முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரவீந்திர ஜெயின் : இசையின் ஒளியில்

 


உள்ளத்தில் ஒளியிருப்பவன்

மையத்தில் அமர்ந்து

பகலின் பிரகாசத்தை அனுபவிக்கிறான்.

ஆன்மாவில் இருள் நிறைந்தவன்

பிரகாசமான பகலிலேயே

இருண்மையில் நடந்து

தனது சிறைக்குச் செல்கிறான்.

- ஜான் மில்டன்

இரவு முழுதும் தொடர்ச்சியாகப் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்துவிட்டு மறுநாள் காலை பதினொரு மணிக்குப் படுக்கையில் சரிந்தேன். ஆழ்ந்த தூக்கத்தில் விழுந்தேன். கைபேசி கர்ணகடூரமாக ஒலித்தது. தூக்கம் கலைக்கப்பட்ட எரிச்சலில் பாதி திறந்த கண்களோடு அதை எடுத்துப் பார்த்தேன். மும்பையிலிருந்து நண்பர் ராஜேஷ் சர்மாவின் அழைப்பு. “ஏய் ஷாஜி, நீ ரவீந்திர ஜெயினைச் சந்திக்க வேண்டும் என்று சொல்லியிருந்தாய் அல்லவா? அவர் இன்று சென்னையில்தான் இருக்கிறார். மதியத்துக்கு மேல் மும்பை திரும்பிடுவார். அவருடைய எண்ணையும் தங்கும் ஹோட்டலின் பெயரையும் அனுப்புகிறேன். உடனே சென்று அவரைச் சந்தித்துவிடு. நீ வருவதாக அவரை அழைத்துச் சொல்கிறேன்" என்று அழைப்பைத் துண்டித்தார். தூக்கக் கலக்கத்துடனே படுக்கையிலிருந்து எழுந்து அவசரமாக ஆயத்தமானேன். போகும் வழியில் ரவீந்திர ஜெயினின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு ஒன்றையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வேகமாக வெளியேறினேன். ‘கீத் காத்தா சல், ஓ ஸாத்தீ குன் குனாத்தா சல்’ அவரது துள்ளலான பாடல் ஒன்றை எழுப்பி கார் நகர்ந்தது.

‘எனது நண்பனே, எப்போதும் பாடிக்கொண்டே நகர்ந்து செல்...’ நம்பிக்கையூட்டும் எண்ணங்களும் ஆற்றலும் ததும்பும் மகிழ்ச்சியானதொரு பாடல். ரவீந்திர ஜெயின் எழுதி, இசையமைத்தது. இத்தகைய அற்புதமான மெல்லிசைப் பாடல்களை வழங்கிய ரவீந்திர ஜெயின், இந்திய மண்ணில் தோன்றிய மகத்தான ஓர் இசையமைப்பாளர். ‘அகியோம் கீ ஜரோக்கோம் ஸே’ (என் கண்களின் வாசலில் இருந்து) போன்ற தனது அருமையான பாடல்களால் ஏராளமான இசை ரசிகர்களின் மனதைத் தொட்டு ஒளியேற்றியவர். ‘குங்குரூ கீ தர்ஹா பஜ்தா ஹீ ரஹா ஹும் மே...' (நான் எப்போதும் கொலுசு மணிகளைப் போல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறேன்..) போன்ற அவரது பாடல்களை ஒருபோதும் நம்மால் மறக்க முடியாது. அவரது ‘தோ பஞ்சி தோ தினகே’ (இரண்டு பறவைகள் இரண்டு காய்ந்த சுள்ளிகளோடு எங்கோ பறந்து செல்கின்றன...) பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் எனது கண்கள் ஈரமாகிறது.

ஹிந்துஸ்தானி செவ்வியல் இசைராகங்களின் அடிப்படையில் அமைந்த இனிமையான பல பாடல்களை வழங்கிய ரவீந்திர ஜெயின் அசாதாரணமான படைப்பூக்கத்துடனும் செழுமையுடனும் தனது பாடல்களின் கருவியிசைப் பகுதிகளை உருவாக்கியவர். கவித்துவமும் அழகியலும் மிகுந்த பாடலாசிரியர். அவர் இசையமைத்த பெரும்பான்மையான பாடல்களை அவரே எழுதியிருக்கிறார்! தனது 40 வருட திரையிசை வாழ்வில் ஏறத்தாழ 40 படங்களுக்கு மட்டுமே இசையமைத்தார். ஆனால் அவரது பாடல்கள் ஒருபோதும் நம்மை மகிழ்விப்பதில், நம் முகத்தில் புன்னகையையோ கண்ணீரையோ வரவழைப்பதில் தவறியதில்லை. 

ரவீந்திர ஜெயினின் இசையை நான் கேட்கத் தொடங்கியது 1976ல் வெளிவந்த சிட்சோர் படத்தின் பாடல்கள் வழியாகத்தான். இந்தியா முழுவதும் பரபரப்பாகப் புகழடைந்த அந்த நான்கு பாடல்களையும் யேசுதாஸ் பாடியிருந்தார். அனைத்தும் ரவீந்திர ஜெயினால் எழுதப்பட்டவையே. நாட்டுப்புற இசைப்பாணியிலமைந்த ‘கோரி தேரா காவ் படா ப்யாரா’ (செவத்தப் பெண்ணே, உனது ஊர் வெகு அழகானது..) எனும் பாடல் எல்லோருடைய உதடுகளிலும் ஒலித்தது. துள்ளலிசையிலமைந்த ‘ஆஜ் ஸே பெஹ்லே ஆஜ் ஸே ஜியாதா’ (இன்றைக்கு முன் இதைவிட மகிழ்ச்சியாய் இருந்ததில்லை..) பாடலும் மிகவும் பிரபலமடைந்தது.. யமன் கல்யான் ராகத்தில் அமைந்திருந்த ‘ஜப் தீப் ஜலே ஆனா ஜப் ஷ்யாம் டலே ஆனா’ (மாலை இரவாகி விளக்குகள் ஒளிரும் நேரத்தில் வந்து விடு...), பீலு ராகத்தில் அமைந்திருந்த ‘தூ ஜோ மேரே சுர் மே, சுர் மிலா லே சங்க் கா லே’ (உன்னுடைய சுருதியை என்னுடையதில் கலந்து விடு, இருவரும் சேர்ந்தே பாடுவோம்..) என்ற இரு பாடல்களும் தீவிர இசை ரசிகர்களின் விருப்பமான பாடல்களாக அமைந்து வெற்றி பெற்றன. இவ்விரண்டும் இன்றைக்கும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்கள்.

அவர் தங்கியிருந்த ஹோட்டலின் முன்னால் என் கார் நின்றது. அறைக்குள் நுழையும் முன்னர் அங்கிருந்து யேசுதாஸ் வெளியே செல்வதைப் பார்த்தேன். நான் அறைக்குள் சென்றேன். நீண்ட வெள்ளைநிற அங்கியை அணிந்தவாறு ரவீந்திர ஜெயின் சோபாவில் அமர்ந்திருந்தார். பெரிய கருப்புக் கண்ணாடி அணிந்து மெல்லிய புன்னகையுடன் என்னை வரவேற்றார். 66 வயதுடையவராகத் தெரியவில்லை. பொதுவாக பார்வையற்றவர்களிடம் தென்படும் நிச்சயமற்ற முகவெளிப்பாடு எதுவும் அவரிடம் இல்லை. அவருடைய அருகில் சென்று காலைத்தொட்டேன். “உங்கள் குரல் எங்கோ மேலிருந்து வருகிறது. நிச்சயம் நீங்கள் ஆறடிக்கு மேல் உயரமானவனாக இருக்க வேண்டும்” என்றார்! மலையாளம்தான் எனது தாய்மொழி என்று தெரிந்ததும், “யேசு இப்போதுதான் இங்கிருந்து போனார், பார்த்தீங்களா?” என்றார்.

அடுத்த இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அவரது இசையையும் வாழ்க்கையையும் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ரவீந்திர ஜெயினின் தந்தை, உத்தரப்பிரதேச மாநிலத்தில் அலிகர் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த பண்டிட் இந்திரமணி ஜெயின் எனும் ஒரு ஆயுர்வேத மருத்துவர். அங்கு 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 28ல் பிறந்தார் ரவீந்திரா. பிறக்கும் போது அவருடைய இரண்டு கண்களும் இறுக்கமாக மூடியிருந்தன. அதை அறுவை சிகிச்சை வழியாகத் திறந்து பார்த்த மருத்துவர்கள் அவருக்கு மிகவும் குறைவான பார்வை சக்தியே இருப்பதாகவும் அதுவும் வெகுவிரைவில் இழந்துவிடும் என்றும் கூறினார்கள்.

கண் பார்வை இல்லாதவராக இருந்தும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் சிறுவயதிலேயே மிகுந்த ஆர்வமுடையவராகவும், இசையின் மீது தீவிரமான நாட்டமுடையவராகவும் விளங்கினார், ரவீந்திரா. இசையைப் பற்றிச் சிந்திப்பதும் அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதும் கண்களின் இருளிலிருந்து அவரை வெளியே கொண்டுவரக்கூடும் என்று எண்ணிய அவரது தந்தை மிக சிறுவயதிலேயே ஒரு ஹார்மோனியத்தை வாங்கிக் கொடுத்தார். பல மொழி இலக்கியங்களில் புலமை கொண்டிருந்த தன் மூத்த சகோதரருடன் கழித்த நேரங்களில் ஹிந்தி, பிரென்ச் மற்றும் ஆங்கில நூல்களிலிருந்து அவர் வாசித்துக் காட்டுவதை ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டிருப்பார் ரவீந்திரா. 

வீட்டில் நடைபெறும் அந்தாக்‌ஷரி எனும் பாடல் விளையாட்டின்போது, ஒரு குறிப்பிட்ட எழுத்தில் தனக்குப் பாடல்கள் எதுவும் தெரியாதபோது அவரே சொந்தமாக ஏதேனும் பாட்டுக்கட்டிப் பாடுபவராக இருந்திருக்கிறார். ஹிந்தி மற்றும் உருது மொழிகளின் பின்னல்கள் வழியாக இந்துக் கலாச்சாரமும், முஸ்லிம் கலாச்சாரமும் கலந்து பிணைந்திருந்த அலிகரின் சமூகச்சூழலும் அவருடைய புரிந்துணர்வை அகலப்படுத்திக்கொள்ள உதவியது.

பின்னர், பலகாலம் செவ்வியல் இசையை வெவ்வேறு ஆசிரியர்களிடம் முறையாகக் கற்றுத் தேர்ந்து மதிப்புக்குரிய ‘சங்கீத் பிரபாகர்’ எனும் பட்டத்தையும் தனது பதினேழாவது வயதிலேயே பெற்றார். அலிகரிலேயே தங்கியிருப்பது எதிர்கால முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் என அவருடைய இசை ஆசான் நாதூராம் சர்மா அறிவுரை வழங்கியதை ஏற்றுக் கொண்டு அலிகரை விட்டு கல்கத்தா சென்றார். அங்கு ஒரு வங்காளிக் குடும்பத்தினருடன் தங்கியிருந்து, வங்கமொழியைக் கற்றுத் தேர்ந்தார். ரபீந்திர சங்கீதத்தின் மீது பெருவிருப்பம் கொண்டவராக மாறினார். அங்கு இசைப்பள்ளிகளில் ஆசிரியராகவும் கல்கத்தா வானொலிக்காகப் பாடல்கள் எழுதி இசையமைத்துப் பாடுபவராகவும் இருந்தார். பிரபல வங்கமொழிப் பாடகி ஆர்த்தி முகர்ஜியின் குரலில் ஒரு  பாடலையும் அங்கு பதிவு செய்திருந்தார். வங்க நாட்டின் இசை வடிவங்களிலிருந்து பெற்ற தாக்கமே அவரை உள்ளத்தை வருடும் மெல்லிசையை உருவாக்குபவராகப் பின்னர் மாற்றியது. இன்றுவரை அவரை ஒரு வங்காளி என்றே பலரும் நினைத்திருக்கின்றனர். யேசுதாஸ் போன்றவர்கள் இன்றும் அவரை ‘தாதா’ என்றுதான் அழைக்கிறார்கள்!

கல்கத்தாவில் ஹிந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தபோது அவர் ஹிந்திப் படத்தில் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்திருந்தார். அதன் காரணமாக 1968ல் பம்பாய்க்குக் குடிபெயர்ந்து, இசையமைப்பாளராக ஆவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். 1971ல் மெஹ்பூப் கி மெஹந்தி எனும் படத்திற்கு நௌஷாத் இசையமைக்க, அவருக்கு உதவியாக இருக்குமாறு இயக்குனர் ஹெச்.எஸ்.ரவாய்ல் ரவீந்திராவைக் கேட்டுக்கொண்டார். ஆனால் யாருக்கும் உதவியாளராக இருக்க தான் விரும்பவில்லை என்று கூறி அவ்வாய்ப்பைத் திடமாகவே நிராகரித்தார். பார்வையின்மையுடன் போராடிக் கொண்டிருந்தாலும் தனது கலைமீது அபாரமான நம்பிக்கை கொண்டிருக்கும் ஒருவரால் எடுக்கப்பட்ட தெளிவான முடிவேயாகும் அது.

ஷோலே போன்ற பெருவெற்றிப் படங்களைத் தயாரித்த மதிப்புமிக்க என்.என்.சிப்பி நிறுவனத்திலிருந்து முதல் பட வாய்ப்புக் கிடைத்தது அவருக்கு. ஆனால் பாடல் பதிவுக்கு முன்னே அப்படம் முடங்கியது. அவருடைய இசையமைப்பில் முதலில் வெளியான படம் காஞ்ச் ஔர் ஹீரா (1972). முஹம்மது ரஃபி பாடிய சிறந்த சோகப்பாடல்களில் ஒன்றான ‘நஸர் ஆத்தீ நஹி மன்ஸில்’ (நிழல் தரும் ஓரிடம் அருகாமையில் எங்குமே தென்படவில்லை..) எனும் பாடல் இப்படத்தில் இடம்பெற்றதேயாகும். ரவீந்திராவின் இசையமைப்பில் பிரபலமடைந்த முதல் படம் சோர் மச்சாயே ஷோர். 1974ல் வெளிவந்த இப்படத்தில்தான் முன்சொன்ன குங்குரூ கீ தராஹ் பாடல் கிஷோர் குமாரின் குரலில் இடம்பெற்றது. இப்படத்தில்தான் பெரும் வெற்றிபெற்ற ‘லே ஜாயேங்கே லே ஜாயேங்கே தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ (இம்மணப் பெண் அவளை இதயம் முழுவதுமாக நேசிப்பவனுக்கே சொந்தமானவள்..) என்றப் பாடலும் இடம்பெற்றிருந்தது. அது இன்று வரைக்கும் திருமண வைபவங்களில் ஒலிக்கக்கூடிய ஒரு பாடல். அவரே எழுதிய இப்பாடலில் வந்த ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ எனும் வரிதான் பின்னர் ஷாரூக் கான் நடித்து வெளிவந்த அந்த மாபெரும் வெற்றிப்படத்தின் தலைப்பாகவும் அமைந்தது!

இப்பாடலுக்குப் பல சுவாரசியமான நிகழ்வுகளோடு தொடர்புண்டு. படத்தின் தயாரிப்பாளர் என்.என்.சிப்பி, ஏற்கனவே வாய்ப்பளித்த படம் முடங்கிப் போனதால் மீண்டும் ரவீந்திராவுக்கு வாய்ப்பளிக்கத் தயங்கினார். அப்போது சிப்பியின் தயாரிப்பில் இருந்த மற்றொரு படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார், சஞ்சீவ் குமார். கல்கத்தா காலத்திலிருந்தே ரவீந்திராவின் நண்பர்தான் சஞ்சீவ் குமார். அவரது அழுத்தமான பரிந்துரையின் பேரிலேயே ரவீந்திராவுக்குக் கடைசியில் இவ்வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பிரச்சினை அங்கேயும் முடியவில்லை! சிப்பியும் படத்தின் கதாநாயகனான சசி கபூரும் ரவீந்திரா அமைத்த எல்லா மெட்டுக்களையும் நிராகரித்துக் கொண்டே இருந்தனர்.

பலபல மெட்டுக்களைப் பாடிக்காட்டியும் எல்லாமே நிராகரிக்கப்பட்டதால் சோர்ந்துப்போன ரவீந்திரா, எரிச்சலடைந்தார். இறுதி முயற்சியாக ஒரேயொரு மெட்டைப் பாடிக் காண்பிப்பேன் என்றும் அதுவும் பிடிக்கவில்லையென்றால் நான் இப்படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன் என்றும் அவர் கூறிவிட்டார். மிகச் சாதாரணமான ஒரு மெட்டைப் பாடிக்காட்டினார். ஆச்சரியமாக, இதைத்தான் எதிர்பார்த்திருந்தோம் என இருவருமே உடனடியாகச் சொல்லிவிட்டனர்! உண்மையில் என்ன காரணத்தினால் ஒரு மெட்டு பிடித்துப் போகிறது அல்லது நிராகரிக்கப்படுகிறது என எந்தவொரு இசையமைப்பாளருமே அறிவதில்லை!

அன்றிலிருந்து ரவீந்திராவுக்கு ஏறுமுகமே. ஹிந்தித் திரையிசையின் தரமான ஒரு இசையமைப்பாளராக அற்புதமான பல பாடல்களை உருவாக்கினார். பெரிய தயாரிப்பு நிறுவனங்களான ராஜ்கபூரின் ஆர்.கே.பிலிம்ஸ், ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ், சிப்பி பிலிம்ஸ், பர்ஜாத்யா பிலிம்ஸ் போன்ற நிறுவனங்களும் அவருக்கு அவ்வப்போது வாய்ப்பளித்தன. வணிக வெற்றியில் ஒரு உச்சநட்சத்திரமாக ஆகவில்லை என்றாலும் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளில், தரம் வாய்ந்த தனது பாடல்களில் மகிழ்ச்சியானவராக, திருப்தியானவராக இருந்தார், ரவீந்திர ஜெயின். இளம் நாயகன் ஷாஹித் கபூர் நடித்து வெளிவந்த ஏக் விவாஹ் ஐசா ஃபி (2009) எனும் படம் வரைக்கும் இசையமைத்தார்.

சௌதாகர் (1973) எனும் படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய ‘தேரா மேரா ஸாத் ரஹே’, தபஸ்யா (1975) எனும் படத்தில் கிஷோர் குமார் பாடிய ‘ஜோ ராஹ் சுனி து னே’, அதே படத்தில் வந்த கிஷோர் குமார் மற்றும் ஆர்த்தி முகர்ஜி பாடிய முன் சொன்ன ‘தோ பஞ்சி தோ தினகே’, தோ ஜாஸுஸ் (1975) படத்தில் லதா மங்கேஷ்கர் மற்றும் சைலேந்திர சிங் பாடிய ‘புர்வையா லேகே சலி மேரி நையா’, நதியா கே பார் (1982) எனும் படத்தில் ஜஸ்பால் சிங் மற்றும் ஹேம்லதா பாடிய ‘கௌன் திசா மே லேகே சலா ரே’, பஹேலி படத்தில் சுரேஷ் வாட்கர் மற்றும் ஹேம்லதா பாடிய அழகான மழைப்பாடல் ‘ஸோனா கரே ஜில்மில்’ போன்ற சிறந்த பாடல்கள் அவருடைய இசையமைபு மேதமைக்குச் சில உதாரணங்கள்.

ஃபகிரா (1976) படத்தில் இடம் பெற்ற, மகேந்திர கபூர் பாடிய ‘ஃபகிரா சல் சலா சல்’ எனும் பாடல் சூஃபி இசையின் மந்திரஜாலங்கள் நிறைந்ததாகும். கீத் காத்தா சல் (1975) படத்தில் இடம்பெற்ற ஆர்த்தி முகர்ஜியும், ஜஸ்பால் சிங்கும் இணைந்து பாடிய ‘ஷியாம் தேரி பன்ஸி புகாரே’ என்ற பாடல் சாருகேசி ராகத்தின் அழகுகள் நிறைந்தது. காதலர்களின் பிரிவின் சோகத்தையும், படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பக்திச் சூழலின் பஜன் உணர்வையும் ஒருங்கே உருவாக்கிய பாடல் இது!

மேற்கூறப்பட்டிருக்கும் பாடகர்களில் பலருடைய பெயர் புதிதாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கக் கூடும். சித் சோர் படத்தில் இடம்பெற்ற பாடல்களில் யேசுதாஸுடன் இணைந்து பாடிய பெண்குரல் ஹேம்லதா. இந்தி சினிமா உலகத்திற்கு அதிகம் அறிமுகமில்லாத பாடகி. முதலில் சொன்ன ‘அகியோம் கீ ஜரோக்கோம் ஸே’ என்ற பாடலினால் இன்றும் நினைவுகூரப்படும் பாடகியாவார். ‘தோ பஞ்சி தோ தினகே’ பாடிய ஆர்த்தி முகர்ஜி அற்புதமான வங்கமொழிப் பாடகி. அந்தப் பாடலை நான் முதன்முதலில் கேட்டபோதே, மென்மையாக நடுங்கும் சுபாவத்துடன் பாடும் இனிமையான அக்குரலை மிகவும் விரும்ப ஆரம்பித்தேன். யேசுதாஸை இந்தியில் பாட உற்சாகப்படுத்தியதைப் போலவே பல பாடகர்களையும் அறிமுகப்படுத்தி, வாய்ப்பளித்து உற்சாகமூட்டியிருக்கிறார், ரவீந்திர ஜெயின். ஜஸ்பால் சிங், சுரேஷ் வாட்கர், சுஷ்மா சிரேஷ்டா, கவிதா கிருஷ்ணமூர்த்தி போன்ற பலரும் இதில் அடக்கம்.

இதைப்பற்றி அவர் குறிப்பிடும் போது, எப்போதும் புதிய குரல்களுக்காகத் தேடியதாகவும், செவ்வியல் இசையில் தேர்ச்சி பெற்ற, இனிமையான யேசுதாஸின் குரலைக் கண்டு கொண்டதாகவும் கூறினார். ஒரு பாடல் போட்டியில் நடுவராகப் பங்கு பெற்றபோது சுரேஷ் வாட்கரின் குரலைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்தார். ஜஸ்பால் சிங் தொழில்முறையில் ஒரு வழக்கறிஞர். ரஃபி மற்றும் முகேஷ் இருவரின் குரலையொத்த சில பண்புகள் அவருடைய குரலில் இருந்தது என்றார். பெங்காலிப் பெண்ணான ஹேம்லதா ரவீந்திராவின் மாணவியாக இருந்தவர். திரைப்படங்களில் இசையமைப்பாளராக ஆவதற்கு முன்னரே ரவீந்திரா இசையமைத்த சில மெட்டுக்களைப் பாடும் வாய்ப்புக்காக இசையமைப்பளர்கள் ரோஷன் மற்றும் நௌஷாத் முன் பாடிக்காட்டியுள்ளார் ஹேம்லதா. நௌஷாத் ஒருமுறை ஹேம்லதா பாடிக்காட்டிய தனது மெட்டை எடுத்து முகேஷ் பாடிய ‘ஜோ சலா கயா உஸே ஃபூல் ஜா’ (ஸாத்தி-1968) என்ற பாடலை உருவாக்கியிருப்பதாகவும் சொன்னார் ரவீந்திர ஜெயின்!

மதன் மோகன், ரோஷன், எஸ்.டி. பர்மன் ஆகியோரின் பாடல்களுக்குப் பெரும் ரசிகராக இருந்தவர் ரவீந்திர ஜெயின். லதா மங்கேஷ்கர் அவருடைய விருப்பமான பாடகியாகவே என்றும் இருந்தார். இருவரும் இணைந்து ‘தேரா மேரா ஸாத் ரஹே’ போன்ற அற்புதமான பல பாடல்களைத் தந்திருக்கின்றனர். இப்பாடல் பதிவிற்காக இரண்டு மாதம் காத்திருந்து லதா மங்கேஷ்கரின் தேதி கிடைத்ததாகவும், பாடல் பதிவு ஆரம்பிக்கும் தருணத்தில் ரவீந்திராவின் தந்தை இறந்த செய்தி தந்தியாக வந்தும், சொற்களிலடங்காத துயரத்துடன் நின்று பாடல் பதிவை தான் முடித்ததாகவும் என்னிடம் சொன்னார்.

துர்ப்பாக்கியமாக லதா மங்கேஷ்கருடனான அவரது உறவில் விரிசல் இருந்தே வந்தது. ஆர்த்தி முகர்ஜி, ஹேம்லதா போன்ற புதிய பாடகிகளையே அவர் முன்னிறுத்துவதாக லதா எண்ணினார். இதைப்பற்றி ரவீந்திரா “நான் எப்போதும் லதா மங்கேஷ்கரையே பாடவைக்க விரும்பினேன். ஆனால் நானோ புதியவன். எனது தயாரிப்பாளர்கள் பலர் சிறிய நிறுவனங்களே. எங்களால் நீண்டகாலம் அவருடைய தேதியைப் பெறுவதற்காக காத்திருக்க இயலாமல் போனது. மேலும் புதிய குரல்கள் புதுவகையான உணர்வுகளை எனது பாடல்களுக்கு அளிப்பதாக நான் கருதினேன். எனவே, மற்ற பாடகர்களைப் பாட வைத்தேன். இதை லதாஜி ஒரு போதும் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் என்மீது கோபமாகவே இருந்தார்” என்று குறிப்பிட்டார். ஆனால், பின்னர் இசை சாதனைக்காக லதா மங்கேஷ்கர் விருதைப் பெற்றிருக்கிறார் ரவீந்திர ஜெயின்.

லதா மற்றும் ஆஷா போன்ஸ்லேயைப் பற்றி கூறிய ரவீந்திர ஜெயின் “லதாஜியின் குரல் தூய்மையானதும் செவ்வியல் இசைக்கு உகந்ததும் மென்மையானதுமாகும். ரஃபி சாஹிபைப் போலவே இயல்பாகப் பாடும் குரலின் தன்மையைக் கொண்டவர் லதாஜி. ஆனால் ஆஷாவின் குரலில் அத்தகைய தன்மைகள் இல்லை. பயிற்சியின் மூலம் அவர் குரலின் தரத்தை மேம்படுத்திக் கொண்டார். பயிற்சியின் மூலம் பாடகர்கள் தங்களது பாடும் விதத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் இயல்பிலே அமைந்த குரலின் தரத்தை மாற்ற இயலாது. ஆஷா போன்ஸ்லேயுடன் இணைந்து உருவாக்கி, வெற்றியடைந்த எனது பாடல்கள் மிகக் குறைவே. சௌதாகர் படத்தில் இடம்பெற்ற ‘சஜ்னா ஹே முஜே சஜ்னா கே லியே’ (எனது காதலனுக்காக என்னுடைய சிறப்பான தோற்றத்தை நான் வெளிப்படுத்துவேன்) என்ற பாடல் அதில் ஒன்று” என்கிறார்.

முஹம்மது ரஃபியைப் பற்றி, “நான் முதலில் ரஃபி சாஹிபை கல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் வைத்து சந்தித்தேன். அங்கே கூட்டம் நெருக்கி என்னை வெளியே தள்ளிவிட்டது. பின்னர், மும்பையில் பாந்த்ராவில் இருவரும் பக்கத்து வீட்டுக்காரராய் இருந்தோம். பாடல் பதிவின் முன்னோட்டப் பயிற்சிக்காக அவர் எனது வீட்டுக்கு லுங்கி கட்டிக்கொண்டே வருவார். மகத்தான பாடகராயிருந்தும் மிகவும் பணிவானவராகவும், எளிமையானவராகவும் இருந்தார். மென்மையாகப் பேசுபவர். அவருடைய எல்லா ஆற்றலையும் பாடுவதற்காக சேமித்து வைத்திருக்கிறார் என்றே எண்ணத் தோன்றும்” என்று கூறினார்.

கிஷோர் குமாரைப் பற்றியும் சொல்வதற்கு ரவீந்திராவிடம் சிறப்பான சொற்கள் இருக்கின்றன. “எனது இசையில் அவர் பாடிய முதல் பாடல் ‘குங்க்ரூ கி தர்ஹா’. எனது எந்த ஒரு மேடை நிகழ்ச்சிகளிலும் நான் அதைப் பாட வேண்டியிருக்கிறது! கிஷோர் தாவிடம் முதலில் நான் சொன்னேன், ‘நான் கல்கத்தாவிலிருந்து வந்த வளரத்துடிக்கும் ஒரு இசையமைப்பாளன். வங்க இசைப் பாணியில் உங்களுக்காக ஒரு மெட்டு வைத்துள்ளேன். அதை நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டும்.’ அவர் ‘கேட்கத் தேவையில்லை. பாடல் பதிவுக்கு ஆயத்தமாகிக் கொள்’ என்றார். பதிவின் தினத்தன்று எதிர்பாராவிதமாக அவர் காலை ஒன்பது மணிக்கெல்லாம் பதிவுக்கூடத்திற்கு வந்துவிட்டார். அப்போது ஒன்றுமே ஆயத்தமாயிருக்கவில்லை. இன்னும் இசைக்கலைஞர்களுக்குக் குறிப்புகள் கூட கொடுக்கவில்லை! நான் கவலையடைந்தேன். ஆச்சரியப்படும் வகையில் அவர் ‘பல்லவியை மட்டும் இப்போது எனக்குப் பாடிக்காட்டு’ என்றார். பாடிக்காட்டியதும் ‘தேவையான நேரத்தை எடுத்துக் கொள், உனது பாடலைப் பாடிப் பதிவு செய்துவிட்டே நான் செல்வேன்’ என்று சொன்னார். அன்றைக்கிருந்த மற்ற எல்லா பாடல் பதிவுகளையும் ரத்து செய்துவிட்டு எனது பாடலைப் பாடிப் பதிவு செய்தார். மேலும், என்னை ‘ரபீந்திரநாத் தாகூர்’ என்று அழைக்கவும் ஆரம்பித்தார்!” என சிலாகித்தார் ரவீந்திர ஜெயின்.

ஆரம்பகாலத்தில் ராஜ்கபூரைச் சந்தித்து தனது மெட்டுக்களைப் பாடிக் காட்டி வாய்ப்புகள் கேட்டுள்ளார் ரவீந்திர ஜெயின். ஆர்.கே. பிலிம்ஸில் வாய்ப்புக்காகத் தொடர்ந்து ராஜ்கபூரை அழைத்துக் கொண்டே இருந்தார். “நேரம் வரும்போது நானே திறமையானவர்களின் கதவைத் தேடிச்செல்வேன்” என்று பதிலளித்தார். பின்னர் தனது பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக ரவீந்திராவைப் பூனாவுக்கு அழைத்த ராஜ்கபூர் தனது ராம் தேரி கங்கா மைலி என்ற படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்தார். 1985ஆம் ஆண்டு இப்படத்திற்காக ரவீந்திர ஜெயின் அப்போது மதிப்புமிக்கதாகவும் நம்பகமானதாகவும் இருந்த ஃபிலிம் பேர் விருதைப் பெற்றார். ‘உன்னிடம் சங்கர்-ஜெய்கிஷன் மற்றும் சைலேந்திராவை (ராஜ்கபூரின் விருப்பமான இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்) ஒருங்கே காண்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ராஜ் கபூர்.

பாடல்களின் இசை ஒழுங்கைப் பற்றிக் கேட்டபோது “நல்ல பாடல்கள் அதன் ராகத்தின் அடிப்படையிலும், அதன் அமைப்பிலும் தனக்கேயுரிய உணர்ச்சிகளின் ஆன்மாவைக் கொண்டிருக்கிறது. இசைக்கருவிகளின் கூட்டிணைவு அந்த ஆன்மாவிற்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். பாடல்களில் கருவி இசையை மட்டும் ஒழுங்கு செய்பவர்கள் இதைப் பெரும்பாலும் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று கருத இயலாது. எனது பாடல்களின் கருவியிசை ஒழுங்குகளை நானே செய்வேன். தற்போதைய இசையமைப்புகள் பெரும்பாலும் வெறும் சப்தங்கள் மட்டுமே. அதில் ஆன்மா இல்லை. எனது எல்லாப் படங்களுக்கும் நானே பின்னணி இசையை அமைத்துள்ளேன். அதன் அனைத்துப் பகுதிகளையும் நானே முன்னின்று செய்திருக்கிறேன்”. இதில் பெருவியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், பார்வையில்லாத ஒருவர் எப்படி காட்சிகளைக் காணாமலேயே சினிமாவுக்குப் பின்னணி இசையமைத்திருப்பார் என்பதுதான்!

அவருடைய இந்திப் பாடல்களைப் பற்றி மட்டுமே நான் பேசிக்கொண்டிருந்ததை கவனித்த அவர் “என்னுடைய மலையாளப் பாடல்களை நீங்கள் கேட்டதில்லையா?" என்றார். 1977ல் வந்த சுஜாதா என்ற மலையாளப் படத்திற்கு அவர் இசையமைத்திருந்த பாடல்களை நான் விரும்பியிருந்தேன். ‘ஸ்வயம்வர சுபதின மங்களங்ஙள்’ என்ற பாடலை ஆஷா போன்ஸ்லே பாடியிருந்தார். பெருவெற்றி பெற்ற கல்யாண வாழ்த்துப் பாடலாகும் அது. யேசுதாஸ் பாடிய ‘காளிதாசன்டே காவ்ய பாவனயே’ மற்றும் ‘தாலிப்பூ பீலிப்பூ’ போன்றவையும் சிறப்பான பாடல்களே. ஆயினும், அவரோடு பேசிக்கொண்டிருக்கையில் அவை நினைவுக்கு வரவில்லை. “நீங்கள் இந்திப் பாடல்களுக்குள்ளேயே மூழ்கிவிட்டதாகத் தெரிகிறது” என்றார். 1994ல் சுகம் சுககரம் என்னும் ஒரு மலையாள படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

ரவீந்திர ஜெயினைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் எனக்குப் பெரும் வியப்பாக இருக்கும் ஒரு விஷயம், பார்வையற்ற இவர் எப்படி சினிமாவின் பின்னணி இசைக் கோர்ப்பு, இசையமைப்பு, பாடல்களை எழுதுவது, மேடை நிகழ்ச்சிகள் நடத்துதல், இசைப்படங்களில் நடிப்பது, தொலைக்காட்சி இசைப் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்பது போன்ற பல பல பணிகளைச் சிறப்பாகச் செய்கிறார்? என்பதுதான். “சினிமாவில் அவர்களுக்குத் தேவையானதை நாம் வழங்கிவிட்டால், அவர்கள் எதைப் பற்றியும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆகவே சினிமாத்துறையைப் பொருத்தவரை எந்த ஒரு பெரிய பிரச்சினையும் பார்வைக்குறையினால் எனக்கு வந்ததில்லை. ஆனால், என்னுடைய சொந்த வாழ்க்கையின் செயல்களில், யதார்த்தங்களில் எனக்குப் பல சிரமங்கள் இருக்கவே செய்கின்றன. ஆயினும், நான் எனக்குக் கிடைத்த அனுகூலங்களையே கணக்கிடுகிறேன்” என்றும் கூறினார்.

“பார்வைக் குறையுடன் இருப்பதால் என்னால் கூர்மையாக, கவனத்துடன் ஒரு செயலில் ஈடுபட முடிகிறது. இசையில் முழுமையாக மூழ்க முடிகிறது. உடல் குறைபாடுகள் உன்னுடைய சிறந்தவற்றை இழக்கச் செய்துவிடக் கூடாது. வாழ்க்கையின் மீதான பிடிப்பை விட்டுக் கொடுத்துவிடவும் கூடாது.” என்று சொன்னவாறு அவரது கவிதை ஒன்றை எனக்குச் சொல்லிக் காட்டினார்:

முகத்தில் இரண்டு கண்கள் மட்டுமே இருக்கின்றது

மனதிற்குள் ஆயிரம் கண்கள் விழிக்கின்றன

முகத்தின் கண்கள் தூங்கிவிடுகிறது

மனதின் கண்கள் தூங்குவதேயில்லை

பலரின் கண்கள் மூடியே இருக்கின்றன

அவர்களுக்குள் இருள் நிரம்பியிருக்கிறது

அங்கு நீ நட்சத்திரமாய் உலாவரக்கூடும்

வாழ்வின் நதியில் கரைகாணாமல்

மூழ்கிவிடுகின்றனர் பலர்

அவர்களுக்கு அருகாமைக் கரையாக நீ அமையக்கக்கூடும்

முடிவேயற்ற இருளில் மறைகின்றனர் பலர்

அவர்களுக்கு நீ ஒளியின் கீற்றாய் ஒளிரக்கூடும்...’

உலகக் கவிஞர் மில்டன் தனது பார்வைக் குறைபாட்டைப் பற்றி ‘இருட்டில் இருப்பது துயரமானதல்ல. இருட்டைப் பொறுத்துக்கொள்ள இயலாமல் இருப்பதே துயரம்’ என்றார். ரவீந்திர ஜெயினின் முகத்தில் இருட்டோ துயரமோ துளிக்கூட இல்லை. ஏனெனில், ஒருபோதும் ஒளிமங்காத இசையெனும் அதிசயப் பிரகாசத்தில் வாழ்ந்தவர் அவர்.


2010