முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்வர்ணலதா - கரைந்து போன தனிமைக் குரல்

 

நமது உணர்வுகளுக்கு மகிழ்வூட்டிய மகத்தான கலைஞர்களை நாம் எவ்வளவு எளிதாக மறந்துவிடுகிறோம் என்பதற்கு துயர்மிகுந்த ஓர் உதாரணம் ஸ்வர்ணலதா. அவரது இறப்புக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே பெரும்பாலான இசைரசிகர்களும்அநேகமாக திரையிசை சார்ந்த அனைவரும் ஸ்வர்ணலதாவை மறந்து விட்டிருந்தனர். தனது 37ஆவது வயதில் ஸ்வர்ணலதா என்ற பாடகி அகால மரணமடைந்த செய்தி ஒரு பேரதிர்ச்சியாகவே வந்து சேர்ந்து பலரை உலுக்கி எழுப்பியது. ஏனெனில் அது நாம் அவரை முற்றிலுமாக மறந்துவிட்டிருந்ததை நமக்கு நினைவுபடுத்தியது!

2009ல் இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் கேரள நண்பர் ஒருவர்ஓணம் பண்டிகையை ஒட்டி திருவனந்தபுரத்தில் அவர் ஏற்பாடு செய்திருந்த இளையராஜாப் பாடல்களின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பாடுவதற்காக பெண் பாடகிகளைப் பற்றி என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தார். இளையராஜாவின் இசையமைப்பில் பல பாடல்களைப் பாடிய பாடகிகளாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். உடனடியாகவே  ஸ்வர்ணலதாவைப் பரிந்துரைத்தேன். அவரும் அதில் மகிழ்ச்சியடைந்தவராக ஸ்வர்ணலதாவையே அழைக்கலாம் என்று சொல்லி என்னிடமே அவரை தொடற்பு கொள்ளப் பணித்தார்.

எனக்கு ஸ்வர்ணலதாவிடம் நேரடிப் பழக்கமோ தொடர்போ இல்லாததால் ஒருசில திரையிசைத்துறை நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். யாரிடமும் ஸ்வர்ணலதாவைப் பற்றிய தற்போதைய தகவல்கள் இல்லை! பலகாலமாக பாடல் பதிவுகளிலோமேடை நிகழ்ச்சிகளிலோ அவர் பங்கு பெற்றதாகத் தெரியவில்லை. ஏதேனும் பாடல் பதிவுக்கோ நிகழ்ச்சிகளுக்கோ அவரை அழைப்பதற்கு அவர் வீட்டின் தொலைபேசி எண்ணுக்கு அழைக்கும்போதெல்லாம்அவருக்கு தொண்டையில் சில பிரச்சினைகள் இருப்பதனால் சிறிது காலத்திற்கு பாடமாட்டார் என்ற தகவலே மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருக்கிறது!

அவருக்கு உண்மையில் என்னதான் ஆயிற்று என்று யாருக்கும் தெளிவாகத்  தெரியவில்லை. ரகசியமாகத் திருமணமாகி விட்டதென்றும் எனவே பாடுவதை நிறுத்திவிட்டார் என்பதும் போன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களே புழங்கி வந்தது. மேலும் அவர் சென்னையை விட்டு வெளிநாட்டில் குடியேறிவிட்டார் என்றும் தகவல்கள் வந்தன. எதுவாக இருப்பினும் அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பது மற்றும் ஒரு கட்டிக்காக்கப்பட்ட ரகசியமாகவே எஞ்சியிருந்தது.

ஸ்வர்ணலதாவைப் போல் மிகப்பிரபலமான ஒருவரின் நிலமை எவ்வாறு இப்படியிருக்க முடியும் என வியந்து போயிட்டேன். அவர் மிகவும் தனித்துவம் நிறைந்த அபூர்வமானதொரு பாடகி. அவருடைய காலகட்டத்தில்பாடல்களின் எல்லாவித உணர்ச்சிகளையும் அற்புதமாக வெளிப்படுத்திய மிகச்சிறந்த பாடகி அவரே. தனது வசியம் செய்யும் குரலால் எத்தகைய பாடலையும் முழுமையான திருப்தியளிக்கும் விதமாகசிறப்பாகப் பாடும் ஆற்றல் பெற்றிருந்தவர். ரங்கீலா (1995) இந்திப் படத்தில் இடம்பெற்ற "ஹேய் ராமா யே க்யா ஹுவா" (ஓ கடவுளேஎனக்கு என்ன நடக்கிறது?) என்ற பாடலைப் பாடியிருக்கும் அவரது திறமையை எண்ணி ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிறேன்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியில் நேரடியாக இசையமைத்த முதல் படம் அது. ஹேய் ராமா போன்ற பாடல்கள்தாம் பிற்கால இந்திசினிமாவில் ரஹ்மான் பெற்ற அனைத்து வெற்றிகளுக்கும் அடித்தளமிட்டது. தீவிரம் நிரம்பித் தளும்பும் காதலின் ஏக்க உணர்ச்சிகளை சக பாடகர் ஹரிஹரனை விட பல மடங்கு அற்புதமாக ஸ்வர்ணலதா வெளிப்படுத்திய பாடல் அது. ஸ்வர்ணலதாவின் இந்தி உச்சரிப்பும் அவர் ஒரு தென்னிந்தியர் என யாரும் கருதாத அளவுக்கு சரியானதாக இருந்தது.

ஆனந்த் ராஜ் ஆனந்த் இசையைமைப்பில் வந்த ரக்த் (2004) படத்தில் இடம்பெற்ற "ஜன்னத் ஹே யே ஜமீன்" (சொர்க்கம் இந்த பூமியிலேயே இருக்கிறது) என்ற பாடல் ஸ்வர்ணலதாவின் அற்புதமான பாடும்முறைக்கு மற்றொரு சான்று. மோகத்தின் தீவிர உணர்ச்சிகளை வெளிக்காட்டிய தனிக்குரல் பாடல் அது. இத்தகைய இந்திப் பாடல்களில் அவரது குரலையும் பாடும் பாணியையும் பார்த்து ஸ்வர்ணலதா ஓர் பேரழகியாகத்தான் இருக்கக் கூடும் என்றெண்ணினார்கள் இசையமைப்பளர் அனு மல்லிக் போன்றவர்கள்!

1987
லிருந்து 2006 வரை திரையிசையில் சிறப்பாகப் பங்குபெற்ற ஸ்வர்ணலதா பல்வேறுபட்ட இசையமைப்பாளர்களின் பாடல்களைப் பாடியிருக்கிறார். அவர் சேர்ந்து பணிபுரிந்த இசையமைப்பாளர்களில் பலர் குரல் தேர்விலும்பாடும் முறையை அணுகுவதிலும் தனித்துவமான பாணிகளைக் கொண்டிருந்தவர்களாவர்கள். எம். எஸ்.விஸ்வநாதனால் 1987ல் நீதிக்கு தண்டனைப் படத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது ஸ்வர்ணலதாவுக்கு வெறும்14 வயது! பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா"ப் பாடல். நவீனமான மெல்லிசைப்பாணியில் அமைந்திருந்த அற்புதமான மெட்டு அது. முதல் பாடலிலேயே யேசுதாஸ் போன்ற ஒரு மேதையுடன் சேர்ந்து பாடியிருந்தபோதும் ஸ்வர்ணலதா பாடியிருந்த விதத்தில் இருக்கும் பக்குவமும் தன்னம்பிக்கையும் ஆச்சரியமானதே. இந்தப் பாடலை இப்போது கேட்டாலும் நீங்கள் வியப்பின் விளிம்பிற்குச் செல்வீர்கள். தாயன்பில் இருக்கும் ஆழத்தை 14 வயதான ஒரு சிறுமி பாடி அளித்திருப்பது வியப்பூட்டும் திறமையே. எம்.எஸ்.வி ஒருமுறை சொன்னார் "ஸ்வர்ணலதா கொடையாகக் கிடைத்தவர். நான் சந்தித்த அபூர்வமான பாடகிகளில் மேலானவர். அவரை அறிமுகம் செய்தது எனக்குப் பெருமை" என்று!

முதல் பாடலிலேயே வெளிப்பட்ட துல்லியமான தமிழ் உச்சரிப்பிலிருந்து ஸ்வர்ணலதா ஒரு தமிழராக இருக்கக்கூடும் என்று அனைவரும் நினைத்தனர். அவ்வாறே இந்திகன்னடாதெலுங்கு மற்றும் மலையாளப் பாடல்களைப் பாடும்போதும் அவர் அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றே பலரும் நினைத்தனர். பெங்காலியில் பாடும்போது கூட மிகத்துல்லியமான உச்சரிப்புடனே பாடியிருந்தார்! பாடகிகளில் எஸ்.ஜானகிக்குப் பிறகு எம்மொழியில் பாடினாலும் உச்சரிப்புப் பிழையின்றி அம்மொழியின் தன்மையை உணர்ந்து பாடியவர் ஸ்வர்ணலதா ஒருவரே என்பதில் சந்தேகமில்லை. தனது சமகாலத்தைய புகழ்பெற்ற பாடகிகளோடு ஒப்பிட்டு அவதானித்தால் மொழி நடையில்உச்சரிப்பில் அவர் கொண்டிருந்த திறமையை நம்மால் கண்டடைய முடியும். அவருடைய குடும்பம் கர்நாடகாவிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்திருந்ததாலும்அவர் பாடல் வரிகளை கன்னட மொழியில் எழுதி பாடிவந்ததாலும் அவர் கர்நாடகத்தைச்  சேர்ந்தவர் என்று பலர் முடிவு செய்திருந்தனர். கர்நாடகத்தில் வளர்ந்ததாலும்பள்ளிக்கல்வி கன்னட மொழிவழியில் பெற்றிருந்ததாலும் கன்னடமே எழுதுவதற்கு அவரது விருப்பத் தேர்வாக இருந்தது.

பி.லீலா, சித்ரா, சுஜாதா, ஜென்ஸி, மின்மினி போன்றே ஸ்வர்ணலதாவும் கேரளாவில் பிறந்த மலையாளியாவார். பாலக்காடு மாவட்டத்தில் சித்தூர் தாலுக்காவைச் சேர்ந்த அத்திக்கோடு அருகேயுள்ள கிழக்கேப்பாறா எனும் கிராமத்தில்1973 ஆம் ஆண்டு பிறந்தார். எம்.எஸ்.வியும் மலேசியா வாசுதேவனும் பி.லீலாவும் இதே பகுதியைச் சேர்ந்தவர்களே. இசையில் விருப்பம் கொண்டிருந்த ஒரு பெரிய குடும்பத்தில் நிறைய சகோதர சகோதரிகளுடன் பிறந்தவர் ஸ்வர்ணலதா. தந்தை சேருக்குட்டி ஒரு பாடகராகவும் ஹார்மோனியம் வாசிப்பவராகவும் இருந்தார். தாயார் கல்யாணியும் இசைத்திறமை கொண்டிருந்தார். மிகச்சிறுவயதிலேயே அவருடைய தந்தையாலும்சரோஜா எனும் மூத்த சகோதரியாலும் பாடுவதற்கும்ஹார்மோனியம் வாசிப்பதற்கும் பயிற்சி பெற்றார். பின்னர் கர்நாடகத்தில் ஷிமோகா மாவட்டம் பத்ராவதி எனும் இடத்திற்கு அக்குடும்பம் இடம் பெயர்ந்தது.

சிறுமியாயிருந்த ஸ்வர்ணாவுக்கு இசை ஒரு மாயவித்தை போல் கைகூடிவந்தது. அவர் பாடுவதைக் கேட்ட அனைவரும் வியந்தனர். அவரை சினிமாவில் பாடவைக்க வேண்டும் என்று அவர்கள் கருதினர். ஸ்வர்ணலதாவின் இந்த தனித்துவமான பாடும் திறனை உணர்ந்த குடும்பத்தினர் அவருக்கு சினிமாவில் பாட வாய்புத்தேடி சென்னைக்கு இடம்பெயர்ந்தனர். போராட்டங்கள் எதுவுமின்றியே எம்.எஸ்.வியிடம் முதல் வாய்ப்பும் கிட்டியது. எம்.எஸ்.வியை அவரது வீட்டில் சந்தித்தபோது ஏதேனும் ஒரு பாடலை பாடச் சொல்லியிருக்கிறார். உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற "நாளை இந்த வேளை பார்த்து" என்ற எம்.எஸ்.வியின் பாடலையே பாடியிருக்கிறார். அங்கேயே எம்.எஸ்.வியின் படத்தில் பாடும் வாய்ப்பு அவருக்கு உறுதியாகிவிட்டது.

விரைவிலேயே இளையராஜாவும் ஸ்வர்ணலதாவைப் பற்றி அறிந்து தனது குரு சிஷ்யன்(1988) படத்தில் பாட வாய்ப்பளித்தார். "உத்தம புத்திரி நானு" எனும் பாடல். மது அருந்திவிட்டு மோகத்தை வெளிப்படுத்திப் பாடுவதைப் போன்றதொரு காபரே நடனப் பாடல் அது. இப்படலைக் கேட்டால் பதினைந்தே வயது நிரம்பிய ஒருவரால் எவ்வாறு காமமோகத்தை வெளிப்படுத்தும் விதமாகஇத்தனை சிறப்பாகப் பாடமுடிகிறது என்று வியக்காமல் இருக்க முடியாது. 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா'வில் வெளிப்படுத்திய தாயன்புக்கு நேர்மாறான உணர்ச்சிகள் இந்தப் பாடலில் ஸ்வர்ணலதா வெளிப்படுத்தினார்!

பின்னர் மணிரத்னம் தயாரித்து வெளிவந்த சத்ரியன் படத்தில் "மாலையில் யாரோ மனதோடு பேச" எனும் முக்கியமான மெல்லிசைப் பாடலை இளையராஜா ஸ்வர்ணலதாவுக்கு வழங்கினார். இப்பாடல் ஸ்வர்ணலதாவின் பாடும் திறமையின்  இன்னுமொரு பரிமாணம். ஸ்வர்ணலதாவை எப்போது எண்ணிப் பார்த்தாலும் எல்லோர் மனதிலும் வரும் வசீகரமானதொரு பாடல். தனிமையில் இருக்கும் பெண்ணின் காதல் ஏக்கத்தை நுட்பமாக வரைந்து காட்டும் ஸ்வர்ணலதாவின் மயக்கும் குரல். இப்பாடலின் பெரும் வெற்றியே ஸ்வர்ணலதாவை ஒரு முழுநேரப் பிண்ணனிப் பாடகியாக மாற்றியது.

பிந்தைய வருடங்களில் இளையராஜாவின் இசையில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். அதில் சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற ஒரே மெட்டில் அமைந்த "போவோமா ஊர்கோலம்" மற்றும் "நீ எங்கே என் அன்பே" பாடல்கள் மிகப்பெரும் வெற்றியடைந்தன. இத்தகைய பாடல்கள்ரசிகர்களால் கோயில் கட்டி ரசிக்கப்பட்டு ஒரு உச்ச நட்சத்திரமாக வலம்வந்த குஷ்புவின் பாடும் குரலாக ஸ்வர்ணலதாவை மாற்றியது. குஷ்புவுக்கு ரசிகர்களால் கட்டப்பட்ட அந்த கோயிலின் கணிசமான பங்கு ஸ்வர்ணலதாவுக்கு உரியது என்று சொல்லலாம். தமிழக அரசு சிறந்த பாடகிக்கான விருதை "போவோமா ஊர்கோலம்" பாடலுக்காக ஸ்வர்ணலதாவுக்கு வழங்கிச் சிறப்பித்தது.

கேப்டன் பிரபாகரன் படத்தில் "ஆட்டமா தேரோட்டமா" பாடலின்மூலம் துள்ளிசைப் பாடல்களையும் தன்னால் அசாத்தியமாகப் பாடமுடியும் என நிரூபித்தார். மேலும் "மாசி மாசம் ஆளான பொண்ணு" (தர்மதுரை), "மல்லியே சின்ன முல்லையே" மற்றும் "கானக்  கருங்குயிலே" (பாண்டித்துரை), "குயில் பாட்டு வந்ததென்ன" (என் ராசாவின் மனசிலே), "மல்லிகை மொட்டு மனசத் தொட்டு" (சக்திவேல்), "என்னுள்ளே என்னுள்ளே" (வள்ளி), "வெடலப்புள்ள நேசத்துக்கு" (பெரிய மருது), "ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்" (மன்னன்) போன்ற ஒன்றுக்கொன்று வித்தியாசமான பாடல்கள் இளையராஜா-ஸ்வர்ணலதா கூட்டணியிலிருந்து வெளிவந்து வெகுவாக ரசிக்கப்பட்டன. தளபதி படத்தில் வெளிவந்த அவர்களது "ராக்கம்மா கையத்தட்டு" பாடல் BBC வெளியிட்ட பெரும் வெற்றிபெற்ற உலகப் பாடல்கள் வரிசையில் இடம் பெற்றது. வீரா படத்துக்காக ஸ்வர்ணலதா பாடிய "மலைக் கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே" கடந்தகால நினைவுகளைக் கிளறி நம்மை சிலிர்க்க வைக்கும் அரிதானதொரு பாடல்.

அப்போதைய பிரபலமான பாடகியாக இருந்தபோதும் ஏ ஆர் ரஹ்மானின் முதல் படத்தில் ஸ்வர்ணலதாவுக்கு ஏதும் பாடல்கள் வழங்கப்படவில்லை. எனினும் "ராக்கோழி ரெண்டும்" (உழவன்) மற்றும் "உசிலம்பட்டி பெண்குட்டி" (ஜென்டில்மேன்) ஆகிய இரண்டு பெரும் வெற்றிப் பாடல்களை அடுத்த ஆண்டே ஸ்வர்ணலதாவுக்கு வழங்கினார் ரஹ்மான். ரஹ்மான் இசையமைத்து 1994ஆம் ஆண்டு வெளியான படங்களில் பல பாடல்கள் ஸ்வர்ணலதாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த பாடல்கள் அல்லாவிட்டாலும் "மெட்றாஸ  சுத்திப் பார்க்க.." (மேமாதம்), "ஏ முத்துப் பாப்பா" (வண்டிச்சோலை சின்னராசு) போன்ற பாடல்கள் ஸ்வர்ணலதாவின் பாடும்முறையின் பல பரிமாணங்களை நமக்கு விளக்கியது.

காதலன் படத்தின் நடனப்பாடல் "முக்காலா முக்காபுலா" அளவுக்கு வெகுஜெனப் புகழடைந்த வேறொரு பாடல் அக்காலகட்டத்தில் வெளிவரவில்லை என்றே சொல்லலாம். அதோடு கறுத்தம்மா படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" என்ற சோகப்பாடலும் அதன் பாடும்முறையின்மெல்லிசையின் தரத்தினால் அனைவரது மனதிலும் இடம்பெற்றது. ஸ்வர்ணலதா என்ற பாடகியின் அசாதாரணமான ஆற்றலுக்கு மிகச்சிறந்த உதாரணமாக வெவ்வேறு வகையிலான இவ்விரண்டு பாடல்கள் மட்டுமே போதுமானது. வெகுஜன ரசனைக்கான 'முக்காலா முக்காபுலாவை ஸ்வர்ணலதா பாடியிருக்கும் விதம் அலாதியானது. "பதில் நீ சொல்லு காதலா.." போன்ற வரிகளை அவர் வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு அவரது காலத்தின் வேறு எந்தவொரு பாடகியாலும் சாத்தியமா என்பது சந்தேகம் தான். அதே போல் "போறாளே பொன்னுத்தாயி" என்ற பாடலை வேறு யார் குரலிலும் நம்மால் கற்பனை செய்ய முடியாது. வேறு எந்தப் பாடகியாலும் இப்பாடலில் ஊடுருவும் வலியையும் வேதனையையும் இவ்வளவு தீவிரமான உணர்ச்சியோடு பாடியிருக்க இயலாது என்றே நினைக்கிறேன். இப்பாடல் பதிவின்போது கட்டுப்படுத்திக்கொள்ள இயலாமல் பல இடங்களில் தான் அழுதுவிட்டதாக ஸ்வர்ணலதா குறிப்பிட்டிருக்கிறார். இந்தியத் திரையிசையிலேயே சோகப்பாடல்களின் வரிசையில் உச்சியில் அமர்ந்திருக்கும் ஒரு பாடல் இது. இப்பாடலுக்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் மாநில விருதையும் பெற்றார் ஸ்வர்ணலதா.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில் எல்லா வகையான பாடல்களையும் ஸ்வர்ணலதாவுக்கு வழங்கினார் ரஹ்மான். அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற "எவனோ ஒருவன் வாசிக்கிறான்" பாடலில் நமது இதயங்களைத் துயரத்தில் மூழ்கடிக்க வைத்த அதே குரல்தான் "குச்சிக் குச்சி ராக்கம்மா" (பம்பாய்) பாடலில் சிறுவயதின் துடுக்குத்தனங்களை நமக்குள்ளே தூண்டியது. இந்தியன் படத்தில் ஊர்மிளா மடோண்ட்கரின் உதடசைவில் 'அக்கடாண்ணு நாங்க உடை போட்டா' என்று நம்மை மோகத்தால் சீண்டியதும்மனீஷா கொய்ராளாவின் காதலும் காமமும் நிரம்பிய நடன அசைவுகளில் "மாயா மச்சின்றா"வாக கிறங்கடித்ததும் ஸ்வர்ணலதாவின் குரலே.

"
அஞ்சாதே ஜீவா" (ஜோடி), "காதலெனும் தேர்வெழுதி" (காதலர் தினம்), "மெல்லிசையே" (மிஸ்டர் ரோமியோ), "உளுந்து விதைக்கையிலே" (முதல்வன்), "மெர்குரி பூக்கள்" (ரட்சகன்), "பூங்காற்றிலே உன் சுவாசத்தை" (உயிரே) பாடலின் சில சோக வரிகள் இவையெல்லாம் ஸ்வர்ணலதாவின் எல்லைகளற்ற பாட்டும் திறனுக்கு தெளிவான உதாரணங்களாகும். இசையமைப்பாளர்கள் தேவாவித்யாசாகர்ஹாரிஸ் ஜெயராஜ்அனு மல்லிக்சங்கர்-எஹ்ஸான்-லாய்கீரவாணிஅம்சலேகாராஜ் கோட்டி போன்றவர்களுடனும் பல வெற்றிப் பாடல்களை வழங்கியிருக்கிறார் ஸ்வர்ணலதா.

பழம்பெரும் இந்தி இசையமைப்பாளர் நௌஷாத் இசையமைப்பில் கூட ஸ்வர்ணலதா பாடியிருக்கிறார்! 1960ல் நௌஷாத் இசையமைப்பில் வெளிவந்த பெரும்புகழ் பெற்ற இந்திப்படம் முகல் ஏ ஆஸம் 2004ல் வண்ணத்தில் மீண்டும் வெளியிடப்பட்டது. அனார்கலி என்ற பெயரில் தமிழிலும் அது வெளியானது. இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களின் பெண்குரலாக ஸ்வர்ணலதா அழைக்கப்பட்டார். "மெஹ்ஃபில் மே கிஸ்மத்" என்ற பாடலின் தமிழ் வடிவமான "கண நேரம் உனதருகே"யில் இரண்டு வெவ்வேறு குரல்களில் பாடி சாதனை புரிந்திருக்கிறார் ஸ்வர்ணலதா. மதுபாலாவும் நிகர் சுல்தானாவும் நடனமாடிய அப்பாடலின் அசல் வடிவம் லதா மங்கேஷ்கரும் ஷம்ஷாத் பேகமும் பாடியிருந்தனர். ஆனால் தமிழில் அந்த இரண்டு பாத்திரங்களுக்கும் பொருந்திப்போகும் வகையில் குரலை மாற்றிப் பாடியிருக்கிறார் ஸ்வர்ணலதா. இப்படத்தின் இசை வெளியீட்டுக்காகச் சென்னை வந்த நௌஷாத் ஸ்வர்ணலதாவின் இந்த அசாத்தியத் திறமையைப் பாரட்டி ஆசீர்வதித்திருக்கிறார்.

ஸ்வர்ணலதா தமிழில் பாடிய படங்கள் வேற்று மொழிகளில் வெளியாகும்போது அவற்றிலும் அவரே பெரும்பாலும் பாடியிருக்கிறார். தெலுங்கில் அவர் பாடிய பாடல்களில் பல பெரும் வெற்றியடைந்திருக்கின்றன. 1995ம் ஆண்டு ஆந்திர அரசு நந்தி விருதை வழங்கி ஸ்வர்ணலதாவை கௌரவித்தது. மலையாளத்தில் இருபதுக்கும் குறைவான பாடல்களே பாடியிருக்கிறார். எல்லாம் சிறப்பாகப் பாடி வெகுவாக ரசிக்கப்பட்டிருந்தாலும் தனது தாய்மொழியில் அவருக்கு பெரிய அங்கீகாரம் எதுவுமே கிடைக்கவில்லை! ஆனால் இருபது வயதாகும் முன்னரே தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். இந்தி பிலிம்பேர் விருதை "ஹேய் ராமா" பாடலுக்காகப் பெற்றிருக்கிறார். 'முக்காலா முக்காபுலா'வுக்கு தமிழில் பிலிம்பேர் விருது கிடைத்தது. நான்கு முறை சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் கிடைத்துள்ளன. சினிமா உலகமோ அரசுகளோ பிற சமூக அமைப்புகளோ ஸ்வர்ணலதாவை கண்டுகொள்ளவில்லை என்று சொல்லலாகாது. ஆனால் அவருக்கு கிடைத்திருக்க வேண்டியிருந்த ஏராளமான சிறந்த பாடல்கள் திறமைகள் குறைந்த வேறு பாடகிகளுக்கு வழங்கப்பட்டிருந்தன என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

2000
ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கு பாடல் வாய்ப்புகள் குறைந்து கொண்டே போயின.  ஸ்வர்ணலதா என்ற தனித்துவமான பாடகியின் திறமைகளை மீறிச் செல்ல வேறு யாராலையும் இயலாத போதிலும் அவருக்கு பாடும் வாய்ப்புகள் ஒவ்வொரு வருடமும் குறைந்து போனது புதிராகவே இருக்கிறது. திரை இசையை முற்றிலுமாக தொலைக்காட்ச்சி ஆக்ரமித்த காலம் அது! ஸ்வர்ணலதா மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர். கேமராவுக்கு முன்னர் கூச்சப்படுபவராக இருந்ததால் தொலைக்காட்சியில் தோன்றி சோபிக்க அவரால் முடியவில்லை. வெகு அரிதாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். கூச்ச சுபாவம் காரணமாக பல மேடை இசை நிகழ்ச்சிகளையும் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு கடுமையான Air sickness இருந்ததாகவும் அதன் காரணமாக விமானப் பயணங்களை தவிர்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே வெளிநாடுகளுக்கோ பிற மாநிலங்களுக்கோ சென்று இசை நிகழ்ச்சிகளை நடந்த அவரால் முடியவில்லை. பாடல் பதிவுகள் மட்டுமே அவரது ஒரே ஊடகமாக இருந்தது.

அவரது குறிப்பிட்டுச் சொல்லும்படியான கடைசிப் பாடல் 2006ல் வெளிவந்தது. சில்லென்று ஒரு காதல் படத்தில் 'கும்மியடிபாடலை ரஹ்மான் இசையமைப்பில் பாடினார். அப்பாடலில் மேலும் பல குரல்கள் ஒலித்திருந்தாலும் ஸ்வர்ணலதாவின் பகுதிகள் தனித்து வெளிப்பட்டிருக்கும். அப்படத்தின் "முன்பே வா என் அன்பே வா" ஸ்வர்ணலதாவுக்கே உரிய ஒரு பாடல். ஆனால் அதை ஷ்ரேயா கோஷால்தான் பாடியிருந்தார்!

எப்போதும் வண்ணமயமான ஆடைகளும் ஏராளமான நகைகளும் ஒப்பனைகளும் அணிந்து தோன்றினாலும் தனிமையிலும் மௌனத்திலும் உழலும் ஒருவராகவே காட்சியளித்தார் ஸ்வர்ணலதா. யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. பாடல் பதிவுகளுக்கு தனது இரண்டு மூன்று சகோதரர்களுடனேயே வருவார். பதிவுக்கூடத்துக்கு வந்ததும் பாடல் வரிகளை கன்னடத்தில் எழுதிக்கொள்வார். பின்னர் பாடலின் மெட்டுக்களை கவனித்துக் கற்றுக் கொள்வார். விரைவாக கிரகித்துக் கொள்பவராகவும் உணர்ச்சிகளைத் துல்லியமாக பாடலில் வெளிப்படுத்துபவராகவும் இருந்தார். பதிவின்போது பாடலை விட்டு தன் கவனத்தைத் திருப்புவதே இல்லை. சங்கதிகளை அவர் அணுகும் விதம் மற்ற பாடகிகளிலிருந்து முற்றிலும் வேறானது. விரைவில் இசையின் நுட்பங்களைப் புரிந்து கொண்டு அதை பாடலில் வெளிப்படுத்தும் திறமையைப் பார்த்து அவரது சக பாடகர்கள் வியந்திருக்கின்றனர். பாடல் பதிவு முடிந்தவுடன் தான் பாடிய பகுதிகளைக் கவனமாகக் கேட்டுவிட்டு அமைதியாக வெளியேறிவிடுவார்.

எப்போதும் உள்ளொடுங்கியவராக இருந்ததால் அவர் ஏதோ ஆழமான மனக்குறையை மறைத்துக் கொண்டிருப்பதாக பலர் கருதியிருக்கின்றனர். திரையிசை சார்ந்த யாரிடமும் மனம் திறந்து அவர் பேசியதாகத் தெரியவில்லை. வெளியிலும் நண்பர்கள் இல்லாதவராகவே இருந்திருக்கிறார். தனது தோற்றத்தைப் பற்றிய தாழ்வு மனோபாவம் காரணமாக பெரும்பாலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் தனிமையை நேசித்தவராக இருந்தார் என்று சிலர் கருதியதுண்டு. இயல்பாகவே அவர் தனிமையானவராகஒதுங்கி வாழ்பவராக இருந்தார் என்றும் இதற்க்கு வேறெதுவும் தனித்த காரணங்கள் இருக்கவில்லை என்றும் சொல்பவர்களும் உண்டு. இசைத்திறமையைப் பொறுத்தவரையில் அவர் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவராகவும் தரமான நிலையில் அதை வெளிப்படுத்துபவராகவும் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. தனது பாடும் திறனின் வலிமையையும் வித்தியாசத்தையும் அவர் நன்றாகவே அறிந்திருந்தார்.  

பெற்றோர்களை நீண்ட காலத்திற்கு முன்பே இழந்தவர். 37 வயதிலும் திருமணம் ஆகாதவர். அவரது பாடல்பதிவு நேரங்களைநிகழ்ச்சி ஒப்பந்தங்களைவருமானத்தை எல்லாம் அவரது சகோதரர்களே நிர்வாகம் செய்தனர். ஸ்வர்ணலதா சார்பில் எப்போதும் அவர்களே பேசினார்கள். வீட்டில் எப்போதுமே இசைப் பயிற்சியில் இருந்தார் என்றும் உண்ணுவதும் உறங்குவதும் போக எந்நேரமும் இசையைத் தவிர வேறெதிலும் அறவே நாட்டமில்லாதவராக இருந்தார் என்றும் அவரது மூத்த சகோதரர் என்னிடம் குறிப்பிட்டார். ஆனால் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி இதைப்பற்றி 'ஸ்வர்ணலதாவுக்கு கண்ணீர் அஞ்சலிஎன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக  எழுதிப் பாடிய வரிகள் இவ்வாறு இருக்கின்றன.
மண்ணுலகில் பாடிய பெண்குயிலே நீ
விண்ணுலகில் பாட விரைந்தாயோ?
தாய் தந்தை இருந்திருந்தால்
உன் தலை விதி மாறியிருக்கும்
தாய் ஆக்கும் திருமணமும்
தடை இன்றி நடந்திருக்கும்...
இக்கருத்து சரிதானாபதில் சொல்ல இப்போது ஸ்வர்ணலதா இல்லையே. 

பல வருடங்களாக சுவாசக் கோளாறு சார்ந்த பிரச்சினைகளில் அவதிப்பட்டு வந்தார். 
மாடிப்படி ஏறும்போது மூச்சு வாங்குவது போன்ற உடல்நலக் குறைவுகள் இருந்தன. சுவாசப் பிரச்சினைகள் தோன்றத் தொடங்கிய காலங்களில்கூட நன்றாகப் பாடி வந்தார். பின்னர் நோய் அதிகமாகி பேசக்கூட இயலாத நிலைமைக்கு வந்தார். சென்னையில் பல மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டுஉண்மையான நோய்க்காரணத்தைக் கண்டறிய இயலாமல் மருத்துவர்கள் போராடினர். தீவிரமான பிரச்சினைகள் எதுவும் இல்லை எனவும் மருத்துவர்கள் கூறினர். இறுதியாக Idiopathic Pulmonary Fibrosis எனும் வினோதமான நோயால் தாக்கப்பட்டிருப்பதாகக் கண்டுபிடித்தனர். நுரையீரலுக்குச் செல்லும் காற்றைத் தடுத்து சுவாசிப்பதைச் சிரமப்படுத்தும் நோய் அது. ஒரு பாடகருக்கு இதைவிட மோசமான எதுவுமே நிகழமுடியாது! இந்த நோய் வருவதற்கான பிரத்தியேக காரணங்கள் ஏதும் இதுவரைக் கண்டறியப்படவில்லை. எனவேதான் ‘இடியோபதிக்' (முட்டாள்தனமான) நோய் என்று இத்தகைய நோய்களை மருத்துவ அறிவியல் அழைக்கிறது.

இந்நோய்க்கு நிரந்தரமான தீர்வு ஏதும் உலகில் எங்கும் இன்னும் உருவாக்கப்படவில்லை. ஸ்வர்ணலதாவைக் குணப்படுத்துவதற்கு தங்களால் இயன்ற அனைத்து வழிகளையும் முயன்றதாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் அந்த நோய் ஸ்வர்ணலதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களின் எல்லா முயற்சிகளையும் மீறிய ஒன்றாக ஆகிவிட்டது என்கின்றனர். அவர் நோயிலிருந்து மீண்டுவந்து பாடல் பதிவுக்குச் செல்வார் என்று தாங்கள் நம்பிக்கொண்டிருந்ததாகவும் எனவேதான் அவருடைய இயலாமை பற்றிய விபரங்களை ரகசியமாக வைத்திருந்ததாகவும் குடும்பத்தினர் கூறினர். நாளடைவில் அவரது உடல்நலம் மிக மோசமான நிலைக்குச் சென்றது. அடிக்கடி மருத்துவமனைகளில் சேர்த்து சிறிது குணமானதும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார். நோயின் கடுமையினாலும் அதிகமான மருந்துகளை உட்கொண்டதாலும் முற்றிலுமாக தளர்ந்து போனார். அவரது நாட்களை இன்னும் கொஞ்சம் நீடிக்க வைப்பதே அந்த மருந்துகள் கொடுக்கப்பட்டதன் நோக்கமாக இருந்தது. இறுதியாக தனது தாங்க முடியாத வேதனைகளிலிருந்து 2010 செப்டம்பர் 12ஆம் தேதி விடை பெற்றார் ஸ்வர்ணலதா.

2003
ஆம் ஆண்டில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய "வெளிச்சங்களின் ஒற்றுமை" எனும் இசை நிகழ்ச்சியில் "போறாளே பொன்னுத்தாயி" பாடலை அசாத்தியமாக இன்னுமொருமுறை பாடிவிட்டு ஸ்வர்ணலதா சொன்னார் "புற்றுநோயால் அவதிப்படும் ஏழை எளிய குழந்தைகளுக்காக நிகழ்த்தப்படும் இந்நிகழ்ச்சியில் பங்குகொள்வதில் பெருமைப் படுகிறேன். என்னுடைய சிறிய பங்கை இதில் செய்திருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்" என்று. நமது உணர்வுகளுக்காகவும் தனது பங்கைச் செய்திருக்கிறார் ஸ்வர்ணலதா. ஆனால் அவர் மூச்சுவிடக்கூட சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது அவருக்காக யாராலும் எதையும் செய்ய முடியவில்லை. நாம் அவரை மறந்துவிட்டிருந்தது. ஸ்வர்ணலதா பாடிய பல பாடல்களை இன்றைக்கும் நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் பாதியோடு தேங்கிக் கரைந்து போன ஸ்வர்ணலதா என்ற அந்த அற்புதமான பாடலின் மீதத்தை நம்மால் இனி ஒருபோதும் கேட்கவே முடியாது.

2010