முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மறக்கப்பட்ட மாபெரும் பாடகி

வானொலி பலசமயம் நம்மை வசமாக ஏமாற்றிவிடும். 
1980-களின் தொடக்கத்தில் ஏதோ ஒரு நாளில், திடீரென்று வானொலியை இயக்கும்போது ஒலித்துக்கொண்டிருந்த ஒரு தமிழ்த் திரைப் பாடல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. 
ஆகா… என்ன அருமையான பாடல் …! 
எவ்வளவு அழகாகப் பாடியிருக்கிறார் இந்தப் பாடகி… என்று வியந்துபோனேன்.

பாடலின் இசையும், வரிகளும் என்னை ஈர்த்தன என்றாலும், அந்தப் பாடகி அதைப் பாடி வெளிப்படுத்திய விதம்தான் என் மனதைத் தொட்டது. அந்த குரலும் பாடும் முறையும் கேட்பவர்களின் இதயத்தைத் தொடுபவையாகவே இருந்தன.

கொஞ்சம் ஜமுனாராணி, கொஞ்சம் எல். ஆர். அஞ்சலி கலந்தது போன்ற குரல். சில இடங்களில் எல். ஆர். ஈஸ்வரியின் சாயலும் தூக்கலாகத் தெரிந்தது. ஆனால் இவர் பாடும்போது வெளிப்படும் உணர்ச்சிகளின் மென்மையும் ஆழமும் மிகவும் தனித்துவமானவை என்றே உணர்ந்துகொண்டேன்.

யார் இந்தப் பாடகி? எந்தப் படத்தில் வந்த பாடல் இது? இதன் இசையமைப்பாளர் யார்? என்றெல்லாம் யோசிப்பதற்குள் பாடல் முடிந்துவிட்டது. அறிவிப்பாளர் பாடலைப் பற்றிய விவரங்களைச் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் "அடுத்து ஒலிக்கவிருக்கும் பாடல் இடம்பெற்ற படம்..." என்று தாவிச் சென்றுவிட்டார். எனக்கு மிகுந்த ஏமாற்றம்.

அப்பாடலின் நினைவு பலகாலம் என் மனதை விட்டு நீங்கவேயில்லை. மீண்டும் அதை எப்போது கேட்கப் போகிறேனோ என்ற ஏக்கத்துடன் நாட்களைக் கழித்தேன். ஆனால் அதன் பிறகு ஒருபோதும் அந்தப் பாடலை நான் வானொலியில் கேட்டதில்லை. பிறகு என் நினைவிலிருந்தும் அப்பாடல் மறைந்துபோனது.

சில பதிற்றாண்டுகள் கழித்து கணினியும் இணையமும் பெருவாரியாகப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மலையாளம் என பாடல் தேடலே என் முதல் வேலையாக இருந்தது. அத்தகைய ஏதோ ஒரு தேடலின்பொழுது பாடல்களைக் கேட்க மட்டும் வசதியிருக்கும் லாஸ்ட் எஃப்.எம். எனும் இணையதளத்தில் சற்றும் எதிர்பாராமல் அந்தப் பாடலை நான் மீண்டும் சந்தித்தேன்.

உறங்கக் கூடாது

கண்ணே மயங்கக்கூடாது
இன்று சிரிக்கட்டும் சிட்டு
இந்த அன்னைக் கைபட்டு…
உறங்கக் கூடாது…. உ….ஊ…ஊ……

படம் சக்திலீலை, ஆண்டு 1972, இசை டி. கே. ராமமூர்த்தி, இயற்றியவர் கண்ணதாசன், பாடியவர் எம். ஆர். விஜயா.

எம். ஆர். விஜயாவா? யாரிவர்? நடிகை கே. ஆர். விஜயாவுக்கும் இவருக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா? என்றெல்லாம் யோசித்தேன். பிற்காலத்தில் அப்பாடலின் காணொளியைப் பார்த்தபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அப்பாடலுக்கு வாயசைத்து நடித்திருப்பவர் புன்னகை அரசி கே. ஆர். விஜயாவேதான்!

கே. ஆர். விஜயா யார் என்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லாத இன்றைய தலைமுறைக்கு எம். ஆர். விஜயா யாரென்று தெரியாததில் ஆச்சரியமில்லை. அந்தக் காலத்தின் பெரும்புகழ்பெற்ற பல பாடல்களை அழகாகப் பாடியவர் என்றாலும், அன்றைய தலைமுறையினராலேயே கொண்டாடப்படாத பாடகிதானே எம். ஆர். விஜயா.

மாமேதை ஏ. பி. நாகராஜனின் இயக்கத்தில் திருமலை தென்குமரி (1970) பக்திப் படத்தில் குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் வந்த ‘மதுரை அரசாளும் மீனாட்சி’, ‘அழகே தமிழே நீ வாழ்க’ பாடல்களைப் பாடியவர் எம் ஆர் விஜயா. குன்னக்குடியின் இசையிலேயே கண்காட்சி (1971) படத்தில் ‘குறவர் குலம் காக்கும் குமரா நீ வாழ்க’, மற்றும் ‘காணும் கலையெல்லாம் கண்காட்சி’ எனும் பாடல்களும் எம். ஆர். விஜயா பாடியவையே.

குன்னக்குடியின் இசையில் ‘மருதமலை மாமணியே முருகையா’, ‘திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்’ போன்ற பெரும்புகழ் பக்திப் பாடல்களோடு 1972-ல் வெளியான தெய்வம் படத்தில் வந்த ‘வருவான்டி தருவான்டி மலையாண்டி’யைப் பாடியதும் வேறு யாருமில்லை.

குன்னக்குடியே இசையமைத்த ‘தலைவா தவப்புதல்வா வருகவே’ (அகத்தியர் - 1972), ‘திங்கள் முடி சூடும் மலை தென்றல் விளையாடும் மலை’, ‘நாக தெய்வமே நாங்கள் நாடும் தெய்வமே’ (அபிராமி - 1972), கே. வி. மகாதேவன் இசையில் குறத்தி மகன் (1972) படத்தில் ‘அஞ்சாதே நீ அஞ்சாதே, அன்பின் வடிவே அஞ்சாதே’, டி. ஆர். பாப்பா இசையில் மறுபிறவி (1973) எனும் படத்தில் மஞ்சுளா நடித்து வெளிவந்த ‘ஏடீ பூங்கொடீ ஏனிந்தப் பார்வை’, குமஸ்தாவின் மகள் (1974) படத்தில் இடம்பெற்ற ‘எழுதி எழுதி பழகி வந்தேன்’, ராஜ ராஜ சோழன் (1973) படத்தின் ‘மாதென்னைப் படைத்தான் உனக்காக’ போன்ற பாடல்களையும் பாடியவர். ஜெயலலிதா நடிப்பில் டி. ஆர். பாப்பாவின் இசையில் வைரம் (1974) படத்தில் வெளியான ‘இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன் ஹேய்…’ எனும் இரவு நடனப் பாடலை பாடியவரும் இவரே.

இவற்றில் பல பாடல்கள், குறிப்பாக பக்திப் பாடல்கள் இன்றும் உலகமெங்கும் ஒலித்துக் கொண்டிருப்பவை. பக்திப் பாடல்களைத் தவிர்த்தாலும் ‘ஏடீ பூங்கொடீ ஏனிந்தப் பார்வை’யும் ‘உறங்கக் கூடாது கண்ணே’யும் மட்டும் போதுமே எம். ஆர். விஜயாவின் அலாதியான மெல்லிசை பாடும்முறைக்குச் சான்றாக! இவ்வளவு பெருவெற்றிப் பாடல்களைப் பாடிய ஒரு பாடகிக்கு அப்பாடல்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்தின் ஆயிரத்தில் ஒன்றுகூடக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

ஆரம்பத்தில் அவருக்குத் தனிக்குரல் பாடல்கள் மிகக் குறைவாகவே வழங்கப்பட்டன என்பதுதான் இதன் முக்கிய காரணம் என்றே நினைக்கிறேன். இணைக்குரல் அல்லது கூட்டுக்குரல் பாடல்கள் பாடும்போது சக பாடகர்களுடன் கச்சிதமான ஒத்திசைவோடு பாடவேண்டும் என்பது இசை அழகியலின் ஓர் உன்னதமான பண்பு. அதை எப்போதுமே கடைப்பிடித்தவர் எம். ஆர். விஜயா.

ஏற்கனவே புகழ்பெற்றிருந்த பாடகிகளோடு இணைந்து பாடியபோதெல்லாம் மிகுந்த ஒத்திசைவோடு பாடியதால் விஜயா பாடிய பகுதிகள் கூட அந்தப் புகழ்பெற்ற பாடகி பாடியதாகவே மக்கள் நினைத்துக் கொண்டனர். பாடல்களைக் கேட்கும் வாய்ப்பே அரிதாக இருந்த அந்தக் காலகட்டத்தில் பாட்டுக்குள்ளே புகுந்து பாடகர்களின் தனித்தன்மையைக் கண்டறியும் சாத்தியம் இசை விற்பன்னர்களுக்கே இருக்கவில்லை.

உதாரணமாக விஜயாவின் ஆகப் புகழ்பெற்ற பாடல் ‘வருவான்டி தருவான்டி மலையாண்டி’யை எடுப்போம். சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் இணைந்து பாடியது மட்டுமல்லாமல் தெய்வம் படத்தின் அப்பாடல் காட்சியில் இருவரும் தோன்றி நடிக்கவும் செய்தனர். சூலமங்கலம் ஜெயலட்சுமி – ராஜலட்சுமி சகோதரிகள் ஏற்கனவே புகழ்பெற்றிருந்தவர்கள் என்பதால் இப்பாடலைப் பாடியதும் நடித்ததும் சூலமங்கலம் சகோதரிகளே என்று பெரும்பாலானோர் நம்பினர். ராஜலட்சுமியுடன் இணைந்து விஜயா பாடிப் பெரும்புகழ் பெற்ற ‘எழுதி எழுதி பழகி வந்தேன்’ பக்திப் பாடலுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது.

சிறுகுழந்தைப் பருவத்திலிருந்தே கர்நாடக செவ்வியல் இசையும் பரதநாட்டியமும் முறையாகக் கற்றுத் தேர்ந்து, செவ்வியல், நாட்டுப்புற, மேற்கத்தியப் பாணிகளிலான எந்தவொரு பாடலையும் அனாயாசமாகவும் உணர்ச்சி வெளிப்பாட்டுடனும் பாடும் வல்லமை படைத்திருந்த ஒரு பாடகிக்கு தனது குரல் மேலோங்கி நிற்பதுபோல் பாடுவதென்பது மிகவும் எளிதான விஷயம். ஆனால் உயர்வான ஓர் இசைஞர் அதை ஒருபோதும் செய்ய மாட்டார்.

இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன்… ஹே…

இதயம் முழுதும் திறந்து வைக்கின்றேன்
இதற்கு முன்னாலே நீ பார்த்த பெண் போலே
இந்த உடம்பு பழையதல்லவே……….. என்று வைரம் படத்தில் வந்த ஜெயலலிதா பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

ஸ்ரீகாந்துடன் ஜெயலலிதா சரச நடனமாடும் காமச்சுவைகொண்ட இரவு நடனப் பாடல் இது. அதுவரைக்கும் பக்திப் பாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் குரல் என்று பல இசையமைப்பாளர்களால் ஒதுக்கப்பட்ட விஜயாவின் குரல் இப்பாடலின் உணர்வுகளை அவ்வளவு சரளமாக பாடி வெளிப்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் குரலுக்கும் நடிப்புப் பாணிக்கும் மிகவும் நெருங்கிப் பாடியதாலும் அவ்வப்போது சினிமாவில் ஜெயலலிதாவும் சில பாடல்களை பாடியிருக்கிறார் என்பதாலும் அப்பாடலை ஜெயலலிதாவே பாடியிருப்பதாக இன்றளவும் பலர் நம்புகிறார்கள்.

தனது வாழ்க்கையிலும் கலையிலும் உயர்வான பண்புகளையும் அழகியலையும் கடைப்பிடித்த எம். ஆர். விஜயா எனும் அபூர்வமான பாடகியின் கலையும் வாழ்க்கையும் கடந்துவந்த பாதைகளைப் பார்ப்போம்.

சென்னையின் மைலாப்பூரைப் பூர்வீகமாகக்கொண்ட ராமமூர்த்தி, தஞ்சாவூரைச் சார்ந்த சாரதாம்பாள் தம்பதியின் மகளாக 1950-ஆம் ஆண்டில் மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா நகரில் பிறந்தவர் மைலாப்பூர் ராமமூர்த்தி விஜயா எனும் எம். ஆர். விஜயா. வசதியான குடும்பம். அப்பாவும் அம்மாவும் இசைஞானம் படைத்தவர்கள். ஐந்து வயதிலேயே கர்நாடக இசையையும் பரதத்தையும் முறைப்படி கற்கத் தொடங்கினார். அகில இந்திய வானொலி நடத்திய கர்நாடக இசைப் போட்டியில் மேற்கு வங்காள மாநிலத்தின் சார்பாக முதன்முதலில் ஜனாதிபதி விருதினை வென்றார் விஜயா.

விஜயாவுக்கு 15 வயது இருக்கும்போது அம்மா சாரதாம்பாளோடு சென்னையில் தமது பரம்பரை வீட்டுக்கு இடம்பெயர்ந்தார். தாய் மண்ணுக்குத் திரும்பி வருவது தென்னிந்திய இசையில் விஜயாவை மேலும் சிறக்க வைக்கும் என்கின்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணமாக இருந்தது. ஓரிரு ஆண்டுகளில் அப்பாவும் சென்னை வந்துசேர்ந்தார். மகள் ஒரு சிறந்த செவ்வியலிசைப் பாடகியாகவும் பக்திப் பாடகியாகவும் வரவேண்டும் என்பதுதான் அவரது ஆசை. தமது உயரிய செவ்வியல் இசை ஞானத்தினால் திரையிசையை ஒரு பொருட்டாக அவர்கள் நினைக்கவில்லை என்பதே உண்மை.

1968 காலகட்டத்தில் ஒரு பத்திரிகை செய்தியில் வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் பக்திப்பாடல் தொகுப்புக்கு ஒன்றுக்கு இசையமைக்கப் போவதாக அறிந்துகொண்டு அதில் பாடும் வாய்ப்புக்காக அவரைத் தொடர்பு கொண்டார்கள். விஜயாவின் செவ்வியல் இசைத்திறனைக் கேட்டு வியந்த குன்னக்குடி ‘வெற்றி தரும் தெய்வம்’ எனும் அந்த பக்திப்பாடல் இசைத்தட்டில் விஜயாவுக்கு பாடும் வாய்ப்பளித்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து செவ்வியல் கச்சேரிகளை நடத்த ஊக்குவித்து, கச்சேரிகளை மேலும் ஜனரஞ்சகமாக்குவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். விஜயாவின் பல மேடைக் கச்சேரிகளில் தோன்றி பின்வாத்தியமாக தனது வயலினை வாசித்தார்.

அடுத்த ஆண்டு ‘வா ராஜா வா’ எனும் படம் வழியாக சினிமா இசையமைப்பாளர் ஆக குன்னக்குடிக்கு வாய்ப்பு கிடைத்தபோது அப்படத்தின் இரண்டு கூட்டுக் குரல் பாடல்களில் விஜயாவைப் பாடவைத்தார். ‘கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவராஜா’ பாடலில் விஜயா பாடிப் பதிவுசெய்த பகுதிகள் வெளிவரவில்லை என்றாலும் ‘ஆடிப்பாடி சிரிக்க வைப்பது எங்க ஊருங்க’ பாடல் வழியாக அவரது குரல் முதன்முதலில் திரையிசையில் பதிவானது. அதன்பின் ‘மதுரை அரசாளும் மீனாட்சி’, ‘வருவான்டி தருவான்டி மலையாண்டி’ என முன் சொன்ன பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியானது.

இளையராஜா இசையமைத்த நான்காவது திரைப்படம் பத்ரகாளியில் ‘ஆனந்த பைரவி அகிலாண்ட நாயகி’ எனும் பஜனைப் பாடலைப் பாடி அப்பாடல் காட்சியில் நடிக்கவும் செய்தார் எம். ஆர். விஜயா. அப்பாடலுக்குப் பின்பாட்டு பாடியவர்கள் இளையராஜா, கங்கை அமரன் மற்றும் குழுவினர்.

பேரழகியான எம். ஆர். விஜயாவுக்கு நடனமும் நன்றாகத் தெரிந்திருந்ததால் திரைப்படங்களில் நடிக்கும் அழைப்புகள் ஏராளமாக வந்தன. தான் பாடிய பாடல்களை மேடைகளில் தோன்றி தானே பாடுவதுபோன்ற காட்சிகளைத் தவிர வேறு எந்த நடிப்புக்குமே அவர் ஒப்புக்கொள்ளவில்லை. படங்களில் பாடும் வாய்ப்புகளுக்காக எந்தவித சமரசங்களுக்கும் அவர் தயாராகவில்லை.

திரைப்பட வாய்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் செவ்வியல் இசைக் கச்சேரிகள், கோவில் பக்தி இசை நிகழ்ச்சிகள், மெல்லிசை நிகழ்ச்சிகள் என தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்தார் விஜயா. தன்னுடன் மேடைகளில் பாடிவந்த, சிறந்த செவ்வியல் பாடகரும் வங்கி அதிகாரியுமான சி. பாலகிருஷ்ணனை 1978-ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் சேர்ந்து எண்ணற்ற இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களைப் பாடிப் பதிவு செய்திருக்கும் எம். ஆர். விஜயா நூற்றுக்கணக்கான பக்திப் பாடல்களுக்கு இசையமைத்து, எழுதி, பாடியிருக்கிறார். அவரது மகன் ரஜனி கருவியிசைக் கலைஞன். விஜயாவின் தாயாரின் பெயரையே கொண்ட மகள் சாரதா, பாம்பே திரைப்படத்தில் ஏ. ஆர். ரஹ்மானுக்காக ‘குச்சிக் குச்சி ராக்கம்மா’ குழந்தைப் பாடலைப் பாடி தனது இசைப்பயணத்தை ஆரம்பித்ததால் ‘பாம்பே சாரதா’ என்று அழைக்கப்பட்டு, புகழ்பெற்ற ஒரு பக்திப் பாடகியாகத் திகழ்கிறார்.

இன்று தனது 76-ஆவது வயதிலும் இசையிலேயே வாழ்கிறார் எம். ஆர். விஜயா எனும் இசையன்னை. எனது நினைவின் தாழ்வாரங்களில் அந்த பழைய வானொலிப் பாடல் முழுமை பெறாமல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

சந்திரன் வந்ததைக் கண்டு

நல்ல அல்லி மலர்வதும் உண்டு
சந்திரன் சென்று காலையும் வந்தால்
அல்லி சிரிப்பது எங்கு?
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக்கூடாது
இன்று சிரிக்கட்டும் சிட்டு
இந்த அன்னைக் கைபட்டு……

27-11-2026

shaajichennai@gmail.com