீப் குமாரை தனது ஜுவார் பாட்டா (1944) எனும் படம் வழியாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் அமியா சக்ரவர்த்தி. இன்று முற்றிலுமாக மறக்கப்பட்டவராக மாறிப்போனாலும் அவரது தாக் (1952), பதிதா (1953), சீமா (1955) போன்ற படங்கள் முக்கியமானவை. அவரது தோல்வியுற்ற படமான ‘கேர்ள்ஸ் ஸ்கூல்’ (1949) இல் தான் குரு தத்திற்கு பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. வங்காளத்திலிருந்து வந்த மற்றுமொரு உன்னதமான இயக்குநர் கியான் முகர்ஜீ. 1940களின் ஆரம்பத்தில் பந்தன், ஜூலா, நயா சன்ஸார், கிஸ்மத் போன்ற சிறப்புமிக்க படங்களை இயக்கியவர். அவர் இயக்கிய சங்க்ராம் (1950) எனும் பெருவெற்றிப் படத்தின் இணை இயக்குனராகப் பணியாற்றினார் குரு தத். அது அவருக்கு மிகப்பெரிய அனுபவத்தை அளித்தது. அதோடு தனது முதல் படத்தை இயக்குவதற்கான வேலைகளை மும்முரமாக முன்னெடுத்தார்.

அதற்குள்ளே பல படங்களில் நடித்து ஹிந்தி சினிமாவின் முக்கியமான கதாநாயகனாக மாறிவிட்டிருந்தார் தேவ் ஆனந்த். நவகேதன் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிருவனத்தை உருவாக்கி ஒரு படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார். முதல் படத்தை இயக்கும் வாய்ப்பினை குரு தத்துக்கு வழங்கி தனது வாக்குறுதியைக் காப்பாற்றினார் தேவ் ஆனந்த். அது அவருக்கு 20ஆவது படம். 1951ல் பாஸி (Baazi - சூதாட்டம்) எனும் அந்தப் படத்தை குரு தத் இயக்கினார். பத்துக்கும் மேல் படங்களில் நடித்திருந்தவரும் பின்னர் ஓர் ஆழமுள்ள நடிகராகப் பெயர் பெற்றவருமான பல்ராஜ் சாஹ்னி தான் பாஸியின் கதை, திரைக்கதை வசனம் எழுதினார். அப்படத்தில் அவர் நடிக்கவில்லை என்பதும் அவரது எழுத்தில் வெளிவந்த ஒரேயொரு திரைப்படம் பாஸி என்பதும் குரு தத்துடன் பின்னர் ஒருபோதும் அவர் பணியாற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது 12 வயதில் நடிக்க ஆரம்பித்து ஒரு சிறந்த நடிகையாகத் திகழ்ந்தவர் கீதா பாலி. இந்திய சினிமாவின் முதல் உச்ச நட்சத்திர நடிகை என்று அவரைச் சொல்லலாம். கேர்ள்ஸ் ஸ்கூல் படத்தில் பணியாற்றும்போதே குரு தத்தின் திறமையைக் கண்டறிந்த கீதா பாலி அவரது முதல் படத்தில் கதாநாயகியாக நடிப்பேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் பாஸியில் குரு தத் அவருக்கு வழங்கிய பாத்திரம் எதிர்மறைத் தன்மைகொண்ட, பிறரை மயக்கும் பெண். இருந்தும் அவர் அதை ஏற்று மிகச்சிறப்பாக நடித்தார். அப்படத்தில் கதாநாயகியாக வந்து தேவ் ஆனந்தைத் திருமணம் செய்துகொள்ளும் கல்பனா கார்த்திக் பிற்பாடு நிஜ வாழ்க்கையிலும் தேவ் ஆனந்தின் மனைவியாக மாறினார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் பெயர்பெற்ற வி ரத்ரா. தேவ் ஆனந்த் தயாரித்த அனைத்து படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக இருந்த அவர் தேவ் ஆனந்தின் உறவினரும் கூட. அப்படத்தில் அவரது உதவியாளராகப் பணியாற்றிய மைசூரைச் சார்ந்த தென்னிந்தியர் வி கெ மூர்த்தி தான் பிற்பாடு வந்த முக்கியமான குரு தத் படங்களுக்கெல்லாமே ஒளிப்பதிவாளர். பாஸியின் பாடல்களை எழுதியவர் மாபெரும் உருது கவிஞரான சாஹிர் லுதியான்வி. இசை எஸ் டி பர்மன். அப்படத்தின் பெருவெற்றி பெற்ற ஆறு பாடல்களைப் பாடியவர் அன்றைய உச்ச நட்சத்திரப் பாடகி கீதா ராய் சௌதுரி. வங்க நாட்டுப்புற இசையில் பெரும் ஈடுபாடுடைய குரு தத்துக்கு கீதா ராயின் வங்கமொழிச் சாயலுள்ள குரலும் பாடும்முறையும் அவரது கவர்ந்திழுக்கும் அழகும் மிகவும் பிடித்துப் போனது.  'தட்பீர் ஸெ பிக்டி ஹுயீ தக்தீர் பனா தே' பாடலின் ஒலிப்பதிவு நேரத்தில் அசாத்தியப் பாடகியும் பேரழகியுமான கீதா ராய் மீது தீவிரமான காதலில் விழுந்தார் குரு தத்.

ஆயிரத்தில் ஒருவன்

நடிப்பில் தனக்கு நாட்டமில்லை என்று சொல்லியிருந்தாலும் பாஸியின் முதல் காட்சியில் ஒரு பிச்சைக்காரனைப்போல் தறையில் அமர்ந்து புகை பிடித்துக்கொண்டிருக்கும் தெருவாசியாக நடித்தார் குரு தத். படம் ஆரம்பிப்பதே அப்பாத்திரத்தின் புறமுதுகிலிருந்து தான்! புகை பிடித்தல், சூதாட்டம், மதுப்பழக்கம் போன்றவற்றை அந்த அளவுக்கு சாதாரணப்படுத்திக் காட்டிய ஒரு திரைப்படம் அதற்கு முன்பு இந்தியாவில் வரவேயில்லை. தேவ் ஆனந்தின் அதுவரைக்குமிருந்த நல்லவரில் நல்லவன் எனும் நாயக பிம்பத்தை மாற்றியமைத்த பாஸி ஆறு மாதத்திற்கும் மேல் ஓடி மாபெரும் வணிக வெற்றியாக மாறியது. பிற்பாடு ‘தி குரு தத் டீம்’ என்று அழைக்கப்பட்ட அவரது திரைப்படக் குழு பாஸி படம் வழியாகவே உருவானது.

1952ல் குரு தத்தின் அடுத்த படம் ஜால் (கண்ணி வலை) வெளியானது. இம்முறை தானே கதை திரைக்கதை எழுதி இயக்கினார். ஒழுக்க நெறிகளை தூக்கி வீசுவதில் எந்தத் தயக்கமும் இல்லாத கதாநாயகனாக தேவ் ஆனந்த் நடித்தார். கதா நாயகி மீண்டும் கீதா பாலி. தலைப்புகளில் தேவ் ஆனந்தின் பெயருக்கு முன்னரே அவரது பெயர் போடப்பட்டிருந்தது. ஒளிப்பதிவாளர் வி கெ மூர்த்தியின் முதல் படம் அது. இசைக்குழு அதே எஸ் டி பர்மன் – சாஹிர் லுதியான்வி. ஆனால் இம்முறை கீதா ராய்க்கு முக்கியத்துவம் குறைந்த இரண்டு பாடல்கள் வழங்கி மற்ற அனைத்துமே லதா மங்கேஷ்கர் தான் பாடினார். இசை பாஸி ஐ விட நூறு மடங்கு பெரிய வெற்றி. படமோ வசூலை அள்ளிக் குவித்தது. நல்லவரா கெட்டவரா என்று தெரியாத அளவுக்கு சாம்பல் சாயல் உள்ள கதாபாத்திரங்களையும் இருண்மையான சூழலையும் சித்தரித்த ஜால் இந்திய சினிமாவில் முதன்முதலில் வந்த noir classic என்று அழைக்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களுக்குப்பின் குரு தத்தின் இயக்கத்தில் தேவ் ஆனந்த் நடிக்கவேயில்லை.

தனது அடுத்த படத்தை தானே தயாரித்து அதில் கதா நாயகனாகவும் நடிக்க முடிவெடுத்தார் குரு தத். பாஸ் (Baaz - ராஜாளி) எனும் பழங்கால வரலாற்றுக் கதையை உருவாக்கினார். 1935ல் மைக்கேல் குர்டிஸ் இயக்கத்தில் எற்ரோள் ஃப்ளின், ஒலிவியா ஹேவிலேன்ட் நடித்த கேப்டன் பிளட் (Captain Blood) எனும் படத்தின் சாயல்கொண்ட இந்தக் கதையில் கதா நாயகனை விட முக்கியத்துவம் வாய்ந்த பெண் பாத்திரமாக நடித்து அந்தப் படத்தை தயாரிக்கவும் செய்தார் கீதா பாலி. குரு தத் இணைத் தயாரிப்பாளர். போர்த்துகீசியர்களுக்கு எதிராகக் கலகம் செய்யும் கேரளக் கடற்கரை வீராங்கனை நிஷா. நாட்டின் இளவரசராக இருந்தபோதிலும் கலகக்கார நிஷாவுடன் காதலில் இணைந்து போர்த்துகீசியர்களுக்கு எதிராகப் போர் புரியும் கதாபாத்திரமாக குரு தத். பெரும்பாலான காட்சிகள் ஒரு கப்பலில்தான் படமாக்கப்பட்டன. இப்படத்தின் பல காட்சியமைப்புகளை அப்படியே நகல் எடுத்தது பி ஆர் பந்துலுவின் இயக்கத்தில் எம் ஜி ஆர், ஜெயலலிதா நடித்து 1965ல் தமிழில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படம்.  

அமேரிக்க, ஜப்பானியப் படங்களின் தரத்திற்குக் குறையாமல் எடுக்கப்பட்ட இப்படத்தின் பின்னணியில் பணிபுரிந்த குரு தத் குழுவில் இசைத் துறை மட்டும் மாறியது.  பாடலாசிரியர் சாஹிர் லுதியான்வியுடன் கருத்து மோதல் ஏர்ப்பட்ட இசையமைப்பாளர் எஸ் டி பர்மன் அவருடன் பணியாற்ற மறுத்தார். குரு தத்தின் சமாதானப் பேச்சுக்கள் பலனளிக்கவில்லை. இறுதியில் இருவரையும் விட்டுவிட்டு தனது காதலியும் பாடகியுமான கீதா ராய் பரிந்துரைத்த ஓ பி நய்யார் ஐ இசையமைப்பாளர் ஆக்கினார் குரு தத். மஜ்ரூ சுல்தான்புரி பாடல்களை எழுதினார். பெரும்பாலான பாடல்களை கீதா ராய் பாடினார். ஆனால் பாடல்களும் இசையும் சோபிக்கவில்லை. படமும் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. பெரும் பணத்தை இழந்தார் என்றாலும் குரு தத் துவண்டு போகவில்லை. தொடர்ந்து படங்களைத் தயாரித்து இயக்கி நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாகவே இருந்தார். பாஸ் தோல்வியுற்ற நேரத்திலேயே கீதா ராய் சௌதரி குரு தத்தை திருமணம் செய்து கீதா தத் ஆக மாறினார்.

நெடுகே குறுக்கே

அந்த திருமணத்தை இரு குடும்பங்களும் எளிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக கீதாவின் குடும்பம். அப்பொழுது கீதா இந்தியாவிலேயே மிக அதிகமாக ஊதியம் வாங்கும் பாடகியாக இருந்தார். ஒரு பாடலுக்கு தலா 8000 ரூபாய் வரைக்கும்! இன்றைய கணக்கில் அது 8 லட்சத்துக்கு நிகரானது. பல வீடுகள், வோக்ஸ்ஹால், ஃபோர்ட் கன்சல் போன்ற பல வெளிநாட்டுக் கார்கள் என அவரிடம் செல்வம் கொழித்திருந்தது. அந்த செல்வத்திற்காகவே குரு தத் கீதாவைப் பொய்யாகக் காதலித்து மணந்ததாகக் குறைகூறித் திரிந்தனர் கீதாவின் தாய் மற்றும் உறவினர்கள். அபாண்டமான அந்தக் குற்றச்சாட்டு குரு தத்தின் தன்மானத்தைத் தாக்கியது. அதன் விளைவாக இனிமேல் கீதாவின் வருவாய் தனக்குத் தேவையில்லை என்றும் தன் படங்களில் மட்டுமல்லாது வேறு எந்தப் படத்திலும் கீதா பாடக்கூடாது என்றும் அவர் உத்தரவிட்டார். அனைத்து பாடல்களும் கீதாவே பாடும் ஆர்-பார் எனும் படத்தை உடனடியாக இயக்கி நடித்துத் தயாரித்தார்.

1954ஆம் ஆண்டு வெளியான ஆர்-பார் (நெடுகே-குறுக்கே) திரைப்படம் மாபெரும் வெற்றியடந்து அவரது குறைகளைத் தீர்த்து வைத்தது. குக்கிராமத்திலிருந்து பம்பாய் வந்து வாடகைக் கார் ஓட்டி, முன்னுக்கு வர வழிதேடும் எழை இளைஞனை ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் துரத்தித் துரத்திக் காதலிக்கும் கதை. ஆனால் அவனுக்கு அக்காதல்களை விட முக்கியம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு ஒரு பணக்காரராக மாறுவது. கவர்ச்சிகரமான கதை, சுவாரசியமான இயக்கம். ஒரு நாயக நடிகனாக குரு தத்தின் இடத்தை இப்படம் உறுதி செய்தது. இசையமைத்த முதல் மூன்று படங்களிலும் தோற்றுப்போன ஓ பி நய்யார் ஆர்-பாரின் அனைத்து பாடல்களையும் பெருவெற்றிகளாக்கினார். கீதா தத் மற்றும் முஹம்மத் ரஃபி பாடிய மறக்கமுடியாத பாடல்கள் அற்புதமான காட்சிகளாகப் படமாக்கப்பட்து. பாடல் காட்சிகளைப் படமாக்குவதில் ஈடு இணையற்றவர் குரு தத் என்று நிரூபிக்க ஆரம்பித்த படமும் இதுதான். உலகத்தரமான ஒளிப்பதிவு, ஷ்யாமா, ஷகிலா, ஜானி வாக்கர் உள்ளிட்டர்களின் வலுவான நடிப்பு எல்லாம் சேர்ந்த ஆர்-பார், இசையமைப்பாளர் ஓ பி நய்யார், நடிகைகள் ஷ்யாமா, ஷகிலா ஆகியோர்களின் வெற்றிபெற்ற திரைப் பயணத்தைத் துவக்கி வைத்தது.  ஓர் இயக்குநர் தயாரிப்பாளர் நடிகராக உச்சத்துக்குச் சென்றார் குரு தத்.

விரைவில் தனது உதவியாளராகயிருந்த அப்ரார் அல்வி எழுதிய திரைக்கதையை வைத்து மிஸ்டர் & மிஸிஸ் 55 எனும் காதல் நகைச்சுவைப் படத்தைத் தயாரித்து இயக்கி நடித்தார். இந்தியத் திரையின் எக்காலத்திற்குமுரிய கனவுக்கன்னி மதுபாலா குரு தத்தின் கதா நாயகியாக நடித்தார். 1955ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் & மிஸிஸ் 55 படத்தில் மறக்க முடியாத காதல் ஜோடியாக இருவரும் காட்சியளித்தனர். குரு தத்தின் நுணுக்கமான நடிப்புத் திறமையும் மதுபாலாவின் பிரகாசமான வசீகர அழகும் இப்படத்தில்  ஒன்றிணைத்து. தான் நடிக்கும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் மௌனமான ஆழத்தையும் உணர்ச்சிபூர்வமான அதிர்வுகளையும் கொண்டுவரக்கூடியவராக குரு தத் மாறிவிட்ட படமும் இதுவே. பல தலைமுறை ரசிகர்களால் போற்றப்படும் படமாக மாறிய மிஸ்டர் & மிஸிஸ் 55 மாபெரும் வணிக வெற்றியை அடைந்தது. ஆனால் வெற்றியும் தோல்வியும் தனக்கு ஒன்றுதான் என்று குரு தத் எண்ணத் தொடங்கிய காலகட்டமும் இதுதான்.

இதற்கிடையே குரு தத்துக்கும் கீதா தத்துக்கும் மூன்று குழந்தைகள் பிறந்திருந்தனர். தருண், அருண், நீனா. குரு தத்தும் கீதா தத்தும் அறிவார்ந்த சமநிலை கொண்ட தம்பதிகளாக இருக்கவில்லை. குடும்பச் சுமைகளையோ கடமைகளையோ ஏற்றுக் கொள்ளும் மன அமைப்பு இல்லாத, வேலைப் போதை கொண்ட, அடிக்கடி மனச்சோர்வுகளுக்கு உள்ளாகும் படைப்பாளி குரு தத். மேலும் இரு குடும்பங்களுக்கும் இடையேயான சிக்கலினால் கீதா பிறர் படங்களில் பாடக்ககூடாது என்ற குரு தத்தின் நிபந்தனை. தன்னுடைய வேலைகள் முடிந்து தான் வீடு திரும்பும்போது கீதா வீட்டில் இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்ததாராம். குரு தத்தின் இந்தக் கெடுபிடிகள் கீதாவை நெரித்தன. கீதாவுமே பிடிவாதமான நிலைப்பாடுகள் கொண்டவர். முதல் ஐந்து ஆண்டுகள் அமோகமாகயிருந்த அவர்களது திருமண வாழ்க்கை மெல்ல விரிசல் விட்டு சீர்குலையத் தொடங்கியது.  

எந்த வெற்றிகளும் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த ஒ பி நய்யாரை ஆர்-பார் படத்திற்கு இசையமைப்பாளராக போடும்படி குரு தத்தைக் கட்டடாயப்படுத்தி நய்யாருக்கு வாய்ப்பு வழங்கினார் கீதா. இம்மாதிரியான கட்டாயப்படுத்தல்களை வெறுப்பவர் குரு தத். தனது படங்களின் இசைக்காக எஸ் டி பர்மனுடன் தொடரத் தான் விரும்பினார். கீதாவின் அந்த கட்டாயப்படுத்தல் ஓ பி நய்யாரின் எதிர்காலத்தையே மாற்றியமைத்தது. அடுத்த 15 ஆண்டுகள் ஹிந்தித் திரையின் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவராகக் கோலோச்சினார். குரு தத்தின் இயக்கத்தில் வந்த பல படங்களின் வணிக வெற்றியில் ஓ பி நய்யாரின் இசைக்கும் பங்கு இருந்தது என்பது உண்மை. அதே ஒ பி நய்யார் பின்னர் ஆஷா போஸ்லேயுடன் காதல் கொண்டு அவரை முதன்மைப் பாடகியாக முன்நிறுத்தி கீதாவை முற்றிலுமாகப் புறக்கணித்ததும் வரலாறு.

இசையமைப்பு மச்சான்

மூன்று படங்களின் வெற்றியோடு குரு தத் வலம்வந்த 1955 காலத்தில் தனது மூத்த அண்ணன் இசைய்மைப்பாளர் முகுல் ராயின் பெயரில் ஒரு தயாரிப்பு நிருவனத்தைத் தொடங்கினார் கீதா தத். ‘பேத்’, ‘தோ பகதூர்’ என சில படங்களுக்கு இசை அமைத்தாலும் முகுல் ராயின் பாடல்கள் கவனம் பெறவில்லை. அவரை ஓர் இசையமைப்பாளராகவே குரு தத் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இசையமைப்பாளராக அவரை நிலைநாட்டுவது தான் கீதாவின் நோக்கமாக இருந்தது. முகுல் ராய் தயாரிப்பாளரும் இசையமைப்பாளருமாக இருக்கும் தமது படத்தை குரு தத் இயக்கவேண்டும் என்று வற்புறுத்தினார் கீதா. முடியவே முடியாது என்றார் குரு தத். அதோடு அவரது குடும்பப் பூசல்கள் கைமீறிப் போயின.  ‘சைலாப்’ எனும் அந்தப் படத்தை குரு தத் இயக்கப்போவதாகவே அறிவித்து படவேலைகளைத் தொடங்கினார் கீதா. கீதாவையும் அவரது பாடலையும் நேசித்தவர் குரு தத். அந்த ஒரே காரணத்தால் வெறுமெனே தலையாட்டினார்.

கீதா பாலி மற்றும் வங்க நடிகரான அபி பட்டாசாரியா நடித்த அப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு ஒருமுறை கூட குரு தத் செல்லவில்லை என்றும் கீதா தத்தும் முகுல் ராயும் சேர்ந்து யார் யாரையெல்லாமோ இயக்குநர்களாக வைத்து அப்படத்தை முடித்ததாகவும் சொல்லப்படுகிறது. நடிகர் சுனில் தத்தின் (இவருக்கும் குரு தத்துக்கும் எந்த உறவும் இருக்கவில்லை) முதல் படமான ரயில்வே பிளாட்ஃபார்ம் ஐ இயக்கிவரான ரமேஷ் சைகாள் தான் சைலாப் படத்தை உண்மையில் இயக்கினார் என்று சொல்பவர்களும் உண்டு. சைலாப் பெரும் வணிகத் தோல்வி. பெரும் பணத்தை இழந்தார் கீதா. அதில் குரு தத்தின் பணமும் வீண்போனது. இப்படம் ‘சலிப்பின், முட்டாள்தனத்தின் உச்சம், பார்வையாளர்களுக்கு சரியான சித்திரவதை’ என்று விமர்சகர்கள் எழுதினர். அது துளியவுகூட குரு தத் பாணியிலான படம் அல்ல. அனைத்திலும் அரைகுறைத் தன்மைகொண்ட அத்தகைய ஒரு படத்தை குரு தத்தால் ஒருபோதும் இயக்க முடியாது. ஆனால் இன்றும் பலர் அதை குரு தத் இயக்கியதாகவே நம்புகிறார்கள். அப்படம் உண்மையில் குரு தத்தின் பெயருக்கு ஒரு களங்கம். குரு தத் அப்படத்தை இயக்காததால் கீதா மிகவும் வருத்தமடைந்தார். அவர்களது உறவு மேலும் சிக்கலானது. தன் வீட்டுக்குப் போவதையே குறைத்துக்கொண்டார் குரு தத்.

இயக்கிய ஐந்து படங்களில் நான்கும் மாபெரும் வெற்றிகளான குரு தத்தை வைத்து படங்களை எடுக்கவேண்டும் என பல தயாரிப்பாளர்கள் முன்வந்தனர். சிலரிடம் ஒப்பந்தம் போட்டு முன்பணத்தையும் பெற்றிருந்தார். தனது நண்பன் ஒரு நடிகனாக மாறியதை ஆமோதிக்கவில்லை என்றாலும் பாஸி மற்றும் ஜால் ஐ விட பெரிய வெற்றியை இருவரும் சேர்ந்து உருவாக்கவேண்டும் என்று விரும்பிய தேவ் ஆனந்த், அடுத்த படத்தை உடன் தொடங்கவேண்டும் என்று குரு தத்தை வர்புறுத்திக் கொண்டிருந்தார். ஆனால் குற்றம், காமெடி, ஆடல், பாடல் எனும் வட்டத்திலிருந்து வெளியேறி மாறுபட்ட எதாவது ஒன்றைத்தான் இனிமேல் இயக்குவேன் என்று உறுதியாக இருந்தார் குரு தத். அப்ரார் அல்வியை வைத்து ‘பியாசா’ (தாகத்தோடு இருப்பவன்) படத்தை எழுதத்தொடங்கினார். ஆனால் அந்தப் படத்தை உருவாக்க சில ஆண்டுகளாகும் என்பதால் தேவ் ஆனந்தை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கலாம், இயக்க வேண்டாம் என்று நினைத்தார். ஆனால் அதற்கும் சரியான கதை எதுவும் சிக்கவில்லை.

சென்னைக்காரியும் எருமை மாடும்

அப்போது அவரது படங்களின் ஹைதராபாத் வினியோகஸ்தர் மிஸ்ஸியம்மா என்று தமிழிலும் மிஸ்ஸம்மா என்று தெலுங்கிலும் வேறு வேறு நடிகர்களோடு ஒரே நேரத்தில் வெளியான படம் மாபெரும் வெற்றிபெற்று ஓடிக்கொண்டிருப்பதைச் சொன்னார். அது ரபீந்திரநாத் மித்ரா எழுதிய ஒரு பெங்காலி நாடகத்தின் திரையாக்கம் என்பதை அறிந்த குரு தத் அப்படத்தைப் பார்த்து நன்றாக இருந்தால் ஹிந்தியில் அதைத் தயாரிக்கலாம் என முடிவெடுத்தார். படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் ஹைதராபாத் சென்று மக்களோடு அமர்ந்து அப்படத்தைப் பார்க்க முடிவெடுத்தார். அவரது பெரிய ப்ளிமத் பெல்வெத்யூ (Plymouth Belvedere) காரில் துணை இயக்குநர் எழுத்தாளர் அப்ரார் ல்வி, மேலாளர் குருசாமி மற்றும் ஓட்டுநருடன் ஒருநாள் இரவு ஒன்பது மணிக்கு பம்பாயில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டார்.  

கொஞ்ச நேரத்திலேயே அந்த ஓட்டுனர் காரை ஒரு குப்பை மேட்டில் ஏற்றி இறக்கி விபத்தை நெருங்கியபோது அவருக்கு இரவில் சரியான கண்பார்வை இல்லை என்பதை உணர்ந்துகொண்டார்கள். பின்னர் அப்ரார் அல்விதான் இரவு முழுவதும் காரை ஓட்டினார். மறுநாள் காலை பத்து மணியளவில் அவர்கள் ஹைதராபாத்தை அடைந்தனர். சோர்வாக இருந்தாலும் அந்த ஓட்டுனரிடம் காரை மறுபடியும் ஒப்படைக்கத் துணிவில்லாததால் பாதி மயக்கத்தில் ஓட்டிக்கொண்டே இருந்தார் அல்வி. திடீரென்று ஒரு எருமை மாடு குறுக்கிட்டு வந்து காரின்மேல் பயங்கரமாக மோதியது. காரின் முன்பகுதி சுக்குநூறாகிப் போனது. ஒரு வழியாக் காரை ஒரு பணிமனையில் கொண்டு சேர்த்தார்கள். அதைச் சரிசெய்ய ஒரு வாரம் ஆகும் என்ற நிலையில் அவர்கள் ஹைதராபாத்தில் சிக்கிக்கொண்டனர்.

மிஸ்ஸம்மா படம் குரு தத்துக்குப் பிடிக்கவேயில்லை. அந்த படம் பின்னர் மீனா குமாரி மற்றும் ஜெமினி கணேசன் நடித்து ஹிந்தியில் மிஸ் மேரி’யாக வந்து பெரிய வெற்றியானதும் சுவாரசியம். குரு தத்தும் ல்வியும் விநியோகஸ்தரின் அலுவலகத்தில் மது அருந்திக்கொண்டே நேரத்தைக் கழித்தனர். அப்போது எதிரே உள்ள சாலையில் வரும் ​​ஒரு காரை ஒரு கும்பல் துரத்தி வருவதைக் கண்டார்கள். காரிலிருந்து பேரழகியான ஒரு பெண் வெளியே வந்து எதிரே உள்ள கட்டிடத்திற்குள் நுழைந்தாள். அந்தப் பெண் யார் என்றும் அவள் பின்னால் கூட்டம் வந்தது எதற்கு என்றும் குரு தத் விசாரித்தார். அவள் ஒரு நடனப் பெண் என்றும் சில மாதங்கள் முன்பு வெளியான தெலுங்கு படம் ‘ரோஜுலு மாராயி’ இல் அவர் ஆடிய ஆட்டமும் பாட்டும் அப்படத்தை பெரும் வெற்றி பெறச் செய்ததையும் அறிந்துகொண்டார். அப்பெண்ணின் பெயர் வஹீதா ரஹ்மான்.

அவளைக் கண்டவுடன் பிடித்துப்போன அப்ரார் அல்வி அவளுக்கு ஹிந்தி பேசத் தெரியுமா என்று கேட்டபோது, எல்லாமே பேச வைக்கலாம் என்றார் ​​விநியோகஸ்தர். தமது படங்களில் நடிக்க வைக்கத் தகுதி இருக்கிறதா என்று பரிசீலிக்க வஹீதாவை ஒருமுறை நேரடியாகச் சந்திக்கலாமா என்று குரு தத்திடம் கேட்டார் அல்வி. பெரிய ஆர்வம் எதுவும் காட்டவில்லையென்றாலும் ஒப்புக்கொண்டார். விநியோகஸ்தர் எதிர் கட்டத்திற்கு செய்தியை அனுப்பினார். வஹீதா வந்தார். ஆனால் அச்சந்திப்பு சங்கடமாகத் தான் இருந்தது. ஒப்பனை இல்லாமல் மிகச் சதாரணமாகத் தோன்றினார் வஹீதா. அவருக்குப் பேச்சும் சரியாக வரவில்லை. முக்கலும் முனகலுமாக ஒற்றை எழுத்துக்களிலேயே பேசினார். விரைவில் அங்கிருந்து வெளியேறினார். இருப்பினும் அவரது திரைப்பட நடனத்தைப் பார்க்க விநியோகஸ்தர் குரு தத்தை நிர்பந்தித்தார். செய்வதற்கு வேறு எதுவும் இல்லாததால் வேண்டாவெறுப்போடு ஒப்புக்கொண்டார். பாடல் காட்சியின் படச்சுருள் வந்து சேருவதற்குள்ளே நிறைய பீர் குடித்துவிட்டு மிதந்து கொண்டிருந்தார் குரு தத். ஆனால் பாடல் திரையிட்டதும் வஹீதா மிகவும் அழகான, நளினமான நடனப்பெண் என்பதை ஒப்புக்கொண்டார். மீண்டும் ஒருமுறை சில நிமிடங்கள் வஹீதாவைச் சந்தித்த பிறகு பம்பாய் திரும்பினார். ஆனால் விரைவில் அவர் வஹீதாவை மறந்தே போனார்.

வஹீதா ரஹ்மான் சென்னையில் தமிழ் கலர்ந்த தக்கினி (ஒரு வகையான உருது) மொழியைப் பேசும் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். எட்டு வயதிலிருந்தே முறையாகப் பரத நாட்டியம் பயின்று வந்தார். மாவட்ட அரசு அதிகாரியாக இருந்த அவரது அப்பா முகம்மது அப்துர் ரஹ்மான், வஹீதாவுக்கு 13 வயது இருக்கும்போதே இறந்து போனார். அவர் இருக்கும்போதே வஹீதாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கியிருந்தாலும் அவர் அதை ஆதரிக்கவில்லை. தந்தையின் மரணத்தோடு நோய் வயப்பட்டுபோன தாயும் படிப்பு எட்டாத மூன்று அக்காக்களும் மட்டுமே இருந்த அக்குடும்பத்துக்கு வஹீதாவின் நடனத்திறனை வைத்துக்கொண்டு வாழ வழி தேடுவதைத் தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை. ஒரு மருத்துவராக வரவேண்டும் என்ற தனது ஆசயைக் கைவிட்டு சினிமாவில் நடனமாடத் தொடங்கினார் வஹீதா.

அவர் நடித்து புகழ்பெற்ற, ஜிக்கி பாடிய ‘கள்ளம் கபடம் தெலியனிவாடா.. ஏருவாகா சாகரோ ரன்னோ சின்னண்ணா’ தெலுங்குப் பாடல் சில மாதங்களில் ‘கள்ளம் கபடம் தெரியாதவனே… ஏறு பூட்டிப் போவாயே அண்ணே சின்னண்ணே’ என்று அப்படத்தின் தமிழ் வடிவமான காலம் மாறிப் போச்சு வில் வெளியாகிப் புகழடைந்தது. ஆனால் அதற்கும் முன்பே படப்பிடிப்பு நடந்த, எம் ஜி ஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் ‘சலாம் பாபு சலாம் பாபு என்னைப் பாருங்க’ என்ற பாடலுக்கு தான் தனது 14 வயதில் முதன்முதலில் சினிமா நடனமாடியிருந்தார் வஹீதா.

தாகத்துடனிருந்த சி ஐ டி

தேவ் ஆனந்தின் ஒவ்வொரு மணி நேரமும் விலையுயர்ந்ததாக இருந்தது அப்போது. குரு தத்துக்கு அவர் அளித்த தேதிகள் வீணாகிக் கொண்டிருந்தது. ஆதலால் உடனடி தனது உதவியாளர் ராஜ் கோஸ்லாவை இயக்குநராக வைத்து குற்றவியல் படமான சி ஐ டி (CID) தொடங்கினார். அதன் இயக்க மேற்பார்வை தானே செய்வதாகக் கூறித் தான் தேவ் ஆனந்தை ஒப்புக்கொள்ள வைத்தார். நடனமாடி கதா நாயகனை மயக்கும் வில்லத்தனம்கொண்ட பெண்ணாக நடிப்பதற்கு ஒரு நடிகைக்காகத் தேடும்போது ​​திடீரென்று ஹைதராபாத்தில் சந்தித்த அந்த நடனப் பெண்ணை நினைவு கூர்ந்தார் குரு தத். வஹீதா ஹ்மான் பம்பாய்க்கு அழைக்கப்பட்டார். அதற்குள்ளே அவர் கதா நாயகியாக நடித்த முதல் படம் ஜெயசிம்ஹா தெலுங்கில் வெளியாகிவிட்டிருந்தது. கதாநாயகன் தெலுங்கின் மாபெரும் நட்சத்திரம் என் டி ராமராவ். ஆனால் தென்னிந்தியப் படங்களை விட ஹிந்தியில் நடிக்க ஆசைப்பட்ட வஹீதா அவரது அம்மாவுடன் மும்பாய் சென்று குரு தத்தைச் சந்தித்தார். உடனடியாக குரு தத் பிலிம்ஸுடன் 5 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சில நாட்களிலேயே சி ஐ டி இல் நடிக்கத்தொடங்கினார். ஆனால் அவரது நடிப்பு தேவ் ஆனந்துக்கும் இயக்குநர் ராஜ் கோஸ்லாவுக்கும் அறவே பிடிக்கவில்லை.

குரு தத்தைப் பொறுத்தவரையில் வஹீதாவுக்கு அது தான் உருவாக்கிக் கொண்டிருக்கும் காவியமான பியாசா (தாகத்தோடு இருப்பவன்) படத்தில் நடிப்பதற்கான பயிற்சிக் களம். குரு தத்தும் வஹீதா ஹ்மானும் ஒருவரை ஒருவர் உணர்ந்துகொண்டது ஒரு காதல் கதையின் அழகான தொடக்கம் போலவே நிகழ்ந்தது. வஹீதா வலுவான விருப்ப வெறுப்புகளும் திடமான கருத்துக்களும்கொண்டவளாக இருந்தாள். வயது வெறும் 16 என்றாலும் ஆண்களை தூரத்திலேயே நிறுத்துவதில் கைதேர்ந்தவள். அவள் விரும்பாத எதையுமே யாராலையும் அவளைச் செய்ய வைக்க முடியாது. ஹிந்தியில் நடிக்க ஒப்பந்தமானவுடன் அவளது பெயரை சினிமாவுக்காக மாற்றியமைக்க பெயர் மாற்ற நிபுணர்கள் வந்தனர். முஸ்லிம் பெயர்கொண்டவர்களை ஹிந்துப் பெயருக்கு மாற்றுவது அப்போது ஹிந்தி சினிமாவின் வழக்கம். யூசஃப் கான் என்ற இயற் பெயர் கொண்டவர் தன் பெயரை திலீப் குமார் என்று மாற்றி விட்டிருந்தார். ஆனால் வஹீதா தனது பெயரை மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை.

மஹாஜபீன் பானோ மீனா குமாரியாக, சுருமி ஜமால் ஷேக் சுரய்யாவாக, மும்தாஜ் ஜெஹான் தெஹ்லவி மதுபாலாவாக, குற்ஷித் அக்தர் ஷியாமாவாக, பாத்ஷா பேகம் ஷகீலாவாக மாறலாம் என்றால் வஹீதா ரஹ்மான் ஏன் ‘சுர்பாலா’ ஆகவோ ‘ஜீவா பாலி’ ஆகவோ மாறக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்கள். “என் பெயர் வஹீதா. என்னால் வேறு யாராகவும் மாற முடியாது, தமிழிலும் தெங்கிலும் வஹீதா என்ற பெயரோடவே நடித்தேன். அங்கே எந்தச் சிக்கலும் உருவாகவில்லை. எனக்கு என் அப்பா வைத்த பெயர் இது. அதை மாற்ற நான் தயாராக இல்லை. உங்களுக்கு இந்தப் பெயரைப் பிடிக்கவில்லை என்றால் எனக்கு உங்கள் படம் வேண்டாம். இப்போதே சென்னை கிளம்புகிறேன்” என்றார்.  அவளுடைய எதுக்குமே அஞ்சாத அந்தக் குணத்தில் மயங்கிப்போனார் குரு தத். தான் திருமணமானவன், தனக்குக் குழந்தைகள் இருக்கிறது என்பதையெல்லாம் மறந்து வஹீதாவை மாக விரும்ப ஆரம்பித்தார்.

சி ஐ டி படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த காலத்தில் ஏற்கனவே நோய்வயப்பட்டிருந்த வஹீதாவின் தாய் மும்தாஜ் பேகம் இறந்துபோனார். ஆதோடு வஹீதா ஓர் அனாதையாகவே மாறிவிட்டார். மூன்று அக்காக்களை வாழவைக்கும் சுமையும் வஹீதாவின்மேல் விழுந்தது. இந்நிலையில் வஹீதாவுக்கு வழித் துணையும் வழிகாட்டியுமாக மாறினார் குரு தத். சி ஐ டியைத் தொடர்ந்து வந்த பெரும்பாலான தேவ் ஆனந்த் படங்களின் கதா நாயகியாக ஆரம்பத்தில் அவருக்கு அறவே பிடிக்காத வஹீதா வந்ததுக்குக் காரணமே குரு தத்தின் வழிநடத்தல் ஒன்று தான். வஹீதாவோ தத்தின் சிறந்த கலைப் படைப்புகளில் நடித்து அழகையும் ஆற்றலையும் மிச்சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தினார். பியாசா திரப்படம் அதற்கான அத்தாட்சி.

குடும்பத்தாலும் சமூகத்தாலும் நிராகரிக்கப்பட்ட திறமைசாலியான ஒரு கவிஞன். விஜய் (வெற்றி) என்று பெயர்கொண்டிருந்தாலும் அவனது கலையும் வாழ்வும் படுதோல்வி. குலாபோ என்ற விலைமாதிடமிருந்து மட்டும்தான் அவனுக்கு அன்பும் ஆதரவும் கிடைக்கிறது. அவன் இறந்துபோனதாக செய்தி வந்த பின்னர் அவனது கவிதைகள் பிரபலமடைய ஆரம்பிக்கிறது. சாவுக்கு பின் அவன் ஒரு பெருவெற்றிபெற்ற கவினாக மாறுகிறான். உண்மையில் அவன் இறக்கவில்லை. உயிருடன் திரும்பி வரும் அவனை இந்தச் சமூகத்திற்குத் தேவையில்லை. தனது 22ஆம் வயதிலேயே இப்படத்தை உருவாக்க ஆரம்பித்திருந்தார் குரு தத். அப்போது அவர் எழுதிய கஷ்மஷ் என்ற சிறுகதையின் கருத்தையும் பாடலாசிரியர் கவிஞர் சாஹிர் லுதியன்வியிக்கும் கவிஞரும் எழுத்தாளருமான அம்ரிதா பிரீதத்திற்கும் இடையேயான தோல்வியுற்ற காதலையும் கலந்து செய்த கதை. படப்பிடிப்பு தொடங்கும் வரையிலும் கதையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. வஹீதா உள்ளே வந்ததும் குலாபோ எனும் விலைமாதின் பாத்திரத்துக்கும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. படத்தின் முடிவில் கதாநாயகன் பொருள் முதல் சார்ந்த சமூக யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு சமரசம் செய்ய வேண்டும் என்று அப்ரார் அல்வியும் விநியோகஸ்தர்களும் வலியுறுத்தினார்கள். ஆனால் குரு தத் அதை ஏற்கவில்லை.

பியாசாவில் வஹீதாவின் கதாபாத்திரம் குலாபோ என்றே பெயர்கொண்ட ஒரு நிஜ வாழ்க்கை விலைமாதிலிருந்து எடுக்கப்பட்டது. மதுபாலா அதை நடிக்கவேண்டும் என்று தான் தத் விரும்பினார். ஆனால் ஒரு சிவப்பு விளக்குப் பகுதி விலைமாதாக நடிக்க மதுபாலா விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. மாலா சின்ஹா நடித்த முதன்மைக் கதாநாயகியின் பாத்திரம் நடிக்க வேண்டியிருந்தவர் நர்கீஸ். இரண்டில் ஒரு பெண்ணாக நடிக்க அவர் விருப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. மதுபாலாவின் பாத்திரம் தனக்கு வேண்டும் என்று நர்கீசும் நர்கீசின் பாத்திரம் தனக்கு வேண்டும் என்று மதுபாலாவும் கேட்டதாகவும் அதை குரு தத் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இன்னொரு செய்தியும் சொல்லப்படுகிறது.

பியாசாவின் முக்கிய வேடத்தில் தானே நடிக்க குரு தத் விரும்பவில்லை. திலீப் குமார் தான் அப்பாத்திரத்தில் வரவேண்டும் என்று நெடுநாள் அவருக்காகக் காத்திருந்தார். ஆனால் 'சோகக்கதைகளின் மன்னன்' என்று அழைக்கப்பட்ட திலீப் குமார் தீவிரமான சோகப் படங்களில் தொடர்ந்து நடிப்பதால் தனது உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் இப்படம் உள்சோர்வின் உச்சமாக இருப்பதால் தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் சொல்லி மறுத்து விட்டார். றுதியில் குரு தத் தானே அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்தார். அது ஏற்கனவே சோர்வுடைய அவரது மனநிலையை மேலும் மோசமாக பாதித்தது என்பதும் உண்மை.

கல்கத்தாவில் உள்ள நிஜமான சிவப்பு விளக்குப் பகுதி இடங்களில் அக்காட்சிகளைப் படமாக்கத்தான் விரும்பினார் ஆனால் முதல்நாள் படப்பிடிப்பின்போதே ஒரு பெண் தரகர் கும்பலால் படக்குழு தாக்கப்பட்து. பின்னர் அங்கே எடுத்த புகைப்படங்களின் அடிப்படையில் பம்பாயில் படப்பிடிப்புத் தளத்தை உருவாக்கினார்கள். அதில் அமைக்கப்பட்ட இருளும் வெளிச்சமும் நிழலும் வழியாக அப்படத்தை ஒரு சோகக் கவிதையாகவே படமாக்கியது வி கெ மூர்த்தியின் கேமரா. பியாசா அந்த ஆண்டின் மிகப்பெரிய வணிக வெற்றியாக மாறியது. குரு தத்தின் திரைக்கலையின் உச்சமாக அது போற்றப்பட்டது. வஹீதா ரஹ்மான் இந்தியத் திரையின் உன்னதமான நடிகையாக அங்கீகாரம் பெற்றார்.

பியாசா மிகப் பெரிய இசை வெற்றியும் கூட. ஒன்றாகப் பணிபுரிய மறுத்துக்கொண்டிருந்த எஸ் டி பர்மனையும் சாஹிர் லுதியான்வியையும் இப்படத்தில் மீண்டும் இணையச் செய்தார் குரு தத். அவர்கள் சேர்ந்து பணியாற்றிய இறுதிப் படமும் இதுவே. படத்தின் பத்து பாடல்களுமே மிகவும் புகழடைந்தன. ஹேமந்த் குமார் பாடிய ‘ஜானே வோ கைஸே’, முஹம்மத் ரஃபி பாடிய ‘ஹம் ஆப் கீ ஆங்கோம் மே’, ‘தங்க் ஆ சுகே ஹே’ மற்றும் ‘சர் ஜோ தெரா சக்ராயே’ பாடல்கள் ஒருபோதும் அழியாதவை. திரையில் வஹீதாவுக்கும் மாலாவுக்குமான எல்லாப் பெண்குரல் பாடல்களுமே கீதா தத் பாடினார். 'ஜானே க்யா தூனே கஹி' பாடலில் கீதா அளித்துள்ள அபூர்வமான அழகை மறக்க முடியாது. இன்னொரு பாடல் 'ஆஜ் ஸஜன் மோஹே' யில் கீதாவின் உச்சரிப்பில் உள்ள மெல்லிய வங்காளத் தன்மையைப் பயன்படுத்தி, ஒரு வங்காளப் பக்திப்பாடலை அழகிய காதல் பாடலாக மாற்றினார்கள். வஹீதா ரஹ்மான் குரு தத்தைப் பார்த்து பாவனைகள் மூலம் தன் காதலை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தில்தான் அது படமாக்கப்பட்டிருந்தது.

பியாசாவைத் தொடர்ந்து, பிற்காலத்தில் ஷோலே போன்ற அதிரடி வெற்றிகளைத் தயாரித்த ஜி பி ஸிப்பியின் தயாரிப்பில், பிரமோத் சக்ரவர்த்தி இயக்கத்தில் 12 ஓ க்ளாக் எனும் படத்தில் கதா நாயகனாக நடித்தார் குரு தத். வழக்கறிஞரான ஒரு துப்பறிவாளனின் அப்பாத்திரம் பியாசாவின் துயரக் கதாபாத்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கலகலப்பும் சுறுசுறுப்பும் கொண்ட பாத்திரம். மிகச்சிறப்பாகவே நடித்தார். அப்படமும் சிறந்த வெற்றி. தயாரிப்பாளரும் இயக்குநரும் வெளியே இருந்து வந்தவர்களாக இருந்தாலும் இப்படத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளுமே ‘குரு தத் குழு’ தான் கையாண்டது. பாடல்களை எழுதியவர்கள் சாஹிர் மற்றும் மஜ்ரூ. ஓ பி நய்யார் இசையமைத்தார். குரு தத் மீதான ஆழ்ந்த காதலை வெளிப்படுத்தி வஹீதா ரஹ்மான் திரையில் பாடும் பெண்குரல் பாடல்களை கீதா தத் பாடினார்.

காகித ரோஜா

குரு தத்தும் வஹீதா ஹ்மானும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டது மிகவும் தனித்துவமான ஓர் உறவு. ஆனால் அதே வீச்சோடு கீதாவையும் தான் நேசித்ததாக குரு தத் சொல்லியிருக்கிறார். குரு தத் மீதான கீதாவின் காதல் தீவிரமானதோர் உடைமை உணர்வாக மாறியது. அவருடன் பணிபுரிந்த ஒவ்வொரு நடிகையையும் கீதா கண்காணிக்கத் தொடங்கினார். எல்லாவற்றிலும் துரோகமும் சந்தேகமும் மட்டுமே அவரால் பார்க்க முடிந்தது. மிகவும் கொந்தளிப்பான ஒரு திருமண வாழ்க்கையைத்தான் அவர்கள் நடத்தினர். அடிக்கடி சண்டைகள் நிகழும். கீதா குழந்தைகளை இழுத்துக்கொண்டு அவருடைய தாயின் வீட்டிற்குச் செல்வார். திரும்பி வரச் சொல்லி குரு தத் கெஞ்சுவார். இது ஒரு வழக்கமாகவே மாறி விட்டது. இறுதியில் கீதாவை சமாதானம் செய்யும் பொருட்டு அவரே கதாநாயகியாக நடிக்கும் 'கெளரி' என்ற படத்தைத் தொடங்கினார் குரு தத். அது இந்தியத் திரையின் முதல் சினிமாஸ்கோப் படமும் கூட. ஆனால் ஒரிரு நாள் படப்பிடிப்புக்குப் பிறகு அப்படம் கைவிடப்பட்டடது. காரணம் படப்பிடிப்பில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நிகழ்ந்த தொடர் பூசல்கள்.

இந்தக் காலகட்டத்தில்தான் ‘காகஸ் கே பூல்’ எனும் பெரிய படத்தைத் தயாரித்து இயக்கி நடிக்க இறங்கினார் குரு தத். கதைக்களமாக சினிமாத் துறையையே வைத்துக்கொண்டார். சினிமாத்தொழிலைக் கதைக்களமாக் கொண்ட இந்தியாவின் முதல் திரைப்படம் காகஸ் கே பூல். திரைத்துறையில் தனது ஆரம்பகால அனுபவங்கள், தனது குருநாதர்களாகயிருந்த கியான் முகர்ஜி, அமியா சக்ரவர்தி போன்றோரின் வாழ்க்கை ஆகியவற்றைக் கதையில் சேர்த்துக்கொண்டார். கியான் முகர்ஜிக்கான தனது அஞ்சலிதான் காகஸ் கே ஃபூல் என்று பின்னர் குறிப்பிட்டார் குரு தத். சினிமாத் துறை தனக்குக் கொடுத்த வலிகளை தாங்கிக்கொள்ள இயலாமல் 47ஆவது வயதில் இறந்துபோனவர் கியான் முகர்ஜி.

படத்தில் மிகப்பிரபலமான திரைப்பட இயக்குநர் சுரேஷ் சின்ஹா திருமணத்துக்கு வெளியே நிகழும் ஒரு காதல் உறவினால் தனது வாழ்க்கையையும் மகளையும் இழந்து, திரைத்துறையில் தோல்வியுற்று, அனைவராலும் மறக்கப்பட்டு, ஏழ்மையிலும் தனிமையிலும் உழன்று இறுதியில் ஆள் கூடடத்தில் ஒருவனாக நடிக்கும் வாய்ப்பாவது கிடைக்குமா என்று, ஒரு காலத்தில் தான் ஆட்சி செய்த அதே ஸ்டுடியோவுக்கு வருகிறார். அங்கேயே இறந்துவிடுகிறார். அவர் யாரென்று அறிந்துகொண்ட பின்னரும் கூட அவரது சடலத்தைத் தூக்கி வெளியே போட்டபின் சர்வசாதாரணமாகவே படப்பிடிப்பு தொடர்கிறது.

துயரத்தையும் மனச்சோர்வையும் நோக்கியே நகரும் குரு தத்தின் மன அமைப்பு, திரைப்படத் துறையின் மீதான அவரது அவநம்பிக்கை, புகழின் நியலையற்ற தன்மை, வஹீதாவுடன் அவருக்கு இருந்த காதலின் விளைவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சுயசரிதை பிரதிபலிப்பாகத்தான் இன்றுவரைக்கும் இந்தப் படம் பலரால் பாற்கப்படுகிறது. ஆனால் இப்படத்துக்கும் குரு தத்தின் சொந்த வாழ்க்கைக்கும் நேரடியான சம்பந்தம் இல்லை, அது முற்றிலுமாக கியான் முகர்ஜியின் வாழ்க்கைக் கதை என்று சொல்பவர்களும் உண்டு. அது தத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதை அல்ல என்றே சொல்லலாம். ஏனென்றால் இரண்டு பெண்களுக்கு நடுவே காதலிலும் காமத்திலும் சிக்கித் தவிக்கும் ஆண்களின் கதைதான் பாஸி, ஜால், ஆர்-பார், பியாசா போன்ற தனது முந்தைய வெற்றிப் படங்களிலும் குரு தத் சொன்னார். மேலும் காகஸ் கே பூல் கதாநாயகனைப்போல் தோல்வியால் பாதிக்கப்பட்டவரே அல்ல குரு தத். கிட்டத்தட்ட அவரது திரை முயற்சிகள் அனைத்துமே பொருளாதார வெற்றிகள். தனது தொழிலில் அதுவரைக்கும் தோல்வியைச் சுவைத்தவரல்ல அவர். ஆனால் காகஸ் கே பூல் (காகித மலர்) மிகப்பெரிய தோல்வியாக மாறியது.

இந்தியாவின் முதன்முதல் சினிமாஸ்கோப் திரைப்படமான காகஸ் கே பூல் தயாரிக்க பல புதுக் கருவிகளை வெளி நாட்டிலிருந்து வரவைத்திருந்தர். தனது திரைக்கலையின் உச்சம் என்றே எண்ணி பெரும் பணத்தையும் அசாத்தியமான ஆற்றலையும் உழைப்பையும் முதலீடு செய்து குரு தத் எடுத்த காகஸ் கே பூல் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படுதோல்வியாக மாறியது குரு தத்துக்கு கடும் ஏமாற்றத்தையும் வலியையும் அளித்தது. இனிமேல் ஒருபோதும் தான் திரைப்படங்களை இயக்கப்போவதில்லை என்று அவர் முடிவெடுத்தார். அவர் தயாரித்து இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த படங்கள் அனைத்துமே மற்ற இயக்குநர்களால்தான் பிற்பாடு இயக்கப்பட்டன.

காகஸ் கே பூல் பல சிறப்புகளைக் கொண்டிருந்த படம். வி கே மூர்த்தியின் அசாத்திய ஒளிப்பதிவின் உச்சமாக இன்றும் அது விளங்குகிறது. அவருக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது. சிறந்த கலை இயக்கத்திற்கான பிலிம்பேர் விருதையும் படம் வென்றது. தனது முதல் படமான பாசியில் ஆடை வடிவமைப்பாளராக குரு தத் அறிமுகம் செய்பானு அதைய்யா காகஸ் கே பூல் வழியாக பெரும் கவனத்தைப் பெற்றார். பின்னர் காந்தி (1982) படத்திற்கு ஆடை அலங்காரத்துக்கான ஆஸ்கார் விருதை இவர் வென்றார். எஸ் டி பர்மனின் அலாதியான இசை. பின்னர் பிரபல நடிகையாக மாறிய ஷபானா ஆஸ்மியின் தந்தை பெயர்பெற்ற உருதுக் கவிஞர் கைஃபி ஆஸ்மி பாடல்களை எழுதினார். ரஃபி பாடிய தேகி ஜமானே கி யாரி, உட் ஜா பியாசே பவாரே போன்றவை காலத்தால் அழியாத பாடல்கள்.

வக்த் னே கியா’ பாடல் எல்லாக் காலத்திலும் மிகவும் விரும்பப்படும் ஒரு ஹிந்தி திரைப்படப் பாடல். அதன் காட்சியமைப்பும் பின்னர் பெரும் பாராட்டைப் பெற்றது. பெரிய கண்ணாடிகள் மற்றும் இயற்கை ஒளியை மட்டுமே பயன்படுத்திய ஒளியமைப்பு இப்பாடலினுடையது. அதை உட்பட எல்லாப் பெண் குரல் பாடங்களையும் கீதாவே பாடினார். வேடிக்கை என்னவென்றால் அப்பாடல்கள் எல்லாமே வஹீதா ரஹ்மான் குரு தத்தைப் பார்த்துப் காதல் பரவசத்தில் பாடுவதாகவே ஒலித்தன. குரு தத் வஹீதா மீது வெறித்தனமான காதல் கொண்டிருந்த காலம் அது. அப்படத்தின் ஆழ்ந்த சோகப் பாடல்களுக்கு திரையில் வஹீதா வாய் அசைக்கும்போது கீதாவே தன்னுடைய நெஞ்சக் கொதிப்பை அழுது வெளிப்படுத்துவது போல் அவை ஒலித்தன. குரு தத் முற்றிலுமாக் கீதாவை உதறி வஹீதாவைத் தேடிச் சென்ற காலம் இதுதான். கீதா குழந்தைகளுடன் குரு தத்தின் வீட்டை விட்டு வெளியேறினார்.

காகஸ் கே பூல் பிற்பாடு இந்தியாவில் உருவான மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது. உலகத்திலேயே சிறந்த படங்களின் பல பட்டியல்களில் அது இடத்தைப் பிடித்தது. இன்றளவும் ஆகச் சிறந்த 20 இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக அது கொண்டாடப்படுகிறது. இத்தாலிய இயக்குநரான ஃபிரெடெரிகோ ஃபெல்லினியின் 8½ க்கு நிகரான ஒரு படமாகக் குறிப்பிடப்பட்டு உலகம் முழுவதுமுள்ள நூற்றுக்கணக்கான திரைப்படக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் காகஸ் கே பூல் இடம் பெற்றிருக்கிறது.

முழுநேர நடிகர்கள்

காகஸ் கே பூலினால் உருவான பொருளாதாரச் சரிவை சரி செய்ய பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார் குரு தத். இசுலாமிய சமூகப் பின்புலம்கொண்ட திரைப்படங்களின் ஆகச்சிறந்த இயக்குநராக அறியப்பட்ட எம் சாதிக் இயக்கத்தில் சௌதுவீன் கா சாந்த் (பதினாங்காம் இரவின் நிலவு) எனும் படத்தைத் தயாரித்து நடித்தார். லக்னோ நகரின் இசுலாமியக் கதைக்களம். வஹீதா ரஹ்மான் தான் கதா நாயகி. சாந்த் அல்லது நிலவு என்பது வஹீதாவை அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அழைக்கும் செல்லப் பெயர்! தலைப்புக் காட்சியில் வஹீதாவின் பெயர் குரு தத்தின் பெயருக்கு மேலேயே போடப்பட்டிருந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்.

காகஸ் கே பூலில் பணியாற்றிய பெரும்பாலான தொழில் நுட்பக் கலைஞர்களையும் நடிகர்களையும் இப்படத்தில் தவிர்த்தார் குரு தத். ஒளிப்பதிவு நரிமான் இறானி, இசை ரவி, பாடல்கள் ஷகீல் பதயூனி என புதிய பலர் உள்ளே வந்தனர். ரவி இசையமைத்த 10 பாடல்களில் ஒரேயொரு பாடல் மட்டும் வெற்றி பெற்றது. ரஃபி பாடி குரு தத் நடித்த ‘சௌதுவீன் கா சாந்த் ஹோ’ எனும் அப்பாடல் இன்று வரைக்கும் இந்தியத் திரையிசையின் ஆகச்சிறந்த பாடல்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பிரதான பெண் பாடகராக ஆஷா போஸ்லே முன்நிறுத்தப்பட்ட இப்படத்தில் ஒரு உதிரிப் பாத்திரத்தின்மேல் சித்தரிக்கப்பட்ட முக்கியத்துவமற்ற பாடல் மட்டுமே கீதாவுக்கு வழங்கப்பட்டது.

கீதா பாடல் பதிவுக்கும் ஒத்திகைக்கும் உரிய நேரத்தில் வருவதில்லை என்ற புகார்கள் இசைவட்டாரத்தில் எழுந்த நாட்கள். குரு தத்துடனான கீதாவின் கசந்துபோன மண உறவு அவரது இசை வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. கீதா மதுப் பழக்கத்திற்கு அடிமையானார். அவர் இசைப் பதிவுகளுக்கு போக முடியாத நிலை உருவானது. ஒத்திகைகள்ககு வராததால் பாடல்கள் பதிவுகள் தள்ளிப்போயின. அக்காலத்தில் லதா மங்கேஷ்கருடன் கருத்து வேற்றுமை ஏற்பட்ட எஸ் டி பர்மன் கீதாவைத்தான் தன் முதன்மைப் பாடகியாக முன்னிறுத்த விரும்பினார். ஆனால் எஸ் டி பர்மன் போன்ற ஒரு கச்சிதவாதியின் இசையில் கடும் பயிற்சிகளை மேற்கொள்ளும் மனநிலையில் கீதா இல்லை. வேறு வழியில்லாமல் பர்மன் அப்போது தீவிரமாக முயலும் நிலையில் இருந்ஆஷா போஸ்லேயைத் தேர்வு செய்தார். மெல்ல மெல்ல கீதாவின் இடத்தை முற்றிலுமாகக் கைப்பற்றிக் கொண்டார் ஆஷா.

எஸ் டி பர்மன் எப்போதுமே குரு தத்தின் பெருவிருப்ப இசையமைப்பாளர். ஆனால் பியாசாவிற்கு பிறகு சொந்த வாழ்கையின் சாயலுடைய கதைகளை மனச்சோர்வளிக்கும் படங்களாக எடுக்கக் கூடாது என்று எஸ் டி பர்மன் தந்தை ஸ்தானத்திலிருந்துகொண்டு குரு தத்துக்கு அறிவுரை சொன்னார். அப்போது குரு தத்துக்கு 32 வயது. பர்மனோ 50 வயதைத் தாணிடியவர். ஆனால் அவரது அறிவுரையைப் பொருட்படுத்தாமால் மனச்சோர்வின் உச்சமான காகஸ் கே பூலின் இசைக்காக மீண்டும் பர்மனை அணுகினார் குரு தத். கெஞ்சி மன்றாடி அவரைச் சம்மதிக்க வைத்தார். “இதுதான் நான் உன்கூட சேர்ந்தியங்கும் இறுதிப் படம், இனிமேல் என்னிடம் நீ வராதே” என்று சொல்லிவிட்டு காகஸ் கே பூலின் இசை வேலைகளை முடித்துக் கொடுத்தார் பர்மன். பின்னர் ஒருபோதும் அவர் குரு தத்துடன் சேர்ந்தியங்கவில்லை.

காவியத் தன்மைகொண்ட படங்களுக்கு இசையமைக்க ரவியோ ஓ பி நய்யாரோ ஒத்துவராது என்றே நினைத்தார் குரு தத். அடுத்ததாகத் தான் தயாரித்து நடிக்கப்போகும் சாஹிப் பீபி ஔர் குலாம் ஒரு பழங்காலக் காவியக் கதை. 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக பிரபல பெங்காலி எழுத்தாளர் பிமல் மித்ரா எழுதிய நாவலின் திரையாக்கம். தனது சிஷ்யனும் உதவியாளனுமான அப்ரார் அல்வி அதை இயக்கப் போகிறார். மீனா குமாரியும் வஹீதா ரஹ்மானும் குரு தத்தும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆனால் அதன் இசையை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தார் குரு தத். இறுதியில் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான ஹேமந்த் குமாரை அதற்காக தேர்ந்தெடுத்தார்.

கீதா தத்தின் பாடும்முறைக்குத் தீவிர ரசிகராக இருந்த ஹேமந்த் குமார் பெண்குரல் பாடல்கள் மட்டுமே இருக்கும் அப்படத்தின் ஏழு பாடல்களையும் கீதா தான் பாடவேண்டும் என்று வலியுறுத்தினார். குரு தத் அதை எதிர்க்கவில்லை. பின்னர் ஹேமந்த் குமார், கீதா முறையாக ஒத்திகைகளுக்கு வராததால் பாடல்கள் பதிவு செய்ய முடியாமல் தான் தத்தளித்ததாகச் சொல்லியிருக்கிறார். நான்கு பாடல்கள் ஆஷாவே பாடினார். மிகவும் சிரமப்பட்டு மூன்று பாடல்கள் கீதாவைப் பாட வைத்தார். சலே ஆவோ சலே ஆவோ, நா ஜாவோ சய்யான், பியா ஐசோ ஜியா மே சமாய் எனும் அம்மூன்று பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன. இவற்றில் எதுவும் வஹீதா மேல் சித்தரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வஹீதா வாயசைத்து பெரும்புகழ் பெற்ற ‘பவ்ரா படா நாதான் ஹாய்’ ஆஷா தான் பாடினார். 1962ல் வெளியான சாஹிப் பீபி ஔர் குலாம் படமும் குரு தத்துக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. ஆனால் அவரது தனிமனித வாழ்க்கை தோல்வியின், மனச்சோர்வின் அடியாழங்களுக்கு தான் சென்றுகொண்டிருந்தது.

தோல்வி என்பது யாதெனில்..

இக்காலகட்டத்தில் சௌதேலா பாய், சுஹாகன், பஹுராணி, பரோஸா, சாஞ்ச் ஔர் சவேரா எனும் படங்களில் நடித்தார். தென்னிந்தியரான வாசு மேனன் தயாரித்து தமிழ் இயக்குநர் கே சங்கர் இயக்கிய பரோஸா (1963) ரவி இசையமைத்த புகழ்பெற்ற பாடல்களோடு வணிக வெற்றியானது. ஆனால் அது குரு தத்தின் கலைத்திறனுக்கு துளியளவும் நியாயம் செய்யாத படம். பிரகாஷ் ராவ் இயக்கிய பஹுராணி (1963) மற்றுமொரு தென்னிந்தியத் தயாரிப்பு. முன்பு தெலுங்கில் அர்தாங்கி என்றும் தமிழில் பெண்னின் பெருமை (1956) என்றும் வெளியான படம். அப்படமும் ஒரு பொருளாதார வெற்றி. சாஞ்ச் ஔர் சவேரா இந்தியாவின் ஆகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ரிஷிகேஷ் முக்கர்ஜி இயக்கிய படம். அது கலைரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்று இன்றளவும் பேசப்படும் படம்.

குரு தத்தின் ஒட்டுமொத்தக் கலைவாழ்கையானது கலைரீதியாகவும் வணிக ரீதியாகவும் ஒரு மாபெரும் வெற்றி என்றே சொல்லவேண்டும். இசை, இலக்கியம், நாட்டியம், ஓவியம், கலை இயக்கம், ஒளியமைப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு என திரைப்படக் கலையின் அனைத்துத் துறைகளிலும் ஆழ்ந்த புரிதலும் பிடிப்பும்கொண்ட அவரைப்போன்ற இன்னொரு இயக்குநரை இந்தியத்திரையில் நாம் காண இயலாது. இயக்கிய படங்களில் இரண்டு மட்டும்தான் ஓடவில்லை. நடித்த படங்களோ ஒன்றிரண்டைத் தவிர எல்லாமே வசூலைக் குவித்தவை. ஒரு தயாரிப்பாளராகவும் பெரும் வெற்றிகளைக் கண்டவர். காகஸ் கே பூல் படத்தில் பணத்தை இழந்தாலும் தொடர்ந்து தயாரித்த, நடித்த படங்கள் வழியாக அதை வெகுவிரைவில் சரி செய்துகொண்டவர். ஆனால் தனது தனிப்பட்ட வாழ்கையில் அவர் சந்தோஷமாக இருந்த தருணங்கள் மிகக் குறைவு என்றே சொல்லப்படுகிறது.

1956ல் தனது கனவுப் படமான பியாசாவை எடுத்துக்கொண்டிருக்கும்போது எதிலுமே திருப்தி வராதவராக இருந்தாராம். வசனங்களை அடிக்கடி மாற்றுவது, கேமராக் கோணங்களை மாற்றிக்கொண்டேயிருப்பது, எடுத்த காட்சிகளை தூக்கிப்போட்டு மீண்டும் மீண்டும் எடுப்பது என ஒருவகையான வெறிக் கருத்து நிலைமைக்கே சென்றார். ஒரு காட்சித் துணுக்கை 104 முறை வரை மீண்டும் மீண்டும் எடுப்பதுபோன்ற கவலைக்குரிய நிலைகளை அது எட்டியது. அடிப்படையில் மென்மையான தன்மைகள் கொண்ட அவர் கத்தவும் கோபப்படவும் கண்டதையெல்லாம் தூக்கியடிக்கவும் செய்தார். படக்காட்சிகளை மனதில் ஓட்டிக்கொண்டு இரவு முழுவதும் தூங்காமல் இருந்தார். தூக்கமின்மை அவரைத் துரத்த ஆரம்பித்தது. மிதமிஞ்சிக் குடிக்கவும் தூக்க மாத்திரைகளை அதிகளவில் எடுக்கவும் ஆரம்பித்தார். சிலபோது தூக்க மாத்திரைகளை விஸ்கியில் கலந்தே குடித்தார். பியாசா நிறைவடையும் தருவாயில் 31 வயதேயான குரு தத் அதிகமாகத் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். இரண்டு நாள் மருத்தவ மனையில் கழித்த பின்னர் திரும்பி வந்து படப்பிடிப்பைத் தொடர்ந்தார்.

அதைப்போல் 1961 இறுதியில் சாஹிப் பீபி ஔர் குலாம் படப்பிடிப்பின்போது மீண்டும் தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றார். மூன்று நாட்கள் மயக்கத்தில் கிடந்தார். "எனக்கு விரைவில் பைத்தியம் பிடிக்கப் போகிறது என்றே நினைக்கிறேன்" என்று அவர் சொன்னதாக எழுத்தாளர் பிமல் மித்ரா சொல்லியிருக்கிறார். குடும்ப மருத்துவரின் ஆலோசனையின் பேரில், அவரது குடும்பத்தினர் தத்துக்கு சிகிச்சை அளிப்பது குறித்து விசாரிக்க மனநல மருத்துவரை அழைத்தனர். ஆனால் தத்துக்கு சொல்லும்படியான எந்தவொரு சிக்கலுமில்லை, தொடர் சிகிச்சைகள் தேவையில்லை என்றே சொன்னாராம் அந்த மருத்துவர். மருத்துவ மனையிலிருந்து விடுவிக்கப்பட்டு சில நாட்களில் எதுவுமே நடக்காதது போல் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இந்தச் சம்பவம் குறித்து பிமல் மித்ரா கேட்டபோது, ​​"இது என்ன அமைதியின்மை? நான் தற்கொலை செய்து கொள்ளத் துணிந்ததற்கு என்ன காரணம்? என்று அடிக்கடி யோசிக்கிறேன். இப்போது அதைப்பற்றி நினைக்கையில் எனக்குப் பயமாக இருக்கிறது ஆனால் அப்போது அந்த தூக்க மாத்திரைகளை விழுங்குவதில் எனக்கு துளியளவும் குழப்பமோ பயமோ இருக்கவில்லை" என்றாராம்.

பல வருடங்களாக தனது அண்ணன் மௌனமாக உதவி கேட்டு உள்ளூற அழுதுகொண்டிருந்தார் என்று குரு தத்தின் தங்கை லலிதா லாஜ்மி சொல்லியிருக்கிறார். தனது வலியை யாருமே காணமுடியாதபடி ஓர் இருண்ட மனக் குகையில் அவர் சிக்கிக்கொண்டதாக உணர்ந்திருக்கலாம் என்றும் அதிலிருந்து வெளியேற வழியைக் கண்டுபிடிக்க அவரால் முடியாத அளவுக்கு அந்த இடம் இருட்டாக இருந்திருக்கலாம் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் ஆழ்ந்த தனிமை மட்டுமே தான் பெறும் ஊதியமாக அவர் கருதினார். ஓய்வுக்காக மது மற்றும் தூக்க மாத்திரைகளையே தொடர்ந்து நாடினார். இதே காலகட்டத்தில் தனது ஏழாண்டு காலக் காதலை முற்றிலுமாக முறித்து குரு தத்தைக் கைவிட்டுச் சென்றார் வஹீதா.

குரு தத்தின் மனநலக்குறைவு, எப்போதும் மதுவைச் சார்ந்திருத்தல், அவரது சிக்கலான குடும்ப வாழ்க்கை தன்மேல் ஏர்ப்படுத்திய பெரும் அழுத்தம் போன்றவற்றினால் தான் அவரை உதறினேன் என்று பிற்பாடு சொல்லியிருக்கிறார் வஹீதா. கீதாவை உதறிவிட்டு, வஹீதாவால் ஏற்கப்படாமல் ஒரு விதமான திரிசங்கு நரகத்தில் மாட்டிக் கொண்டார் குரு தத். 1964 அக்டோபர் 10 அன்று தனது அறையில் இறந்து கிடந்தார். ஏராளமான மதுவையும் தூக்க மாத்திரைகளையும் கலந்து சாப்பிட்டதே அவரது மரணத்திற்குக் காரணம். அது ஒரு தற்கொலை என்றும், இல்லை விபத்து என்றும் இரு தரப்புக் கருத்துக்கள் இன்று வரைக்கும் நிலவி வருகிறது.

தற்கொலை என்ற கருத்தை முன்வைப்பவர்கள் அவர் முன்னரே இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றவர் என்கிறார்கள். ஆனால் தான் தயாரிக்கப் போகும் படத்தின் கலந்தாய்வுக்காக அடுத்த நாள் மதியம் திரைமேதை ராஜ் கபூர் ஐயும் பாடலாசிரியர் கவிஞர் மஜ்ரூ சுல்தான்புரியையும் சந்திக்க அவர் நேரம் குறித்திருந்தார் என்பதை முன்வைத்து, நல்ல தூக்கம் கிடைக்க வேண்டும் என்று மதுபோதையில் அவர் மிதமிஞ்சி மாத்திரைகளை எடுத்திருக்கலாம் ஆதலால் அது ஒரு விபத்து என்று பலர் கூறுகிறார்கள். "எப்போதும் மரணத்தை விரும்பும்படியே அவர் பேசிக்கொண்டிருப்பார். அதற்காக அவர் ஏங்குவது போலவே எனக்குத் தோன்றியிருக்கிறது. இப்போது அவருக்கு அது கிடைத்து விட்டது” என்றார் குரு தத்தின் மரணத்தை அறிந்த வஹீதா.

குரு தத்தின் மரணம் கீதாவை நிலை குலையச் செய்தது. அவர் மேலும் மேலும் குடிக்க ஆரம்பித்தார். தன்னையே அழித்துக் கொள்ளும் வெறி கொண்டவரைப் போல் குடித்து, குரு தத் இறந்து சில ஆண்டுகளில் 42ஆவது வயதில் இறந்துபோனார். குரு தத்தின் பிரியத்திற்குரிய முதல் மகன் தருண் தத் இளவயதில் தற்கொலை செய்து கொணடபோது அவர் இறந்து கிடந்த அறையில் குரு தத்தும் கீதா தத்தும் சேர்ந்து எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் சிதறிக் கிடந்தன. அக்குடும்பம் மகிழ்ச்சியுடன் இருந்த நாட்களில் எடுத்த அப்படங்களில் துயரமும் முதுமைத் தோற்றமும் அண்டாமல், மாசில்லாப் புன்னகை சிந்தும் இனிய இளைஞனாக குரு தத் அமர்ந்திருந்தார்.


shaajichennai@gmail.com

குருதத் - இருளிடை மலர்ந்த ஒளிப்பூ எனும் நூற்றாண்டு மலருக்காக எழுதிய கட்டுரை.

நன்றி 

இயக்குநர் வசந்தபாலன்

கவிஞர் கரிகாலன்

களம் புதிது