முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இங்கல்பெர்ட் ஹம்பெர்டின்க் : சென்னையில் பிறந்த சர்வதேச இசை நட்சத்திரம்

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஊரடங்குச் சட்டமும் (Curfew) அதோடு மதுவிலக்கும்தான் ஹைதராபாத் நகரின் சிக்கலான சமூகப் பிரச்சினைகளாக இருந்தன! அப்போது நான் அங்கே ஒரு மேற்கத்திய இசைக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். அக்குழுவின் பெயர் ‘கர்ஃப்யூ!'. திடீரென்று எங்கும் மது இல்லாமலாயிற்று. ஆகவே களியாட்டங்கள் இல்லை, விளைவாக மேலையிசைக்கும் வாய்ப்புகள் இல்லாமலாயின. எங்கள் குழு அனேகமாக கலைந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் கடுமையாக உழைத்து ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை இசைமயமாக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அதிக நாளில்லை. சிதறிப்போன இசைக்கலைஞர்களைத் திரட்டி மீண்டும் இசைக்குழுவை ஒருங்கிணைக்க வேண்டும். ஒருவழியாக எல்லோரும் சிக்கினார்கள். முக்கியப் பாடகர் மாரியோவைத் தவிர. அவன் இல்லாவிட்டால் இசைக்குழுவே இல்லை! ஆள் எங்கே போனாரென்று எந்தத் தகவலும் இல்லை. சிலர் சொன்னார்கள், மது கிடைக்காமல் அவன் மாநிலத்தைவிட்டே சென்றிருக்கக்கூடும் என்று. கடுமையான தேடலுக்குப் பின் அவன் கர்நாடக மாநிலத்தில் பிதர் என்ற ஊரில் இருப்பதாகத் தெரியவந்தது. அங்கே ஒரு ஆங்கிலப் பள்ளியில் இசை ஆசிரியராக வேலைபார்த்தான். உலர்ந்துபோன இடத்திலிருந்து ஈரமான புல்வெளியை நோக்கி அவன் ‘வலசை’ சென்றிருந்தான்!

தூங்கி வழிந்த ஒரு டிசம்பர் மதியம் நான் மாரியோவைத் தேடி பிதரில் சென்றிறங்கினேன். அவன் பள்ளிமாணவர் விடுதியிலேயே தங்கியிருப்பதாகத் தெரியவந்தது. பள்ளிக்கு வார இறுதி விடுமுறை விட்டிருந்தது. அவனைப் பார்த்தே சில நாட்களாயிற்று என்றார்கள். மாரியோ இரவிலாவது வந்துசேரக்கூடும் என்று நினைத்து நான் பள்ளி மைதானத்தில் சும்மா சுற்றிலைந்தேன். இருட்டாகியது. மாரியோ வருவதற்கான தடயமே இல்லை. சோர்ந்துபோய் எங்கே போவதென்று தெரியாமல் திரும்பினேன். அதிக வெளிச்சமில்லாத பள்ளியின் வாசலை நான் தாண்டும்போது என் முன் சாக்கு மூட்டை போல் ஒன்று வந்து சரிந்து விழுந்தது. ரத்தமும் சதையும் சாராயமுமாக மாரியோவேதான்! நான் நேரில் பார்த்த மிகப்பெரிய ஆங்கில இந்திய (Anglo-Indian) பாடகர்!

நான் அவனை எழுப்பி நிற்கவைத்தேன். என்னைக் கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி பெருகியது. பரவசமும் போதையும் கலந்ததனால் ஏராளமான ‘கெட்ட பெயர்’களைச் சொல்லி என்னை அழைத்தான். ஆனந்தப் பரவசத்துடன் அவன் என்னை அவனுடைய அறைக்கு இட்டுச் சென்றான். ‘பாத் அட்டாச்ட்’ ஒற்றை அறையுடன் அவன் ஒரு ‘ராஜ வாழ்க்கை’ அங்கே வாழ்வதாகச் சொன்னான். அறைக்குள் நடனமிட்டுச் சுற்றிவந்தான். இசையில்லாத, மதுவில்லாத ஐதராபாத் நகர் மீதான தன் வெறுப்பைக் கூவிச் சொன்னான். பெருமிதத்துடன் தன்னுடைய அலமாரியைத் திறந்து காட்டினான். ஒரு பக்கம் ஏராளமான குவாட்டர் ரம் குப்பிகள். சில பாதி நிரம்பியவை. சில முக்கால் நிரம்பியவை. ஆனால் உடைக்காமல் எதுவுமில்லை! “பார்த்தாயா என்னுடைய நிறைந்த பார்!” என்று மகிழ்ந்து கூவினான்.

மறுபக்கம் ‘டெபோனிர்’ பத்திரிகையின் சூடான பக்கங்கள் ஒன்றோடொன்று உணர்ச்சிவசப்பட்டு ஒட்டிப்போன நிலையில். மேலே மேரி மாதா படமும் தூய இதய ஏசுவின் படமும். கீழே அணைந்த மெழுகுவர்த்திகள். “இதுதான் என் கடவுள். நன்மை நிறைந்த தூய மேரிமாதா!” ஒரு சின்ன ஜெபத்துக்குப் பின் படங்களைத் தொட்டு முத்தமிட்டான். அப்படங்களுக்கு அருகே மற்றும் இரண்டு பேரின் படங்களைப் பார்த்தேன். நன்றாக மழிக்கப்பட்ட முகங்கள்... பெரிய கிருதாக்கள்... ஒரு படம் எல்விஸ் பிரெஸ்லி. அதைச் சுட்டி அவன் சொன்னான், “இதுதான் ராஜா!” உடனே பாடத் தொடங்கினான். “யூ ஆர் வாக்கிங்லைக் ஏன் ஏஞ்சல்!” இன்னொருவரின் முகம் எனக்குத் தெரியவில்லை. அவரைக் காட்டி மாரியோ சொன்னான். “இது காதல் இசையின் சூப்பர் ஸ்டார்! எனக்கு பிடித்த பாடகர்! இவர் எங்க ஆள் தெரியுமா? எங்கள் ஆங்கில இந்தியப் பாடகர், என்னை மாதிரியே... இங்கல்பெர்ட் ஹம்பெர்டின்க் (Engelbert Humperdinck).” உடனே பாட ஆரம்பித்தான். “எப்போதும் எப்போதும் எப்போதும் அது நீதான்! என்னில் சுடர்பவள்,  காலைச் சூரியன் போல! (ever and ever for ever and ever..) அப்படியே கட்டிலில் குப்புற விழுந்து, குரல் கம்மி கேவலாக மாறி அப்படியே தூங்கிவிட்டான்.

மாரியோ போன்ற மேடைப்பாடகர்கள் உலகம் முழுக்க இங்கல்பெர்ட்டின் பாடல்களை விரும்பிப் பாடி வருகிறார்கள். எப்போதுமே அவற்றுக்கு மிகப்பெரிய ரசிகர்க் கூட்டம் உள்ளது. இந்தியாவில் இங்கல்பெர்ட் பாடல்கள் கேட்காத கோவாக்காரர்கள், பார்சிகள் அல்லது ஆங்கில இந்தியர்கள் முழுமை பெறுவதில்லை. அவர்களுடைய திருமணங்கள், சமூக நடனங்கள், சனிக்கிழமை இரவுக் கொண்டாட்டங்கள் எல்லாவற்றுக்கும் சரியாகப் பொருந்தும் இசை அது. காதலர்களின் ஒரு தலைமுறையையே விரும்ப வைத்த மென்மையான காதல் பாடல்கள் அவை.

இசையில் இங்கல்பெர்ட் உச்சத்தில் இருந்த நாட்களில் ரசிகைகள் மேடை நிகழ்ச்சிகளில் தங்கள் சட்டைகளைக் கிழித்து வீசுவார்கள். மேடை நோக்கி அவர்களின் உள்ளாடைகள் பறந்து வரும். இங்கல்பெர்ட் சொன்னார் “இப்போதுகூட நான் என் புருவத்தை ஒரு கைக்குட்டையால் ஒற்றிவிட்டு அதைக் கூட்டத்தை நோக்கி வீசி எறிந்தால் அதற்காகப் பெண்கள் சண்டை போட்டு முட்டி மோதுகிறார்கள்!” அவர் ரசிகர்கள் அவரை ‘காதல் பேரரசன்’ என்று சொல்வதுண்டு. அவரை இங்கி, ஹம்பி, ஹம்ப்ஸ், ஹம்ப்ஸ்டர் என்றெல்லாம் செல்லப் பெயர்களில் அழைப்பதுண்டு.

இங்கல்பெர்ட்டின் பதினான்குகோடி இசைத் தொகுப்புகள் விற்கப்பட்டுள்ளன! கடந்த நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாக அவர் சர்வதேச இசைவணிகத்தில் ஒரு இதிகாசப் புருஷனாகக் கருதப்படுகிறார். 139 குறுவட்டுகள், 98 இசைத்ததட்டுக்கள், 17 இசைக் காட்சிப் பதிவுகள் அவரால் வெளியிடப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான காதல் பாடல்களை அவர் பதிவு செய்துள்ளார். அமெரிக்க திரைப்பட வரிசையான பீவிஸ் மற்றும் பட் ஹெட்க்காக  (Beavis and Butthead) இங்கல்பெர்ட் பாடி பிளாட்டினம் வென்ற தலைப்பு பாடலான ‘லெஸ்பின் சீகல்’ (Lesbian Seagull) முதலிய எத்தனையோ பெரும் வெற்றிகள்! அவருடைய பாடல்கள் காதலில்லா வாழ்க்கையில் கடும் துயர் உறுவதை வெட்கமில்லாமல் ஒப்புக் கொடுக்கும் ஆண்மகனின் மனக் கொந்தளிப்பிலிருந்து உருவானவை.

எல்லா வகையான பாடல்களையும் அவர் பாடியுள்ளார். டிஸ்கோ, ராக் முதல் கிறித்தவப் பக்திப்பாடல்கள் வரை. ராக், பாப் இசையில் பெரும் நட்சத்திரங்களான ஜிமி ஹென்ட்ரிக்ஸ் (Jimi Hendrix), காட் ஸ்டீவன்ஸ் (Cat Stevens), டீன் மார்ட்டின் (Dean Martin), டாம் ஜோன்ஸ் (Tom Jones) போன்றவர்கள் இங்கல்பெர்ட்டின் மேடையில் தெடக்க இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். உலகப் புகழ்பெற்ற இசைக் குழுவான கார்பெண்டர்ஸ் (The Carpenters) அறுபதுகளின் இறுதியில் இங்கல்பெர்ட்டின் மேடை நிகழ்ச்சிகளில் அறிமுகமானவர்களே. எல்விஸ் பிரெஸ்லியின் மரணம்வரை அவருக்கு நெருங்கிய நண்பராக இருந்த இங்கல்பெர்ட், அவருடன் பல மேடைகளில் சேர்ந்து பாடியுள்ளார். அவர்கள் ஒருவர் பாடலை இன்னொருவர் பாடுவதுண்டு.

நான்குமுறை கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர் இங்கல்பெர்ட். 1988ல் கோல்டன் குளோப் விருது ‘இவ்வருடத்தின் மிகச் சிறந்த கேளிக்கையாளர்’ என்பதற்காக அவருக்கு அளிக்கப்பட்டது. மதிப்புமிக்க ‘ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் (Hollywood Walk of Fame) பட்டமும் அவர் பெற்றிருக்கிறார். எழுபது வயது தாண்டிய பின்னரும் உலகமெங்கும் பறந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பாப் இசையுலகில் நுழைந்து நாற்பதாண்டுகள் ஆகிவிட்ட பின்னரும் உலகில் அவருக்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர். உலகம் முழுக்க 200க்கும் மேற்பட்ட ரசிகர் மன்ற அமைப்புகள் இருந்தன.

இங்கல்பெர்ட் ஹம்பெர்டின்க் என்ற விசித்திரமான பெயருடன் இருந்தாலும் அவர் பிறந்தது இங்கு சென்னையில் ஒரு ஆங்கில இந்தியக் குடும்பத்தில். 1936 மே 2ல் பிறந்த அர்னால்ட் ஜார்ஜ் டார்சே (Arnold George Dorsey) அக்குடும்பத்தின் ஒன்பது குழந்தைகளில் ஒருவராகப் பத்து வயது வரை சென்னையில் வளர்ந்தவர். 1946ல் இந்திய சுதந்திரம் நெருங்கியபோது வேறு பல ஆங்கில இந்தியக் குடும்பங்களைப் போலவே அவரின் குடும்பமும் இங்கிலாந்துக்குக் குடியேறியது. அர்னால்டின் தந்தை மெர்வின் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றினார். அன்னை ஒலிவ் ஒரு இசை ஆசிரியர். வயலின் கற்பிப்பார். ஓபெராவுக்குரிய கூரிய குரல்வளம் உண்டு. சிறு வயதிலேயே அர்னால்ட் தன் தாயின் இசைத்திறனுக்கு வாரிசு என்பதைக் காட்டிவிட்டார். டார்சே சகோதரர்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் பாடும்போது அர்னால்டின் குரல் ஓங்கித் தனித்து ஒலித்தது.

சென்னையில் தன்னுடைய இளமைப் பருவத்தைப் பற்றி இங்கல்பெர்ட் இவ்வாறு நினைவுகூர்ந்தார். “சென்னையில் எனக்கு அற்புதமான குழந்தைப்பருவ நினைவுகள் உள்ளன. நான் அந்த சூரியனையும் கடலையும் அங்குள்ள மக்களின் இனிய குணத்தையும் விரும்பினேன். சென்னைத் துறைமுகத்தின் அருகே இருந்த பிரகாசமான அறைகள் கொண்ட பெரிய வீட்டிலிருந்து நாங்கள் ஒன்பது குழந்தைகளும் பெற்றோரும் இங்கிலாந்தில் உள்ள லைசெஸ்டரில், தாங்க முடியாத குளிரில் சாம்பல் நிறத்தில் இருந்த சின்னஞ்சிறிய குடியிருப்புக்கு மாறினோம்”. இங்கிலாந்தில் வாழ்ந்தாலும் அர்னால்ட் தன் பெற்றோரின் இந்திய வாழ்க்கைப் பின்புலத்திலிருந்து பெற்றுக்கொண்ட உறுதியான குடும்ப மனப்பான்மையையும் நிலையான உறவுகளையும் தக்கவைத்துக் கொண்டார்.

அர்னால்ட் தன் 11ஆம் வயதில் சாக்ஸஃபோன் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். தன் 17ஆம் வயது வரை அவர் பாடுவதற்கு முயலவில்லை. அவர் சாக்ஸஃபோன் வாசித்துவந்த சிறிய மதுவிடுதி ஒரு பாடல் போட்டியை நடத்தியபோது கெர்ரி டார்சே (Gerry Dorsey) என்ற பெயரில் பாட ஆரம்பித்தார். அது அவரது தொழில் முறைப் பெயராக ஆனது. அதன் பின் அவர் சாக்ஸஃபோனை எடுக்கவில்லை. பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் இசை நிகழ்ச்சிகளிலும் மதுவிடுதிகளிலும் பாடி வந்தார். ராணுவத்தில் சேர நேர்ந்தபோது அவரது இசையார்வம் கட்டுப்படுத்தப்பட்டது. 1958ல் அவர் திரும்பி வந்தார். மதிப்புமிக்க டெக்கா ரெக்கார்ட்ஸ் அவருக்கு முதல் வாய்ப்பை அளித்ததது. ஆனால் அவரது ‘நான் இனி காதலில் விழமாட்டேன்’ ('I'll Never Fall in Love Again') என்ற இசைத்தட்டு பெரும் தோல்வி அடைந்தது.

கெர்ரி டார்சே அங்குள்ள இசைவட்டாரங்களில் ஓரளவு அறியப்பட்டவராக இருந்தார். 1963 காலகட்டத்தில் அவரது இசைத்தொழிலில் பெரிய அடி விழுந்தது. வேகமான தாளம் கொண்ட ராக் அண்ட் ரோல் போன்ற இசை முறைகளின் அலை அவரது மென்மையான காதல் பாடல் முறையைக் காணாமல் போகச் செய்தது. அத்துடன் அவருக்குக் காசநோயும் ஏற்பட்டது. ‘அதிருஷ்டம் இல்லாத பாடகர்’ என்று பொதுவாக அவரை மதிப்பிட்டார்கள். அவரது காலம் முடிந்துவிட்டது என்று கருதப்பட்டது. கடுமையான சிகிச்சைக்குப் பின் மீண்டும் கெர்ரி டார்சே இசையுலகுக்குத் திரும்பி வந்தபோது தன் பழைய தோல்வி முகத்தை மறைத்து ஒரு புதிய தொடக்கத்தை நிகழ்த்த விரும்பினார்.

பல வருட அலைச்சலுக்குப் பின்னர் அவர் தன் முன்னாள் அறை நண்பரான கார்டன் மில்ஸை (Gordon Mills) சந்தித்தார். 1965ல் நிகழ்ந்த அந்த சந்திப்பு கெர்ரி டார்சேயின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மில்ஸ் ஒரு திறமையான நிர்வாகி, விளம்பர அமைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர். இசைக்கலைஞனுக்கு முதலில் தேவையானது பொதுமக்களின் கவனம்தான் எனப்தை அவர் உணர்ந்திருந்தார். மக்கள் மனதில் மறக்காமல் இருக்கக்கூடிய ஒரு வித்தியாசமான பெயரை கெர்ரி டார்சேக்குச் சூட்ட வேண்டும் என்று முடிவெடுத்து அவரை அதற்குச் சம்மதிக்கவும் வைத்தார் மில்ஸ்.

இங்கல்பெர்ட் ஹம்பெர்டின்க், ஆஸ்திரியாவில் 1854ல் பிறந்துது 1921ல் மறைந்த மேலை மரபு இசையமைப்பாளர். அவர் மேலை இசை மேதை வாக்னரின் நெருக்கமான நண்பர். ‘ஹான்சலும் கிரேடெலும்’ என்று நாடோடிக்கதை ஓபெராவை அமைத்தமைக்காகவே நினைக்கப்படுகிறார். அவரது பெயரை கெர்ரி டார்சேக்காக மில்ஸ் கண்டுபிடித்தார். அதை மக்கள் உச்சரிக்கவே முடியாதே என்று கெர்ரி சொன்னபோது மில்ஸ் “அதைப்பற்றி நமக்கென்ன? உச்சரிக்க முயற்சி செய்தால் அதன் பின் அவர்கள் இப்பெயரை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்” என்றாராம். பின்பு நிஜ இங்கல்பெர்ட்டின் வாரிசுகள் இதன் பொருட்டு கெர்ரி டார்சே மீது வழக்கு தொடுத்தார்கள்! இங்கல்பெர்ட் என்ற பெயர் அதன் வினோதம் காரணமாவே பிரபலமாயிற்று. மில்ஸ் இங்கல்பெர்ட்டுக்கு டெக்கா ரெகார்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து இன்னும் ஒரு வாய்ப்பைப் பெற்றுத்தந்தார். அத்துடன் இங்கல்பெர்ட் ஒரு தனித்த தோற்றப்பொலிவையும் மேற்கொண்டார். அகலமான கிருதா, தூக்கிவிடப்பட்ட கனத்த சட்டைக்காலர், ஆர்ப்பாட்டமான தோல் ஆடைகள்....

இந்தத் தோற்றத்தைப் பெரும்பாலானவர்கள் எல்விஸ் பிரெஸ்லியுடன் இணைத்தே புரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் இதை ஆரம்பித்து வைத்தவர் இங்கல்பெர்ட்தான், பிரெஸ்லி அல்ல. வெள்ளைத் தோலாடையும், தூக்கிவிட்ட காலர்களும் அகலமான கிருதாவுமான தோற்றத்தை பிரிட்டனில் இங்கல்பெர்ட் ஏற்கனவே பிரபலமாக்கியிருந்தார். இங்கல்பெர்ட் பல சந்தர்ப்பங்களில் வேடிக்கையாக, எல்விஸ் பிரெஸ்லி தனது தோற்றத்தைத் தன்னிடமிருந்து திருடி விட்டதாகச் சொல்லியிருக்கிறார். பதிலுக்கு பிரெஸ்லி “டேய், அது உனக்குப் பொருந்துவதைவிட எனக்குத்தான் நன்றாகப் பொருந்தும்!” என்றாராம்.

புதுப் பிறவிக்குப் பின்னர்கூட இங்கல்பெர்ட்டின் இரு இசைத்தட்டுகள் தோல்வியைத் தழுவின. ஆனால் மூன்றவாது இசைத்தட்டு “என்னை விடுதலை செய்’ (Release Me) உடனடியாக பெரும் வெற்றி பெற்றது. பீட்டில்ஸ் இசைத்தட்டு ‘ஸ்டிராபெர்ரி வயல்களை (Strawberry Fields) பின்னுக்குத் தள்ளி விற்பனையில் அது முதலிடத்தைப் பிடித்தது. அவ்வெற்றி அமெரிக்க இசைச்சந்தையிலும் எதிரொலித்தது. அதற்கு முன் கேள்விப்பட்டிருக்காதபடி அது உலகெங்கும் தினம் தோறும் 85000 பிரதிகள் விற்றது. இங்கல்பெர்ட்டை நினைவில் நிறுத்திய மெட்டாக அது அமைந்தது. “என்னை விடுதலை செய்” எஸ்தர் பிலிப்ஸ் பாடிய ஒரு பழைய பாடல். முன்பு ஒரு நடுத்தர வெற்றியாக இருந்த அப்பாடல் இங்கல்பெர்ட்டுக்கு ஒரு மாபெரும் சர்வதேச வெற்றி. அத்துடன் ‘அதிர்ஷ்டமில்லாத’ கெர்ரி டார்சே ‘இங்கல்பெர்ட் ஹம்பெர்டின்க்’ என்ற உலகப் புகழ்பெற்ற இசை நட்சத்திரமாக ஆனார். அன்றைய இங்கிலாந்து இசை நட்சத்திரம் டாம் ஜான்ஸை விட விற்பனையில் முன்னணிக்குச் சென்றார். தொடர்ந்து காதல் கதைப் பாடல்களின் நீண்ட வரிசை வெளிவந்து அவருக்குத் தொடர் வெற்றிகளை அளித்தது.

ஆறு வருடம் அவர் வெற்றிக்கோட்டின் உச்சியிலேயே இருந்தார். நிகழ்ச்சிகளுக்குப் பெரும் தொகைகளை வாங்கினார். ‘அதோ போகிறது என் எல்லாமே’ (There Goes My Everything), கடைசி வால்ட்ஸ் நடனம்  (The Last Waltz), ஸ்பானியக் கண்கள் (Spanish Eyes), காதல் இல்லாத மனிதன் (A Man Without Love), ‘என்னை மறப்பதென்ன எளிதா? (Am I That Easy To Forget?), ‘குளிர்காலக் காதல் உலகம்’ (Winter World of Love), காதலுக்குப் பின் (After The Lovin) போன்ற பாடல்கள் மிக முக்கியமானவை. கோடிக்கணக்கான ரசிகர்கள் இங்கல்பெர்ட்டுக்கு உருவானார்கள். அவர்களின் பெரும்பாலானவர்கள் பெண்கள். ஆனாலும் இசை விமரிசகர்கள் அவரை வெறுமொரு ‘அழுவாச்சி’யாகவே (Crooner) எண்ணினர். இங்கல்பெர்ட் குறிப்பிடத்தக்க புதிய இசை உருவாக்கங்கள் எதையும் அளிக்கவில்லை என்பது உண்மையே. அவருடைய பெரும்பாலான பாடல்கள் மென்மையான காதல் பாடல்களே. ஆனால் அவற்றில் உள்ள புத்துணர்ச்சியும் அவற்றின் விரிவான தளமும் அவரைப் பிற மேடை ரோமியோக்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஒருமுறை இங்கல்பெர்ட் சொன்னார், “நாம் ஒரு அழுவாச்சியாக இல்லாமலிருக்கையில் நம்மைப் பிறர் அப்படிச் சொல்வதை விரும்புவதில்லை. எந்த ஒரு அழுவாச்சிப் பாடகனுக்கும் எனக்குள்ள விரிந்த தளம் இல்லை. நான் ஒரு சமகாலப் பாடகன். ஓர் ஓயிலான கலைநிகழ்த்துனன்.” எம் டி வி தொடக்கப்பட்ட நாள் முதலே அதன் முக்கியமான பாடகர்களில் ஒருவராக இங்கல்பெர்ட் இருந்து வந்தார்.

தன் உச்சநாட்களான அறுபது எழுபதுகளின் தன் ஆர்ப்பாட்டமான ஒயில் தோற்றம், மெல்லிய இனிய குரல் ஆகியவற்றால் இங்கல்பெர்ட் ஒரு மர்மமான ஆழ்மனம் உடையவராகத் தோற்றமளித்து ரசிகைகளைப் பித்துப்பிடிக்கச் செய்தார். வருடம்தோறும் நூற்றுக்கணக்கான பெரும் மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பீட்டில்ஸ் காலகட்டத்துக்குப் பிறகு வந்த ராக் இசைக்கு ஏற்ப ரசிகர்களின் மனநிலை மாறியபோது இங்கல்பெர்ட்டின் பாடல்கள் ஒரு பின்னடைவை சந்தித்தன. ஆனால் இங்கல்பெர்ட் தன் மேடை நிகழ்ச்சிகளை லா-வேகா பாணியில் (La Vegas Style) பெரும் செலவில் மேலும் கண்ணைக் கவர்வதாக அமைத்து வெற்றியை நிலைநாட்டினார். ‘மக்களுக்கு அவர்கள் ஏற்கனவே பார்த்தவற்றையே மீண்டும் அளிக்க நான் விரும்பவில்லை’ என்றார். தன் 1992 பயண நூலில் அவர் “நான் ஒரு கேளிக்கையான என்ற பெயரை மிகத் தீவிரமாகவே எடுத்துக்கொள்கிறேன். மக்கள் சற்றும் எதிர்பாராத பொறித்தெறிப்புகளை அளிக்க விரும்புகிறேன். ‘நீங்கள் இதைச் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை’ என்று எவராவது சொல்லிக் கேட்கும் போதுதான் நான் மிகப்பெரிய போதையை அடைகிறேன்” என்றார்.

அறுபதுகளின் இறுதிமுதலே இங்கல்பெர்ட் ரசிகர் மன்றங்கள் உலகமெங்கும் உருவாயின. எழுபதுகளில் அந்த அலை உச்ச வேகம் கொண்டது. ‘எங்கள் உலகம் இங்கல்பெர்ட்டே!’ ‘இங்கல்பெர்ட் நாங்கள் உன்னை நம்புகிறோம்!’, ‘எல்லா அன்பும் இங்கிக்கே!’ என்பவை போன்ற கூவல்கள் புகழ்பெற்றன. பெண்கள் அவர்கள் இங்கல்பெர்ட்டால் கருவுற்றார்கள் என்று சொல்ல விரும்பினார்கள். இங்கல்பெர்ட்டின் எந்தவொரு இசைத் தட்டுப் பிரதிகள் எண்பது லட்சத்துக்குமேல் விற்பனையாவது உறுதி என்ற நிலை உருவாயிற்று. இங்கல்பெர்ட் சொன்னார் “என் ரசிகர்கள் எனக்கு மிக விசுவாசமானவர்கள். என் நற்பெயர் விஷயத்தில் அவர்கள் மிக மிகத் தீவிரமானவர்கள். அவர்களை என் வெற்றியின் ஆற்றல் பொறிகள் என்று சொல்வேன்.”

எண்பதுகளில் இங்கல்பெர்ட்டுக்கு வயது ஐம்பதைத் தொட்டது. அவர் அப்போதும் தொடர்ச்சியாக இசைத் தொகுப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். வருடத்தில் 200 நிகழ்ச்சிகள் வரை நடத்தினார். அப்போதும் அவர் பெண்களின் காதல் நாயகனாகவே இருந்தார். அதே சமயம் தன் மனைவி பட்ரிஷியாவுடனும் குழந்தைகளுடனும் உறுதியான குடும்ப வாழ்க்கையையும் நடத்திவந்தார். அவர் மகன்கள் அவருக்கு முகவர்களாகவும் அமைப்பாளர்களாகவும் பணியாற்றினர். அவர் மகள் லூசி அவருடன் மேடைகளில் பாடினார். 1993ல் வந்த ‘நம் முன்னரே காதலித்திருந்தோம் தெரிந்துகொள்’ (Know That We Have Loved Before) போன்ற பாடல்களை எழுதியவர் லூசிதான்.

இங்கல்பெர்ட் ஒரு இசைத்தூதராக எலிசபெத் அரசியையும் பல அமெரிக்க அதிபர்களையும் சந்தித்துள்ளார். தொடர்ந்து மனிதாபிமான பணிகளைச் செய்தார். ரத்தப் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம், அமெரிக்க செஞ்சிலுவைக் கழகம், அமெரிக்க நுரையீரல் ஆய்வகம் போன்றவற்றுக்குப் புரவலராக இருந்தார். ஏராளமான எய்ட்ஸ் மீட்பு அமைப்புகளில் அவர் பங்காற்றியுள்ளார். அவரே எழுதிய ‘வெளியே வருக’ (Reach Out!) என்ற பாடல் புகழ்பெற்ற ஒரு எய்ட்ஸ் ஒழிப்புக் கீதம்..

தன் எழுபது வயதிலும் அவர் துடிப்புடன் இயங்கி வந்தார். 2004ல் சிறந்த கிறித்தவ இசைப் பாடலுக்கான கிராமி விருது பரிந்துரையைப் பெற்றார். அவரது குறுவட்டு ‘நடன இசைத் தொகை’ (The Dance Album) வெற்றி பெற்றது. அவரது முதல் நடன இசைத் தொகுப்பு இது. இங்கல்பெர்ட்டின் மிகப்பெரிய வெற்றிப் பாடல்களான ‘குவாண்டோ குவாண்டோ’, ‘என்னை விடுதலை செய்’ முதலியவையுடன் ஐந்து புதிய பாடல்களும் இதில் நடன இசையில் அமைக்கப்பட்டிருந்தன.

உலகின் மிகச் செல்வந்த இசைக்கலைஞர்களில் ஒருவரான இங்கல்பெர்ட் திரைநட்சத்திரம் ஜேய்ன் மான்ஸ்ஃபீல்டின் புகழ்பெற்ற இளஞ்சிவப்பு மாளிகையை (Pink Palace) 1970ல் விலைக்கு வாங்கினார். அமேரிக்காவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் மத்திய தரைக்கடல் கட்டிடப் பாணியில் மேற்கு நோக்கிக் கட்டப்பட்ட நாற்பது அறைகள் கொண்ட அரண்மனை அது. லாஸ் ஆஞ்சலெஸ், பெவர்லி ஹில்ஸ், ஷெர்மன் ஓக்ஸ், லா வேகா ஆகிய ஊர்களிலும் அவரது சொந்த ஊரான லைசெஸ்டரிலும் உள்ள தன்னுடைய மாளிகைகளில் மாறி மாறி வாழ்ந்தார் இங்கல்பெர்ட்.

குழந்தைத்தனம் மிக்க மனிதர் இவர். விலை உயர்ந்த நகைகள் மீது மோகம் கொண்டவர். மூடநம்பிக்கைகள் மிக்கவர். ஜேய்ன் மான்ஸ்பீல்டின் ஆவியை அடிக்கடி பார்ப்பதாக அவர் சொல்வதுண்டு. சென்ற வருடம் இங்கல்பெர்ட் அவரது சுயசரிதையைப் பிரசுரித்தார். ‘ஒரு பெயரில் என்ன இருக்கிறது” அதன் பெயர். அவரது இணையதளத்தில் அவரே தன் கவிதைகளைச் சொல்வதைக் கேட்கலாம். “கவிதைகளே என் சுயவெளிப்பாட்டுக்கான தேவையை நிறைவேற்றுகின்றன!” அதாவது இசை அவரது சுயவெளிப்பாடு அல்ல என்று பொருள்! அவர் தனக்கு மிகப் பிடித்தமான பாடகராக யாரையும் சொல்வதில்லை!

2005ல் இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய நகரங்களில் சுனாமி நிதிக்காகப் பாடினார் இங்கல்பெர்ட். அவரின் சக ஆங்கில இந்திய ரசிகர்கள் அவரை உயிருடன்’ பார்க்க முடிந்தது. கட்டணங்கள் ரூ.3000, 5000, 7500 என மேலே சென்றன. ஆனால் அரங்குகள் நிறைந்திருந்தன. அப்பயணத்தில் அவர் தான் பிறந்த மண்ணுடன் ஒரு நீடித்த உறவு இருக்க வேண்டுமெனத் தன் விருப்பத்தைச் சொன்னார்.

சென்னையை இங்கல்பெர்ட் பாசத்துடன் நினைவுகூறினார்.  “எங்கள் பெரிய பங்களா, பருவ மழையின் வாசனை, கப்பல்களும் படகுகளும் நிறைந்த துறைமுகம்... நான் எப்போதுமே இந்தியாவின் நிறங்களாலும் காட்சிகளாலும் ஒலிகளாலும் வெம்மையாலும் கவரப்பட்டவன்.” சென்னையில் ஒருநாள் இருந்தார். அவரது குழந்தைப் பருவத்து இடங்களைக் கண்டடைய முயன்றார். அவர் அப்பாவின் பங்களாவைக் கண்டடையவே முடியவில்லை. அதை சுனாமி கொண்டு சென்றிருக்கக்கூடும் என்று சொன்னார்.

இங்கல்பெர்ட் சொன்னார், “நான் அதிருஷ்டசாலி. இசை மூலம் மிகச் சிறந்த தருணங்கள் அடைந்தேன். மிக உன்னதமான வாழ்க்கையைப் பெற்றேன். ஆனால் புகழ்பெற்ற பாடகராக இருப்பதன் சிறப்பு என்னவென்றால் அன்புதான். ரசிகர்களின் அன்பு...”

இங்கல்பெர்ட் மீது உயிரன்பு வைத்திருந்தவன் மாரியோ. அவரில் தன்னையே கண்டவன். அவரைப் போலவே அவனும் ஒரு சிறந்த பாடகனாக ஆகியிருக்கலாம். இங்கல்பெர்ட் தன் முதிய வயதில் ஆரவாரமாக இந்தியப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, மாரியோ தன் 48ஆம் வயதில் ஹைதராபாத் இலவச மருத்துவமனை ஒன்றில் ஈரல் கெட்டுப்போய் மோசமாக நோயுற்றுப் படுத்திருந்தான். இங்கல்பெர்ட் வந்த செய்தியை அவன் அறிந்திருப்பானா? மாரியோ இப்போது எங்கிருக்கிறான் என்று யாருக்குமே தெரியவில்லை....

2006