முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யதார்த்தத் இசை நிகழ்சிகளும் இசையின் யதார்த்தமும்

பெண்மைமிக்க ஆணாக மலையாள நடிகர் திலீப் நடித்து மலையாளத்தில் வெற்றிபெற்ற 'சாந்துபொட்டு' என்ற படத்தில் அவரது பாத்திரம் சக தோழிகளுடன் ஒசிந்து ஒசிந்து செல்லும்போது ''எல்லாரும் எங்கே போறீங்கடி?''என்று ஒருவர் கேட்பார். ''நாங்கள்லாம் பக்கத்துவீட்டிலே டீவி சீரியல் பார்த்து அழுறதுக்குப் போறோம்...'' என்பார் சிரிப்புடன் அப்பாத்திரம். அது ஒரு காலம். பின்னர் இந்தியத் தொலைக்காட்சிகளில் கண்ணீர் கதைத்தொடர்களை விட பலமடங்கு பிரபலமானது 'யதார்த்த' இசை நிகழ்ச்சிகள். ஆங்கிலத்தில் ரியாலிட்டி மியூசிக் ஷோ எனப்படுப்வை. இந்நிகழ்ச்சிகளின் பல்வேறு வடிவங்கள் ஏறத்தாழ எல்லா மொழித் தொலைக்காட்சிகளிலும் காணக்கிடைத்தன.

ஆயிரக்கணக்கான பாடகர்களிலிருந்து சிலர் தேர்வு செய்யப்பட்டு மேடையில் பாடவைக்கப்பட்கிறார்கள். நடுவர்களும், குறுஞ்செய்திகள் (SMS) மூலம் வாக்களிக்கும் பார்வையாளர்களும் சேர்ந்து சிலரை தெரிவுசெய்கிறார்கள். பிறர் மேடையிலேயே விலக்கப்படுகிறார்கள். கடைசியில் ஒரு 'இசை நட்சத்திரம்' தெரிவு செய்யபப்ட்டு அவர் முதன்மையான பாடகராக முன்வைக்கப்படுகிறார். 2002 ல் அமெரிக்காவின் ஃபாக்ஸ் (Fox) தொலைக்காட்சியில் அறிமுகம்செய்யப்பட்ட 'அமெரிக்கன் ஐடல்' (American Idol) என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியின் தழுவல்கள் இவையனைத்துமே.

இதில் 'யதார்த்தம்' எங்கே வருகிறது என்றால், பாடகர்கள் தங்களை தயார்ப் படுத்திக் கொள்வதும் சாப்பிடுவதும் தூங்குவதும் பதற்றமடைவதும் போன்ற, திரைக்கு பின்னால் நடக்கும் விஷயங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து தொலைக்காட்சியில் காட்டப்படுகின்றன. மேடையில் நடுவர்கள் அவர்களை கேள்விகளால் குடைந்து, விமரிசனங்களால் சிதைத்து, மேடையிலேயே கண்கலங்க வைப்பார்கள். வாக்கெடுப்பில் விலக்கப்படும்போது பாடகர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் கோடிக்கணக்கான பார்வையாளர்கள் முன் கதறி அழுவார்கள். அது நடிப்பும் அல்ல. அந்த அளவுக்கு 'தத்ரூபமான' யதார்த்தத்தை எந்த தொலைகாட்சி கதைத் தொடர் காட்டமுடியும்? கற்பனைக்காட்சிகளை பார்த்து அழுவதைவிட இந்த நிஜக்கட்சிகளைப்பார்த்து அழுவது மேலும் உருக்கமானதல்லவா?

ஒரு மேலைநாட்டு இணையதளம் உலகின் மிகச்சிறந்த 100 பாடகர்களை பட்டியலிட வாக்களிப்பு நடத்தியது. அதில் உலகின் இதுவரையிலான பாடகர்களில் தலைசிறந்தவராக யேசுதாஸை ஒருவர் முன்வைப்பதை வாசித்தேன். ஜேசுதாஸ் முப்பத்தாறாவதாக வந்தார். ஜான் லென்னன் நாற்பத்தொன்பது! பார்பரா ஸ்ட்ரீய்ஸண்ட் ஐம்பத்திரண்டு! ஃப்ராங்க் சினாட்ரா ஐம்பத்தாறு! உலகின் தலை சிறந்த ஓபெறா பாடகரான லூசியானோ பாவரோட்டி தொண்ணூற்றியொன்பது! 'யதார்த்த' தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் வென்றவர்களில் பலர் உலகிலேயே சிறந்த பாடகர்களாக இந்த பட்டியலில் இடம் பிடித்திருந்தார்கள்! பெருந்திரள் குறுஞ்செய்திகள் அனுப்பும் மென்பொருட்கள் பயன்படுத்தி யாரையுமே குறுஞ்செய்திகள் மூலம் உலகப்பாடகராக தேர்வுசெய்துவிட முடியும்!

இந்த 'யதார்த்த' இசை நிகழ்ச்சிகளின் மூலம் இசை நாட்டமோ இசைப்பழக்கமோ இல்லாத ஏராளமான காட்சியாளர்கள் தங்கள் போக்கில் 'உலகப்பாடகர்களை' தேர்வு செய்கின்றனர்! பார்க்க கொஞ்சம் சுமாராக இருக்க வேண்டும். கூச்சமில்லாமல் மேடையில் ஆட வேண்டும். புகழ்பெற்ற பாடல்கள் சிலவற்றை சமாளித்துப் பாடவேண்டும். அப்பாடல்கள் பொதுவாக ரசிகர்கள் ரசிப்பவையாக இருக்கவேண்டும். போதும், உலகப்பாடகர் தயார்!

உண்மையில் இந்த நிகழ்ச்சிகளில் வரும் உணர்ச்சிகரமான காட்சிகள் அனைத்துமே திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. பாடகர்களின் பதற்றம், நடுவர்களுக்கிடையிலான அனல் பறக்கும் விவாதங்கள், அழுகைகள் அனைத்துமே திட்டமிட்டது. பாடகர்கள் அந்த திட்டத்தின் இரைகள். குக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு நல்ல இளம் பாடகனோ பாடகியோ சாதாரண உடையுடனும் சராசரி தோற்றத்துடனும் வந்து இந்த நிகழ்ச்சிகளில் பாடினால் முதல் சுற்றிலேயே 'ஸ்டைல் மற்றும் ஆட்டிடியூட்' இல்லை என வெளியே தள்ளப்படுவது வழக்கம்.

ஆட்டம், தோற்றம், தலையலங்காரம், உடை, ஆங்கில உச்சரிப்பு என நடுவர்களுக்கு எத்தனையோ அளவுகோல்கள். ஒரு பாடலுக்கு, அதற்குரிய உடையை அணிந்து வருவது, மேடையிலேயே ஏதேனும் வித்தைகள் காட்டுவது போன்றவை வழியாக ஒரு சாதாரண பாடகன் ஒரு நல்ல பாடகனை எளிதாக வெளியே தள்ளிவிடுகிறான். நல்ல பாடகன் நல்ல நடனக்காரனாக இருப்பான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இம்மேடைகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடவந்தால்கூட அவருக்கு தொப்பை இருக்கிறது என்பது மட்டும்தான் நடுவர்களின் கவனதுக்கு வரும் போல!

'இந்தியன் ஐடல்' நிகழ்ச்சியின் முக்கிய நடுவர், நகலெடுப்பு மன்னரான் ஹிந்தி இசையமைப்பாளர் அனு மல்லிக். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். நான் இசை வெளியீட்டாளராக பணியாற்றிய இசைத்தட்டு நிறுவனம் அவர் பாடிய 'லஃப்டா' (Lafda) என்ற இசைத்தொகைய வெளியிட்டு கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தது! இத்தகைய புகழ்பெற்ற, ஆனால் இசை நுண்ணுணர்வு இல்லாத நடுவர்களுக்கு பெரும் பணம் அளிக்கபப்ட்டு மேடையில் 'நாடகங்கள்' ஊக்குவிக்கப்படுகின்றன. தொடர்ந்து வரும் மக்களின் வாக்களிப்புக்கு பின்னால், பல சமயம் இனம், சாதி, மதம், பிராந்தியம் போன்ற அளவுகோல்கள் மட்டும்தான் செயல்படுகின்றன.

உதாரணமாக டார்ஜீலிங்கை சேர்ந்த நேபாள வம்சாவளியினரான பிரசாந்த் தமாங் என்ற போலீஸ்காரர் 'இந்தியன் ஐடலாக' தேர்வுசெய்யப்பட்டார். ஒரளவுக்கு நல்ல குரல் மட்டும் கொண்ட அவருக்கு, தன் பாடலில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறனும் இல்லை, சுருதி சேரவுமில்லை. அவருக்கு எப்படி அத்தனை வாக்குகள் கிடைத்தன? கிழக்கு மாநிங்களைச் சேர்ந்த ஒட்டுமொத்த மஞ்சள் இனத்தவரின் ஆதரவு அவருக்கு இருந்தது. பிரசாந்த் தமாங் ஒரு நல்ல பாடகர் அல்ல என தில்லியின் ஒரு தனியார் வானொலி நிகழ்சியில் சொன்னபோது டார்ஜிலீங்கில் கலவரம் வெடித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது!

இப்பாடகர்கள் இத்தகைய நிகழ்சிகளுக்கு வெளியில் என்ன சாதனையை நிகழ்த்துகிறார்கள்? விஜய் டிவியில் வென்ற நிகில் எங்கே? இந்தியாவின் முதல் 'ஐடலான' அபிஜீத் சாவந்த் எங்கே? இரண்டாம் ஐடல் சந்தீப் ஆச்சாரியா ஒரு இசைத்தொகுப்பு கொண்டுவந்தார். அதில் அடிபப்டை சுருதியைக்கூட அவரால் நிலைநிறுத்த முடியவில்லை. தொகுப்பு தோல்வியடைந்தது. தொலைக்காட்சி நிலையங்களில்கூட நிகழ்ச்சி முடிந்ததும் இப்பாடகர்கள் ஒட்டுமொத்தமாக கைவிடப்படுகிரார்கள்.

இவர்கள் காட்டுவதுதான் இந்திய இசையின் யதார்த்தமா? இங்கே பாடகர்கள் நீண்ட முடியில் பல வண்ணங்களை பூசி கறுப்புக்கண்ணாடிகள் அணிந்து பளபளப்பான உடைகளுடன் கவற்சியாக இருப்பதில்லை. நல்ல பாடகர்கள் பலருக்கு உடை மற்றும் தோற்றம் பற்றிய நினைப்பே இருப்பதில்லை. பலர் மிக மிக உள்ளடங்கிப்போகும் குணம் கொண்டவர்கள். மேலைநாட்டிலும்கூட பாடகர்கள் தன்கள் திறமைகளை நிரூபித்ததன் பின், வளர்ந்து நிறுவனமாக ஆகும்போதுதான் மேடைகளில் அவர்களுக்கென ஆடம்பரமான தோற்றம் கட்டமைக்கபப்டுகிறது. புகழ்பெற்ற ஜானி காஷ் போன்றவரகள் பல வருடங்கள் தெருக்களில் அலைந்தபடி பாடுபட்டதற்கு பின்புதான் இசைத்துறையில் நுழைந்து வெற்றியடைந்தார்கள்.

இந்த 'யதார்த்த' இசைநிகழ்ச்சிகள் இசைத் திறமைக்கான தேடல்கள் அல்ல. இவை பாடகனை பாடல் அல்லாத திறமைகளுக்காக தேர்வு செய்யும் அபத்தங்கள். உண்மையான பாடகன் இந்நிகழ்ச்சிகளால் அமுக்கப்படுகிறான். போலிகள் முன்னிறுத்தப்படுகிறார்கள். கலையை அறியாத பெருங்கும்பல் கலையைத் தேர்வுசெய்தால் இதுவே நிகழும். வாழ்நாளின் பெரும்பகுதியை இசைத்துறையில் செலவழித்தவன் என்ற முறையில் என்னை வருத்தமுறச் செய்கின்றன இந்நிகழ்ச்சிகள்.

யோசித்துப்பார்க்கிறேன், இசையின் யதார்த்தம்தான் என்ன? 'இனிய இசை துயரமானதே' என்று ஒரு பாரசீகப் பழமொழி. இனிய இசையில் பிரிக்கமுடியாதபடி கலந்துள்ள அந்த சோகம்தான் அதன் இனிமை. இசையின் இனிமைக்குள் மனிதவாழ்க்கையின் கையறுநிலை, தவிர்க்க முடியாத தனிமை, முடிவிலாத, அர்த்தமில்லாத காத்திருப்பு, இனம் புரியாத ஏக்கம் என்று எத்தனையோ விஷயங்கள் பொதிந்துள்ளன. அருவமான மானுட துக்கத்தின் ஒலிவடிவமாக இருப்பதனால்தானே இசைக்கு பண்பாட்டில் அழியாத முக்கியத்துவம் உருவாகிறது? வாழ்க்கையெனும் துயரவெளியை இசை நமக்கு இனிதாக்கித் தருகிறது. கடும் வலியையும் இழப்பையும் எல்லாம் சுவைக்கும்படி ஒரு மனநிலையை இசை உருவாக்குகிறது.

இந்த மண்ணில் மனிதனுக்கு கிடைக்கும் இன்பங்களில் மகத்தான இசை முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்டது. இயற்கைதரும் இன்பத்தையும் துன்பத்தையும் தாண்டிச்சென்று தனக்கென அற்புதமான கனவுவெளி ஒன்றை மனிதன் உருவக்கிக் கொள்கிறான். அங்கே துன்பங்களை எல்லாம் இன்பங்களாக்கி இயற்கையை அவன் தனக்கேற்ப தலைகீழாக்கிக் கொள்ள முடியும். எந்த ஒரு இனிய இசையிலும் இயற்கையின்முன் மனிதன் கொள்ளும் தவிர்க்கவே முடியாத துயரமும் தனிமையும் உள்ளது. கூடவே மனிதன் அத்துயரங்களை வென்று அடையும் மகத்தான முழுமையுணர்வும் உள்ளது. அங்கே அவனை எதுவும் தோற்கடிக்க முடியாது. அதுதான் இசையின் யதார்த்தம் என்பது.

2007