முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மன்னா டே : ஒரு சகாப்தத்தின் இறுதி நட்சத்திரம்

மன்னா டேவைப் பாராட்டும் பொருட்டு திருவனந்தபுரத்தில் ஒரு இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வருடத்தின் ஜேசுதாஸ் விருது அவருக்கு அளிக்கப்பட்டதை ஒட்டி அது நடந்தது. அதில் மன்னா டே அவரது புகழ்பெற்ற சில ஹிந்தித் திரைப்பட பாடல்களைப் பாடத் தொடங்கினார். அவற்றில் பல அங்கிருந்தவர்கள் அதிகம் அறிந்திராத பாடல்கள். சில பாடல்கள் தாண்டியதும் அமைதியிழந்த கூட்டம் கூச்சலிட ஆரம்பித்தது. பாடுவதை நிறுத்தி, நல்ல பாடல்களை ரசிக்கும் திறனோ பாடகர்களை மதிக்கும் பண்போ இல்லாதவர்கள் என்று அவர்களை நோக்கிச் சீறிவிட்டு மன்னா டே கடும் சினத்துடன் அரங்கிலிருந்து இறங்கிச் சென்றார். அவர் விருதையும் ஏற்றுக்கொள்ளவில்லை

பின்னர் ஒருமுறை கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த ஒரு இசை நிகழ்ச்சியில் அவருடைய சில ஹிந்திப் பாடல்களுக்குப் பின்னணி இசையை உரிய முறையில் அமைக்க இசைக்கலைஞர்கள் திணறியபோது, சென்ற காலத்தின் மகத்தான அப்பாடல்கள் மீது அவர்கள் காட்டிய உதாசீனத்தை மேடையிலேயே கடுமையாகக் கண்டித்தார் மன்னா டே.

மன்னா டே இந்தியா கண்ட மாபெரும் பாடகர்களில் ஒருவர். உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்க இசைமேதை. நாடளாவிய புகழ் பெற்ற அக்கால பெரும் திரைப்பாடகர்களின் வரிசையில் இறுதி நட்சத்திரம். ஏழத்தாழ 3500 பாடல்களைப் பாடியிருக்கிறார். இருமுறை தேசிய விருது. பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகளை அடைந்திருக்கிறார். ஃபிலிம்பேர் விருது பெற்றிருக்கிறார். ஆனாலும் மன்னா டே அவருக்குரிய அங்கீகாரத்தைப் பெறவில்லை என்றே சொல்ல வேண்டும்.

முகமது ரஃபி, முகேஷ், கிஷோர் குமார், ஹேமந்த் குமார், தலத் மெஹ்மூத் போன்ற பெரும் பாடகர்களின் வரிசையில் மன்னா டே ஒரு படி அதிகமான திறமை கொண்டவர் எனலாம். அவரே பாடும்முறையில் மிகவும் பன்முகத்தன்மை கொண்டவர் என்றும் சொல்லலாம். நாற்பது வருடங்களுக்கும் மேலாக மன்னா டே அவரது இனிய குரலால் காலம் தொடாத் திரையிசைப் பாடல்களைப் பாடி ரசிகர்களை வென்று வந்தார். அவருடைய இசைவெற்றிகள் ஒருபோதும் கண்மண் தெரியாத புகழின் சிகரத்தை அடைந்ததில்லை என்றாலும் அவர் எப்போதும் தனித்துத் தெரிந்து வந்திருக்கிறார். காரணம் அவரது கனமான குரல், உணர்ச்சிகரமான ஆழ்ந்த பாடும் முறை. அத்துடன் அவருடைய பாடல்களின் தள விரிவு.

அவருடைய அழியாத வெற்றிப் பாடல்களான ‘லாகா சுன்ரீ மே தாக்’, ‘ஏ மெரே சொஹ்ர ஜபீன்’, ‘நா தொ கார்வா கீ தலாஷ் ஹே’, ‘சுன்ரீ சமால் கோரீ’ போன்றவை இந்திய மனதின் நுண்ணிய பகுதிகளாகவே மாறிவிட்டவை. ‘கெளன் ஆயா மெரே மன் கீ துவாரே’, ‘ஆயோ கஹான் ஸே கன்ஷ்யாம்’ போன்ற ரத்தினங்களை யார் மறக்க முடியும்? கிஷோர் குமாருடன் இணைந்து ஷோலே படத்துக்காக அவர் பாடிய ‘யே தோஸ்தீ ஹம் நஹி சோடேங்கே’ மற்றும் படோசன் படத்தில் வரும் ‘ஏக் சதுர் நார்’ போன்ற பாடல்களில் உள்ள உணர்ச்சிகள் அழியக்கூடியதா என்ன?

ஆஷா போஸ்லே ஒரு முறை சொன்னார், “அவருக்குத் தன் குரல் மீதுள்ள கட்டுப்பாடு வியப்பூட்டுவது. செவ்வியல் தன்மை கொண்ட பாடல்களைப் பாடுவதில் அவருக்கு இணையாக எவருமே இல்லை. ஹிந்தித் திரையிசையில் மன்னா டே அளவுக்கு மரபிசை சார்ந்த பாடல்களைப் பாடிய ஒருவரும் இல்லை, இருக்கப்போவதுமில்லை.” ஹிந்தித் திரைப்பாடகர்களில் செவ்வியல் இசையில் அதிகமான பயிற்சி கொண்டவர் மன்னா டேதான். ஒருமுறை பண்டிட் பீம்சேன் ஜோஷியுடன் இணைந்து போட்டியிட்டுப் பாடவேண்டுமென்று சொல்லப்பட்டபோது அவர் ஸ்டுடியோவை விட்டுத் தப்பி ஓடினார். பீம்சென் ஜோஷி அவரை உற்சாகப்படுத்திப் பாட வைத்தார். ‘கேதகி குலாப் ஜூஹீ சம்பக் பன் ஜூமே’ என்கிற அந்தப் பாடலில் மன்னா டே அவரது உச்சத்தைத் தொட்டார்.

செவ்வியலிசையில் மன்னா டே அவருடைய உச்சங்களைத் தொட்டிருக்கிறார் என்றாலும் மன்னா டேயின் வேறுபட்ட தளங்களை, பாடும்முறையில் பல முகம் கொண்ட முகமது ரஃபிகூட அடையவில்லை என்றே சொல்லலாம். மன்னா டே ஒரு பிழையற்ற, துல்லியமான பாடகர். அவரால் எதையுமே பாட முடியும். ‘யே இஷ்க் இஷ்க் ஹே’ போன்ற கவாலிப் பாடல்கள், ‘ப்யார் ஹுவா இக்ரார் ஹுவா’ போன்ற இணைக்காதல் பாடல்கள், வேகமான தாளம் கொண்ட ‘ஆவோ ட்விஸ்ட் கரே’ மற்றும் ‘ஜூம்தா மெளசம் மஸ்த் மஹீனா’ போன்ற பாடல்கள், தேசபக்திப் பாடலான ‘ஏ மேரே ப்யாரே வதன்’ பிரார்த்தனைப் பாடலான ‘தூ ப்யார் கா சாகர் ஹே’, குடித்துவிட்டு நாக்குழறிப் பாடும் ‘ஃபிர் வொஹீ தர்த் ஹே ஃபிர் வொஹீ ஜிகர்’… அனைத்திலும் மன்னா டேயின் தனித்தன்மை துல்லியமான வேறுபாட்டை உருவாக்கியிருக்கின்றது.

முகம்மது ரஃபி ஒருமுறை இதழாளர்களிடம் சொன்னார், “நீங்கள் என் இசையை விரும்பிக் கேட்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால் நான் கேட்பதெல்லாம் மன்னா டே பாடும் பாடல்களைத்தான்”. இசையமைப்பாளர்களான எஸ்.டி. பர்மன், அனில் பிஸ்வாஸ் போன்றவர்கள் மன்னா டேயால் கிஷோர் குமார், முகம்மது ரஃபி, முகேஷ், தலத் மெஹ்மூத் உட்பட எந்தத் திரைப் பாடகர் பாடும் எந்தப் பாடலையும் பாட முடியும். ஆனால் அவர்களால் மன்னா டேயின் பல பாடல்களைப் பாட முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். மன்னா டேயும் அவரது சமகாலப் பாடகர்களும் பாடியுள்ள பாடல்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த வேறுபாடு நன்றாக விளங்கும். ஸீமா, பசந்த் பஹார், தாலாஷ், ஆனந்த், ஸ்ரீ 420 போன்ற படங்களில் உள்ள பலர் பாடிய பாடல்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப்பாருங்கள்!

ஆனால் தன்னடக்கமே உருவானவரான மன்னா டே இதை ஏற்க மறுத்தார். புதிய தலைமுறைப் பாடகர்கள் பழைய பாடல்களை மறுஆக்கம் (re-mix) பாடுவதைக் குறித்து சொல்லும்போது அவர் “ரஃபி, முகேஷ் போன்ற மாபெரும் பாடகர்கள் போல பாடிவிடலாம் என்று எப்படி இவர்கள் கனவு காண்கிறார்கள்? என்னால்கூட அவர்களின் தரத்துக்குப் பாட முடியவில்லை” என்றார். ரஃபி பற்றி பெரும் மதிப்பு கொண்டிருந்தார் மன்னா டே. “ரஃபி, லதா ஆகியோர்தான் எனக்குப் பிடித்தமான பாடகர்கள். உலகத் திரையிசைப் பாடகர்களிலேயே ரஃபிதான் தலைசிறந்தவர் என்று நான் நினைக்கிறேன். பலர் இதை ஒப்புக்கொள்ளாமலிருக்கலாம். ஆனால் ரஃபிக்கு செவ்வியலிசையில் பயிற்சி இல்லை என நான் அறிவேன். நான் உதவி இசையமைப்பாளனாக இருந்தபோது அவர் எனக்குக் கீழே பாடல்குழு பாடகராகப் பணியாற்றினார் என்றும் பலருக்குத் தெரியாது. லதா மங்கேஷ்கரைப் போலவே அவரது குரலும் கடவுள் மனிதனுக்கு அளித்த பரிசு. அவர்கள் அளவுக்குப் பிறர் பாடுவதென்பது நடக்காத காரியம்…”

ரஃபி போலவோ கிஷோர் குமார் போலவோ மன்னாடே மாபெரும் புகழை அடைந்ததில்லை என்றாலும் மறக்க முடியாத பன்முகம் கொண்ட பாடல்கள் அவரால் தொடர்ந்து பாடப்பட்டன. கால்களைத் தாளமிடச் செய்யும் மேலையிசைப் பாடலான ‘ஏய் ஃபாய் ஜரா தேக் கே சலோ’ (படம்: மேரா நாம் ஜோக்கர்)க்காக ஃபிலிம்பேர் விருது பெற்றார். அவர் முதலில் தேசிய விருது பெற்றது செவ்வியல் சாயல் கொண்ட ‘ஜனக் ஜனக் தொரே பாஜே பாயலியா’க்காக (படம்: மேரே ஹுஸூர்). இரண்டாவது தேசிய விருது வங்கப் படமான ‘நிஷிபத்மா’வுக்காகப் பாடிய மெல்லிய காதல் பாடலான ‘ஜா குஷீ ஒரா போலே’க்காக!

நல்ல ஹிந்தித் திரையிசை ரசிகர்களில் பெரும்பாலானவர் மன்னா டேயின் சாதனைகளை அறிவார்கள். அவரது அசாதாரணமான பாடும் திறனையும் குரல்வளத்தையும் அங்கீகரிப்பார்கள். பல வகைகளில் அவர் பிற சமகாலப் பாடகர்களைவிட மேலான பாடகர், குறிப்பாகச் செவ்வியலிசையில் என்று அங்கீகரிப்பதில் அவர்களுக்குத் தயக்கமும் இருக்காது. ஆனாலும், எப்படியோ அவர்களுடைய பிடித்தமான பாடகர் வரிசையில் மன்னா டே இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோதான் வருகிறார். இதற்கு முக்கியமான காரணம் என்று எனக்குப் படுவவது அவரது குரல் மிகவும் நெகிழ்வானது என்பதும் அவர் பல வகையான பாடல்களைப் பாடியிருப்பதனால் அவருடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட வகைப் பாடல்கள் நினைவுக்கு வருவதில்லை என்பதும்தான். முகேஷ் என்றால் சோகப் பாடல்கள், தலத் மெஹ்மூத் என்றால் கஸல் பாடல்கள் என்பது போல ஒரு தனியடையாளம் மன்னா டேக்கு இல்லை.

மன்னா டே எந்த அடையாளத்துடனும் தன்னைப் பொருத்திக் கொள்ளவில்லை. எந்தப் படிமத்தையும் தன்னைப் பற்றி அவர் உருவாக்கிக் கொள்ளவில்லை. மன்னா டேயின் பாடல்களின் எண்ணிக்கையையும் வெற்றிப்பாடல்களின் எண்ணிக்கையையும் பிற சமகாலப் பாடகர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் ஒருவர், மன்னா டேயின் வெற்றி விகிதம் மிக அதிகம் என்பதைக் கண்டு வியப்படையக் கூடும். ஆனாலும் அவர் மிக மிகக் குறைவாக மதிப்பிடப்பட்ட பாடகர். இதன் காரணம் முக்கியக் கதாநாயகர்களுக்காக அவர் அதிகம் குரல்கொடுக்க நேரவில்லை என்பது மட்டும்தான்!

அன்றெல்லாம் பெரிய நடிகர்களின் குரல்களுடன் ஒத்துப்போகாத குரல் கொண்டவர்கள் எத்தனை திறன் பெற்றிருந்தாலும் பின்னணி இசையில் ஒளிவிட முடியாது என்ற நிலை இருந்தது. புகழ் பெற்ற மூன்று நட்சத்திரங்களான திலீப் குமாருக்கு ரஃபி / தலத் மஹ்மூத், ராஜ்கபூருக்கு முகேஷ், தேவ் ஆனந்துக்கு கிஷோர் குமார்/ஹேமந்த் குமார் எனத் தேர்வு செய்துகொண்டனர். மன்னா டேயின் குரல் முகேஷ் அளவுக்கே ராஜ்கபூருக்குப் பொருத்தமானதாக இருந்தபோதிலும்கூட ராஜ்கபூர் முகேஷையே தொடர்ந்து தேர்வு செய்தார். காரணம் சங்கர் – ஜெய்கிஷன், சைலேந்திரா, ஹஸ்ரத் ஜெய்புரி போன்றவர்களுடன் முகேஷ், ஆர்.கே. ஸ்டுடியோவின் முகாமில் ஒருவராக இயங்கினார் என்பதுதான். சங்கர் – ஜெய்கிஷன் ஸ்ரீ 420, சோரி சோரி மற்றும் மேரா நாம் ஜோக்கர் முதலிய படங்களில் மன்னா டேயைப் பயன்படுத்தி வெற்றிப் பாடல்களைக் கொடுத்திருந்தாலும்கூட மன்னா டே அதிகமும் பால்ராஜ் சாஹ்னி, பிராண், பரத் பூஷன், பிரதீப் குமார், ராஜேந்திர குமார் மற்றும் நகைச்சுவை நடிகர் மெஹ்மூத் போன்ற இரண்டாம் வரிசை கதாநாயகர்களுக்கே குரல் கொடுக்க நேர்ந்தது.

பிமல் ராய் இயக்கிய ‘தோ பிகா ஜமீன்’ படத்திற்காக சலில் செளதுரி இசையில் ‘தர்த்தீ கஹே புகார் கே’ என்ற புகழ்பெற்ற பாடலை பால்ராஜ் சாஹ்னியின் குரலாகப் பாடினார். அப்படத்தில் பால்ராஜ் சாஹ்னியின் பாத்திரம் தளர்ந்து போன ஒரு விவசாயி. இன்னொரு வெற்றிப்பாடலான ‘சலீ ராதே ராணி’, பரினீதா என்ற படத்தில் ஒரு பிச்சைக்காரருக்குப் பின்னணிக்குரலாக ஒலித்தது. பூட் பாலீஷ் படத்தில் இடம்பெற்ற அவரது புகழ்பெற்ற ‘லபக் ஜபக் தூ ஆரே பதர்வா’ டேவிட் என்ற நடிகர் நடித்த ஊனமுற்ற தெருவாசியின் குரலாக அமைக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக இதுவே மன்னா டேயின் அடையாளமாகத் திரையிசையில் புரிந்துக்கொள்ளப்பட்டது. ஆகவே பெரும்பாலான இசையமைப்பாளர்கள் முதிர்ந்த வயதுள்ள கதாபாத்திரங்களுக்காகவே அவரைப் பாட அழைத்தார்கள். ஆகவே அவருடைய பாடல்களில் இளமையின் துள்ளல் இல்லாமல் போயிற்று. அவர் இளம் கதா நாயகர்களுக்குக் குரல் கொடுத்து அபூர்வம்.

இளமைக் குரல்கள் என்று சொல்ல இயலாத தலத் மெஹ்மூதும் முகேஷும் இளம் கதா நாயகர்களுக்குக் குரலாக ஒலித்த போது மன்னா டே மெஹ்மூதின் நகைச்சுவை நடிப்புக்குப் பின்னணியாகக் குரல்மூலம் சர்க்கஸ் வித்தை காட்டிக்கொண்டிருந்தார். ‘காலீடப்பா காலீ போத்தல்’ போன்ற பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம் ஒருமுறை மன்னாடே வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். வாழ்க்கைக்காகத்தான் சில்லறைத்தனமான பாடல்களைப் பாட சம்மதிப்பதாக. அதே சமயம் தன் அபூர்வமான குரல்வன்மையாலும் நுட்பத்தாலும் பல சப்பைப் பாடல்களையும் அவர் சிறந்த இசை வெளிப்பாடுகளாக மாற்றியிருக்கிறார் என்பதும் மறக்க முடியாது.

1920ல் கல்கத்தாவில் பூர்ண சந்திர டேக்கும் மகாமாயாவுக்கும் மகனாக மன்னா டே என்ற பிரபோத சந்திர டே பிறந்தார். அவரது பூர்வீக வீடு ஷிம்லா ரோடில் இருந்த 12 படுக்கையறைகள் கொண்ட மாளிகை. இரண்டு நூற்றாண்டுப் பழக்கமுள்ளது. மன்னா டேயின் இளமைக்காலத்தில் புகழ்பெற்ற பாடகரும் இசையமைப்பாளருமான அவரின் தாய் மாமா ‘சங்கீதாச்சார்யா’ கிருஷ்ண சந்திர டே அவருடைய இசையார்வத்தைத் தூண்டி வளர்த்தார். கிருஷ்ண சந்திர டே கண் தெரியாதவர். இருண்ட உலகில் இசையின் ஒளியில் மூழ்கி வாழ்ந்தவர். தன் மருமகன் பிரபோத் சந்திரனுக்கு ‘மன்னா’ என்ற செல்லப்பெயரை அளித்தவர் அவரே.

சிறுவயதில் மாமாவின் இசையில் இணைந்து வாழ்ந்து வளர்ந்தவர் மன்னா டே. நாட்டுப்புற பக்திப் பாடல்களான ‘பவுல்’கள். ரபீந்திர சங்கீதம், கயால் சங்கீதம் ஆகியவற்றில் திளைத்தவர். தன் மாமாவுடன் அடிக்கடி நியூ தியேட்டர் ஸ்டுடியோவுக்கு அவர் செல்வதுண்டு. மன்னா டே பின்னர் ஒரு பேட்டியில் அவர் அன்றெல்லாம் எத்தனை மதிப்புடனும் பிரியத்துடனும் முன்னோடிகளான கெ. எல். சைகால், கானன் தேவி, பிரிதிவிராஜ் கபூர், பஹாடி சன்யால், பங்கஜ் மல்லிக், திமிர் பரண் போன்றவர்களை அருகே நின்று கவனிப்பார் என்று சொல்லியிருக்கிறார். மாமா சிறுவயதிலேயே மன்னா டேயைச் செவ்வியலிசையின் நுட்பங்களை ரசிக்கவும், பாடவும் பயிற்றுவித்தார். பின்னர் மன்னா டே முறைப்படி உஸ்தாத் தாபீர் கானிடம் ஹிந்துஸ்தானி இசையைக் கற்றுத்தேர்ந்தார்.

1940களின் தொடக்கத்தில் நியூ தியேட்டர்ஸ் இல்லாமலானபோது தொழில்நுட்ப நிபுணர்கள், நடிகர்கள், இசைக்கலைஞர்கள் அனைவரும் பம்பாய் நோக்கிப் படையெடுத்தார்கள். மன்னா டே தனது மாமாவுடன் 1942ல் பம்பாய்க்கு வந்து சேர்ந்தார். இசையமைப்பாளர் எச்.பி.தாஸின் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் எஸ்.டி. பர்மனுக்கு உதவியாளரானார். அனில் பிஸ்வாஸுக்கும் அவர் உதவியாளராக இருந்திருக்கிறார். கூடவே மூத்த இசைநிபுணர்களான உஸ்தாத் அமான் அலிகான், உஸ்தாத் அப்துல் ரஹ்மான்கான் ஆகியோரிடம் இந்துஸ்தானி இசையையும் தொடர்ந்து கற்றுக் கொண்டிருந்தார்.

இசை அமைப்பு உதவியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்த மன்னா டேக்கு மீண்டும் அவரின் மாமாதான் உதவிக்கு வந்தார். 1943ல் ராமராஜ்யா என்ற படத்திற்காகப் பாடும்படி கிருஷ்ண சந்திர டேயிடம் கேட்டபோது அவர் தன் மருமகனை சிபாரிசு செய்தார். இசையமைப்பாளர் சங்கர் ராவ் வியாஸ் பையனின் திறனை ஐயப்பட்டார். சில ஒத்திகைகளுக்குப் பின்னர் 23 வயதான மன்னா டே ‘தியாகமயீ கயீ தூ ஸீதா’ என்ற தனிக்குரல் பாடலை வயதான வால்மீகியின் பாத்திரத்துக்காகப் பாடினார்!

‘என் முதல் பாடலே ஒரு முதிய கதாபாத்திரத்திற்காகத்தான்’ என்றார் ஒருமுறை மன்னா டே, சிரித்தபடி. அந்தப் பாடலுக்காக அவருக்கு 150 ரூபாய் ஊதியம் கிடைத்தது. 1944ல் மன்னா டே தமன்னா என்ற படத்துக்காக அவரின் மாமாவின் இசையமைப்பில் அன்றைய நட்சத்திரம் சுரையாவுடன் இணைந்து ஒரு இணைக்குரல் பாடலைப் பாடினார். ஆனால் அன்னியமான அச் சூழலில் அவருக்குத் தொடர்ந்து ஏமாற்றங்களும், பின்னடைவுகளும்தான் கிடைத்தன. முதல் தடை அவருடைய மொழிதான். அவரது வங்க உச்சரிப்பு வாடைக் கொண்ட ஹிந்தி பெரிய சிக்கலாக இருந்தது. கடுமையான பயிற்சி மூலம் அவர் ஹிந்தியை முறையாகக் கற்றார். ஆனாலும், சில சொற்களில் அவரது வங்க உச்சரிப்பு இருந்துகொண்டுதான் இருந்தது.

பல சமயம் தான் தேர்ந்தெடுத்த துறை சரியா என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டது. கல்கத்தாவுக்கே திரும்பிப்போய் சட்டம் படிக்க ஆரம்பிக்கலாமா என்றுகூட அவர் நினைத்ததுண்டு. தொடர்ந்த போராட்டத்துக்குப் பின்னர் 1950ல் மஷால் என்ற படத்திற்காக எஸ்.டி.பர்மன் இசையமைப்பில் அவர் பாடிய கால்நடைப் பாடல் ‘ஊப்பர் ககன் விஷால்’ (மேலே எல்லையில்லா வானம்…) பெரும் வெற்றி பெற்று அவரை பம்பாயிலேயே நீடிக்கச் செய்தது. தொடர்ந்து வெற்றிகள் தேடிவந்து அவரை நிரந்தரப் பாடகராக ஆக்கின. ‘யே ராத் ஃபீகீ ஃபீகீ’, ‘ஆஜா சனம் மதுர் சாந்த்னீ மே ஹம்’, ‘தில்கா ஹால் சுனே தில்வாலா’, ‘பியார் ஹுவா இக்ரார் ஹுவா’, ‘முட் முட் கே ன தேக் முட் முட் கே’, ‘தூ ஹே மேரீ பிரேம் தேவ்தா’, ‘சுர் நா சஜே க்யா காவூ மே’ போன்ற பாடல்கள் மன்னா டேயை முதன்மையான பின்னணிப் பாடகர்களின் வரிசையில் நிறுத்தின.

மன்னா டே, சுலோச்சனா குமாரன் என்ற மலையாளிப் பெண்ணை மணந்து கொண்டார். மலையாளத்தில் அவர் பாடிய முதல் பாடல் ‘செம்மீன்’ படத்திற்காக சலில் செளதுரி இசையமைப்பில் ‘மானச மைனே வரூ’. கேரள இசைவரலாற்றில் அழியா இடம்பெற்ற இப்பாடல் தமிழ்நாட்டிலும் மிகப் பெரிய அலையாக அமைந்த ஒன்று. இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இசை ரசிகர்கள் இப்பாடலை உணர்ச்சிப்பெருக்குடன் நினைவுகூர்வதைக் காண்கிறேன். சலில் செளதுரி இப்பாடலை மன்னா டே அன்றி வேறு எவருமே பாட முடியாது என்பதில் மிக உறுதியாக இருந்தார். அதற்கேற்ப ஆழ்ந்த சோகமும் தனிமையும் ஒலிக்கும் மன்னா டேயின் கனத்த குரல் இன்றும் காதலின் தாபத்தைக் கடலாகக் காட்டும் ஒன்றாக கேரளப் பண்பாட்டில் இடம்பெற்றுத் தலை முறைகளைத் தாண்டிச் செல்கிறது. ‘கடலிலெ ஒளவும் கரளிலே மோஹவும் அடங்ஙுகில்லோமனே அடங்ஙுகில்லா’ என்று ஒலிக்கும்போதும் மன்னா டேயின் குரலில் கரையை மோதிப் பின்வாங்கும் கடல் அலையையே நம்மால் காணமுடியும்.

பின்னர் சலில் செளதுரி ‘நெல்லு’ படத்திற்காக ‘கையோடு கை,மெய்யோடு மெய்’ என்ற பாடலை மன்னா டேயைப் பாட வைத்தார். பழங்குடித் தாளமும் வரிகளும் கொண்ட அப்பாடலும் மிக வெற்றிகரமான ஒன்றாக அமைந்தது. ஜெயச்சந்திரனுடன் இணைந்து பாடிய இணைக்குரல் துள்ளல் பாடலான இது ‘மானச மைனே வரூ’வின் உருக்கமான இசைக்கு முற்றிலும் மாறான ஒன்று. உச்சரிப்பில் மன்னா டே செய்யும் பலவிதமான குளறுபடிகளுடன் சேர்த்தே அவரை மலையாளிகள் ரசித்தனர்.

அனில் பிஸ்வாஸ் முதல் ஆர்.டி.பர்மன் வரை மன்னா டே பெரும்பாலும் எல்லா சமகால இசையமைப்பாளரிடமும் சேர்ந்து இயங்கியிருக்கிறார். அவர் எஸ்.டி.பர்மன், சங்கர் – ஜெய்கிஷன், ஆர்.டி.பர்மன், சலில் செளதுரி போன்ற இசையமைப்பாளர்களுக்கு நெருக்கமானவராக இருந்தார். மதன் மோகனுக்காக ‘கெளன் ஆயா மெரேமன் கீ த்வாரே’ போன்ற காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால் அவர் கதாநாயகர்களுக்காகப் பாடுவதைக் கடுமையாக எதிர்த்த நட்சத்திர இயக்குநர்கள் பலர் இருந்தார்கள். மன்னா டே முதியவர்களின் குரல் என்ற பிரமையை அவர்களால் வெல்ல முடியவில்லை.

பாட ஆரம்பித்து 25 வருடம் கழித்துத்தான் மன்னா டே ஃபிலிம்பேர் விருதை வென்றார். 1972ல். அங்கீகாரங்கள் வர மறுத்தன. தொழில் எப்போதுமே மந்தம்தான். ஆனால் அவையெல்லாம் அவரைப் பெரிதாக அசைக்கவில்லை. “எனக்கு எந்த வருத்தமும் இல்லை, புகார்களும் இல்லை” என்று அவர் பேட்டி ஒன்றில் சொன்னார். ஆனால் இன்னொரு தருணத்தில் “ஆரம்பத்தில் எனக்கு துக்கம் இருந்தது. பின்னர் நான் என்னையே சமாதானம் செய்து கொண்டேன். தலத் மெஹ்மூத், ரஃபி, லதா மங்கேஷ்கர் ஆகியோரின் சமகாலப் பாடகனாக இருப்பதே பெரிய விஷயம். கதா நாயகர்களுக்காகவும் வில்லன்களுக்காகவும் நகைச்சுவை நடிகர்களுக்காகவும், அசரீரியாகவும் பாடியிருக்கிறேன். எத்தனைப் பேருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது?”

மன்னா டே எதன் பின்னும் ஓடுபவரல்லர். நியூ தியேட்டர் பண்பாட்டில் வளர்ந்த அவரால் பம்பாயின் பகட்டுலகில் ஒத்துப்போக இயலவில்லை. அவரது தாய் மண்ணான வங்காளத்திலேயேகூட அவருக்கு அங்கீகாரம் 1960களில்தான் வந்து சேர்ந்தது. பின்னர் வங்கப் படங்களில் மன்னா டே தன் தனி முத்திரையைப் பதித்தார். அங்கு வினியோகஸ்தர்கள் ஒரு பாடலாவது மன்னா டே பாடியாக வேண்டுமென வலியுறுத்தினார்கள். 1991ல் பிரஹார் படத்திற்காகப் பாடியதே அவரது கடைசிப் பாடல்.

தொடக்கம் முதலே மன்னா டே ஒரு கச்சிதவாதி. தன் இசை வாழ்வில் எப்போதுமே பாடல்களில் முழுமை கைகூட வேண்டுமென அவர் போராடி வந்திருக்கிறார். நவீன இசைப்போக்குகள் பற்றி அவருக்குக் கடுமையான அதிருப்தி இருந்தது. “நம் பண்பாட்டின் வலிமையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டிய நம் இசை இன்று சிதைக்கப்பட்டு வருகிறது. நல்ல இசையை விரும்பும் இயக்குனர்கள் இன்றைய திரையுலகில் மிகமிகக் குறைந்து வருகிறார்கள். ஆகவே ஆத்மார்த்தமான இசைக்கான தருணங்கள் நம் திரைப்படங்களில் இல்லாமலாகி வருகின்றன. இன்றைய இசை ஓங்கிய தாளமும் சத்தமும், எலும்புகள் உடையும் நடனமும் சேர்ந்த ஒன்றாக மாறிவிட்டது. அனில் பிஸ்வாஸ், ரோஷன், சலில் செளத்ரி போன்ற பெரும் இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியபின் என்னால் இன்றைய இசையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்றைய தலைமுறைக்கு நல்ல இசையை எப்படி உருவாக்குவதென்று தெரியவில்லை. இன்று இசை கணினிமயமாகிவிட்டது. கருவிகளின் உதவியால் சுதிவிட்டு விலகிப்போகும் பாடல்களைக்கூடத் திருத்தியமைத்துவிட முடிகிறது. செயற்கையான ஒலிகள் மற்றும் மின்சாதனங்கள் சேர்ந்து இசையைக் கொன்றுவிட்டது” என்று மன்னா டே ஒரு பேட்டியில் சொன்னார்.

பாடலுக்கும் பாடகர்களுக்கும் இடையேயான உணர்ச்சிபூர்வமான உறவு இல்லாமலாகிவிட்டது என்றார் மன்னா டே. “இன்றெல்லாம் பாடகனும் பாடகியும் சந்திக்காமலேயே இணைக்குரல் பாடலைப் பாடிவிட முடிகிறது. கணினி உருவாக்கும் இசைத்தட ஒலிப்பதிவு முறையும் தயார்நிலை இசைத்துணுக்குகளும்தான் அதற்குக் காரணம்.” அவர் சொல்வதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அக்காலப் பாடல் பதிவுமுறையைத் தெரிந்து கொள்ள வேண்டும். அனில் பிஸ்வாஸ் அமைத்த ‘ரிது ஆயே ரிது ஜாயே’ பாடலைப் பாட மன்னா டேயும் லதா மங்கேஷ்கரும் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஒத்திகை பார்த்தார்கள்! மன்னா டேயின் கருத்தில் ஹிந்தித் திரையிசையின் பொற்காலமென்பது இசையமைப்பாளர்கள், பாடகர்கள் மற்றும் கவிஞர்களின் கூட்டான உழைப்பால் உருவான ஒன்றாகும்.

“அக்கால இசையமைப்பாளர்கள் முழுமையான உழைப்பாளிகள். ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு இசைத்துணுக்கும் செதுக்கியெடுக்கப்பட்டு மெருகேற்றப்பட்ட பின்னரே பதிவு செய்யப்படும். லதா, ரஃபி, கீதா தத், கிஷோர் குமார், முகேஷ், ஆஷா, நான் அனைவருமே பாடல்களின் நுட்பங்களை வெளிப்படுத்துவதற்குக் கடுமையான முயற்சிகளை எடுத்திருக்கிறோம். ஆகவேதான் ஐம்பது அறுபதுகளில் அமைக்கப்பட்ட பாடல்கள் எல்லாம் இன்றும் ரசிக்கப்படுகின்றன, அழியாமல் நிற்கின்றன.”

ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் மன்னா டே சொன்னார் “என்னால் செய்ய முடிவதெல்லாம் பாடுவது மட்டும்தான். என் கடைசி மூச்சுவரை நான் பாடிக்கொண்டே இருப்பேன்”. என் பாடல் ‘சுர் கே பினா ஜீவன் ஸூனா’ சொல்வதுபோல் ‘இசையில்லாமல் வாழ்வில் பொருளில்லை’.

அவரது வாழ்க்கை எப்படி உள்ளது என்று கேட்டபோது மன்னா டே, அவருக்கு வாழ்க்கையிலும் இசைச்சேவையிலும் முழுத் திருப்தி என்று சொன்னார். ஆனால் அப்போது அக்கண்களில் அந்த நிறைவு இருக்கவில்லை என்பதை நான் கவனித்தேன். பேட்டியின் இறுதியில் மன்னா டே அவரது அழிவற்ற பாடலான ‘பூச்சோனா கைஸே மேனே ரைன் பிதாயீ’ (எப்படிக் கழித்தேன் என் இரவுகளை என்று கேட்காதீர்கள் என்னை…) பாடி முடித்தபோது அவருடைய முதிய கண்களிலிருந்து கண்ணீர் சொட்டி ஆர்மோனியப் பெட்டி மீது உதிர்வதைக் கண்டேன்.

2007