முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பருவக்காற்றின் பாட்டு

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே

என்ன கல்லொடச்சி வளர்த்து நீயே

முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே

என்ன முள்ளு தைக்க விடல நீயே....

இந்தத் திரைப் பாடலை முதன்முதலில் கேட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கள்ளிக்காடு, காடை, காட்டுக் குருவி, எண்டம் புதர், கரட்டுமேடு, ஆவாரம்குலை, கஞ்சி, கூழ் என முற்றிலுமாகக் கிராமத்து சித்திரங்களால் ஆன வரிகள். ஆனால் இசையோ முழுமையான மேற்கத்தியப் பாணி. புதுமையான ஆண் குரலின் உயிர்த்துடிப்புள்ள பாடும்முறை. பியானிகா, டெம்பிள் டிரம் போன்ற அரிதான இசைக்கருவிகளை பயன்படுத்தி உருவாக்கிய துல்லியமான, உணர்ச்சிகரமான பின் இசை. கேட்டவுடன் என்னைக் கவர்ந்த அருமையான அப்பாடலை ஏன் இதற்க்குமுன்பு எங்கேயும் நான் கேட்கவில்லை? தேடிபார்த்தேன். இசை என் ஆர் ரஹ்நந்தன். பாடியவர் விஜய் பிரகாஷ். வரிகள் வைரமுத்து. படம் தென்மேற்குப் பருவக்காற்று என்று தெரிய வந்த்தது. பாடலா பேச்சா என்று இனம் பிரிக்க முடியாத உளறல்களை 24 மணிநேரமும் ஒலிபரப்பிக்கொண்டேயிருக்கும் குற்றலை வானொலிகளில் எதிலுமே ஒருமுறை கூட இப்பாடலைக் கேட்டதேயில்லையே!

தென்மேற்குப் பருவக்காற்றின் ஒளிப்பதிவாளரான நண்பர் செழியன் சில மாதங்களுக்கு முன்பு அப்படத்தின் சிறப்பு காட்சிக்கு வருமாறு பலமுறை அழைத்தும், தொடர்ந்து பயணங்களில் இருந்ததனால் என்னால் போகமுடியவில்லை. பார்த்தவர்கள் பலரும் அது ஒரு சிறந்த படம் என்று என்னிடம் சொன்னார்கள். நானும் பார்க்க ஆர்வத்துடன் இருந்தேன் ஆனால் எனக்கு நேரம் கிடைத்தபோது படம் திரை அரங்குகளிலிருந்து எடுக்கப்பட்டு விட்டிருந்தது! இந்தப் பாடல் அப்படத்தை பார்த்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தை மீண்டும் எனக்கு ஏற்படுத்தியது. திருட்டு டி வி டி தயாரிப்பாளர்களின் புண்ணியத்தில் சிறந்த பிரதி ஒன்று எனக்கும் கிடைத்தது. அவ்வாறாக சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று படத்தை கடைசியில் நானும் பார்த்துவிட்டேன்.

ஒரு திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயரை காட்டும் தலைப்பு காட்சியைப் பார்த்து என் வாழ்நாளில் இதுவரைக்கும் நான் அழுததில்லை. ஆனால் இந்தப் படம் பார்க்கும்போது அப்படி நடந்த்து. அதன் காரணம் அந்த தலைப்புப் பாடலின் இதயத்தைத் தொடும் இசையும், அப்பாடல் பாடப்பட்டிருக்கும் விதமும், அதன் ஆழமுள்ள வரிகளும் அத்துடன் அதன் அரிதான காட்சியமைப்பும்தான். பிஞ்சிப் போன ஆடைகள் அணிந்து கருங்கல் மடைகளிலும் கரட்டு மேடுகளிலும் வேர்வை சிந்தி உழைத்துக் கொண்டேயிருக்கும் கிராமத்து ஏழைத்தாய்களின் நிழற்படங்கள் தாம் அந்தக் காட்சி முழுவதுமே. அவர்கள் நடிகைகள் அல்ல. நிஜமான கிராமத்துப் பெண்கள். எலும்பு முறியும் அந்த கடும் வேலைகளுக்கிடையிலும் தங்களது குழந்தைகளை அவர்கள் பேணிக் காக்கிறார்கள்.

சிலர் வேலை செய்து கொண்டே வயக்காட்டில் நிற்கும் மரக்கிளையில் கட்டிய தொட்டிலை ஆட்டுகிறார்கள். சிலர் ஒரு கையால் குழந்தையை இடுப்பில் தாங்கி மறுகையால் வேலை செய்கிறார்கள். ஒரு குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு இன்னொன்றின் கைபிடித்து வேகமாக நடந்துபோகும் ஒரு தாய். அவளைச் சுற்றி ஒரு காகம் பறந்து கொண்டிருக்கிறது. வெயில் சுடும் நெடும்பாதை ஒன்றில், காலில் செருப்பின்றி ஆடுகளை பத்திக் கொண்டுபோகிறாள் ஒரு தாய். உடைந்து நொறுங்கிக் கிடக்கும் தனது மண்குடிலின் இருள் படிந்த வாசலில் பசியால் வெறித்த கண்களுடன் அமர்ந்திருக்கிறாள் வயதான ஒரு தாய். அவளுக்கு முப்பதோ நாற்பதோ வயதான மகன்கள் இருக்கக் கூடும்! எண்ணற்ற, விளக்கமுடியாத துயரங்கள் அந்த ஒவ்வொரு தாயின் முகச்சுளிவுகளிலும் ஒளிந்திருக்கிறது. எந்த கணமும் உதிரப் போகும் ஒரு கண்ணீர்துளி அவர்களது கண்களில் துளிர்த்து நிற்கிறது.

வேலி முள்ளில் அவ வெறகெடுப்பா

நாழி அரிசி வச்சு ஓலையெரிப்பா

புள்ள உண்ட மிச்சம் உண்டு உசுர் வளர்ப்பா

கிழக்கு விடியும் முன்ன முழிக்கிறா

மண்ண கிண்டித்தான் பொழைக்கிறா

உடல் மக்கி போக மட்டும் ஒழைக்கிறா...

அப்பாடல் காட்சியின் கடைசி நிழற்படம், படத்தின் மைய கதாபாத்திரமான அந்த தாயினுடையது. அவள்தான் வயல்பட்டி எனும் ஊரில் வாழ்ந்துவரும் வீராயி. கள்ளர்கள் பரம்பரையில் பிறந்தும் கள்ளம் கபடமில்லாதவள். பிறந்தவுடன் கள்ளிப்பால் வாயில் ஊற்றப்பட்டு கொலை பண்ணப்பட்டிருக்கக் கூடிய பெண் அவள். பெரும்பாலான ஆண்களைவிட உறுதியானவள். ராப்பகலாக உழைத்துக் கொண்டேயிருப்பவள். அவளுக்கும் ஒரு மகன் இருக்கிறான். முருகையன். அவள் ரத்தம் சிந்தி உழைத்து காத்துவரும் சொர்ப்பமான விளைநிலத்தையும் ஆட்டுக்கூட்டத்தையும் பாதுகாப்பாக பார்க்கவேண்டியவன். அவன் ஒரு தறுதலை. ஆனால் துரோகி அல்ல. நண்பர்களுடன் ஊர்சுற்றல், மது அருந்துதல் போன்ற வேலைகள் இல்லாதபோது மட்டும் அவன் தன் தாய்க்கு உதவியாக ஆடுமேய்ப்பான்.

ஆனால் வீராயி தன்மகனை நம்பி வாழ்பவள் அல்ல. அவனுக்காக வாழ்பவள். அவளுக்கு இந்த உலகத்தில் அவன் மட்டும்தான் இருக்கிறான். தன்னோட உறுதியினாலும் உழைப்பினாலும் மிகுந்த ஏழ்மையில் இருந்து கொஞ்சம் கொஞ்மாக வெளிவந்த அவளுக்கு இப்போது மீதமிருக்கும் ஒரே கனவு, பாதி கட்டப்பட்ட தனது சிறு வீட்டை கட்டிமுடிப்பதும், தன்மகனுக்கு ஒரு கல்யாணம் பார்த்து முடிப்பதும்தான்.

தூரத்து சொந்த்தில் இருக்கும் கலைச்செல்வி என்ற ஒரு பெண்ணை அவனுக்காக பேசி முடிக்கிறாள் வீராயி. காட்டிலும் மேட்டிலும் இடைவிடாமல் உழைக்கத் தயாராக இருக்கும் ஒரு அழகுக் கருப்பி அந்த பெண். தன்னையே அவளில் கண்டடைகிறாள் வீராயி. ஆனால் அவளது மகனோ ஓர் இரவில் தனது ஆடுகளை களவாட வந்த களவாணிக் கூட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணைப் பார்த்து மயங்கிப் போகிறான். களவாடல் தினசரித் தொழிலாக செய்யும் களவாணிக் குடும்பத்தைச் சேர்ந்தவளாகயிருந்தும் அவளது தோல் வெளுப்பும் தோற்றமும் அந்த ஆழ்ந்த நீலக்கண்களும் அவனை கிறங்கடிக்க வைக்கிறது. மந்திரிச்சு விட்டவனைப்போல் பேச்சி என்ற அந்த பெண்ணை தேடி அலைகிறான் அவன்.

அவர்களின் காதல் தீவிர்மடைந்ததை பற்றி அறிந்த வீராயி, அந்த கல்யாணம் நடக்காமல் இருக்க தன் மகனையும் அந்த பெண்ணையும் ‘சங்கு அறுத்து’ கொலை பண்ணக்கூட தயங்கமாட்டேன் என்று உக்கிர மூர்த்தியாக மாறுகிறாள். முருகையனுக்குப் புரியவில்லை! தான் இதுநாள் வரைக்கும் பண்ணின அத்தனை அட்டூழியங்களையும் சில கெட்ட வார்த்தைகளில், புலம்பல்களில் தாங்கிக்கொண்ட தனது தாய் தனது காதலை மட்டும் ஏன் கொலைவெறியுடன் பார்க்கிறாள்? அது அவனுக்காக ஒரு திருமணம் பேசி வைத்திருந்ததனால் மட்டும் அல்ல.

திருடர்கள் குடும்பத்தில் பிறந்து, ஒரு திருடனின் மனைவியாக மாறிய வீராயி தன் மகன் பிறந்து சில மாதங்களிலேயே ஒரு விதவை ஆக மாறியது எப்படி? அந்த சூழலில் இருந்து, அந்த ஊரில் இருந்து என்றென்றைக்குமாக தப்பித்து ஓடி வந்ததனால் மட்டும்தான் அவளும் பிள்ளையும் உயிர் பிழைத்தனர். திரும்பவும் போய் அந்த திருடர்கள் ஊரில் உள்ள ஒரு களவாணிக் குடும்பத்திலிருந்து பெண்ணெடுப்பதை அவள் வெறுத்தமைக்கு காரணங்கள் பல.

அந்த ஊர்களில் ஒருவன் திருடனாக மாறுவதற்கு இயற்கை சார்ந்த, சமூகவியல் சார்ந்த பல காரணங்கள் இருக்கிறது என்று தனது ஒரு பாத்திரம் வழியாக சொல்லுகிறார் சீனு ராமசாமி. அந்த இயற்கை கோளாறின் பெயர் தான் தென்மேற்குப் பருவகாற்று போலும். அதன் தாக்கத்தால் 5 மைல்களுக்கு அந்தப்பக்கம் இருக்கும் கிராமங்களில் மழையே பெய்யாது. அந்த ஊர்கள் ஒரே கரட்டு மேடாக, பாலைவனமாக காஞ்சு கிடக்கின்றன. ஆனால் 5 மைல்களுக்கு அந்தப்பக்கம் உள்ள பகுதிகளில் போதுமான அளவுக்கு மழையும் பாசனமும் கிடைப்பதால் அந்த ஊர்கள் வளமாக, பசுமையாக இருக்கிறது. மழையில்லாத ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு திருடுவதைத் தவிர பிழைப்புக்கு வேறு வழியேதுமில்லை.

ஆயுதத் தாக்குதல், கொலை, காவல் நிலயம், நீதிமன்றம், சிறை வாசம் என்பதெல்லாம் அவர்களின் வாழ்க்கையின் அன்றாடப் பகுதிகள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைக்கு திரும்புதலிலிருந்து தன்மகனை காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறாள் வீராயி. ஆனால் இளவயது காதல்! அந்த வயதில் தான் கருப்பாக, அழ்கற்றவனாக இருக்கிறேன் என்ற தாழ்வுணர்ச்சியுடன் இருக்கும் ஒரு இளைஞனுக்கு ஒரு சிவப்பான, அழகான பெண்ணை காதிலிக்கக் கிடைத்தால் அதற்காக அவன் தன் உயிரையே விட முன்வருவான் எனபது ஒரு மானுட உண்மை.

தனது காதல் வளர்ச்சியின் வழிகளில், காதலியின் குடும்பத்தினரிடமிருந்து பலவகையான தாக்குதல்களுக்கு உள்ளாகிறான் முருகையன். அவனது உயிருக்கே பெரும் ஆபத்து விளைகிறது. அது தன்னால் கட்டுப்படுத்த்க் கூடிய நிலமையில் அவன் இல்லை. ஏன் என்றால் அவன் ஒரு சாதாரண கிராமத்து இளைஞன். எதுவுமின்மையில் இருந்து உழைத்து ஒரு வாழ்க்கையை உருவாக்கிய வயல்பட்டி வீராயி என்ற பெண் தான், அந்த தாய் தான், அந்த சிலுவையையும் சுமந்தாகவேண்டும். அதை அவள் எப்படிச் செய்கிறாள் என்பது தான் இப்படத்தின் முடிவு. “எனக்காக எல்லாமே செய்துமுடித்த என் தாயே.. உனக்காக நான் எதுவுமே செய்யவில்லையே..” என்ற முருகையனின் கதறலில் படம் முடியும்போது பெண்மை, தாய்மை எனும் இரு மகா வல்லமைகளின் முன் சக்தியிழந்தவராக கண்கலங்கி நிற்க மட்டும் தான் நம்மால் முடிகிறது.

தென்மேற்குப் பருவக்காற்று பலவகைகளில் என்னைக் கவர்ந்த படம். சின்ன வயதில் கம்பம் மேடு, செல்லார்கோவில் மேடு போன்ற தமிழ்நாடு எல்லைப்பகுதி மலைமுகடுகளில் நின்று நான் ஆண்ணார்ந்து பார்த்த கம்பம், தேனி, சின்னமன்னூர், உத்தமபாளையம் போன்ற நிலப்பகுதிகளை, அந்த கிராமங்களின் மனித வாழ்க்கையை மிகுந்த உண்மையுடன் படமாக்கிக் காட்டினார் இயக்குநர் சீனு ராமசாமி. அந்த மனிதர்களின் முகங்கள், அவர்களது உடை, நடை, பேச்சு, மொழிவழக்கு எல்லாம் யதார்த்தத்தின் உச்சமாக விளங்குகிறது. மதுரைப்படங்கள் என்று அழைக்கப்பட்டு தமிழில் வெளிவந்துகொண்டேயிருக்கும் படங்களைப்போல் இப்படத்தில் ரத்த ஆறுகள் எதுவும் ஓடுவதில்லை. அரிவாள், வெட்டுக் கத்திகளுடன் அந்தரத்தில் பறந்து பறந்து தாக்கும் திறமை இப்படத்தின் எந்தவொரு பாத்திரத்துக்கும் இல்லை.

யதார்த்தத்துடன் நெருங்கிநிற்கும் கதையை உருவாக்குவது, தன் பாத்திரங்களுக்கு முற்றிலுமாகப் பொருந்திப் போகும் நடிகர்களை தேர்ந்தெடுப்பது, அவர்கள் அனைவரையுமே சிறந்த முறையில் நடிக்க வைப்பது, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், கலை இயக்குநர் போன்றவர்களிடம் இருந்து சிறந்த முறையில் வேலை வாங்குவது போண்ற, ஒரு திரைப்பட இயக்குநர் சிறப்பாக செயல்பட வேண்டிய அனைத்துத் தளங்களிலும் உயர்ந்து நிற்கிறார் சீனு ராமசாமி. மாடுமேய்ப்பவனையும் பிணங்களை அறுத்து புதைப்பவனையும் (படம்: கூடல் நகர்) கதா நாயகர்களாக முன்நிறுத்துவதில் அவருக்கு தயக்கமேதுமில்லை. 

குரு தத்தைப் போல் லோஹித தாஸைப் போல் எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடிய (Sentimental) கதைதருணங்களை உருவாக்குவதில் தான் சீனு ராமசாமியின் கவனமுமே. அது ஓர் உக்கிரமான கதைசொல்லும் முறை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மனிதர்களுக்குள் அத்தகைய மென் உணர்ச்சிகள் வெகுவேகமாக குறைந்துகொண்டே வரும் இந்தக் காலகட்டத்தில் குரு தத்துக்கும் லோஹித தாஸுக்கும் கூட, பெருவாரியாக பார்வையாளகர்களை ஈர்ப்பதென்பது கடினமான ஒரு வேலை என்றே நினைக்கிறேன்.

ஓரு கோடியே முப்பது லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்ட படம் தென்மேற்க்குப் பருவக்காற்று என்று தெரிய வந்தது. ஆனால் அது பத்து கோடி முதல் முடக்குள்ள ஒரு படம் என்று சொன்னால் கூட நம்புவதில் கஷ்டம் இருக்காது. தலைப்பு காட்சியில் வரும் நிழற்படங்கள் தொடங்கி இப்படத்தின் ஒரு காட்சித்துணுக்கு கூட, ஒரு சட்டவடிவம் (Frame) கூட வெறுமையானதாக இல்லை. ஒருபக்கம் மழையின் செழிப்பும் மறுபக்கம் அனலின் வறட்சியுமாகப் பரந்து கிடக்கும் தேனிப்பக்க நிலப்பகுதிகளை பட்மாக்கியிருக்கும் விதம் பிரமாதம். இருட்டில் நடக்கும் காட்சிகள், ஆட்டுமந்தைக் காட்சிகள், சண்டைக் காட்சிகள் போன்றவை எல்லாம் இயல்பாகவும் அதே சமயம் உக்கிரமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

சரண்யா நடித்த வீராயி பாத்திரம் அவரது இதுவரையிலான நடிப்பின் உச்சம். அசாத்தியமான நடிப்பு. முருகையனாக வரும் விஜய் சேதுபதி ஒரு அறிமுக நடிகனின் எந்த சஞ்சலங்களுமில்லாமல் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். நாட்டுப்புறத்திற்குரிய பண்படாத பாத்திரங்களை உயிரோட்டத்துடன் வழங்க அவரால் முடியுமென்பதில் சந்தேகமில்லை. பேச்சியாக வரும் வசுந்தரா தனது அழகான கண்களால் சிறப்பாக நடித்திருக்கிறார். கலைச்செல்வியாக வரும் ஹேம்லதாவின் கருப்பழகும், ஒளிரும் கண்களும், களங்கமில்லாத சிரிப்பும் முகபாவங்களும் நம்மை கவராமல் விடாது.

முருகையனின் நண்பனாக வரும் தீப்பெட்டி கணேசன், வில்லன் மூக்கையனாக வரும் அருள்தாஸ், திருட்டு பூசாரியாக வரும் ஜிந்தா, ஓரிரு காட்சிகளில் ஒரு முடிதிருத்துபவராக வரும் சுகுமார் என தொழில்முறை நடிகர்கள் அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். ஆனால் ஓரிரண்டு காட்சிகளில் வந்துபோகும் சின்னச் சின்ன பாத்திரங்கள் தான் இப்படத்தின் பேரழகே. கலைச்செல்வியின் அப்பாவாக வரும் துரைசாமி ஒரு பிரமாதமான நடிகர். வீராயியின் கணவராக வரும் அஜயன் பாலா, வீராயியின் உதவியாளனாக வரும் கால் சுவாதீனமில்லாத, சரியாக பேச்சு வராத அந்த பாத்திரம், ஆடுமேய்ப்பதில் முருகையனுக்கு உதவி செய்யும் பையன், பள்ளிக்கூடக் காவலன், வளையல் விற்கிற ஆள், உணவு விடுதி தொழிலாளியாக நடிப்பவர் மற்றும் வில்லனின் குடும்பத்தாராக வரும் பெண்கள், பல பல கிராமத்துக் கிழவிகள் என நடிப்பைப் பற்றி பேரெடுத்து சொல்லவேண்டிய நடிகர்கள் இப்படத்தில் ஏராளம். அவர்களில் யாருமே  தொழில்முறை நடிகர்கள் அல்ல என்பதால் அப்பெருமையும் இயக்குநருக்கே.

ராஜகலையின் கலை இயக்கமும் வெகுசிறப்பு. கிராமத்துத் தெருக்கள், வீடுகள், கடைத்தெருக்கள், பள்ளிவளாகங்கள் போன்றவையெல்லாம் அவர் அமைத்திருக்கும் விதம் இத்தகைய யதார்த்தவாதப் படங்களுக்கு ஒரு தேர்ந்த கலை இயக்குநர்தான் அவர் எனபதை நிரூபிக்கிறது. படத்தின் பாத்திரங்கள் அணியும் ஆடைகள், ஆபரணங்கள் எல்லாமே இயல்பானவை.

முன் சொன்னதுபோல் இந்தப் படத்தின் பக்கம் என் கவனத்தை திருப்பியதே அதன் இசைதான். சிறந்த பின்னணி இசை அமைக்க புதிய தலைமுறையில் ஆளில்லை என்று நினைப்பவர்கள் இப்படத்தின் பின்னணி இசையைக் கூர்ந்து கேட்க வேண்டும். தனது முதல் படத்திலேயே என் ஆர் ரஹ்நந்தன், தான் ஆழ்ந்த இசையுணர்வு கொண்ட ஒரு இசையமைப்பாளர் என்பதை நிரூபித்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான பகுதிகளில் காட்சிகளுக்கு அழுத்ததையும் ஆழததையும் அளிக்கிறது அவரது இசை. உணர்ச்சிபூர்வமான காட்சிகளாகட்டும், மறைத்தல் (Suspense) அல்லது சண்டைக் காட்சிகளாகட்டும் ரஹ்நந்தனின் இசை இன்றைய பல இளம் இசையமைப்பாளர்கள் செய்வதுபோல் வெறும் சத்தமாக ஓங்கி ஒலிக்காமல், துல்லியமாக, காட்சியுடன் இணங்கிச் செல்கிறது.

பின்னணி இசையிலும் பாடல்களிலும் அரிதான பல வாதியங்களின் வித்தியாசமான இசையொலிகளை பயன்படுத்துகிறார் ரஹ்னந்தன். ஜப்பானிய தாளக்கருவியான டைக்கோ டிரம், அராபிய தாளவாத்தியமான தர்புக்கா, மற்றும் ஃப்ரேம் டிரம், டெம்பிள் டிரம் போன்ற பல தாளக் கருவிகளையும், பியானிகா, ஊத், பேஸுகி, மாண்டலின் போன்ற வெளிநாட்டு இசைக் கருவிகளையும், சரோத், சிதார், எக்தாரா, தில்ருபா போன்ற இந்திய இசைக் கருவிகளையுமெல்லாம் ஏராளமாக பயன்படுத்துகிறார். இக்கருவிகளின் வழியாக அவர் தனக்கென தனித்துவமான ஒரு இசைவெளியை உருவாக்குகிறார்.

முற்றிலுமாக மேற்கத்திய இசைப்பாணியில் அமைந்த ’கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ பாடலின் சரணங்களில் பாசமப்பா.. தியாகமப்பா.. போன்ற வார்த்தைகளில் திடீரென்று இந்திய நாட்டுப்புறப் பாணியில் அமைந்த ஒரு ஆலாபனை வரும். அதன் இசையமைப்பும் அதை பாடியிருக்கும் விதமும் அலாதியானது. அங்கு பாடகனும் இசையமைப்பாளனும் சேர்ந்து நம்மை வார்த்தைகளால் சொல்லமுடியாத ஒரு அனுபவத்துக்குக் கொண்டு செல்கிறார்கள். நாட்டுப்புற இசைப் பாணியில் அமைந்தது ‘ஏடீ கள்ளச்சி’ என்ற பாடல். ’நீ காய் தானா பழம் தானா சொன்னால் என்ன’ என்ற வரியின் கடைசியில் ‘என்ன’ என்ற வார்த்தை அரிதான ஒரு சங்கதியுடன் நீண்டு சென்று மீண்டும் பல்லவியின் முதல் வார்த்தையை எட்டும் இடம் அழகு. ‘ஏடீ கள்ளச்சி’ பாடல் பாடியிருக்கும் ஷ்ரேயா கோஷால், தானே இந்தியாவின் மிகச்சிறந்த சமகால திரைப்பாடகி என்பதை மீண்டும் நிரூபிக்கிறார்!

தென்மேற்க்குப் பருவக்காற்றின் வழியாக நான் கண்டடைந்த இன்னுமொரு இசை அதிசயம்தான் விஜய் பிரகாஷ் என்ற பாடகர். நான் கடவுள் படத்தின் ஓம் சிவோஹம், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் ஓசானா, எந்திரன் படத்தின் காதல் அணுக்கள் போன்ற பாடல்களை பாடியவர் இவர்தான். கவனத்துக்குரிய பாடகர் என்று அவரைப் பற்றி நான் நினைத்ததுண்டு ஆனால் அவர் ஒரு அதிசயப்பாடகர் என்று எனக்கு நிரூபித்தது இப்படத்தின் பாடல்கள் தான். இந்த படத்தில் மூன்று பாடல்களை விஜய் பிரகாஷ் பாடியிருக்கிறார். மிக அரிதான அவரது ஆழ்ந்த அடிக்குரலின் சாத்தியங்கள் ‘ஏடீ கள்ளச்சி’யில் வெளிப்படுகிறது. ஆனால் ’கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ யில் ஆர் அண்ட் பி (Rhythm & Blues) வகையிலான மெதுவான, உணர்ச்சிபூர்வமான படும்முறையை கையாண்டிருக்கிறார். அதுக்குள்ளேயே அசாத்தியமான அந்த நாட்டுப்புறப் பாணி ஆலாபனையும் வருகிறது! ’நன்மைக்கும் தீமைக்கும்’ என்ற பாடல் ஒரு பல்லவி மட்டுமே. அதையும் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.

இப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி ஒரு சமகால பாரதி ராஜா என்று வைரமுத்து சொன்னதாகக் கேள்விப்பட்டேன். பாரதி ராஜாவில் இருக்கும் நாடகத்தன்மை சீனு ராமசாமியில் இல்லை என்றே சொல்லுவேன். லோஹித தாஸின் உணர்ச்சிவயப்படுதல்தான் அவரில் நாம் பார்க்கமுடியும். அது சில சமயம் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று நமக்கு எளிதாகக் காட்டிக்கொடுக்கும். இதைத்தான் முன்கூட்டித் தெரிய வரும் உணர்ச்சிவயப்படுதல் (Predictable Sentiments) என்று சொல்லுவார்கள். தென்மேற்குப் பருவக்காற்றின் சில பகுதிகளில் தெளிவாகவே இது நிகழ்கிறது. நூறு நாட்கள் தாண்டி ஓடியிருக்க கூடிய, ஓடியிருக்க வேண்டிய ஒரு படம் இது. மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டதனால் மட்டும் ஒரு சராசரி பொருளாதார வெற்றியாக மாறவேண்டிய படமல்ல தென்மேற்குப் பருவக்காற்று.

 

(2010)

 

இக்கட்டுரை வெளியாகி சிலாமாதங்களில் சிறந்த தமிழ் திரைப் பட்த்திற்கான 2010ன் தேசிய விருது தென்மேற்குப் பருவக்காற்றுக்கு கிடைத்தது. இந்தியாவின் சிறந்த  துணை நடிகையாக சரண்யாவும் சிறந்த பாடலாசிரியராக வைரமுத்துவும் இப்படம் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்படத்தின் இசை தேசிய விருதுக்கான போட்டியின் கடைசி சுற்று வரைக்கும் நின்றது!