முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜமுனா ராணி எனும் இசைவாணி

ஆசையும் என் நேசமும்

ரத்தப் பாசத்தினால் ஏங்குவதைப் பாராயடா

ஆவலும் நிறைவேறிடும்

என் ஆருயிரே நீயருகில் வாராயடா…

குலேபகாவலி (1956) படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வெளியாகி பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துப் பிறந்தவன் நான். எனக்கு ஏறத்தாழ ஐந்து வயதிருந்த காலத்தில் ஏதோ ஒரு நாளில் வானொலியினூடாக ஜமுனா ராணியின் குரலில் முதன்முதலில் கேட்டதாக நினைவிருக்கும் பாடல் இது. கேட்டவுடனே அப்பாடல் என் மனதில் பதிந்துபோனதன் முதல் காரணம், அப்பாடலின் பல்லவியில் ஒவ்வொரு வார்த்தையும் முடியும்போது வரும் ‘ஹிக்!’ எனும் விக்கல் சத்தம்தான். ஆனால், எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த ஒருபோதும் மறக்க முடியாத அந்த மெட்டும், அப்பாடலின் தொடக்க வரியில் எழுதியிருப்பது போல் ‘தாகமும் சோகமும் தாபமும்’ கலந்த அப்பாடகியின் கவர்ந்திழுக்கும் குரலும்தான் என்னை அப்பாடலோடு என்றைக்குமாக இணைத்தது என்பதைப் பிற்பாடு உணர்ந்துகொண்டேன். அன்றிலிருந்து இன்று வரை எனது ஆதர்சமான பாடகிகளில் ஒருவர் ஜமுனா ராணி.

அந்தப் படத்தில் இருந்த பன்னிரண்டு பாடல்களில் இந்த ஒரேயொரு பாடல்தான் ஜமுனா ராணிக்கு. ஆனால், மற்ற எல்லாப் பாடல்களை விடவும் கவனத்தை ஈர்த்தது ‘ஆசையும் நேசமும்’தான். அப்பாடலைப் பாடும்போது ஜமுனாவுக்கு பதினாறு வயது. பாடல் பதிவின்போது அவர் கொடுத்த விக்கல் சத்தம், பாட்டின் மைய மெட்டிலிருந்து அவருக்குக் கவனச்சிதைவை உருவாக்குவதாக நினைத்த எம். எஸ். வி., அப்போது குழுக்குரல் பாடகிகளில் ஒருவராக இருந்த எல். ஆர். ஈஸ்வரியை அந்த விக்கல் ஒலியை எழுப்ப வைத்தார். இவ்வாறாக அசல் பாடலில் நாம் கேட்கும் விக்கல் ஒலி ஜமுனா ராணியுடையதல்ல என்றாலும், பிற்பாடு மேடைகளில் அப்பாடலைப் பாடும்போதெல்லாம் அசல் பாடலில் வருவதை விடச் சிறப்பாக அவ்வொலியை எழுப்பிப் பாடினார் ஜமுனா ராணி.

அறியா வயதிலேயே திரைப்படங்களில் பாட ஆரம்பித்த ஜமுனா ராணி தமிழ், தெலுங்கு, சிங்களம், மலையாளம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட இருபது படங்களில் பாடிய பின்னர்தான் ‘ஆசையும் நேசமும்’ பாடினார். 1938-இல் பிறந்த ஜமுனாவுக்கு தனது குழந்தைப் பருவத்தைப் பற்றிய நினைவுகள் மங்கலாகிப் போனதனால், அவரது பிறப்பிடம், முதல் திரைப் பாடல் போன்றவைகளைப் பற்றிய தகவல்கள் இன்றளவும் குழப்பமானவையாகவே இருக்கின்றன. இப்போது கர்நாடக மாநிலத்தின் பகுதியாக இருக்கும் ஹம்பி பிராந்தியத்தில், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஓர் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். அம்மா திரௌபதி வீணையிசைக் கலைஞர்.

அவரது பிறப்பிடம் ஆந்திரா என்று தோராயமாகவும், அவரது முதல் பாடல் 1946-இல் வெளியான தியாகய்யா தெலுங்கு படத்தில் இன்னொரு குழந்தையுடன் சேர்ந்து பாடிய ‘மதுரா நகரிலோ’தான் என்றும் அவரே சொல்லி வந்திருக்கிறார். ஆனால் 1944-இல் தனது ஆறாவது வயதில் தாசில்தார் எனும் தெலுங்கு படத்தில் ‘ஆஹா யேமந்துனே சினவதினா’ என்ற ஒரு தனிக்குரல் குழந்தைப் பாடலைப் பாடிக்கொண்டுதான் அவர் தனது இசைப்பயணத்தைத் தொடங்கினார் என்பதே உண்மை. அதுவே அப்படத்தின் முக்கியமான பாடலும் கூட.

அவரது முதல் தமிழ்ப் பாடல் எது என்பதிலும் குழப்பம் உண்டு. எனது புரிதலின்படி 1950-இல் விஜயகுமாரி எனும் படத்தில் சி. ஆர். சுப்பராமன் இசையில் ஏ. பி. கோமளாவுடன் இணைந்து பாடிய ‘ஆணவத்தினாலே அழிவு தேடாதே’ எனும் இரட்டைக் குரல் பாடல்தான் முதன்முதலில் வெளியான அவரது தமிழ்ப் பாடல். உடுமலை நாராயண கவி எழுதிய, முற்றிலும் மேற்கத்திய இசையிலான இப்பாடலில் ஒருமிப்பு (harmony) இசையில் இரண்டு குரல்களும் பிரிந்து பாடும் பகுதிகளில், தான் அசாத்திய வல்லமைகொண்ட ஒரு பாடகி என்பதை ஜமுனா ராணி வெளிப்படுத்தியிருப்பார். டி. ஆர். ராஜகுமாரி, கே. ஆர். ராமசாமி, குமாரி கமலா நடித்து, ஏ. எஸ். ஏ. சாமி இயக்கிய அப்படமோ அதன் பாடல்களோ வெற்றி பெறாததால், ஜமுனா ராணியின் தமிழ்த் திரை வருகையும் அறியப்படாமலேயே போய்விட்டது.

அதே சி. ஆர். சுப்பராமனின் இசையமைப்பில் 1948-இல் வெளியான ரத்னமாலா தெலுங்கு படத்தில் லலிதா-பத்மினியின் செவ்வியல் நடனத்திற்கான ‘வகலாதி நினு சேருறா’ என்ற முழுக்க கர்நாடக இசைப் பாணியிலான பாடலையும் பி. லீலாவுடன் இணைந்து பாடியிருப்பார் ஜமுனா. லலிதாவுக்காக லீலா, பத்மினிக்காக ஜமுனா. இதில் மிகுந்த செவ்வியல் இசைப் பயிற்சியும் இசைறிவும் கொண்டு பாடும் லீலாவை, அடிப்படை இசைப் பயிற்சி மட்டுமே இருக்கும் ஜமுனா சர்வசாதாரணமாக மிஞ்சியிருப்பதை நாம் கேட்கலாம். ஆனால் பி. லீலாவுக்குக் கிடைத்த புகழும் வெற்றியும் ஜமுனா ராணிக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

தெலுங்கு இசையமைப்பாளரான சுஸர்ல தட்சிணாமூர்த்தியும் ஜி. ராமனாதனும் சேர்ந்து இசையமைத்து 1952-இல் வெளிவந்த கல்யாணி எனும் தமிழ்ப் படத்தில் கண்ணதாசனின் வரிகளில் ‘ஒண்ணு ரெண்டு மூணு’, ‘சக்சஸ் சக்சஸ்’ என இரண்டு தனிக்குரல் பாடல்களைப் பாடினார். இரண்டுமே ஆங்கில வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட நகைச்சுவைப் பாடல்கள். எல்லாவகைப் பாடல்களையும் தனித்துவமான முறையில் சிறப்பாகப் பாடும் வல்லமைகொண்டிருந்த ஜமுனா ராணியை, ஒரு நகைச்சுவை அல்லது விரச நடனப் பாடகியாக முத்திரை குத்த வைத்த பாடல்கள் இவை. அதே ஆண்டில் வெளியான வளையாபதி படத்தில் தட்சிணாமூர்த்தியின் இசையிலேயே பாரதிதாசனின் வரிகளில் டி. எம். எஸ்ஸுடன் இணைந்து பாடிய ‘குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி’, ‘குளிர் தாமரை மலர் பொய்கையைக் கண்டேன்’ எனும் அசாத்தியமான இரண்டு மெல்லிசைப் பாடல்களாலுமே இந்த முத்திரையை அழிக்க முடியவில்லை.

நடனப் பெண்களுக்கும் கதாநாயகிகளுக்குமாக தனிக்குரல் பாடல்கள் பல பாடிய பின்னரும், குழந்தைகளுக்காகக் கூட்டுக்குரல் பாடல்களைப் பாட அவரைத் தொடர்ந்து அழைத்தனர் இசையமைப்பாளர்கள். அப்போது ஜமுனா ராணி பதினைந்து வயதைக்கூட எட்டியிருக்கவில்லை என்பதும் இதன் காரணமாக இருந்திருக்கலாம். 1953-இல் வெளியான தேவதாஸ் படத்தில் சி. ஆர். சுப்பராமன் இசையிலான ‘ஓ தேவதாஸ் ஓ பார்வதி’ பாடலை ஜிக்கியும் கண்டசாலாவும் பாடியபோது, அதே பாடலை அப்பாத்திரங்களின் குழந்தைப் பருவத்திற்காக ஜமுனா ராணியும் இன்னொரு குழந்தைக் குரல் பாடகியான உடுத்த சரோஜினியும் சேர்ந்து பாடினார்கள். அதே ஆண்டில் சுப்பராமன் மற்றும் எம். எஸ். வி. இசையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியான சண்டிராணி படத்தில் ‘மியாவ் மியாவ் மியாவ்‘ என்ற நகைச்சுவைக் குழந்தைப் பாடல்தான் ஜமுனா ராணிக்கு வழங்கப்பட்டது. இப்பாடலில் அவரோடு உடுத்த சரோஜினியும் கே. ராணி என்ற பாடகியும் சேர்ந்து பாடினார்கள். கே. ஜமுனா ராணி தான் கே. ராணி என்ற பெயரிலும் பாடுவதாக  இங்கே பலரும் நினைத்த காலமது.

அதே காலத்தில் சுஜாதா எனும் சிங்களப் படத்தில் ’ப்ரேமலோகய’, ‘வெதென ஹாரதெ’ எனும் பாடல்களைப் பாடி இலங்கையில் பெரும்புகழை அடைந்தார் ஜமுனா ராணி. தொடர்ந்து சிங்களத்தில் பல பாடல்களைப் பாடினார். ‘ஜீவன மே கமன’ (படம்: சதா சுலன் - 1955) போன்ற அவரது சிங்களப் பாடல்கள் இன்றளவும் அங்கே ஒலித்துக் கொண்டிருப்பவை. இங்கே ஒருபோதும் அவருக்கு வழங்கப்படாத உச்ச நட்சத்திரப் பாடகி எனும் அந்தஸ்தை ஜமுனா ராணிக்கு வழங்கியது சிங்களம்தான்.

விரச நடனப் பாடகி, நகைச்சுவைப் பாடகி என்றெல்லாம் அவ்வப்போது ஒதுக்கப்பட்டாலும், பனியும் தேனும் குழைந்த தனது மென்மைக் குரலில் மெல்லிசை மெட்டுகள், மேற்கத்தியப் பாடல்கள், செவ்வியல் இசைப் பாடல்கள், இரவு நடனப் பாடல்கள், காதல் கீதங்கள் என அனைத்து வகைப் பாடல்களையும் அனாயாசமாகவும் மிகுந்த உணர்ச்சி வெளிப்பாட்டுத் திறனோடும் பாடியவர் ஜமுனா ராணி. ஆரம்பத்தில் தனது குரல் சன்னமானது என்றும், தனது பாடும் முறை தட்டையானது என்றும் சொல்லி, ஒருசில உதிரிப் பாடல்களை மட்டுமே வழங்கி எம். எஸ். விஸ்வநாதன் தன்னைப் புறக்கணித்ததாகவே ஜமுனா ராணி சொல்லியிருக்கிறார். விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் பிரியத்திற்குரிய பாடகியாக எப்போதுமே இருந்தவர் பி. சுசீலாதான். 1954-ஆம் ஆண்டில் எல். ஆர். ஈஸ்வரி பாட வந்த பின், நகைச்சுவை, விரச நடனம், மேற்கத்தியப் பாணி பாடல்களையும் அவர்கள் எல். ஆர். ஈஸ்வரிக்குத்தான் அதிகமாக வழங்கினார்கள்.

ஆனால் விஸ்வநாதன்-ராமமூர்த்தியும் ஜமுனா ராணியும் இணைந்தபோதெல்லாம் அற்புதமான சில பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ‘காமுகர் நெஞ்சில்’ (மகாதேவி - 1957), ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ (மாலையிட்ட மங்கை - 1958), ‘சின்ன சின்ன சிட்டு’ (சிவகங்கை சீமை - 1959), ‘காவிரித் தாயே’ (மன்னாதி மன்னன் - 1960), ‘காட்டில் மரம் உறங்கும் கழனியிலே நெல்லுறங்கும்’, ‘பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்’ (கவலை இல்லாத மனிதன் - 1960), ‘எந்த நாளும் சந்தோஷமே’ (ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - 1960), ‘பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்’ (பாசமலர் - 1961), ‘ஆதி மனிதன் காதலுக்குப் பின்’ (பலே பாண்டியா - 1962) போன்ற பாடல்களை யாரால் மறக்க முடியும்?

கவிஞர் கண்ணதாசனும் இசையமைப்பாளர் கே. வி. மகாதேவனும் எப்போதுமே தன்னை ஆதரித்ததாகச் சொல்லியிருக்கிறார் ஜமுனா ராணி. கே. வி. மகாதேவன் இசையில் எத்தனையோ அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார். ‘சின்ன மீனைப் போட்டாத்தான்’ (தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை - 1959), ‘என் கண்ணைக் கொஞ்சம் பாரு’ (கைதி கண்ணாயிரம் - 1960), ‘மாமா மாமா மாமா’ (குமுதம் - 1961), ‘சித்திரத்தில் பெண் எழுதி’ (ராணி சம்யுக்தா - 1962), ‘பறக்கும் பறவைகள் நீயே, மணக்கும் ரோஜா மை லேடி’ (கவிதா - 1962), ‘என்னைப் பாரு பாரு’ (காட்டு ரோஜா - 1963), ‘சொல்லட்டுமா சொல்லட்டுமா’, ‘காலம் சிறிது கனவுகள் பெரிது’ (தை பிறந்தால் வழி பிறக்கும் - 1958), ‘வா வா வா எனக்காகவா’ (செல்வம் - 1966) எல்லாம் உதாரணங்கள்.

சுப்பையா நாயுடு இசையில் ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’ (மரகதம் - 1959), ஜி. ராமநாதன் இசையில் ‘கலையே ஆகும் சுவை’ (வீரசுந்தரி - 1954), ‘யாரடி நீ மோகினி’ (உத்தமபுத்திரன் - 1958), ‘ஆத்துக்குள்ளே ஊத்து’ (வீரபாண்டிய கட்டபொம்மன் - 1959), வேதா இசையில் ‘மேலே பறக்கும் ராக்கெட்டு’, ‘காதல் என்றால் என்ன’, ‘பூவில் வண்டு’ (அன்பு எங்கே - 1958), ‘வருவானோ இல்லையோ’ (பாசமும் நேசமும் - 1964), ஜி. கே. வெங்கடேஷ் இசையில் ‘உங்க மனசு ஒரு தினுசு’ (மகளே உன் சமத்து - 1964), சுதர்சனம் இசையில் ‘கண் பாடும் பொன் வண்ணமே’ (சகோதரி - 1959), ‘தாரா தாரா வந்தாரா’, ‘இவர் கானா அவர் பானா’, ‘காளை வயசு கட்டான சைசு’ (தெய்வப்பிறவி - 1960) என காலத்தால் அழியாத எத்தனையோ பாடல்களைப் பாடியவர் ஜமுனா ராணி.

மிக அழகானதும் திடமானதுமான தனது குரல் வழியாக எல்லா இசையமைப்பாளர்கள் மற்றும் கதாநாயகிகளின் விருப்பப் பாடகியாகத் திகழ்ந்த பி. சுசீலா எனும் பேரலையின் ஆதிக்கத்தால், அவரை விடப் பன்முகத்தன்மையும் உணர்ச்சி வெளிப்பாட்டுத் திறனும் இருந்தபோதிலும் ஜமுனா ராணி பின்தள்ளப்பட்டார் என்பதே உண்மை. அவரது குரலின் சன்னமான மென்மைத் தன்மையும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் பி. சுசீலாவும் ஜமுனா ராணியும் இணைந்து பாடிய எம். எஸ். வி.யின் ‘அத்திக்காய் காய் காய்’ (பலே பாண்டியா - 1962), வி. குமாரின் ‘புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்’ (இரு கோடுகள் - 1969) போன்ற பாடல்களில் உணர்ச்சிகளைப் பாடி வெளிப்படுத்துவதில் ஜமுனா ராணிக்கு இருந்த அலாதியான ஆற்றல் மேலோங்குவதை நாம் கேட்கலாம். என்னைப் பொறுத்தவரையில் சன்னமானது என்றாலும் பி. சுசீலாவின் குரலில் இருக்கும் இயல்புத் தன்மையும் எஸ் ஜானகியின் உணர்ச்சி வெளிப்பாட்டுத் திறனும் ஒருசேரப் பெற்றிருந்த பாடகி ஜமுனா ராணி.

1974-இல் அவளும் பெண் தானே எனும் படத்தில் வி. குமார் இசையில் ‘எல்லோரும் குழந்தைகள்’ என்ற பாடலைப் பாடிய பின்னர், தன்னை பெரிதாகப் பாட யாருமே அழைக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார் ஜமுனா ராணி. வந்த வாய்ப்புகள் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை. பின்னர் மேடை நிகழ்ச்சிகளில் தனது பிரபலமான பழைய பாடல்களைப் பாடி வாழ்ந்து வந்தார். 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மணிரத்னத்தின் நாயகன் படத்தில் இளையராஜாவின் இசையில்  ’நான் சிரித்தால் தீபாவளி’ பாடலைப் பாட அழைக்கப்பட்டார். ‘ஆசையும் நேசமும்’ பாடலின் பாணியை அடியொற்றி உருவாக்கப்பட்ட அப்பாடல் பெரும்புகழ் பெற்றது. அதன் தெலுங்கு வடிவத்தையும் அவரே பாடினார். சந்திரபோஸ் இசையில் 1992-ஆம் ஆண்டு அண்ணன் என்னடா தம்பி என்னடா படத்திற்காகப் பாடிய ‘இரவு நாடகம்’ எனும் பாடல்தான் தமிழ் திரையில் அவரது இறுதிப் பாடல். 2012-இல் எஸ். பி. பாலசுப்ரமணியம் முக்கிய பாத்திரமாக நடித்த மிதுனம் எனும் தெலுங்கு படத்தில், "இங்கே வென்றவர் யார்? தோற்றவர் யார்?" என்று பொருள் வரும் பாடலைப் பாடியவாறு தனது இசைப் பயணத்தை முடித்துக்கொண்டார் ஜமுனா ராணி.

இப்போது தனது 88-ஆம் வயதில் ஜமுனா ராணி எனும் அதிசயப் பாடகி தனது வாழ்க்கைப் பயணத்தையும் முடித்திருக்கிறார். வாழ்நாளில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த அந்த இசையரசி, மிகுந்த அன்போடு தான் பாடிய பாடல்களைத் தனது வாரிசுகளாக நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார். ஜமுனா ராணி அம்மாவின் நினைவுக்கு முன்னால் இந்த எளிய ரசிகனின் அஞ்சலிகள்.


08/08/26

shaajichennai@gmail.com